மொழிபெயர்ப்புப் பாதையில் !

முன் குறிப்பு : இந்த கட்டுரை ஆசிரியர் செ.ப பன்னீர்செல்வம், மூத்த செய்தி ஆசிரியர் – சிங்கை வானொலி செய்திப் பிரிவு

சிங்கப்பூரில் பொதுக்கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வில் முதல்மொழித் தமிழ்ப் பாடத்தில் மொழிபெயர்ப்பும் ஒரு பகுதியாக இருந்ததால், 1967ஆம் ஆண்டிலேயே மொழிபெயர்ப்புத் துறையுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டிருந்தது. என் தந்தையார், தமிழ் நாளேடுகளில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பயிற்சியை உருவாக்கித் தந்தார். ஆங்கில நாளேட்டில் வருவதைத் தமிழில் கூறுமாறு, அவர் சொல்வார். இந்தப் பயிற்சிகள், இருமொழி ஈடுபாட்டை எனக்குப் பெற்றுத் தந்தன என்று மகிழ்வோடு சொல்லலாம். இந்தப் பயிற்சிக்கெல்லாம் முன்னர், தமிழர் திருநாள், பொங்கல் விழாக்களில் இங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த இருமொழி, மும்மொழிப் பேச்சுப் போட்டிகளிலும் நான் கலந்துகொண்ட அனுபவத்தை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். தமிழர் திருநாள் விழாவின் தொடர்பில், 1962ஆம் ஆண்டு, 125 சிராங்கூன் ரோட், தமிழர் சீர்திருத்தச் சங்கத்தில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

அதில் நான், தமிழ், ஆங்கிலம், சிங்கப்பூரின் தேசிய மொழியாகிய மலாய் ஆகியவற்றில் “மாணவர் கடமை” பற்றிப் பேசினேன். அந்தப் பேச்சுப் போட்டியை நேரில் பார்த்த ஆசிரியர்கள் இன்று அதைப்பற்றி நினைவூட்டும்போது, எனக்குக் கடந்த காலம் மனக்கண்ணில் தோன்றும். அந்தப் போட்டிக்கு நடுவர்களாக திரு சிங்காரவேலு, திரு மெ திரு அரசு, வானொலிப் புகழ் திரு கே. இராமையா ஆகியோர் வந்திருந்தனர். எனக்கு அந்தப் போட்டியில் ஆறுதல், முதல் பரிசுதான் தந்திருந்தார்கள். ஆனாலும் அது எனக்கு மிகுந்த ஆறுதலைத் தந்திருந்தது. பரிசளிப்பு விழா ட்டேங் ரோட் முருகன் கோவிலுக்கு எதிரில் இருந்த சிங்கப்பூர்த் தேசிய அரங்கத்தில் நடைபெற்றது. தமிழவேள் கோ சாரங்கபாணி பரிசுப் பொருளை எடுத்துக்கொடுக்க, காலஞ்சென்ற முன்னாள் கலாசார அமைச்சர் எஸ் இராஜரத்தினத்தின் துணைவியார், அந்தப் பரிசை எனக்கும் வெற்றி பெற்ற மற்றவர்களுக்கும் மகிழ்வோடு வழங்கினார். இது இவ்வாறிருக்க, “ மொழிகளில் உங்களுக்கு நல்ல ஈடுபாடு இருப்பதால், அதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்” என்று அப்போது தமிழவேள் கோ சாரங்கபாணி அவர்கள் கூறியது, இன்றும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.

அந்தச் சம்பவமும் காட்சியும் இன்றும்  பசுமரத்தாணிபோல் என் நினைவில் நிலைத்திருக்கிறது. இரு மொழி நூல்களை, அதாவது, தமிழ், ஆங்கில மொழி நூல்களை அதிகமாகப் படித்ததால், அவற்றில் நல்ல பயிற்சி கிடைத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட மலாய் மொழி நூல்களை மட்டுமே அவ்வப்போது வாசிப்பேன். அதற்கும் இப்போது நேரம் குறைந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும். அதன்பின், 1968ஆம் ஆண்டு வானொலியில் முழு நேரப் படைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் சேர்ந்த பிறகுதான், மொழிபெயர்ப்புத்துறையில், எனக்கொரு முழுமையான ஈர்ப்பும் கூடுதலான பொறுப்பும் ஏற்பட்டது எனலாம். அப்போது, வாரம் ஒரு முறை, ஒலியேறிய Thought for the Week என்னும் ஆங்கில நிகழ்ச்சி சிங்கப்பூரின் நான்குமொழிகளிலும் ஒலியேற வேண்டியிருந்தது. அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் தயாரிப்பையும் இந்தியப் பகுதித் தலைவராக இருந்த திரு அ.முருகையான் என்னிடம் தந்திருந்தார். அதை ஆங்கிலத்தில் திரு Ian Hope என்னும் ஆங்கிலேயர் எழுதிப் படைத்து வந்தார். அந்த நிகழ்ச்சித் தயாரிப்பின் பொது, ஒரு வாக்கியத்தை மொழி
பெயர்க்க என் மனம் ஒப்பவில்லை.

காரணம், அதில், ஆங்கிலம் கற்றோரே கற்றோர் என்னும் பொருள்படும் ஒரு வாக்கியம் இருந்தது. “You are considered Educated only if you are educated in English”.— ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டிருந்தால்தான், நீங்கள் கற்றவராகக் கருதப்படுவீர்கள் என்னும் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திரு Ian Hope—ப்பிடம் சொன்னதற்கு அவர் அந்த எழுத்துப் படியில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்தார். ஆங்கிலத்தில் படிக்காதவர்களை அவர் உயர்வாகக் கருதாதவர் என்றும் தெரிய வந்தது.  எங்கள் தமிழ்ப் பகுதிக்குத் தலைவராக இருந்த திரு அ முருகையன் அந்த வாக்கியம் நமக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார். காரணம், எந்த மொழியில் ஒருவர் படித்திருந்தாலும், முறையாகப் படித்திருப்பதோடு, “கற்கக் கசடற, கற்றபின், நிற்க அதற்குத் தக” என்பது தானே வள்ளுவம்– தமிழ் மரபு என்பதில் அவரும் நம்பிக்கை வைத்திருந்தார். வானொலியில் நிறைய மொழிபெயர்ப்புச் சார்ந்த நிகழ்ச்சிகளைச் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவற்றில், எளிய ஆங்கிலம், உலக நாடுகள், சிறுவர் கதைகள் ஆகியவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம்.

Chicken Licken என்னும் கதையைத் தமிழில் “சின்னக் கோழி –சியாமளா”— என்னும் பெயரில் எழுதி வாசித்தேன். வானொலியின் சிறுவர் கதை நேரத்துக்காக, ஈசாப் கதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, புது சிந்தனைகளைப் பயன்படுத்தி அவற்றில் மாற்றம் செய்து தமிழில் எழுதி வழங்கினேன். அவற்றைத் தவிர, குற்றவியல் தொடர்பான நாடகங்களை வானொலி ஒலிபரப்பியபோது, செ ப பன்னீர்செல்வமாகிய நான், எஸ் பீட்டர், எம் கே நாராயணன் ஆகியோரும் அந்தத் தொடரைச் செய்தோம். மூலக் கதை மட்டும் ஆங்கிலத்தில் வரும். அதை நாடக வடிவாக்கித் தயாரித்து எழுத வேண்டியிருந்தது. “சட்டத்தின் பிடியில்” என்னும் தலைப்பில் அதைத் தயாரித்து ஒலிபரப்பினோம். அதில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. வேறு சிலரும் எங்களுக்குப் பிறகு அந்த வகை நாடகங்களைத் தயாரித்தார்கள். ஆனால் வெளியில் உள்ளவர்கள் மொழிபெயர்க்க

நிலையத் தயாரிப்பாளர்கள், தயாரிப்பை மட்டும் கவனித்துக் கொண்டார்கள். ஆகவே சிங்கை வானொலி ஒலியேற்றிய நாடக நிகழ்ச்சிகளில் மொழிபெயர்ப்பு நாடகங்களும் கணிசமான இடத்தைப் பெற்றன.>>>6
கண்ணையா ஆறுமுகம் காப்பிய நாடகம் என்னும் தொடரில், ஜாவி மலாயில் இருந்த நாடகங்களைத் தமிழில் எழுதி வழங்கினார். முன்னைய தயாரிப்பாளர்களான திரு இராமையா, திரு ஜி ஆர் மணி, எம் கே நாராயணன், பி கிருஷ்ணன் ஆகியோரும் பல ஆங்கில நாடகங்களைத் தமிழில் தந்துள்ளனர். திரு பி கிருஷ்ணன், விலங்குப் பண்ணை என்னும் பெயரில் George Orwell—லின் புதினத்தைத் தமிழ் நாடகமாகத் தந்தார். அமரர் இராமநாதன் ரமணி, வியட்நாமிய சிறுகதைகளைத் தமிழில் தந்துள்ளார். அவர், தமிழ் இசை நிகழ்ச்சிகளை ஆங்கிலத்தில் பல்கலைக் கழக மாணவர்களுக்காகவும் படைத்துள்ளார். வானொலி ஐந்து என்னும் ஆங்கிலப் பிரிவில் கர்நாடக இசை பற்றிய தொடரை வாரத்துக்கொரு முறையும் பின்னர் Passion வானொலியில் வாரத்துக்கு இரண்டு முறையும் ஆங்கிலத்தில் படைக்கும் வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது. ஆங்கிலத்திலிருந்து, காமன்வெல்த் நாடுகள் பற்றிய ஒரு தொடரைத் தமிழில் படைக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அந்த 42 ஆண்டு கால அனுபவத்தில், அது ஒரு தனி இன்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.

யுகமாயினி ஜூன் 2008ஆம் ஆண்டு இதழில் மாப்பசானின் Two sisters -இரு சகோதரிகள் கதையைத் தமிழில் எழுதியிருந்தேன். ஆர் கே நாராயணன் எழுதிய  A Blind Dog என்னும் கதையை அதன் வடிவுக்காகவும் கதைக்கருவுக்காகவும் தமிழில் எழுதியபோது அது பலரின் பாரட்டைப் பெற்றது. அதை வானொலியில் முதலில் வாசித்தேன். பிறகு அது மலேசியாவின் வல்லினம் இதழில் வெளியிடப்பட்டது.
சிங்கப்பூர் வானொலியில் மொழிபெயர்ப்புக் கலை மிகச்சிறந்த முறையில் வளர்க்கப்பட்டது என்பதை ஆர்வலர்கள் அறிவர். திரு வை திருநாவுக்கரசு, வாரம் ஒரு முறை அனைத்துலக விவகாரங்கள் செய்தார். திரு தி செல்வகணபதி, அரசியல் அரங்கம், உலகச் சிந்தனைகள் ஆகியவற்றைச் செய்தார். அவர் பிரெஞ்சு மொழியில் மேதை என்பதால் அந்த மொழியில் கிடைத்த சிறந்த செல்வங்களை, அவர் தமிழில் படைத்து வானொலிக்கு வழங்கினார்.

செ ப பன்னீர்செல்வமாகிய எனக்கு, இந்தோனீசிய விவகாரங்கள், தாய்லந்து விவகாரங்கள் ஆகியவற்றைத் தமிழில் படைக்கும் வாய்ப்பு, திரு புண்ணியமூர்த்தி தலைவராக இருந்தபோது வழங்கப்பட்டது.

டயானா இளவரசி காலமானபோது ஒரு மணி நேரச் சிறப்பு நிகழ்ச்சியைத் தயாரிக்கும் பணியை அவர் என்னிடம் கொடுத்திருந்தார். அதைப்போலவே, வாரமலர் என்னும் ஒரு மணி நேர நிகழ்ச்சியைத் தயாரிக்கும் பொறுப்பு ஏற்பட்டிருந்தபோது, ஆங்கிலத்திலிருந்து பல தகவல்களைத் தமிழில் தரவேண்டியிருந்தது. திரு தி சு மோகனம் அன்றாடக்கோவை நிகழ்ச்சியைச் செய்தபோது, ஆங்கிலத்திலிருந்து பல தகவல்களைத் தமிழில் சுவைபடத் தந்தார். செய்திப் பிரிவும், நாள்தோறும் ஆங்கிலத்திலிருந்து பல செய்திகளைத் தமிழ்ப்படுத்தி வழங்கிவருகிறது. வானொலிச் செய்திப் பிரிவுக்கு மூத்த செய்தி ஆசிரியராகப் பொறுப்பேற்று வந்தபின், மொழிபெயர்ப்பு என்பது நாள்தோறும் செய்ய வேண்டிய பணியாயிற்று. வெளிச்சம் நிகழ்ச்சிக்கு பல ஆங்கில மூலங்களிலிருந்து தகவல்களைத் தமிழில் திரட்ட வேண்டியிருந்தது. சிங்கப்பூர் வானொலி இவ்வட்டாரத்தில், மொழிபெயர்ப்புத்துறைக்கு ஆற்றியுள்ள சேவை மகத்தானது. நாடகங்கள், உலகச்சிந்தனைகள், அரசாங்க அறிவிப்புகள், ஆகியவற்றை அது அவ்வப்போது நல்ல தமிழில் வழங்கி வந்துள்ளது.

இங்கு நான்கு மொழிகள் ஆட்சியில் இருப்பதால், ஒரு மொழியின் முன்னேற்றம் என்பது மற்ற மொழிகளுக்கும் இயல்பாகக் கிடைக்கும் முத்துக்களாகக் கருதப்படுகின்றன. மொழிபெயர்ப்புக்கூட இங்குள்ள திறனாளர்களின் வாழ்க்கையில் இயல்பான ஒன்றாக மலர்ந்து வருகிறது எனலாம்.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : May 31, 2010 @ 5:50 pm