கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!
எழுதி நிறைந்ததில்
கவிதையானது – கதைகளானது – புத்தகமானது;
கிழித்து கிழித்து எரிந்ததில் –
குப்பையானது; காகிதம்!
கண்ணீரில் மை தீட்டி,
எண்ணம் வார்த்ததில் கடிதமானது;
நினைவுகளை சுமந்து வந்ததில்
பொக்கிசமானது; காகிதம்!
கடவுளை பற்றி எழுதியதில் புனிதமானது
காலம் கடந்ததை எழுதி வரலாறானது
காலிடறி பட்டாலும் தொட்டுக்
கும்பிடவைத்தது; காகிதம்!
எரிந்ததில் சாம்பலானது
எழுதிவைக்க குறிப்பேடானது
நேரம் காலம் குறித்ததில் நாளேடானது
நேற்றையும் இன்றையையும் எழுதி வைத்ததில்
நாட்குறிப்பானது; காகிதம்!
வண்ணம் தீட்டியதில் ஓவியமானது –
கையொப்பமிட்டதில் காசோலையானது
அரசு –
அளவு குறித்து முத்திரை பதித்ததில்
பணமானது; காகிதம்!
நீதிமன்றதில் சட்டமானது
நீதிக்கதைகள் சொன்னதில் இதிகாசமானது
தவறு செய்தவனை தண்டிக்க சாட்சியானது
இன்றையினை எழுத்தாய் சுமந்து
நாளையின் வரலாற்றில் – சுவடுகளாய் மிஞ்சியது; காகிதம்!
காதலி கைபட்டதில் உயிருமானது
காதலியின் உருவம் சுமந்து புகைப்படமானது
கல் மண் காற்று வானத்தின் விவரம் கூட
காகிதமே சொன்னது.
ஆக, இத்தனை ஆனதில்
எத்தனை அழிந்ததென்று
காகிதம் அறிந்திட
வாய்ப்பில்லை, ஆனால் –
மரங்களை அழித்து; காடு வளம் குலைத்து
மழையினை குறைத்து –
இயற்கையின் மொத்த அழிவிற்கும்
மறைமுகமாய் காரணமானது; காகிதமே! காகிதமே!!
பின்குறிப்பு: மகாத்மா காந்தி சொன்னாராம் 'இல்லாத எல்லோருக்கும் நம்மால் உடுத்த ஒரு சட்டையை கூட இனாமாய் கொடுத்துவிட முடியாது, எனினும், இரண்டு சட்டை போதுமான இடத்தில் ஆறு சட்டை வைத்துக் கொள்வதை தவிர்த்தால் – மீதம் நான்கு சட்டையானது 'தானே இல்லாதவர்க்கு போய் சேருமென்று! அதுபோல் – தேவைக்கு மீறிய காகிதத்தின் பயன்பாட்டை தவிர்ப்போம்; அல்லது 'காகிதம் தானே' என்று குப்பையில் எரிவதை குறைப்போம்; மரம் தானே மிஞ்சும் !