கொசு – 01

அத்தியாயம் ஒன்று

கழுதையின் முதுகிலிருந்து மூட்டையை இறக்கிக் கீழே போட்டாள் பொற்கொடி. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பாலத்தில் தடதடத்துக் கடந்துபோனது. கீழே நகர்ந்துகொண்டிருந்த நீரில் துண்டை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்த நான்கு பொடியன்களும் அண்ணாந்து பார்த்துக் கையசைத்தார்கள். ஓடும் ரயிலின் ஜன்னல் வழியே யாரோ கழுவித் தெளித்த நீரின் துளிகள் காற்றில் அலைந்து ஆற்றில் உதிர்ந்தன.

"பொற்கொடி, முத்துராமனுக்குப் பொண்ணு பாக்கப் போறாங்களாம்டி. வூட்டு வாசல்ல குவாலிஸ் வந்து நிக்குது. அல்லாரும் கெளம்பிக்கினு கீறாங்ங்க. பெர்சு நம்மாண்டல்லாம் சொல்லிச்சா பாத்தியா? இது பேதி கண்டு பட்த்துக்கினு இருக்கசொல்ல மட்டும் வைத்தியர் வூட்டுக்கு தூய்க்கினு ஓட நாம வோணும். போயி நாக்க புடுங்கறமாதிரி நாலு வார்த்த கேக்கத் தாவல? இங்க இன்னா பண்ணிக்கினுகிற?”

அவிழ்த்துக்கொண்டிருந்த துணி மூட்டையை மீண்டும் சேர்த்துக் கட்டி அதன்மீதே உட்கார்ந்தபடி நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள் பொற்கொடி. புசுபுசுவென்று மூச்சுவாங்க நின்றுகொண்டிருந்தாள் வளர்மதி.

"கண்டுகினுதானே வரப்போறான்? இப்பவேவா கொண்டுகினு வந்துருவான்? போவட்டும் விடு. நாலு தபா பொண்ணு பாக்கறேம்பேர்வழின்னு போயி காரியம் கைகூடாம வந்தாங்கல்ல? அந்த நெனப்பா இருக்கும். இந்தவாட்டியாச்சும் நல்லபடியா முடிஞ்சா சரி. காலீலயே நெனச்சேன். அவன் ஆத்தாக்காரி கடும்பாடியம்மன் கோயில்ல சுத்திக்கினு இருந்தா. இன்னாடா இது, திருவிழான்னாக்கூட கோயில் பக்கம் வராத பொம்பள இப்பிடி உருகி உருகி சுத்துதேன்னு பாத்தேன். கேக்கலாம்னுதான் நெனச்சேன். சர்தாம்போ, சரக்கு மலிஞ்சா கடைக்கு வருதுன்னு வுட்டுட்டு வந்தேன். இதான் சமாசாரமா? சர்தான்..”

எதிர்பார்த்த பதில் வராததில் வளர்மதிக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. விட்டுவிட முடியுமா என்ன?

"போடி இவளே.. ஊரான் துணி தோய்க்க நேரம் பார்த்தா பாரு.. வாடி என்னோட. அங்க அத்தினி பேரும் முத்துராமன் வீட்டாண்டதான் நின்னுக்கினுகிறாங்க. கட்சிக்காரப் பசங்க இந்தவாட்டி வீரத்திலகம் வெச்சி அனுப்பறதா ப்ளான் போட்டிருக்கானுக. செம காமடிதான் போ.”

பொற்கொடிக்குச் சிரிப்பு வந்தது. வீரத் திலகம். அ, அருமையான யோசனை. இதற்குமுன் ஏன் யாருக்கும் இது தோன்றாமல் போய்விட்டது? அவளுக்குத் தெரிந்து முத்துராமன் நான்கு முறை பெண் பார்க்கப் போய்விட்டு வந்திருக்கிறான். கிளம்புகிற ஜோர் பெரிதாகத்தான் இருக்கும். பேட்டையே அமர்க்களப்படும். திரும்பி வரும்போதே மாலையும் கழுத்துமாகத்தான் வருவான் என்பது போன்ற தோற்ற மயக்கம் அவசியம் உண்டாகிவிடும். கட்சி வேட்டி, கட்சித் துண்டுடன் அவனும் அவன் அப்பா, சிற்றப்பா வகையறாக்களும் மற்றவர்களும் வீதிக்கு வந்து நின்று இரு புறமும் ஒரு பார்வை பார்ப்பதென்ன, கம்பீரமாக வாடகை குவாலிஸில் ஏறி உட்காருகிற தோரணை என்ன, அவன் அம்மா அலட்டுகிற அலட்டல் என்ன, திருஷ்டி கழிக்கிற ஜோரென்ன, அவன் தங்கை முகத்தில் பொங்கி வழியும் பெருமிதமென்ன..

சந்தேகமில்லாமல் காலனியில் முத்துராமனின் வீடு ஒரு தனித் தீவு. அபூர்வமாக அவனை மட்டும் வீட்டில் படிக்க வைத்தார்கள். அந்தச் சனியன் மண்டையில் ஏறினால்தானே? பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சமயம் திருச்சியில் ஏதோ கட்சி மாநில மாநாடு என்று ரயிலேறிப் போய்விட்டான். ஆத்தாக்காரிதான் ஊரெல்லாம் கூட்டி ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தாள். இந்தப் புள்ளைக்கு ஏன் இப்படிப் போகிறது புத்தி?

"அட இவ ஒருத்தி வெளங்காதவ. தமிழரசன் புள்ளைக்கு புத்தி வேற எப்படிப் போவும்? இவங்கப்பன் ரயிலுக்கு முன்னால தலவெச்சி ரெண்டு வாரம் ஜெயிலுக்குப் போயி இருந்துட்டு வந்தவன் தானே? ஜெயிலுக்களி தின்னுட்டு வந்துட்டு வூட்ல சாம்பார் சோறு சரியில்லன்னு நொட்டு சொன்னவன் தானே? வேறெப்படி இருப்பான்?”

முத்துராமன் பொதுத்தேர்வு எழுதாதது பற்றி அவனது தந்தை ஏதும் விசாரிக்க வில்லை. ‘கூட்டத்துக்குப் போறன்னா சொல்லிட்டுப் போவறதுதானடா தறுதல? பஸ்ஸ¤க்கு சில்ற கூட கேக்காம அப்பிடி என்னா அவசரம் ஒனக்கு?’

"பஸ்ஸ¤ல போவலப்பா. செங்கல்பட்டு வரைக்கும் ரயில்ல போனேன். அங்கேருந்து லாரில போயிட்டோம். எட்டு லாரிங்க. அறுநூறு பேரு. சோத்துப் பொட்லம் குடுத்துட்டாங்க. தண்ணி பாகிட் இருந்திச்சி. ஒண்ணும் கஷ்டம் இல்லப்பா.”

"தலைவரு சூப்பரா பேசினாரா?”

அருகே வந்து உட்கார்ந்து ஆர்வமுடன் கேட்டார் தமிழரசன்.

"தூத்தேறி. எந்திரிச்சிப் போய்யா அந்தண்ட. பரிட்சைக்குப் போவல அவன். அது ஏன்னு கேக்கத் துப்பில்ல. நீயெல்லாம் ஒரு தகப்பன்.”

மனைவியின் கோபத்துக்கு மதிப்பளிப்பதுபோல அவர் அந்தக் கணம் எழுந்து வெளியே போனாலும் மகனைத் தனியே கூப்பிட்டு முழு மாநாட்டு விவரங்களையும் கேட்காமல் விடவில்லை. அவர் போகாத பொதுக்கூட்டங்களா? விடிய விடிய குத்துக்காலிட்டு உட்கார்ந்து கேட்காத சொற்பொழிவுகளா? வாங்காத கல்லடிகளா? காலம் அவரது காலை உடைத்து உட்காரவைத்திருந்தது. காப்பிக்குக் கூட சர்க்கரை போட்டுக்கொள்ள வழியில்லைதான். ஆனாலும் சர்க்கரை நோயாமே? நிற்க முடியவில்லை. நடப்பது சிரமமாக இருக்கிறது. மேலதிகம் மூச்சு வாங்குகிறது. அடிக்கடி தலை சுற்றுகிறது.

வயது. ஆம். அதுதான் பிரச்னை. ஒரு மாவட்டச் செயலாளராகும் கனவு அவருக்கு ஐம்பது வயது வரை இருந்தது. சைதாப்பேட்டை அளவிலேயே முன்னிலைக்கு வர முடியாமல் போய்விட்டதற்கு யாரைக் காரணம் சொல்வதென்று தெரியவில்லை. கடவுளைச் சொல்லலாம். கட்சியில் மிகத் தீவிர உறுப்பினராக இருந்த காலம் வரை கண்டுகொள்ளாத கடவுள். அட, தலைவரே பொருட்படுத்தாத கடவுளைத் தான் என்ன கொண்டாடுவது? ஆனாலும் அடி மனத்தில் அவருக்கு உறுத்தல் இருக்கவே செய்தது.

"ஏன் கற்பகம், ஒருவேளை மெய்யாவே கடவுள் இருந்துட்டாருன்னா, செத்தப்பறம் என்னிய டீல்ல வுட்டுடுவாரோ? இந்த சொர்க்கம், அது இதுங்கறாங்களே.. அங்கெல்லாம் நம்மள சேக்கமாட்டேன்னு சொல்லிருவாங்களோ?”

"பின்ன? நீ செத்தா ஆவியாத்தான் அலையப்போற. இதுல இன்னா சந்தேகம். இதே ஆத்தங்கரையிலதான் சுத்திக்கினு இருப்ப. ஏந்தலையெழுத்து, அப்பவும் உன்னாட லோல் படணும்னு இருக்கோ என்னமோ?”

முத்துராமனின் அம்மா இந்த விஷயத்தில் மிகவும் தெளிவானவள். பிறந்து, புகுந்த குடிசைகள் இரண்டும் அடுத்தடுத்த சந்துகளிலேயே இருந்துவிட்டதில் வாழ்க்கையில் பெரிய மாறுதல்கள் எதையும் அவள் பார்த்ததில்லை. அவளது அப்பா காங்கிரஸ் அனுதாபி. சுதந்தர தினத்துக்கு மட்டும் வெள்ளைச் சட்டை போட்டு, கொடி குத்திக்கொள்கிற ஆசாமி. வாழ வந்த இடத்தில் அத்தனை பேருக்கும் தமிழ்ப் பெயர்களும் சிறை சென்ற சரித்திரமும் இருந்ததில் அவளுக்குப் பெரிய வியப்பு ஏதும் ஏற்படவில்லை.

"போவுதுபோ.. குடிச்சி சீரழிஞ்சி சுருண்டு கெடக்காம கட்சி, கட்சின்னுதானே அலையுதுங்க? அதுக்கு இது எவ்ளவோ மேல” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாள். குடித்துச் சீரழிந்த சரித்திரக் கதைகள் அவளது வம்சத்தில் நிறைய இருந்தன. தனக்குப் பிறந்ததாவது படித்து முன்னேறுமா என்று கொஞ்சநாள் கனவு கண்டுகொண்டிருந்தாள். முத்துராமன் பன்னிரண்டாம் வகுப்புடன் முடித்துக்கொள்ள, அடுத்துப் பிறந்த இரண்டும் ஐந்தைத் தாண்டவே அடம் பிடித்ததில், அவள் கனவுகளைச் சுருட்டி அடையாறில் எறிந்துவிட்டு, கடனுக்குத் தையல் மிஷின் ஒன்றை வாங்கி வீட்டில் போட்டு வேலை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

அளந்து அளந்துதான் ஆசைப்படவேண்டும். கவனமுடன் தான் கனவுகள் காண வேண்டும். கடவுள் முக்கியம். கட்சியும் முக்கியம். கணவனும் குழந்தைகளும் அதைவிட முக்கியம். என்ன செய்து யாரைத் தடுத்துவிட முடியும்? முத்துராமனைப் பின்பற்றி அவன் தம்பி தமிழ்க்கனல் கட்சிக்கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் போகத் தொடங்கியபோது கற்பகம் மறக்காமல் தினத்தந்தி பேப்பரில் நாலு இட்லி வைத்து மடித்துக் கொடுத்து அனுப்பத் தொடங்கினாள். தேர்தல் காலங்களில் அவர்கள் இரவு பகலாக வீடு வராமல் கட்சி அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது தானே தேடிப்போய் சாப்பாடு கொடுத்துவிட்டு வர ஆரம்பித்தாள். யார் கண்டது? தொடர் ஓட்டப்பந்தயத்தில் பாதியில் தன் கணவன் நின்றுவிட்ட இடத்திலிருந்து முத்துராமன் தொடரலாம். அவன் மாவட்டச் செயலாளர் ஆகலாம். தேர்தலில் நின்று எம்.எல்.ஏ. ஆகலாம். அதிர்ஷ்டம் இருந்தால் அமைச்சரும் ஆகலாம். ஒருவேளை முடியலாம். சைதாப்பேட்டைச் செம்மல் என்று யாரும் பட்டம் கூடத் தரலாம். எதுவும் சாத்தியம்தான். கனவுகள் ஆசீர்வதிக்கப்படும்போது.

எதற்கும் இருக்கட்டும் என்றுதான் அவள் எப்போதாவது கையில் கொஞ்சம் காசு இருக்கும்போது கடம்பாடி அம்மனுக்கு அரை லிட்டர் பால் பாக்கெட் எடுத்துப் போய் அபிஷேகத்துக்குக் கொடுத்துவிட்டு, கன்னத்தில் போட்டுக்கொண்டு வருகிறாள். இப்போதெல்லாம் முன்னைப்போல் கடவுளே இல்லை என்று புருஷன்காரன் அழிச்சாட்டியம் பண்ணுவதில்லை. கோயிலுக்கு ஆவின் பால் எடுத்துப் போகும்போது சண்டை பிடிப்பதில்லை. பிடிப்புக்கு ஏதோ ஒன்று வேண்டித்தான் இருக்கிறது. மாவட்டச் செயலாளர் பதவி. கிடைக்காத பட்சத்தில் கடவுள் ஆட்சேபணை இல்லை.

0

குவாலிஸ் புறப்பட இருந்த சமயம் பொற்கொடியும் வளர்மதியும் வேகமாக ஓடி வந்தார்கள்.

"டேய் முத்துராமா.. கொஞ்சம் இருடா.. பொண்ணு பாக்கப் போறியாம்ல?” என்று இடுப்பில் தயாராக முடிந்துவைத்திருந்த குங்குமப் பொட்டலத்தை எடுத்து அவன் சற்றும் எதிர்பாராதவிதத்தில் நெற்றியில் தீற்றினாள் வளர்மதி.

அவன் சிரித்தான். ‘இரு, ஒன்ன வந்து கவனிச்சிக்கறேன்.’

"அட எவண்டா இவன்? இப்பவும் வந்து எங்களத்தான் கவனிக்கணுமா? இந்தவாட்டியாச்சும் போன காரியத்த ஒர்க்கவுட்டு பண்ணிக்கினு வா. அப்பால கவனிக்க வேற ஜோலிங்க நிறைய இருக்கும்.”

முத்துராமனுக்கு சிரிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் வேண்டாம். ஒருவேளை அம்மாவுக்குப் பிடிக்காது போகலாம்.

"த.. தள்ளிப்போ. சும்மா கவாங்கவான்னுக்கிட்டு. வந்து பேசிக்கறேன். நீ ஏறுடா..” என்று போலியாகச் சிடுசிடுத்து அவனை வண்டிக்குள் தள்ளினாள் கற்பகம். வீதி நிறைத்து நின்ற ஜனம் கையசைத்தது. பொற்கொடியும் கையசைத்தாள். ஆனாலும் ஏனோ அவன் முகத்தை நேராக அவளால் பார்க்க முடியவில்லை. சற்றும் சாத்தியமே இல்லை என்றாலும், யாரிடமாவது சொல்லலாம் என்று பலகாலமாக நினைத்துக்கொண்டிருப்பதுதான். ஆனால் யாரிடம் சொல்வது? வாய் இல்லாத, காது மட்டும் உள்ள கொள்கலன் ஏதும் உண்டா என்ன?

தான் வந்திருக்கவே வேண்டாம் என்று நினைத்தாள். இந்நேரம் அத்தனைத் துணிகளையும் அலசிப் போட்டிருக்கலாம். இந்தச் சனியன் பிடித்த வளர்மதியால் வந்த வினை. கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள். எதற்காக வரவேண்டும்? ஆகப்போவது ஒன்றுமில்லை. வண்டியில் ஏறுபவனை வெறுமனே பார்த்துக் கையசைக்கிற வேலை. போர்க்களத்துக்குப் போகிறவனை வழியனுப்புகிற மாதிரியா? சே. என்ன அபத்தம் இது. எப்படியாவது இம்முறை முத்துராமனுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட வேண்டும் என்று அவள் மிகவும் விரும்பினாள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இப்படி படை திரட்டிக்கொண்டு போகிற அவஸ்தையிலிருந்து அவன் தப்பிப்பதற்காக மட்டுமல்ல. அதற்குப் பிறகாவது தனக்குள் ஓயாமல் கேட்டுக்கொண்டிருக்கும் மௌன ஓலத்தை அடக்கிச் சுருட்டி அழுத்திப் புதைக்கவும் கூட.

ஆற்றங்கரைக்குத் திரும்பப் போகிற வழியெங்கும் அவள் அதையேதான் நினைத்துக்கொண்டிருந்தாள். இந்த முறை எக்மோர் பெண்ணாமே? அடையாற்றுக்கரைவாசிக்கு கூவக்கரைப் பெண் சரியாகத்தான் இருக்கும். பளபளவென்று குவாலிஸில் போய் இறங்கும் முத்துராமன். குடிசை வாசலில் பெஞ்சு போட்டு உட்காரவைப்பார்களாயிருக்கும். பின்னே இத்தனை கூட்டத்துக்கு உள்ளே எங்கிருந்து இடம் இருக்கும்? த.. சட்னு போயி ஆறு டீ வாங்கியா.. யாரோ, யாரையோ விரட்டுவார்கள். யார் அந்தப் பெண்? கையில் டீ க்ளாஸ¤டன் வந்து முத்துராமன் எதிரே குனிந்த தலையுடன் எப்படி நிற்கப் போகிறாள்? என்ன சேலை உடுத்தியிருப்பாள்? அவளைப் பெற்றவள் நல்லவளாக இருக்கவேண்டும். முத்துராமனை அவள் அடிக்கடி கிண்டல் செய்திருக்கிறாள். பாத்துக்கினே இரு.. சினிமாவுல வர காந்திமதியாட்டம் ஒனக்கு ஒரு மாமியாக்காரி வந்து நிக்கப்போறா. கட்சியும் வேணாம், ஒரு கருமாந்திரமும் வேணாம்னு மெரட்டப்போறா. பொண்ணக் கட்டின பாவத்துக்கு சர்தான் அத்தன்னு சுருண்டு நிக்கப்போற..

முத்துராமன் இதற்கெல்லாம் பதில் சொன்னதில்லை. வெறுமனே சிரிப்பான். எல்லோருக்கும் எப்போதாவது ஒருநாள் திருமணம் ஆகத்தான் போகிறது. யாரோ ஒரு பெண். எங்கிருந்தோ வரப்போகிறவள்.

முத்துராமன் விஷயத்தில் அது ஏன் தானாக இருக்கக் கூடாது என்றுதான் பொற்கொடி நினைத்தாள். வேணாம்டி, நெனப்ப அழுத்தித் தொடச்சிரு என்று அம்மா சொன்னபோது அழக்கூடத் தோன்றவில்லை. துடைத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் அவனுக்குத் திருமணம் ஆகும்வரை தள்ளிப்போட்டால் தப்பில்லை என்று தோன்றியது.

(தொடரும்)

[கல்கியில் தொடராக வெளிவந்தது]

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 21, 2010 @ 1:18 pm