கொசு – 05

அத்தியாயம் ஐந்து

அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் அண்டு நற்பணி மன்றம் (ரிஜிஸ்டர்டு) போர்டு வைத்துக் கொடி பறந்த தூண் அருகே வெளேரென்று வேட்டி கட்டி இரண்டு பேர் வந்து இறங்கினார்கள். பக்கவாட்டு ஸ்டாண்டு போட்டு நிறுத்திய பைக்கின் முன்புறம் சிறிதாகக் கட்சிக்கொடி பறந்தது. பன்னிரண்டு வருடங்களாகப் பறக்கிற கொடி. ஒரு லைசென்ஸின் பணியைச் செவ்வனே செய்யும் சிறந்த மாற்று. பின்னால் வந்து நின்ற வெள்ளை நிற அம்பாசிடரிலிருந்து வட்டச் செயலாளர் இறங்கினார். ஒரு பக்கத் துணையாக மேலும் நான்கு பேர் அவர் பின்னால் இறங்கிவந்து நின்றார்கள்.

இறங்கியவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். நூறு, நூற்றைம்பது குடிசைகள் இருக்குமா? அளவெடுத்துத் தைத்தது போல்  முன்புறம் சரிந்த கூரைகள். வீதியில் காய்ந்த அலுமினியப் பாத்திரங்கள், துணிகள். எல்லாச் சந்துகளிலிருந்தும் புறப்பட்டு ஓடும் நிஜார் மட்டும் அணிந்த சிறுவர்கள். எங்கோ தூரத்தில் கேட்கிற பெண்கள் சண்டையொலி. அந்தப் பக்கம் ஓடுகிறது ஆறு. அடையாறு என்பார்கள். இனியும் வெட்டியெடுக்க மண் இல்லாத காரணத்தால் லாரி முதலாளிகளால் கைவிடப்பட்டு ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. முத்துராமன் சொல்லியிருந்தான். ‘வந்து பாருங்க தலைவரே.. துணி துவைக்கறவங்க பெரும்பாலும் கல்லு தேடுறதே கெடியாது. அப்படியே தரையில நாலு குமுக்கு குமுக்கி அலசிப் புழிஞ்சி போட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்பாங்க. அப்பால எங்கேருந்து தண்ணி தங்கும்?’

ஆ, ஏழைகளின் பிரச்னை. எத்தனை யுகங்களாக ஒரு ஜீவநதி போல் தழைத்துக்கொண்டிருக்கிறது? ஒரு சந்தர்ப்பம் கொடுத்து நாலு பேரைக் கூப்பிட்டு வைத்துப் பேசச் சொன்னால் மணிக்கணக்கில் பொழிந்து தள்ளிவிடுவார்கள். தேர்தல் தோறும் நடக்கிறதுதான். கேட்டீர்களா? இதெல்லாம் எப்படித் தீரும் என்று நினைக்கிறீர்கள்? எங்களுக்கு வோட்டுப் போட்டாலொழிய உங்கள் வாழ்க்கையில் விளக்கேற்ற வேறு யாருமில்லை. ஆகவே என்னருமை மக்களே, மறந்து விடாதீர்கள், மறந்தும் இருந்துவிடாதீர்கள்.

ஒரு சமயம் வட்டம், மாவட்டத்தைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது மாவட்டம் பேச்சு வாக்கில் சொல்லிக்கொண்டிருந்தார்.

"இந்தா பாருய்யா.. ஒரு லாஜிக்கு இருக்குது. கஸ்டப்படறவன்னு நாலு பேரு இல்லன்னா நாமல்லாம் தலைல துண்டு போட்டுப் போய்க்கினே இருக்கவேண்டியதுதான். குறிப்பா படிக்காதவன். யோசிச்சிப் பாரு.

படிச்சவன் எத்தினி பேரு நமக்கு வோட்டுப் போடுறான்? வுட்டா நெத்தில கொழச்சி நாமத்த போடுவான். ஒலகத்துல ஒரே ஒரு நியாயம்தான் நெரந்தரம். கடல் நெறைய மீனு இருக்கறது நாம திங்கறதுக்காக.

கோழியும் ஆடும் கூட்டம் கூட்டமா உற்பத்தி ஆவுறது நாம திங்கறதுக்காக. கோழிக்கு தீவனம்தான் போடுவ. கோயிலா கட்டுவா? அதே மாதிரிதான். எலக்சன் டயத்துல சில்வர் குடம் குடு. சிரிப்பு மாறாம கைகூப்பு.

ஆத்தா நீதான் வாழவெக்கணும்னு கால்ல வுழு. தப்பே இல்ல. ஆனா அத்தோட நிப்பாட்டிக்க. உன்ன முன்னேத்தறேன் பேர்வழின்னு போயி உஸ்கூலு தெறக்கறேன், ஆட்டோ வாங்கித்தரேன்னு ஆரமிச்சன்னா, அவன் காலு மேல காலு போட்டுக் கேள்வி கேக்க ஆரமிச்சிருவான். நாலு வார்த்த அவன் இங்கிலீசுல பேசினான்னா உன் நெஞ்சு தாங்குமாய்யா? அடைகாக்கணும்யா.. அப்பிடியே அலுங்காம குலுங்காம வம்சம் வம்சமா அவங்கள இருக்கறபடியே அடை காக்கணும். அவ்ளோதான்.."

ஒரு காலத்தில் மாவட்டம் நிறைய சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவர் வட்டமாக இருந்த காலம் அது. எப்போதும் ஏழெட்டு சீடர்கள் அவரைச் சுற்றி இருப்பார்கள். ஓய்வும் மூடும் வாய்த்தால் பொன்மொழிகளாக உதிர்த்துக்கொண்டே இருப்பார். நிறைய ரத்தினங்கள். நிறைய கெட்ட வார்த்தைகள். தடாலடி விமரிசனங்கள். அங்கே நக்கல் கொஞ்சம். இங்கே ஏக்கம் கொஞ்சம். அவருக்கும் கனவுகள் இருந்தன. யாருக்குத்தான் இல்லை? கழுதையாக மாறிக் காலமெல்லாம் சுமந்தேதான் தீரவேண்டியிருக்கிறது. சில சமயம் கழுதை உதைக்கும். சில சமயம் சுமந்த கனவை பத்திரமாக இறக்கிவைக்கும். அவர் மாவட்டமாகி, எம்.எல்.ஏவும் ஆகி அடுத்த வருடம் அமைச்சரே ஆகிவிடுவார் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

வட்டம் பெருமூச்சு விட்டார். தன் கழுதைக்கு உதைக்க மட்டுமே தெரிந்திருந்த அவலத்தை நினைவு கூர்ந்ததன் விளைவான பெருமூச்சு அது.

"எலேய், ஓடுடா. முத்துராமன் வூடு எதுன்னு கேளு, கேட்டுக்கினு வா."

சட்டென்று தரையைத் தொட்டு உத்தரவிட்டார் வட்டம். இரண்டு பேர் ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள். இது ஒரு முயற்சி. அநேகமாக அவரது வாழ்நாளில் மேற்கொள்ளப்போகிற மிகப்பெரிய முயற்சி. அசுர முயற்சி என்பார்களே, அது. தானும் தனக்கு வேண்டியவர்களுமாக நாள் கணக்கில் உட்கார்ந்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோதெல்லாம் இப்படி ஒரு யோசனை தோன்றியதில்லை. ஒரு குப்பத்தைத் தத்தெடுத்து முன்னேற்றுகிற யோசனை. முத்துராமன் என்கிற சாதாரணத் தொண்டன் கொடுத்த யோசனை. நல்லது. தொண்டர்கள் யோசிப்பவர்களாகவும் இருப்பது உத்தமம். ஆனால் தலைவர்களுக்காக மட்டும்.

"எலேய், அந்த முத்துராமன் டெய்லர் வேல தானே பாக்கறான்? சரியாத் தெரியும்ல?" என்றார் திரும்பிப் பார்த்து.

"ஆமா தலைவரே.. அதனாலதானே தையல் மிசின் வாங்கி எடுத்தாந்திருக்கோம்?" என்றான் ஓர் அடிப்பொடி.

"ஆங்.." என்று எங்கோ பார்த்து என்னவோ சிந்திக்கத் தொடங்கினார் வட்டம். முத்துராமன் பேசியவை அனைத்தும் அவருக்கு மீண்டும் செவிகளில் ஒலித்தன.

"அரசியல் முக்கியம்தான் தலைவரே. முழிப்போட இருக்கறது முக்கியந்தான். ஆனா அப்பப்ப நாம மக்கள் பக்கம் இருக்கம்னு காட்டிக்கத்தாவலையா? நம்மூருல அரசியல்வாதிங்களவுட பிரசிடெண்ட ஏன் மக்கள் தெய்வமா நினைக்கறாங்க? யோசிச்சிப் பாருங்க. மத்திய பிரதேசத்துல எவனானா ஒரு எம்.எல்.ஏ., எம்.பிக்கு மக்கள் செல்வாக்கு இருக்குன்னு நினைக்கறிங்க? சான்சே இல்ல.. தலையெழுத்தேன்னு ஓட்டு போடுறான்.

அந்தம்மா யாரு அது.. ஆங், மேதா பட்கர்.. அவங்க பின்னாடி எத்தினி பேரு கூட்டம் கூட்டமா போறாங்க பாருங்க.. இன்னாத்துக்காக அந்தம்மா அடிக்கடி உண்ணாவிரதம் இருக்கணும்? சொல்லுங்க பாக்கலாம்? காந்தி •பார்முலா தலைவரே.. என்னிக்கானாலும் •பெய்லியர் ஆவாத மேட்டர் அது. மக்களுக்காக நிக்கறேன்னு தெரிஞ்சாத்தான் அவன் நம்மள நம்புவான். ஓட்டுக்காக வரேன்னு தெரிஞ்சா முடிஞ்சவரைக்கும் கரந்துக்கிட்டு அனுப்பிரலாம்னுதான் பாப்பான்.."

வட்டத்துக்குப் புல்லரித்துப் போய்விட்டது. சாதாரண குப்பத்துவாசி. டெய்லராகப் பிழைப்பு நடத்துபவன். ஆனாலும் தவறாமல் தினத்தந்தி படிக்கிறான் போலிருக்கிறது. மேதா பட்கர்.. ஆங், தெரிந்த பெயர்தான்.

என்னமோ கேட்டுப் போராடிக்கொண்டிருக்கிறார் இல்லை?

"அதான் அந்த டேம் மேட்டரு தலைவரே. குஜராத்து, மத்தியபிரதேசம் நடுவால நர்மதா நதிமேல கட்றதா சொன்னாங்களே.. சர்தார் பட்டேலோ என்னமோ.."

அடச்சே, சர்தார் சரோவர். ஞாபகம் வந்துவிட்டது. என்ன அவஸ்தை இது. ஒரு தொண்டனின் உலக ஞானம் கூடத் தலைவருக்கு இல்லாமல் இருந்தால் பிறகு எப்படித் தான் பார்லிமெண்டுக்குப் போவது? தினசரி படிக்கும் தினத்தந்தியில் சினிமா பக்கங்களிலேயே புத்தி நிற்கிறது. மாற்றிக்கொள்ள வேண்டும்.

"வாங்க, வாங்க தலைவரே.. என்னாது இது சொல்லாம கொள்ளாம? ஒரு வார்த்த சொல்லிவுட்டிங்கன்னா நா வந்திருக்கமாட்டனா?" பதறிக்கொண்டு வந்து நின்றான் முத்துராமன்.

வட்டம் புன்னகை செய்தார். வண்டியிலிருந்து தையல் மிஷின் இறக்கப்பட்டது.

"வெச்சிக்க முத்துராமா.. ஒனக்குத்தான்"

கூட்டம் கூடிவிட்டது. வீதியில் நாற்காலி போடப்பட்டு தலைவர் உட்காரவைக்கப்பட்டார்.

"பாத்துக்கங்கடா.. ஊல ஒலகத்துல, தேர்தல் இல்லாத காலத்துல எந்தத் தலைவரு இப்படி நம்மளயெல்லாம் பாக்க வருவாரு? இந்த நெனப்பு எல்லார் மனசுலயும் எப்பவும் இருக்கணும்" என்றான் முத்துராமன்.

தலைவர் புன்னகை செய்தார். முத்துராமனின் அம்மா அவருக்கு காப்பித்தண்ணி எடுத்து வந்து கொடுத்தாள். அவனது தந்தை தள்ளாடி எழுந்து வந்து வணக்கம் சொன்னார்.

"நல்லா இருக்கிங்களா?’’

"ஐயா.. நீங்க உக்காருங்க.. நீங்க ஏன் எழுந்து வரணும்? நான் வரமாட்டனா?" என்று  வட்டம் நம்பமுடியாத அடக்கம் காட்டிப் புல்லரிக்கச் செய்தார்.

"முடியலங்க.. சக்கர நோய்ன்னாங்க. அது என்னாவோ, என்ன எளவோ.. காலு ரெண்டும் வீங்கிக்கினு எளுந்து நடமாட முடியாம போயிடுச்சி. என்னிக்கிப் போய் சேரப்போறனோ.."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல.. டேய் வடிவேலு.. ஐயா யாரு தெரியும்ல? நம்ம கட்சிக்காக அந்தக் காலத்துல மாடா உழைச்சவரு.. நானெல்லாம் அரசியல் படிச்சதே இவங்ககிட்டல்லாம்தான்.." சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தார்கள் கொஞ்சநேரம்.

முத்துராமன்தான் விஷயத்தை ஆரம்பித்தான். வட்டச் செயலாளர் வந்திருக்கும் விஷயம். கொசு ஒழிப்பு. யாரும் சிரிக்காதீர்கள். மிகப்பெரிய பிரச்னை அல்லவா அது? காலம் காலமாகப் பேட்டைவாசிகளை எத்தனை பாடு படுத்திவந்திருக்கிறது? அறுபதுகளிலும் எழுபதுகளிலும் எத்தனை நூறு பேருக்கு இங்கே யானைக்கால் நோய் இருந்தது என்பதை நினைத்துப் பாருங்கள்.

"மருந்து அடிக்கப்போறாங்களாமா?" என்றான் கூட்டத்தில் ஒருவன்.

முத்துராமன் திரும்பிப் பார்த்தான்.

"ஆமா தல.. மருந்தடிப்பாங்க. மத்ததும் செய்வாங்க.. மூணு மாசம் டயம். நம்ம பேட்டைய தலைவரு சுவிட்சர்லாந்து மாதிரி மாத்திக்காட்டப்போறாரு பாருங்க.. டேய், நம்ம பேட்டைய தலைவரு தத்தெடுத்திருக்காருடா.. சொந்தக்காசுல அத்தினியும் பண்ணப்போறாரு.."

ஓவென்று சந்தோஷக் கூக்குரலிட்டது கூட்டம். சுவிட்சர்லாந்து எந்த நாட்டுக்குப் பக்கத்து நாடு என்று வட்டம் யோசித்துப் பார்த்தார். சரியாகத் தோன்றவில்லை. எதற்கு அதெல்லாம் என்று வேறு விஷயம் யோசிக்கத் தொடங்கிவிட்டார்.

அவரைப் பொறுத்தவரை அது வாழ்வா சாவா பிரச்னை. இதுதான். இது ஒன்றுதான் இறுதி முயற்சி. இங்கே தொடங்குகிற ஓட்டம் பாராளுமன்றத்தில்தான் போய் முடியவேண்டும். சாதனை செய்க பராசக்தி. துணிந்து

எழுந்து அந்தக் குப்பத்தின் கொசுத்தொல்லையை ஒழிப்பதற்காகவும் இதர நலப்பணிகளுக்காகவும் பதினைந்து லட்ச ரூபாய் செலவிடவிருப்பதாக அறிவித்தார்.

கூட்டம் ஜோராகக் கைதட்டியது.

(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 21, 2010 @ 1:26 pm