மதராஸப்பட்டிணம்
சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் நடைபெறும் அருமையான காதல் கதை.
எண்பது வயதுப் பாட்டி வெளி நாட்டிலிருந்து சென்னைக்கு வருகிறார். அவர் கண்களில் யாரோ ஒருவரைத் தேடும் ஏக்கம், கவலை. அவரது பேத்தியும் அவரது உதவியாளர்களும் அவரது தேடல் வேட்டைக்கு உதவ,பாட்டியின் முற்கால நினைவுகளில் கதை பயணிக்கிறது.
கவர்னரின் மகளான எமி ஜாக்சனுக்குச் சலவைத் தொழிலாளி ஆர்யாவின் மேல் காதல். வழக்கம் போல எமியின் தந்தை தன் நாட்டைச் சேர்ந்தவரும் போலீஸுமானவருக்கு நிச்சயம் செய்ய காதல் ஜோடி தப்பி ஓட முயற்சிக்கிறது. இந்தக் காதல் போராட்டத்தின் இறுதி நாள் சுதந்திரப் போராட்டதிற்கு விடிவு கிடைத்த விடுதலை நாள். ஆர்யா-எமியின் காதல் நிறைவேறியதா? பாட்டிக்கும் இந்த ஜோடிக்கும் என்ன தொடர்பு என்பது படத்தின் சுவாரஸ்யங்கள்.
எத்தனையோ திரைப்படங்களில் பார்த்துப் பழகிய காதல் கதை என்றாலும் கதைக்களமும் காதலைத் திரைக்கதையில் காட்டிய விதமும் புதுமை. ஆங்கிலேயரை எதிர்க்கும் ஆர்யா புஜபலத்துடன் நல்ல நடிப்பையும் வழங்கியிருக்கிறார். எமியிடம் பேசுவதற்கு ஆங்கிலம் கற்றுக் கொள்ளுவதும் போலீஸை எதிர்த்து தங்கள் இருப்பிடத்தை மீட்டுத் தருவதும் என்று கலக்கியிருக்கிறார்.
எமி ஜாக்சன் புதுமுகம் என்பதை நம்ப முடியவில்லை. பளிங்குச் சிலை போல் இருக்கும் இவர் நடிக்கவும் செய்திருப்பது கூடுதல் அழகு. புகைப்படம் எடுக்கும் போது அசையாமல் நிற்கும் ஹனீபா சிரிக்கச் செய்கிறார். அத்துணை திறமை வாய்ந்த நடிகரை இழந்தது திரையுலகத்திற்குப் பெரிய இழப்பு தான். குஸ்தி கற்றுத் தரும் நாசர், காந்தியவாதி நாசர், ஆர்யாவின் எதிரியாக வரும் அந்த போலீஸ் போன்ற அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.
அந்த காலத்துச் சென்னையை திரையிலாவது மீட்டெடுத்துக் காட்டிய இயக்குனர் விஜய்க்கு நிச்சயம் நன்றி சொல்லியாக வேண்டும். ஆனால் இன்னும் சிறப்பாகக் காட்டி இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இவரது கற்பனைக்குப் பலமாக அமைந்த கலை இயக்குனர் செல்வக்குமாரும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவும் பாராட்டத்தகுந்தவர்கள். ஜீ.வி.பிரகாஷின் இசையும் அருமை. ‘வாம்மா துரையம்மா’ பாடல் ரசிக்க வைக்கிறது. காதலனையும் டைட்டானிக்கையும் சில காட்சிகள் நினைவுபடுத்தினாலும் படமும் படமாக்கப்பட்ட விதமும் மிகவும் அருமை.அரைத்த மாவை அரைத்துக் கொண்டிருக்காமல் வித்தியாசமான காதல் கதையை அழகான காவியமாகப் படம் பிடித்த இயக்குனரும் தயாரிப்பாளருமான விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள் நல்ல திரைப்படம் என்றால் வரவேற்பும் வெற்றியும் கொடுப்பதில் ரசிகர்கள் வல்லவர்கள் என்பதை இப்படத்தின் வெற்றியும் நிரூபித்துள்ளது. ‘மதாரஸப்பட்டிணம்’ அழகான காதல் கவிதை.