தமிழ் சினிமாவின் பைத்தியகாரத்தனம்
தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட செண்டிமெண்டுகளும், பைத்தியகாரத்தனங்களும் உண்டு. அதில் ஒன்றை இப்போது பார்ப்போம்.
கருணாஸ் ‘அம்பாசமுத்திரத்தில் அம்பானி’ படத்தில் கதையின் நாயகனாகதான் நடிக்கிறார், மற்றபடி ஹீரோ கதைதான்.
சுஹாசினி ’உள்ளமெல்லாம் தள்ளாடுதே’ என்ற புதிய படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.
ஆங்கிலத்தில் ஹீரோ – தமிழில் கதாநயகன்.
கதாநாயகன் என்பவன் கதையின் நாயகன், அதாவது அந்த கதையில் முக்கிய / மைய பாத்திரம். கதாநாயகியும் அதே. அப்படியிருக்க கதாநாயகன், கதாநாயகி என்று சொல்லாமல் கதையின் நாயகன் என்று சொல்லி யாரை திருப்திபடுத்துகிறார்கள் அல்லது முட்டாளாக்குகிறார்கள் தெரியவில்லை.
கருணாஸ் கதாநாயகன் என்றால் இவனெல்லாம் ஒரு ஹீரோவா கேலி செய்வார்கள், ஆனால் அதையே பிரித்து கதையின் நாயகன் என்றால் என்ன தன்னடக்கம் என்று வாழ்த்துவார்கள், கேட்கவே வேடிக்கையாக இல்லை ?
கதாநாயகன் என்றால் அது ரஜினி, கமல், விஜய்.. வகையறாவாக இருந்து அட்டை கத்தில், பொம்மை துப்பாக்கியுடன் சண்டை போடுபராக இருக்க வேண்டும் என்று என்ன அவசியம் ? கதாநாயகி என்றால் சின்ன பெண்ணாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் என்ன ?
நாகேஷ் கதாநாயகனாக நடித்த படங்களில் பறந்து பறந்து சண்டை போட்டாரா இல்லை நான் ஹீரோவா நடிச்சுட்டேன் இனிமே காமெடி ரோல் செய்ய மாட்டேன் என்று ஒதுங்கிக்கொண்டாரா ? இரண்டுமில்லை. அவர் கதாநாயகனாக நடித்த படத்தையும் ரசிகர்கள் ரசித்தார்கள், காமெடியனாக நடித்ததையும் ரசித்தார்கள்.
அவ்வளவு ஏன், வடிவேலு ஹீரோவாக இரண்டு படங்களில் நடித்தார், ஒன்று ஓடியது, மற்றொன்று தியேட்டரை விட்டு ஓடியது, மீண்டும் காமெடியனாக பட்டையை கிளப்புகிறார்.
ஒரு சிலர் கதையிலும், நிஜத்திலும் கதாநாயகர்களாக இருப்பார்கள். அவர்களை எப்போதும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். மற்றவர்களை திரையில் ரசிப்பதோடு நிறுத்தி வேலையை பார்ப்பார்கள்.
ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களை முட்டாளாக்க முயற்சி செய்யாதீர்கள்.