அங்காடித் தெரு
அத்திப் பூத்தாற் போல் வரும் நல்ல திரைப்படங்களின் வரிசையில் அங்காடித்தெருவும் சிறப்பிடம் பெறுகிறது. உயிரூட்டமுள்ள கதை,கதையுடன் இயைந்த பாத்திரங்கள் என்று மனதைப் பிசைந்து செல்கிறது. வசந்தபாலன் போன்ற இயக்குனர் தமிழ்த் திரையுலகை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார் என்றால் மிகையல்ல.
மகேஷ்ஷும் அஞ்சலியும் கதாநாயகர், நாயகி. இல்லை, லிங்கமும் கனியுமே கதையின் முக்கிய பாத்திரங்கள். +2 தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவராகத் திகழ்ந்த ஜோதிலிங்கத்திற்கு தொடர்ந்து படிக்க முடியாத சூழல், தந்தையின் மறைவு, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இளம் வயதிலேயே லிங்கத்திடம் வந்து சேர, வேலைக்காக சென்னை அங்காடித்தெருவில் உள்ள 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்'(!) என்ற கடையில் தன் நண்பருடன் பணியாளராக சேர்கிறார். அங்கே உடன் பணி புரியும் கனியும் லிங்கமும் காதலர்களாக, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் காதலர்களுக்கு நேர்ந்த துயரத்தைப் பார்த்து லிங்கமும் கனியும் தவிக்க அவர்களுக்கு நேர்ந்த நிலை என்ன என்பது நெஞ்சை உலுக்கும் இறுதிக்காட்சி.
காட்சிக்கு காட்சிக்கு யதார்த்தம் இழையோடுகிறது. கதையும் கதை நகரும் விதமும் படத்துடன் ஒன்றச் செய்கிறது. மகேஷ் புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்குத் தன் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். நடிக்கத் தெரிந்த குடும்பப்பாங்கான நடிகை தமிழ்த்திரையுலகிற்குக் கிடைத்தாயிற்று. எவ்வித ஒப்பனையுமில்லாமலே இத்தனை அழகா? என்று கதையின் நாயகி அஞ்சலியும் வியக்க வைக்கிறார். இவர் மகேஷ்ஷுடன் மோதுவதும் காதலாகி உருகுவதும் ஊடலும் அழகு. மகேஷ்ஷின் தோழராக வருபவரும் பார்ப்பவர் உள்ளங்களை அள்ளிச் செல்கிறார். ஒரே ஒரு காட்சியின் சிறப்புத்தோற்றமாக சினேகாவும் இடம் பெற்றிருக்கிறார். 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' பாடலும் பாடலுக்கான காட்சி அமைப்பும் மிகவும் அருமை. படத்தின் அனேக காட்சிகள் இயற்கை வெளிச்சத்திலேயே படம் பிடிக்கப்பட்டிருப்பது ரம்மியம்.
கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையையும் தொழிலாளர்களின் அவல நிலையையும் இவ்வளவு அருமையாக யாராலும் படம் பிடித்திருக்க முடியாது. பரபரப்பான கடைத்தெருவான அங்காடித்தெரு ரெங்க நாதன் தெருவையே பிரதிபலிக்கிறது. நாள் முழுக்க நின்று கொண்டே வேலை செய்ய வேண்டிய நிலை,மதிய உணவு இடைவேளைக்குக் கொடுக்கப்படும் நேரம் அரை மணி நேரம், ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் சம்பளத்தில் ஒரு ரூபாய் கட் என்ற மேலாதித்துவம், சுகாதாரமில்லா உணவுக்கூடம், பன்றிகள் கூடத்தை விட கேவலமான உறங்குமிடம் என்று தொழிலாளர்களின் துயரங்களைக் கண் முன் நிறுத்துகிறார் இயக்குனர். சிறிய அளவிலான பட்ஜெட் படங்கள் என்றாலும் கதைக்கருவும் திரைக்கதையும் சிறந்த இயக்குனரும் இருந்தால் எந்தத் திரைப்படமும் வெல்லும் என்பதற்கு 'அங்காடித்தெரு'வும் உதாரணம். அனைவரும் பார்த்து ரசிக்கக்(பரிதவிக்கக்)கூடிய சிறந்த திரைப்படம்.