உன்னைப் போல் ஒருவன்

கமல்-மோகன்லால் நடிப்பில் சக்ரி டொலெடி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் உன்னைப் போல் ஒருவன். இத்திரைப்படம் நஸ்ருதின்ஷா-அனுபம்கெர் நடிப்பில் வெளிவந்த 'எ வெட்னெஸ்டே' என்ற இந்திப் படத்தின் தழுவல். நவீன தொழில் நுட்பத்தில் உருவான ரெட் கேமிராவில் 4கே ரிசல்யுஷனில் படம் பிடிக்கப்பட்டுள்ளது படத்தின் பிளஸ்.

சராசரி குடும்பத்தலைவராகக் காட்சியளிக்கும் கமல் சந்தையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டு,நகரத்தின் உயர்ந்த கட்டிடத்தின் மேலே வந்து அமர்ந்து கொள்கிறார். நவீன தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தன்னைக் கண்டறியாத வண்ணம் போலீஸ் கமிஷனர் மோகன்லாலிற்குப் போன் செய்கிறார். குண்டுகள் வைத்துப் பல அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்த நான்கு தீவிரவாதிகளைத் தன்னிடம் ஒப்படைக்கக் கூறுகிறார். இல்லையென்றால் சென்னை நகரங்களின் முக்கிய இடங்களில் தான் வைத்துள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்துகிறார். முதலில் அனாமத்து நபர் என்று எண்ணும் மோகன்லால் கமலின் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்து தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டையைத் தொடங்குகிறார். எவ்வளவு முயற்சிகள் எடுத்தும் காவல்துறையால் கமலின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாததால் கமலின் கோரிக்கைகளை நிறைவேற்ற மோகன்லாலின் கீழ் பணி செய்யும் நேர்மையான காவலர்களான பரத் ரெட்டியும் கணேஷ் வெங்கட்ராமனும் அந்த நான்கு தீவிரவாதிகளைக் கமல் சொல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.கமலின் லட்சியம் என்ன? தீவிரவாதிகளின் நிலை என்ன? மோகன்லால் கமலைக் கண்டுபிடித்தாரா? என்பன போன்ற வினாக்களுக்கு படத்தின் இறுதியில் விடை கிடைக்கிறது. உலக நாயகன் என்பதைக் கமல் மீண்டும் நிரூபித்துள்ளார். கமலின் நடிப்பு அற்புதம். மிரட்டல்,சோகம்,அச்சுறுத்தல்,கிண்டல் என்று அனைத்து உணர்ச்சிகளையும் தன் முகத்தில் கொண்டு வருவது கமலிற்குக் கை வந்த கலை.  மோகன்லாலிற்கே தன்னை விட அதிகம் நடிக்க வாய்ப்புகள் இருந்தாலும் தனக்குக் கிடைத்த வாய்ப்பில் ரசிகர்களைக் கட்டிப்போடுவது கமலின் சிறப்பு. டூயட் பாடி,சண்டை போட்டு எதிரியை வீழ்த்தி என்ற பாதைகளில் செல்லாமல் தன் வயதுக்கேற்ற பாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழில் மோகன்லால். மிடுக்கு,நேர்மை,கம்பீரம் என்று அச்சு அசல் காவல் அதிகாரியாகவே உருமாறியிருக்கிறார். தலைமைச்செயலாளர் லட்சுமியிடம் வாக்குவாதம் செய்யுமிடத்திலும் தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களிடம் பாசத்துடன் நடந்து கொள்ளும் இடங்களிலும் கமலைக் கண்டறிய எடுக்கும் முயற்சிகளிலும் மோகன்லாலின் நடிப்பு தத்ரூபம். வசனத்தில் கொஞ்சம் மலையாள வாடை அடித்தாலும் லாலின் நடிப்பு அழகு தான். அடுத்த ஆச்சர்ய அதிசயம் கணேஷ் வெங்கட் ராமன். 'அபியும் நானும்' படத்தின் மென்மையான நாயகனாக வந்து போன இவர் மிடுக்கான காவல் அதிகாரியாக வந்து அமர்க்களம் செய்கிறார்.அதிரடி மன்னரான கணேஷ் குற்றவாளியை அடிக்காமலே உண்மையை வரவழைக்கும் விதம் அபாரம். பரத் ரெட்டி,லட்சுமி,பத்திரிகை நிருபராக வரும் அனுஜா ஐயர் ஆகியோரும் பாராட்டத்தகுந்தவர்கள். படத்தில் நடித்துள்ள துணைக்கதாபாத்திரங்கள் அனைவருமே காட்சிக்குத் தேவையான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

குண்டு நீக்கும் சிறப்பு வல்லுனர்களுக்கே கமல் குண்டு நீக்கும் விதம் சொல்லித்தருவது நம்ப முடியாத விஷயம். படத்தில் ஆங்காங்கே நடமாடும் ஆங்கில உரையாடல்களின் அர்த்தம் பாமர மக்களைச் சென்றடையுமா? என்பதும் கேள்விக்குறி தான்.  பெருமைக்குரிய இசை அறிமுகமாக கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பின்னணி இசையில் பின்னி எடுக்கிறார். இன்னும் போக போக சிறந்த இசையை ஸ்ருதியிடம் எதிர்பார்க்கலாம். ஆனால் குறுந்தகடுகளிலும் கேசட்களிலும் இடம் பெற்ற பாடல்களைத் திரைப்படத்தில் பார்க்க முடியாததும் சிறு குறையே. மனோஜ் சோனியின் ஒளிப்பதிவும் இரா.முருகனின் வசனங்களும் தோட்டா தரணியின் கலையும் அருமை. ஆங்கில் உரையாடல்களைத் தவிர்த்து தமிழிலேயே பாத்திரங்களைப் பேச வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். விறுவிறுப்பு குறையாமல் படத்தைக் கொண்டு செல்ல அத்துணை கதாப்பாத்திரங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றால் மிகையல்ல. உன்னைப் போல் ஒருவன் நம்மில் ஒருவன். அனைவரும் பார்த்து சிந்திக்க வேண்டிய ஒருவன்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 2, 2010 @ 8:12 pm