உலகக் கோப்பை 2010 – இறுதிப் போட்டி

 

உலகத்திலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட ஆட்டம் கால்பந்து. அதில் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம். முந்திய நாள் நடந்த மூன்றாமிடத்திற்கான ஆக்ரோஷமான விளையாட்டைக் கண்டு அது போலவே இருக்கும் என அதிகம் எதிர்பார்த்த ஆட்டம். ஐரோப்பாவின் கால்பந்து அணிகளான இங்கிலாந்து, ப்ரான்ஸ், இத்தாலி எல்லாம் மண்ணைக் கவ்வி விட்டன. முதல் சுற்றில் மிகவும் பிரமாதமாக ஆடிய தென் அமெரிக்க அணிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. இறுதியில் நிற்பது ஸ்பெயினும் நெதர்லாந்தும்.
 
முதல் ஆட்டத்தைக் கோட்டை விட்ட ஸ்பெயின், அதற்குப் பின் சுதாரித்துக் கொண்டு தனது மற்ற ஆட்டங்களை ஜெயிக்கத் தொடங்கியது. ஆனால் மற்ற அணிகளைப் போல் பல கோல்கள் போட்டு பெரும் வெற்றி எல்லாம் பெறாமல் பெரும்பாலும் ஒரே ஒரு கோல் வித்தியாசத்தில்தான் வென்று கொண்டிருந்தது. அவர்களின் நட்சத்திர ஆட்டக்காரான டேவிட் வியா கோல் போட்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்.
 
நெதர்லாந்து அணியோ தனது ஆட்டங்கள் எதிலேயும் தோற்காமல் வெற்றியை மட்டுமே குறியாக ஆடி வந்து கொண்டிருந்த அணி. ஸ்பெயினுக்கு வியா என்றால் இவர்களுக்கு ஸ்னைடர் அதிக அளவில் கோல்களை போட்டுக் கொண்டிருந்தார். தொடர்ந்து 25 ஆட்டங்களாகத் தோற்காமல் விளையாடி வரும் அணியாக ஒரு சாதனையே படைத்து வரும் அணி இந்த நெதர்லாந்து அணி.
 
போதாத குறைக்கு இரு அணிகளுக்குமே முதல் கோப்பையை வெல்ல வாய்ப்பு. அது மட்டுமில்லாமல் இது வரை எந்த ஐரோப்பிய அணியும் ஐரோப்பாவிற்கு வெளியே கோப்பையை வென்றது கிடையாது. இதுவே முதல் முறை அவ்வாறு நடக்கப் போகிறது. இப்படி பல சாதனைகள் நடக்கப் போகும் ஆட்டம் இது. வழக்கம் போல ஒரு கோல் வெற்றி பெறும் ஸ்பெயின் இன்றும் வெல்லுமா, தோல்வியையே பார்க்காத நெதர்லாந்து தோற்றுவிடுமா என்று பல எதிர்பார்ப்புகளுடம்தான் நான் இந்த இறுதி ஆட்டத்தினைப் பார்க்க உட்கார்ந்தேன்.
 
ஆரம்பிக்கும் பொழுது சூடாகத்தான் ஆரம்பித்தது ஆட்டம். இரண்டாவது நிமிடத்திலேயே பெட்ரோ மீதி வான் பர்ஸி தாக்குதல் நிகழ்த்த ரெப்ரி வெப் விசிலை ஊத ஆரம்பித்தார். ஆட்டம் முடியும் வரை ஊதிக் கொண்டேதான் இருந்தார். சூடாகவே ஆரம்பித்த ஆட்டம் சீக்கிரமே சவசவ என்று ஆகிப் போனது. சொத்தையான இரு அணிகள் ஆடினால் கூட இதைவிட நன்றாக இருக்கும் என்ற நிலமையிலேயே ஆட்டம் இருந்தது. ஜெர்மனியுடன் ஆடிய பொழுது பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலமாகவே வென்ற ஸ்பெயின் அணி அதே போக்கை இந்த ஆட்டத்திலும் கடைபிடிக்க முயன்றது. ஆனால் நெதர்லாந்து தொடர்ந்து ஸ்பெயின் அணியினர் மீது தாக்குதல்களை நடத்தியது. முதல் 22 நிமிடங்களுக்குள் நான்கு முறை மஞ்சள் அட்டை வெளியே வந்தது.
 
பந்தை விட வீரர்கள் மேல் தாக்குதல் நடத்தும் ஆட்டத்தை நெதர்லாந்துதான் அதிகம் செய்தது. 28ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் டி யாங் தேவையே இல்லாமல் ஸ்பெயினின் அலான்ஸோவின் மார்பில் உதைத்தார். இதற்காக இவர் சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் ஒரு மஞ்சள் அட்டையோடு தப்பித்தார். இப்படிப் பல முறை பவுல் செய்தனர் நெதர்லாந்து அணியினர். ஸ்பெயின் அணியினரும் அவர்கள் பங்குக்கு பவுல் செய்து மஞ்சள் அட்டையினை வாங்கிக் கொண்டனர்.
 
இது போன்று இதற்கு முன் நடந்தேயிராத அளவு இந்த ஆட்டத்தில் மொத்தம் 14 முறை மஞ்சள் அட்டை தரப்பட்டது. அதிலும் நெதர்லாந்து வீரர் ஜான் ஹெயிட்டிங்கா இரண்டு முறை மஞ்சள் அட்டை வாங்கியதால் 109ஆம் நிமிடம் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அதன்பின் 10 பேர் மட்டுமே கொண்டு விளையாடியது நெதர்லாந்துக்குப் பெரும் பின்னடைவே. அவர்கள் இப்படி ஒரு ஆட்டத்தை ஆடாமல் தமது வழமையான திறமையைக் காண்பித்திருந்தால் இன்னும் சிறப்பாக ஆடி இருப்பார் என்பதுதான் என் எண்ணம்.
 
கோல் அடிக்க மிகக் குறைந்த வாய்ப்புக்களே கிடைத்த முதல் பாதி முடிந்த பொழுது, இப்படி ஒரு ஆட்டத்தினால் வருத்தம் அடைந்த அனேகம் பேரில் நானும் ஒருவன். முதல் பாதியை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இரண்டாவது பாதி கொஞ்சம் பரவாயில்லையாய் இருந்தது. இரு அணியினருக்கும் கோல் அடிக்க சில சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் கோல்கீப்பர்கள் திறமையாகத் தடுத்தாடி தம்மைத் தாண்டி பந்து செல்லாதவாறு பார்த்துக் கொண்டனர். 90 நிமிடங்கள் விளையாடிய பின்னரும் எந்த அணியினரும் கோல்  போடாத நிலையில் ஆட்டம் அரை மணி நேரம் நீடிக்கப்பட்டது.
 
இந்த நீடிக்கப் பட்ட நேரத்திலும் ஸ்பெயின் அணியினரின் கை ஓங்கி இருந்தாலும் அவர்களால் கோல் போட முடியாத நிலமையே நீடித்தது. அப்பொழுதுதான் தேவையில்லாமல் மீண்டும் ஒரு பவுல் செய்து ஹெய்டிங்கா இரண்டாவது மஞ்சள் அட்டையினைப் பெற்று ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அது வரை நன்றாகப் போராடிய நெதர்லாந்து அணி ஆள் எண்ணிக்கை குறைந்ததால் ஸ்பெயினின் அதிரடி ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறத் தொடங்கியது. முப்பது நிமிடங்கள் நீடிக்கப் பட்ட ஆட்டத்தில் 25ஆம் நிமிடத்தில் நெதர்லாந்து கிட்டத்தட்ட கோல் போடும் நிலையை அடைந்தது. ஸ்பெயின் வீரரின் மேல் பட்டு வெளியே சென்றதால் கார்னர் கிக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் ரெபரி தவறுதலாக அதனைத் தராமல் விட்டுவிட்டார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாலை முன்னே கொண்டு சென்றனர் ஸ்பெயின் வீரர்கள். டாரஸ், பேப்ரகாஸ் என நட்சத்திரங்கள் அனைவரும் தொட்டுக் கொடுத்த பந்தினை அழகாக கோலினுள் அடித்தார் இனியஸ்டா.
 
ஆட்டம் முடிய இருந்த சில நிமிடங்களில் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தனர் நெதர்லாந்து அணியினர். அவர்கள் ஒன்றும் செய்ய முடியாத படி ஸ்பெயின் வீரர்களும் தடுத்தாடத் தொடங்கினர். மேலும் மூன்று மஞ்சள் அட்டைகளுடன் ஆட்ட நேரம் முடிந்தது. ரெப்ரி வெப் விசிலை ஊதி ஆட்டத்தை முடித்து வைத்தார். ஸ்பெயின் வீரர்கள் மகிழ்ச்சியுடன் களத்தினைச் சுற்றி ஓட, நெதர்லாந்து வீரர்களோ உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாமல் அழுதே விட்டனர்.  ஆட்டம் முடிந்த பின் நெதர்லாந்து வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கமும், ஸ்பெயின் வீரர்களுக்குத் தங்கப் பதக்கத்தோடு கோப்பையும் தரப்பட்டது.
 
ஒரு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்திற்கான தரத்தில் ஆடப்படாத ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. ஆனால் இரு அணிகளில் கொஞ்சம் சிறப்பாக விளையாடிய ஸ்பெயின் கோப்பையை வென்றது ஒரு ஆறுதல். இந்த ஆட்டத்தின் போது நிகழ்ந்த  சில சுவாரசியமான விஷயங்கள்.
 
–         ஸ்பெயின் அணி முதல் முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. உலகக் கோப்பையை வென்று எட்டாவது நாடாக ஸ்பெயின் ஆனது.
–         ஐரோப்பாவை விட்டு வெளியே நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் முதல் முறையாக ஒரு ஐரோப்பிய அணி வென்றது
–         இனியஸ்டா 116ஆம் நிமிடத்தில் அடித்த கோல்தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் மிகவும் தாமதமாக வெற்றியை கிட்டச் செய்த கோல்
–         இந்த ஆட்டத்தில்தான் அதிக மஞ்சள் அட்டைகள் தரப்பட்டன. மொத்தம் 14.  இதற்கு முன் அதிக பட்சம் ஆறு மஞ்சள் அட்டைகள்தான்.
–         ஸ்பெயின் இந்தப் போட்டிகளில் 8 கோல்கள்தான் போட்டது. இதுவே ஒரு வெற்றி பெற்ற அணியினர் அடித்த மிகக் குறைவான கோல் எண்ணிக்கை.
–         தொடர்ந்து பத்து வெற்றிகளையும், 25 போட்டிகளாக தோற்காமலும் ஆடி வந்த நெதர்லாந்து அணி தோற்றுப் போனது
–         கிட்டத்தட்ட 84,500 ரசிகர்கள் இந்த இறுதிப் போட்டியினைக் கண்டு களித்தனர்
–         எட்டு போட்டிகளில் சரியாக முடிவைக் கணித்த பால் ஆக்டோபஸ் இனி எந்தப் போட்டிகளுக்கும் முடிவினைக் கணிக்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டது
–         இந்த போட்டிகளை மிகவும் நன்றாக நடத்திய தென்னாப்பிரிக்காவிற்கு உலகெங்கிலும் நற்பெயர் கிடைத்தது.
–         2014ஆம் ஆண்டு, அடுத்த உலகக் கோப்பை ப்ரேசிலில் நடைபெறும்.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “உலகக் கோப்பை 2010 – இறுதிப் போட்டி

  • July 13, 2010 at 2:05 pm
    Permalink

    //ஒரு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்திற்கான தரத்தில் ஆடப்படாத ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது.// ரெண்டு பலசாலிகள் மோதிக்கொள்ளும்போது சிலவேளைகளில் முடிவு கிடைக்காமலே போய்விடக்கூடுமல்லவா – ஈக்குவலா வலு கொடுத்திருக்காங்கன்னு நினைச்சுக்கிடவேண்டியதுதான் :))

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 13, 2010 @ 1:52 pm