மிஸ். தீபிகாவின் துணிச்சல்!

சென்னை எத்திராஜ் கல்லூரியின் வாசல். மாணவிகள் ஆட்டோக்களிலும் கார்களிலும் ஸ்கூட்டிகளிலும் வந்து இறங்கி தங்கள் வகுப்பு நோக்கிப் போகிறார்கள். ஸ்டைலாக சுசுகி பைக்கில் வந்து இறங்குகிறார் ஒரு மாணவி.

பத்தொன்பது வயதான தீபிகா, அந்தக் கல்லூரியில் டூரிஸம் அண்ட் மானேஜ்மெண்ட் பிரிவில் இரண்டாம் ஆண்டு மாணவி. படிப்பில் மட்டும் தன் கவனத்தைச் செலுத்தாமல் பல்வேறு விதமான திறமைகளை வளர்ந்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். அவரது ஆர்வங்கள் பட்டியலிட்டால் அதன் எண்ணிக்கை நீண்டு கொண்டேயிருக்கிறது. அதில் ஒன்றுதான் பைக் ஓட்டுவது. கல்லூரிக்கு மட்டுமல்ல, ஷாப்பிங் போவது, தோழிகளின் வீட்டுக்குப் போவது எல்லாவற்றிற்கும் இவர் உபயோகப்படுத்துவது இந்த பைக்கைத்தான். இரண்டு வருஷமாக பைக் ஒட்டி ரொம்ப போரடித்து விட்டதால், அடுத்த மாதம் ஆண்களே ஓட்டத் தயங்குகிற புல்லட்டை வாங்கவிருப்பதாகச் சொல்லிச் சிரிக்கிறார் தீபிகா.

சின்ன வயதிலிருந்தே செல்லப்பிராணிகள் மீது அலாதி ப்ரியம் கொண்டவர் தீபிகா. நாய்க்குட்டியில் ஆரம்பித்த அந்த ஆர்வம் அணில், கொக்கு, மீன்கள், வெளிநாட்டுப் பறவைகள் என்று நீண்டு, இப்போது படமெடுத்தாடும் பாம்பில் வந்து நிற்கிறது!

பாம்பா? அதிர்ச்சியாய் கேட்பவர்களுக்கு கூலாக பதில் சொல்கிறார் தீபிகா.

" நாய்க்குட்டி, அணில் மாதிரி அதுவும் ஒரு பிராணிதான். தேவையில்லாம அதை ஒரு விரோதியப் பாக்குற மாதிரி நாம நடந்துக்குறோம். அது நம்மைப் பார்த்து பயந்து போய்தான் தப்பிச்சு ஒளியறத்துக்காக ஓடுது. அதத் துரத்தி அடிக்க முயலும்போதுதான் அது நம்மைத் திருப்பித் தாக்குது. அதுனால அதையும் சாஃப்ட்டா ஹேண்டில் பண்ணா அது நம்மகூட ஃப்ரெண்ட்லியா இருக்கும்" என்று தன் விளக்கத்தை சொல்கிறார். பாம்புகள் மீது இவர் கொண்டிருக்கும் அன்பு, இவரின் அப்பா திருநாவுக்கரசுவோடு இணைந்து ஒரு இயக்கத்தையே ஆரம்பிக்கும் நிலைக்குப் போயிருக்கிறது. கூடிய விரைவில் அதற்கான விழிப்புணர்ச்சி முகாம்களையும் நடத்தத் திட்டமிட்டிருக்கும் தீபிகா, பாம்புகளைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுகிற அளவுக்கு அதைப் பற்றி தகவல்களைக் ’கொட்டிக்’ கொண்டேயிருக்கிறார்.

இதுவரை தண்ணிப்பாம்பு, பச்சைப்பாம்பு, சாரையில் வெள்ளை சாரை, மஞ்சள் சாரை, கட்டுவிரியன், கோதும நாகம், மஞ்சள் நாகம் என்று பலவகைப் பாம்புகளையும் துணிச்சலாக கையில் பிடித்து வருடிக் கொடுத்திருக்கும் தீபிகாவிற்கு கேரளக் காடுகளில் வாழும் ராஜநாகத்தை பிடித்துப் பார்க்கவேண்டும் என்பது லேட்டஸ்ட் ஆசை. கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அதுவும் நிறைவேறிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். கேரளக் காடுகளிலிருந்து உணவுக்காக கர்நாடக விவசாயக் கிராமங்கள்வரை போய் திரும்புகிற அந்த ராஜநாகங்கள், மிகவேகமாகப் போய்வரும் தகவலையும் ஆதாரப்பூர்வமாக சேகரித்து வைத்திருக்கிறார் தீபிகா.

சட்டப்படி பாம்புகளை தனிப்பட்ட முறையில் வளர்க்கக் கூடாது. அதனால் வீடுகளில் பிடிபடும்போதும் வேறு எங்காவது அடிபட்ட பாம்புகளை மட்டுமே எடுத்துவந்து அதற்கு சரியான சிகிச்சைகளை அளித்துவிட்டு சிலநாள் கழித்து அடையாறில் உள்ள அரசு பாம்புப் பண்ணையிலோ அல்லது எதாவது காட்டுப் பகுதியிலோ விட்டு விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாராம் இவர். பாம்புப் பண்ணை அதிகாரிகளும் இவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு பாம்புகள் பற்றிய அரிய தகவல்களை இவருக்கு தந்து உதவுவதை நன்றியோடு நினைவு கூர்கிறார்.

அதுசரி, இத்தனை வருட அனுபவத்தில் தீபிகா பாம்பிடம் எத்தனை கடி வாங்கியிருப்பார்?

" அதுதான் இல்லை. ஒருமுறை கூட நான் கடி வாங்கியதில்லை. எல்லா பாய்ஸும் (பாம்பை இப்படித்தான் செல்லமாக அழைக்கிறார்) எங்கிட்ட அன்பாத்தான் பழகுவாங்க. சாரைப் பாம்பு பல்லு மட்டும் ஆக்‌ஷா பிளேடு மாதிரி இருக்கும். அதுக்கு இரை போடும்போது ஒருசில சமயம் அந்த பல்லு என்னோட தோளுல படும். அப்ப அந்த இடத்துல மட்டும் லேசா வீங்கும். ஆனா அதுக்கு ஆந்திராவுலேர்ந்து வாங்கி வைச்சிருக்கற ஒரு நாட்டு மருந்து என் கைவசம் இருக்கு. உடனே அதை அப்ளை பண்ணிடுவேன். அரைமணி நேரத்துல சரியாகிடும்." என்று சொல்லிச் சிரிக்கும் தீபிகாவுக்குப் பாம்புகளைப் பிடிக்கக் கற்றுக் கொடுத்தவர் ஸ்டாலின் பெர்னாண்டஸ்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சுமார் 42 வருடங்களாக பாம்புகளோடு பரிச்சயம் உள்ளவர். பலவீடுகளில் இவரால் இதுவரை பிடிபட்ட பாம்புகளின் எண்ணிக்கை சுமார் ஆயிரம் இருக்கும் என்கிறார் இவர். தீபிகாவைப் பற்றி என்ன சொல்கிறார் இவர்?

" அந்தப் பொண்ணோட துணைச்சலை பாராட்டியே தீரணும். ரொம்ப நாளா தொடர்ந்து கேட்டுகிட்டே இருந்துச்சு. அவங்க ஆர்வத்தைப் பார்த்துட்டுதான் பாம்புகளை எப்படி கையாள்றதுங்கற டெக்னிக்கை மட்டும் ஆறு மாசம் சொல்லிக் கொடுத்தேன். அந்தப் பொண்ணும் பிடிபடுற பாம்புகளுக்கு சிகிச்சை அளிச்சு காடுல்கள்ல கொண்டு போய் விடறாங்க. இந்தத் துறையில நிறைய ஆர்வம் இருக்கறதால இதுல எதாவது சாதிப்பாங்க" என்று சர்டிபிகேட் தருகிறார்.

தீபிகாவின் அப்பா ஒரு குத்துச்சண்டை வீரர். அதனால் பாக்ஸிங் கலையையும் விட்டு வைக்கவில்லை தீபிகா. தற்காப்புக்காக முறைப்படி அதைக் கற்று வைத்திருக்கும் இவருக்கு ஆயில் பெயிண்டிங் வரைவதில் மிகப்பெரிய ஆர்வம். அதிலும் அரச இலைகளில் இவர் வரையும் ஓவியங்கள் நண்பர்களிடையே மிகவும் பிரபலம். ரங்கோலி வரையும் போட்டிகளில் பல பரிசுகளை வென்றிருக்கும் தீபிகாவின் இந்த தசாவதார டேலண்ட்களால் கல்லூரியில் இவருக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் பட்டாளம்.

பட்டம் பெற்றதும் அடுத்த கனவு தீபிகாவுக்கு ஐ.எஃப்.எஸ் தேர்வு எழுதி உயர் வனத்துறை அதிகாரியாக செயலாற்றுவதுதானாம்." எதிர்காலத்தில் காடுகளையும் அதில் வாழும் உயிரினங்களையும் நான் தீவிரமாக காதலிக்கப் போகிறேன்" என்று சீரியஸாகச் சொல்கிறார் இந்தக் காடுகளின் காதலி.

– இந்த கல்லூரி மாணவியின் துணிச்சலை நீங்களும் பாராட்ட நினைத்தால் அவரது மெயில் ஐ.டி.க்கே ஒரு நாலு வார்த்தை தட்டிவிடுங்கள் நண்பர்களே! deepika.devi1@gmail.com

தொடர்புடைய படைப்புகள் :

 • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

One thought on “மிஸ். தீபிகாவின் துணிச்சல்!

 • May 28, 2010 at 2:31 am
  Permalink

  ஒரு பெண் இவ்வளவு துணிச்சல்காரியா?
  பாராட்டாமல் இருக்கஇயலவில்லை.தசாவதாரம்மட்டுமில்லை.மனசில் வேகமிருந்தால்
  எந்த சாதனையும் எளிதில் சாதிக்கலாம்.வாழ்க. வளர்க.
  அன்புடன் பாரதிதேவராஜ்

  Reply

Leave a Reply to பாரதிதேவராஜ் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : May 20, 2010 @ 11:02 pm