கொசு – 03

அத்தியாயம் மூன்று

வட்டச் செயலாளர் தூங்கி விழித்தபோது மணி மூன்றாகியிருந்தது. அவரைப் பார்ப்பதற்கு முத்துராமன் வந்திருப்பதாகப் பையன் வந்து சொன்னான். இப்ப நான் எங்க இருக்கேன் என்று தனக்குள் கேட்டுக்கொண்டார். தூங்கி எழும்போதெல்லாம் வந்துவிடுகிற குழப்பம். யாரும் கேட்பதற்கில்லை என்கிற சுதந்தரத்தில், வயசுக் காலத்தில் கையில் புரளத் தொடங்கியிருந்த காசு கொடுத்த தன்னம்பிக்கையில், தன் வாழ்வில் அவர் செய்துகொண்ட புதிய ஏற்பாடு தொடக்கத்தில் நம்பிக்கையளிக்கும் விதத்தில்தான் இருந்தது. தொழில் சிறந்த காலம் அது. சைதாப்பேட்டையின் காய்கறி மார்க்கெட் அநேகமாக அவரது முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. ஓடுகிற லாரிகளும் இறங்குகிற சரக்குகளை அடுக்கிப் பிரிக்கிற இடமும்.

பஜார் அப்போது பெரிய அளவில் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் துணிக்கடைகள். வீராச்சாமி முதலியார் நாட்டு வைத்தியக் கடை. பிராந்தியத்தில் ஒரிஜினல் சிட்டுக்குருவி லேகியம் விற்றுக்கொண்டிருந்த ஒரே வியாபாரி. அங்கே அரிசி மண்டி. இங்கே ஒரு பலசரக்குக் கடை. ஒரு ஹோட்டல் திறந்தால் லாபம் இருக்கக்கூடும் என்று வட்டச் செயலாளர் நினைத்தார்.

அடச்சே சும்மா கெட என்று அவருடைய அப்பா சொன்னார். ‘நம்மூர்ல ஓட்டல்ல துண்றவன் எத்தன பேரு? ஐயமாருங்க ஏரியா இது. காப்பி க்ளப்பு போடுறியா? செய்யின்னுவேன். ஆனா நம்மாளுங்க போடுற காப்பிய கழுனித்தண்ணின்னுடுவானுக. திராவகம் மாதிரி ஸ்டிராங்கா காப்பி போடத்தெரிஞ்ச ஆளு ஒருத்தன புடி மொதல்ல. அப்பால ஓட்டல் தொறப்பியாம்.’

ஆனால் வட்டச் செயலாளருக்குத் தன் தந்தையின் கணிப்பு காலம் புரியாதது என்று தோன்றியது. சண்டை போட்டுப் பணம் வாங்கி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நூறடி தொலைவில் ‘இனிய தமிழ் அசைவ உணவகம்’ என்று போர்டு போட்டுக் கடை விரித்தார்.

அப்போது அவர் வட்டச் செயலாளர் இல்லை. வெறும் தொண்டர். இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் கோஷமிட்டுக்கொண்டு பெருமாள் கோயில் தெருவுக்குள் போய் அழிப்பதற்கு ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தார். ஹிந்தி வாத்தியார் ஒருவரின் வீட்டு வாசலில் இருந்த டியூஷன் போர்டு தவிர வேறெதுவும் கண்ணில் படவில்லை. தவிரவும் தார் கொண்டு அழிக்க அதில் ஏதுமில்லை. தண்ணீர் தெளித்தால் அழியும் சாக் பீஸ் எழுத்துகள். ஆகவே அவர் ஹிந்தி வாத்தியாரை மட்டும் அடித்துவிட்டு நேரே போலீஸ் ஸ்டேஷன் வாசலுக்குப் போய் தயாராக இருந்தார்.

என்ன துரதிருஷ்டம்? தன்னை அடித்த ஒருவன் மீது புகார் கொடுக்கவேண்டுமென்று தோன்றாதா ஒருவருக்கு? ஒரு மணி நேரம் காத்திருந்தும் ஹிந்தி வாத்தியார் புகார் கொடுக்க வராத காரணத்தால் சிறை செல்லும் எண்ணம் வீணாகி, துக்கத்தைப் போக்கிக்கொள்ள அன்றிரவு பாரகன் டாக்கீஸ¤க்குப் போனார். ராஜ் கபூர் நடித்த படம். நர்கீஸ¤ம் ராஜ் கபூரும். எத்தனை அருமையான ஜோடி! லயித்துப் பார்த்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிவிட்டார்.

பிற்பாடு நிறைய கூட்டங்களில் தோரணம் கட்டி, கைக்காசைச் செலவழித்து உணவுப் பொட்டலங்கள் போட்டு, போஸ்டர் ஒட்டி, தலைவர் வந்தபோது ஓடிச்சென்று புதிய செவனோக்ளாக் பிளேடால் புறங்கையில் கீறி ரத்தத் திலகமிட்டுப் படிப்படியாக மேலுக்கு வந்தார். பேசத் தெரிந்திருந்தது. உணர்ச்சி கொப்பளிக்க. நரம்புகள் புடைக்க. கண்களில் நீர் மல்க. அவரை வட்டச் செயலாளராகக் கட்சி மேலிடம் நியமித்தபோது காய்கறி மார்க்கெட்டில் அவர் தனக்கெனத் தனியிடம் பிடித்திருந்தார்.

எப்போதுமே முதலில் தொடங்குகிற எதுவும் எப்படியோ ஜெயித்துவிடுகிறது. காய்கறி மார்க்கெட்டுக்கென்றே அவர் ஓட்டத்தொடங்கிய லாரிகளைப் போல. பேட்டையின் முதல் அசைவ உணவகமாக அவர் தொடங்கிய இனிய தமிழைப் போல. மகன் தேறிவிட்டான் என்று அவரது தந்தை நிம்மதியாகக் கண்ணை மூடினார். வட்டச் செயலாளர் துணிந்து தன் வாழ்வில் இரண்டாவதாக ஒரு பெண்ணுக்கு இடமளிக்க முடிவு செய்து கிண்டி தொழிற்பேட்டைப் பகுதியிலிருந்து அழைத்து வந்தார்.

அன்பான மனைவி. ஆசைக்கும் ஆஸ்திக்குமாக இரண்டு பிள்ளைகள். அப்புறமெதற்கு இரண்டாவது என்று தெரிந்தவர்கள் கேட்டார்கள். செயலாளர் யாருக்கும் பதில் சொல்லவில்லை. பிரமாதமான காதலில் விளைந்த திருமணம் இல்லை அது. ஆனாலும் அது ஓர் அவசியம் என்று அவர் நினைத்தார். தவிரவும் பகுதியில் அதற்குமுன் யாரும் இரண்டாவது சம்சாரம் என்று வைத்துக்கொண்டிருக்கவில்லை. வியாபாரத்தைப் போல வாழ்க்கையும் ஒரு புதிய திருப்பம் காணும் என்று அவர் எண்ணியிருந்தார்.

மாறாக, பேட்டையில் அவருடைய செல்வாக்கு பலபேரால் பங்கிடப்படத் தொடங்கியிருந்தது. தொலைவில் தெரியும் லாரியின் முகப்பு விளக்கு மாதிரி இருக்கும். சடாரென்று பாய்ந்து கடந்து போய்விடுவார்கள். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே அவருக்குப் புரியவில்லை. அவர் நீண்டகாலமாக வட்டச் செயலாளராக இருந்தார். அந்தப் பதவிக்குப் பிரச்னை இல்லை. ஆனால் மேலும் மேலுக்கு வரவிடாமல் தடுப்பது எது? வாழ வந்த முதல் மனைவி, ஆள வந்த இரண்டாமவளை அங்கீகரித்துவிட்டாள். மகன்கள் இருவரும் தலையெடுத்துவிட்டார்கள். தொழில் பெருகியிருக்கிறது. பணம் பெருகியிருக்கிறது. ஆனாலும் கட்சி தன்னை உரிய முறையில் பெருமைப்படுத்தவில்லை என்கிற எண்ணம் மட்டும் அவருக்கு இடைவிடாமல் அரித்துக்கொண்டிருந்தது. ஏதாவது செய்யவேண்டும். அத்தனை பேரும் கவனிக்கும் விதத்தில். கட்சி கொண்டாடும் விதத்தில். அடுத்த தேர்தலிலாவது ஒரு சீட் கிடைக்கிற விதத்தில்.

என்ன செய்யலாம்? தனது அடிப்பொடிகளுடன் அவர் தீவிரமாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ஒரு வார காலமாக. இரவு பகலாக. சிறியதொரு திட்டம் போலத் தோற்றம் தரவேண்டும். ஆனால் சில மாதங்களாவது இடைவிடாமல் நடந்தாகவேண்டும். பேசப்படத்தக்கதாக இருக்கவேண்டும். தனியொருவனாகத் தான் முன்னின்று வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டுப் பெருமையைத் தலைவரின் காலடியில் சென்று வைத்துவிட வேண்டும். இது உதவும். காலடியில் வைக்கப்படும் பெருமைகளுக்குக் கண்டிப்பாகத் தலைவர் பதில் மரியாதை செய்துவிடுவார். என்ன செய்யலாம்?

அப்போதுதான் மாந்தோப்புக் காலனி வடிவேலு சொன்னான். அவருடைய எடுபிடி போல எப்போதும் உடனிருக்கும் தொண்டரடிப்பொடியன். "நம்ம முத்துராமன கூப்ட்டுப் பேசுங்க தலைவரே! உங்க கனவு ஒர்க்கவுட் ஆவணும்னா அவன் தான் சரி. திட்ட கமிஷன் துணைத்தலைவரு மாதிரி ஏகப்பட்ட ஐடியாங்க வெச்சிருக்கான். இன்னாத்துக்குடா இவ்ளோ யோசிக்கற, ஒடம்புக்கு ஒத்துக்காம, வயித்தால போயிடப்போவுதுன்னா சிரிக்கறான். மக்களுக்கு நல்லது செய்யணுங்கறான். நீங்க பாத்துப் பேசி திருத்தினாத்தான் உண்டு."

அதனால்தான் வரச்சொல்லி இருந்தார். முத்துராமன். அட, பெண் பார்க்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தான் அல்லவா? பார்த்துவிட்டானா? திருமணத்துக்கு நாள் குறித்தாகிவிட்டதா?

"அப்பிடியா? பய என்னாண்ட சொல்லவேயில்லியே?" என்றான் வடிவேலு.

"த.. ஓட்றா.. போயி நம்ம சுண்ணாம்புக்கடைக்காரராண்ட விசாரிச்சிட்டு பின்வழியா ஓடியா. அவருதான் அவன் பொண்ணு பாக்கப் போவ வண்டி குடுத்து அனுப்பிச்சாரு. வெவரம் தெரிஞ்சிருக்கும்."

வடிவேலு தலைவரிடம் சில நுணுக்கங்களைக் கண்டு பிரமித்திருக்கிறான். அவற்றில் இதுவும் ஒன்று. தகவல் சேகரிப்பில் அவர் செலுத்துகிற ஆர்வம். எதிராளி எதிர்பாராத தருணத்தில் அதை லாகவமாக வெளிப்படுத்தி வியப்பூட்டும் அலகிலா விளையாட்டுக் குணம். வட்டம் என்றால் சும்மாவா? அவன் ஓடினான்.

அவர் எழுந்து சோம்பல் முறித்தார். தயாராக இருந்த காப்பியைக் குடித்துவிட்டு முகம் கழுவி குட்டிக்குரா பவுடரை மேனியெங்கும் தெளித்துக்கொண்டார். ஹேங்கரில் கழட்டி மாட்டியிருந்த வெள்ளைச் சட்டையை மீண்டும் எடுத்து அணிந்துகொண்டு தலையைச் சீவிக்கொண்டார். பழசாகிவிட்ட புதிய ஏற்பாடு, அவர் வெளியே கிளம்புகிறாரா என்று கேட்டது.

"அட ஆமா ஒரு முக்கியமான இது.. ஆறு மணிக்குள்ளார வந்துருவேன்." என்று சுவரைப் பார்த்து பதில் சொன்னார்.

"நைட்டுக்கு சமைக்கணுமா வேணாமான்னுதான் கேக்குறேன். நீங்கபாட்டுக்கு இங்க வரேன்னிட்டு அங்க போயிட்டிங்கன்னா நாளைக்கு பழையத யாரு திங்கறது?"

சொல்வதற்கில்லை. டிபன் பாக்ஸில் போட்டு அந்த வீட்டுக்கு அனுப்பினாலும் அனுப்பிவிடுவாள் என்று அவருக்குத் தோன்றியது. எத்தனைக் காலமானாலும் பெண்கள் சில விஷயங்களில் மாறுவதே இல்லை. தவிரவும் வட்டச்செயலாளர் என்கிற பதவியையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

அவர் கண்டுகொள்ளாத மாதிரி வெளியே வந்தார். வாசலில் காத்திருந்த முத்துராமன் அவரைக் கண்டதும் சட்டென்று எழுந்து வணக்கம் சொன்னான்.

"நல்லாருக்கிங்களா தலைவரே? வரசொன்னிங்கன்னு சொன்னாங்க."

"வாய்யா மாப்ள.. எப்பிடி இருக்கா நம்ம மருமவப் பொண்ணு வள்ளி மயில்?"

முத்துராமன் முகத்தில் மெல்லிய வியப்பும் சந்தோஷமும் வெளிப்பட்டது. காட்டிக்கொள்ளாமல் ‘ஆமா தலைவரே. நீங்கதானே சொல்லியிருக்கிங்க? நம்மாளுங்க கூட தமிழ்ப்பேரு வெக்கலைன்னா வேற எவன் வெப்பான்னு?’

"ரொம்ப கரெக்டு. எல்லாம் கேள்விப்பட்டேன். உன் கல்யாணத்த நான் நடத்திவெக்கறேன். எப்ப வெச்சிருக்காங்க?"

"ஜனவரில இருக்கும் தலைவரே. டேட்டு நான் அப்பால சொல்றேன்னிருக்கேன். மாநாடு வருதில்ல? அதுக்கு பாதிப்பில்லாம பாத்துக்கணும்னிட்டு ஒரு இது.."

"அதுவும் செரிதான். கட்சிக்காரனுக்கு சொந்த சந்தோசம், சொந்த துக்கமெல்லாம் ரெண்டாம்பட்சம். உங்கப்பா அந்தக் காலத்துல மூணு மாசத்துக்கு ஒருதபா தான் வூட்டுக்கே போவாரு, பாவம். செரி அத்தவுடு. ஒரு முக்கியமான காரியம். அதான் உன்னிய கூப்ட்டுவுட்டேன்."

"சொல்லுங்க தலைவரே..!" முத்துராமன் கவனமுடன் அவரை நெருங்கி, கையைக் கட்டிக்கொண்டு நின்றான்.

வட்டச் செயலாளர் சுற்றுமுற்றும் பார்த்தார். "ம்ம்.. இங்க வேணாம்.. வா, நாம நம்ம ஆபீசுக்குப் போயிரலாம்.." என்று அவன் தோளில் கைவைத்து அழைத்துக்கொண்டு வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கினார்.

முத்துராமனுக்குப் பெருமையாக இருந்தது. எத்தனை நம்பிக்கை இருந்திருந்தால் தலைவர் தன்னைத் தனியே அழைத்துச் சென்று விவாதிக்க விரும்புவார்? கண்டிப்பாக அவன் மேலே வரப்போகிறான். சந்தேகமில்லை. வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் சொல்லவேண்டும். எல்லாம் பெண் பார்த்துவிட்டு வந்த ராசி என்று சந்தோஷப்படுவாள்.

ஒரு வேளை அதுதான் உண்மையும் கூடவோ? இருக்கலாம். அவனுக்கு ஒரு நடை எக்மோர் சென்று சாந்தியை இன்னொருமுறை பார்த்துவிட்டு வரவேண்டும் போலிருந்தது. சே, வள்ளி மயில்.
(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 21, 2010 @ 1:15 pm