கொசு – 06

அத்தியாயம் ஆறு

குவார்ட்டர் விட்டது போல கிர்ர்ரென்றிருந்தது முத்துராமனுக்கு. ஆல்பர்ட் தியேட்டரில் டிக்கெட் வாங்கியிருக்கிறோம் என்று நண்பர்கள் சொன்னபோது உடனே சாந்தியின் ஞாபகம் வந்தது பெரிய விஷயமில்லை.

தியேட்டர் வாசலில் அவளைச் சந்திக்க நேர்ந்ததில்தான் அவன் திக்குமுக்காடிப் போயிருந்தான்.

பார்த்ததும் உடனடியாக ஒரு புன்னகை தருவதில் பிரச்னை ஏதுமிருக்கவில்லை. ஆனால் அடுத்தக் கணம் என்ன பேசுவது என்று புரியாமல் சற்றுத் திணறிவிட்டான். நல்லாருக்கியா என்று கேட்கலாமா? அபத்தம்.

பார்த்துவிட்டு வந்து மூன்று நாள்தான் ஆகிறது. அப்பா, அம்மா சௌக்கியமா? அது அதை விட அபத்தம். என்னமோ பிறந்ததிலிருந்து பழக்கம்போல் அப்படியெல்லாம் போலியாக விசாரிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. சரி, படம் பாக்க வந்தியா? அது, எல்லாவற்றையும் விட. தியேட்டருக்கு வேறு எதற்கு வருவார்கள்?

அவனது திணறலை சாந்தி மிகவும் ரசிப்பது போல் பட்டது. அவளும் யாரோ ஒரு பெண்ணுடன் தான் வந்திருந்தாள். எதற்கும் இருக்கட்டும் என்று முத்துராமன் அவசரமாக, ‘ஒரு நிமிஷம்’ என்று அவளிடம் சொல்லிவிட்டு, தன்னுடன் வந்திருந்த நண்பர்களைத் தள்ளிக்கொண்டு பத்தடி பின்னால் போனான்.

‘மாப்ள, இவதாண்டா.. இவளத்தான் போய் பாத்துட்டு வந்தேன். ஜனவரில கல்யாணம்னு சொல்லியிருக்கு.’

‘கொய்யால.. கணக்காத்தான் இங்க படம் பாக்க வந்திருக்க’ என்று சந்தோஷத்தில் அவன் தோளைத்தட்டி, ‘அண்ணிய அறிமுகப்படுத்திவெச்சிருடா.. அப்பால மறந்துடப் போறாங்க’ என்றான் கதிர்.

சட்டென்று முத்துராமனுக்குப் பேசுவதற்கு ஒரு விஷயம் அகப்பட்டுவிட்டதுபோலத் தோன்றியது. வா என்று அவர்களைத் தள்ளிக்கொண்டு அவளருகே போனான்.

‘சாந்தி.. இது கதிரு. என் சிநேகிதன். இவன் ரஜினி ராம்கி. அவன் ஜெயச்சந்திரன்..’

‘டேய், போரும்டா.. நீ பேசிட்டிரு. நாங்க அங்க நிக்கறோம். படம் ஆரம்பிக்க பத்து நிமிஷம்தான் இருக்கு’ என்று சந்தர்ப்பம் அறிந்த சொந்தச் சகோதரன் ஒருவன் திரும்பி நடந்தான். நண்பர்கள் சிரித்தபடி நகர்ந்து போனார்கள்.

முத்துராமன் கண்டிப்பாக அப்படியொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கவில்லை. சினிமா பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது என்று கட்டாயப்படுத்தி அவனது நண்பர்கள் அழைத்துவந்திருந்தார்கள். தலைவர் படம். கண்டிப்பாக வெகு சீக்கிரம் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று எல்லோரும் ஆரூடம் சொல்லிக்கொண்டிருந்த தலைவர். தனிக்கட்சியா, இருப்பதில் ஒன்றா என்று தெரியவில்லை. சில சந்தர்ப்பங்களில் அந்த விவாதங்கள் நடந்தபோது முத்துராமன் கருத்து சொல்லியிருக்கிறான். வருவதும் வராததும் அவர் இஷ்டம். அவருக்காகத் தான் புதிய கட்சியில் சேர முடியாது. ஆனால் படம் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சி பார்க்கிற வழக்கத்தில் மாறுதல் இருக்காது.

அவனுக்கு அவனுடைய அம்மாவும் சித்தப்பாவும் தாத்தாவும் பல சமயம் அந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். மாநகராட்சி மருத்துவமனையில் அவன் பிறந்தபோது, சொந்தக்காரப் பெண்கள் ஆளுக்கொரு கைத்தறிப் புடைவையை மடித்துக் கையில் வைத்துக்கொண்டு குழந்தையை எடுத்துக்கொள்ளத் தயாராக நின்றுகொண்டிருந்தார்கள். டாக்டரம்மா அவனை ஒரு பூச்செண்டு போல் ஏந்தி எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது எங்கிருந்தோ வேகமாக அவனுடைய தந்தை ஓடி வந்தார்.

‘ஒரு நிமிசம் டாக்டரம்மா..’

பாய்ந்து வந்தவர் கையில் புத்தம் புதிய கட்சிக்கொடி. ‘குழந்தைய என்கிட்ட குடுங்க. எம்புள்ள மவராசன் மேல மொத மொத இந்தக் கொடிதான் படணும்’

யாரும் எதிர்பார்க்கவில்லை. கட்சிக்காரக் குடும்பம்தான். தீவிரத் தொண்டர் வம்சம்தான். ஆனாலும் பிறந்த குழந்தையைக் கொடியில் ஏந்தும் அளவுக்கா விசுவாசம் இருக்கும்?

‘விசுவாசமில்ல டாக்டரம்மா.. எங்க சுவாசமே இதுதான்..’ முத்துராமனின் தந்தை, கையில் கிடந்த குழந்தையைத் தூக்கி நெற்றியில் முத்தமிட்டுத் தலைவரின் பெயரைக் காதில் சொல்லி, ‘வாழ்க’ என்றபோது டாக்டரம்மா சிரித்தார்.

‘கட்சியெல்லாம் இருக்கட்டுங்க. புள்ள பொறந்திருக்கான். நல்லா படிக்கவைங்க மொதல்ல. படிச்சி பெரியாளாவட்டும்.’

‘அ.. அதெல்லாம் கரீட்டா செஞ்சிருவம்ல? எத்தினி படிச்சாலும் எம்புள்ள எங்க கட்சிதான். என்னால போவமுடியாத உயரத்துக்கு அவன் போவப்போறான் டாக்டரம்மா. பாத்துக்கினே இருங்க.. இதே ஆசுபத்திரிய இன்னும் பெரிசா மாத்திக்கட்டி தெறப்பு விழாவுக்கு அவன் வந்து குத்துவெளக்கேத்துவான்!’

என்னென்னவோ பேசினார். பேசிக்கொண்டே இருந்தார். மனத்தில் முட்டி மோதிக்கொண்டிருந்த மகிழ்ச்சிக்கு சொற்களும் அர்த்தமும் முக்கியமில்லை. வெளிப்பாடு போதும். அவர் கண்ணில் தெரித்த பரவசம் டாக்டருக்குப் புரிந்தது. ஆல் தி பெஸ்ட் என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

முத்துராமன் பலமுறை கேட்ட அந்தக் கதை இப்போது நினைவுக்கு வந்தது. ஏனோ அதை சாந்தியிடம் சொல்லவேண்டும்போலிருந்தது. ஏதாவது பேச விரும்பினான். அன்பாக. அல்லது தன்னைப் பற்றி.

அவளைப்பற்றியும் கேட்கலாம். உட்கார்ந்து பேச அவகாசமில்லை. நண்பர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடக் கூடும். ஆனால் சடாரென்று கட்சிக்கொடியில் தன்னை வாங்கிக்கொண்ட தந்தையிடமிருந்தா தொடங்கமுடியும்?

‘எப்படி இருக்கே? படம் பாக்க வந்தியா?’

‘இல்ல.. எந்தங்கச்சி இங்க பாப்கார்ன் சப்ளை பண்ண வந்தா. அவள கூட்டிக்கினு போவலாம்னு வந்தேன்’

‘அட, பாப்கார்ன் பிசினஸ் பண்றிங்களா?’

‘இல்லல்ல.. செட்டியார் வூட்ல செஞ்சி பாகிட் பண்ணி குடுப்பாங்க. இவ எடுத்தாந்து இங்க போட்டுட்டுப் போவா. கூட மாட இருந்தா அஞ்சு பத்து கிடைக்கும்ல?’

தியேட்டரின் வராந்தாவில் ஐஸ் க்ரீம் கடை அவன் கண்ணில் பட்டது. அவளை அழைத்துப்போய் கோன் ஐஸ் வாங்கித் தரலாமா என்று நினைத்தான். ஏதாவது நினைத்துக்கொண்டுவிட்டால்?

‘கலர் குடிக்கறியா?’ என்று கேட்டான்.

‘ஐயே.. அதெல்லாம் வாணாம்.. நான்.. நான் வந்து..’ அருகே சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த அவளது தோழி ரகசியமாகச் சிரிப்பது போலப் பட்டது.

‘உன் •ப்ரெண்டுக்கும் சேர்த்துதான் சொல்லுறேன்..’

‘எலேய் மாப்ள.. சைக்கிள் கேப்புல எங்கள மறந்துறாத.. சைதாப்பேட்டைலேருந்து உன்னிய வெச்சி மிதிச்சிக்கிட்டு வந்திருக்கோம்.. அது நெனப்புல இருக்கட்டும்..’

பின்னாலிருந்து நண்பர்கள் குரல் கொடுத்தார்கள். அவனுக்குச் சந்தோஷமாகத்தான் இருந்தது. கடவுளுக்கு நன்றி. இது எதிர்பாராதது. அர்த்தமற்ற சந்திப்புதான் என்றபோதும் ஆனந்தமாக இருக்கிறது.

வெட்கப்பட்டுக்கொண்டு அவள் ஓடிவிட்டாலும்கூட சந்தோஷத்தில் குறைவிருக்காது என்று தோன்றியது. ஆனால் சாந்தி அநாவசியமாக வெட்கப்படுகிற பெண்ணாகத் தெரியவில்லை. தைரியமாகத்தான் இருந்தாள்.

முகத்தை நேருக்கு நேர் பார்த்துத்தான் பேசினாள். அவனுக்குத்தான் குறுகுறுவென்றிருந்தது.

‘நாளைக்கு எங்கப்பா உங்க வீட்டுக்கு வருவாரு.. நாள் பாத்திருக்காங்க. நீங்க சொன்னாப்புல ரெண்டு மூணு முகூர்த்த நாளா பாத்திருக்கு. உங்களுக்கு எது வசதின்னு கேட்டுக்கிட்டு செய்யலாம்னு..’

முத்துராமனுக்கு நெஞ்சு வரைக்கும் வார்த்தை வந்துவிட்டது. எது வசதி? இப்போதே திருமணத்தை முடித்துவிடலாம். ஆல்பர்ட் தியேட்டர் வாசல். பின்னணியில் அவன் மனத்துக்குப் பிடித்த நடிகரின் மாபெரும் கட் அவுட். மக்கள் கூட்டத்துக்குக் குறைவில்லை. கூடி நிற்கச் சொல்லி ஒரு குரல் கொடுத்தால் கண்டிப்பாகக் கூடிவிடுவார்கள். நடுச் சாலையில் திருமணம். பக்கத்தில்தான் தினத்தந்தி அலுவலகம் இருக்கிறது. செய்தி பரவி யாராவது நிருபர் வந்து படமெடுத்துக்கொண்டு போனாலும் வியப்பதற்கில்லை. அந்தப் பட்சத்தில் சாந்தியையும் கட்சி மாநாட்டுக்கு அழைத்துச் சென்றுவிடலாம்.

ஆனால், நீ வருவியா என்று கேட்டபோது மாட்டேன் என்று தலையசைத்துவிட்டாள்.

‘ஏன்? அரசியல் பிடிக்காதா உனக்கு?’

‘தெரியாது’ என்று பதில் சொன்னாள். ‘நமக்கெதுக்குங்க அதெல்லாம்? வேளைக்கு சோறு கிடைக்கறது பெரிய விசயம். அப்பாவால இப்பல்லாம் முன்னமாதிரி மீன்பாடி வண்டி மிதிக்க முடியறதில்ல.. கால் நோவுதுங்கறாரு. மோட்டார் வெச்ச சைக்கிள் ரிக்சா வாங்கணும்னு ஆசைப்படறாரு.. பணத்துக்கு எங்க போவறது? பணம் சம்பாரிக்கறதுக்குக் கூட மொதல்ல போடக் கொஞ்சம் பணம் வேண்டியிருக்குது. யோசிச்சிப் பாத்தா கோழிலேருந்து முட்டை வந்ததா, முட்டைலேருந்து கோழி வந்ததாங்கறமாதிரி இல்ல?’

முத்துராமனுக்குப் பெரிய ஆச்சர்யமாகப் போய்விட்டது. என்னமாய்ப் பேசுகிறாள் இவள்? சாதாரண சொந்த, சோகக் கதை. ஆனால் எத்தனை பெரிய தத்துவங்கள் அடங்கியதாக அமைந்துவிட்டது? கண்டிப்பாக இதற்குமுன்னால் தன்னுடைய கட்சிக்கொடியில் பிறந்த கதை எடுபடப்போவதில்லை.

‘கவலப்படாத சாந்தி.. எல்லாம் சரியாயிரும். சரியாக்கிறலாம். எங்க ஏரியா வட்டச் செயலாளரு நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு.. இந்த வருசம் ரெண்டுல ஒண்ணு எதனா நல்லது செஞ்சே தீருவாரு.. கொஞ்சம் பொறுத்துக்க.’ என்று நம்பிக்கை தரும் விதத்தில் பேசினான்.

‘ஐயே.. அதுக்குள்ள மாமனாரு மேல அனுதாபம் வந்திரிச்சாக்கும்..’

சடாரென்று வந்துவிட்ட அவளது கேலியும் அவனுக்குப் பிடித்திருந்தது. யோசித்துப் பார்த்தபோது, தன்னுடைய பதில் சற்றே பொருந்தாத் தொனியில்தான் வந்திருக்கிறது என்பது புரிந்தது. சிரித்தான்.

‘எலேய் மாப்ள.. பெல்லடிச்சிட்டான். படம் பாக்க வரியா? இல்ல, படம் காட்டிக்கினே இருக்கப்போறியா? நாங்க போறம்..’

வரட்டுமா சாந்தி?

அவள் தலையசைத்தபோது வேகமாக யாரோ ஓடி வந்து அவளை மோதுவது போல் நிற்க, முத்துராமன் திரும்ப இருந்தவன் ஒரு கணம் தயங்கினான்.

‘சாந்தி, இங்கயா இருக்க.. உன்ன உங்கப்பாரு தேடிக்கிட்டிருக்காரு. குப்பத்துல எவனோ நெருப்பு வெச்சிட்டாண்டி.. ஆறு குடிசை எரிஞ்சிருச்சி.. சீக்கிரம் ஓடியா..’

(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 21, 2010 @ 1:31 pm