கொசு – 07

அத்தியாயம் ஏழு

முதலில் புகைதான் தென்பட்டது. அர்த்தமற்ற கூச்சல்களும் தபதபவென்று ஓடும் சத்தமும் வெளியை நிறைத்திருந்தது. முத்துராமனும் சாந்தியும் குப்பத்தை நெருங்கியபோது ஒரு பாதி எரிந்து நாசமாகி சேறும் கரியுமாகக் கிடக்க, இன்னொரு பக்கத்தில் தீயை அணைக்க மக்கள் போராடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

வீதியெங்கும் துணி மூட்டைகளும் பாத்திரங்களுமாக உருண்டு கிடக்க, பெண்களின் ஒப்பாரியில் அடி வயிறு பிசைந்தது.

‘டேய், எல்லா குடிசைங்கள்ளயும் உள்ள பூந்து பாருங்கடா.. பெருசு எதாச்சும் தூங்கிக்கினு கெடக்கப்போவுது!’

யாரோ குரலெழுப்பியபடி ஓடினார்கள். வீசியடிக்கும் தண்ணீரில் அத்தனை பேரும் முழுதாக நனைந்திருந்தார்கள். கவலையும் வேதனையும் பதற்றமுமாக விரைந்த சாந்தி, தன் குடிசையை நெருங்கியபோது சட்டென்று ஒரு கணம் நின்று மூச்சு வாங்கினாள். கடவுளுக்கு நன்றி. அப்பாவும் அம்மாவும் வெளியே நின்றுகொண்டு இருந்தார்கள். ஆளுக்கொரு பக்கெட். முடிந்த அளவுக்கு முயற்சி.

‘சாந்தி.. வந்துட்டியா.. தங்கச்சி எங்கடி?’

‘தியேட்டர்ல இருக்காம்மா. அவள கூட்டிக்கினு வரலாம்னுதான் போனேன்..’

அவர்கள் அப்போதுதான் முத்துராமனைப் பார்த்தார்கள். சட்டென்று சாந்தியின் அப்பா, தூக்கிக்கட்டியிருந்த லுங்கியை இறக்கிவிட்டார்.

‘அ.. தம்பி.. வாங்க, இங்க..’

வரவேற்கக் கூட முடியாத சூழல் சட்டென்று தாக்கியது.

‘இருக்கட்டுங்க.. பக்கெட்ட என்னாண்ட குடுங்க.. உள்ள இருக்கற சாமான் செட்டெல்லாம் எடுத்துட்டிங்களா?’

கேட்டபடி வேகமாக குடிசைக்குள் ஓடினான்.

‘ஐயோ.. தம்பி, வேணாம்.. போகாதிங்க.. எல்லாம் எடுத்தாச்சு..’

சாந்தியின் அம்மா பேசி முடிப்பதற்குள் உள்ளே பாய்ந்து ஒரு பார்வை சுழலவிட்டு அவன் வெளியே வந்துவிட்டான்.

ஒரு பத்து நிமிஷம் பதற்றத்தில் கரைந்ததும் பிராந்தியம் முழுவதும் குளித்து முழுகிக் கருகிக் கிடந்தது. ஓலங்களும் ஒப்பாரிகளும் தேய்ந்து முனகலாகிக்கொண்டிருந்தன. சாந்தியும் அவளது அம்மாவும் அப்பாவும் மூன்று மூட்டைகளில் பொருள்களைக் கட்டி எடுத்துக்கொண்டு மேட்டுப்பகுதிக்கு வந்து உட்கார, முத்துராமன் அவர்களுக்கு எதிரே உட்கார்ந்தான்.

‘பாருங்க தம்பி.. எம்.எல்.ஏ.வுக்கு சொல்லிவுட்டு அர அவரு ஆவுது. இன்னும் வரக்காணம்..’ என்றார் சாந்தியின் அப்பா.

‘ஊர்ல இல்லியோ என்னமோ.. போலீஸ்காரங்க வந்திருக்காங்களே. எம்.எல்.ஏ., வருவாரு. எப்பிடியும் வராம போவமாட்டாரு.’

எங்கோ பார்த்துக்கொண்டிருந்த சாந்தியின் அம்மா, சட்டென்று நினைவுக்கு வந்தவள் மாதிரி திரும்பிக் கேட்டாள்: ‘ஏண்டி சாந்தி.. இந்தவாட்டி ஆறு மாசத்துக்கு மேல ஆயிருச்சில்ல?’

ஒரு கணம் சாந்திக்குப் புரியவில்லை. புரிந்தபோது பதற்றமானாள். என்ன பேசுகிறாள் அம்மா? அதுவும் யார் எதிரே?

முத்துராமன் சிரித்துவிட்டான். ‘அப்பிடித்தாங்க. தீ கூட, பழகிருச்சின்னா தண்ணி மாதிரிதான். நம்மள மாதிரி குப்பத்து சனங்க இதுக்கெல்லாம் அழுதுக்கிட்டு மூலைல குந்திட்டா அடுத்த வேளை சோத்துக்கு என்ன பண்ணுறது? எம்.எல்.ஏ. வந்து என்னா குடுக்கறாருன்னு பாருங்க. எப்பிடியும் ரெகுலர் நஷ்ட ஈடு இருக்கும். அப்பால நாம பேசுறத பொறுத்து மேற்கொண்டு ஏதாச்சும் தேறும்.’

‘நீங்க ஒண்ணு தம்பி.. இங்க நாலு தலைங்க இருக்குதுங்க. கட்சிக்காரப் பசங்க. எல்லாம் பேசி வாங்கி எடுத்தாந்து தர்றது அவங்கதான். என்னா ஒண்ணுன்னா, ஒயுங்கா வர காசு வந்துருமே தவிர, மேல் காசு எல்லாம் அதுங்க பாகிட்டுக்குத்தான் போவும். அஞ்சு பத்து மேல குடுங்கடான்னு கேட்டாக்கா, இன்னா பெர்சு, பிசினசா பேசுறேன்னுவானுக. உங்க ஏரியாவுல எல்லாம் எப்பிடி தம்பி?’

முத்துராமனுக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. எத்தனை அபத்தமான அவலம் இது. ஒரு பிராந்தியமே பற்றிக்கொள்கிறது. அந்தக் கண நேரத்துப் பதற்றத்தில் போலித்தனம் கிடையாது. உயிரைக் காட்டிலும் பெரிது வேறென்ன? தப்பித்து விட்ட சந்தோஷம் கட்டாயம் உண்டு. ஆனால் கணப் பொழுதுதான். பதற்றம் தணிந்த உடனேயே மனம் கணக்குகளில் ஈடுபடத் தொடங்கிவிடுகிறது.

எப்போதும் போதிய இடைவெளிகளில் பற்றவைக்கப்படுகிற காலனிகள். வந்து பார்த்து ஆறுதல் சொல்லி, செய்தித்தாளில் இடம் பிடிக்கிற உள்ளூர் எம்.எல்.ஏ. நிவாரணத் தொகையும் சாம்பார் சாதப் பொட்டலமும்.

எண்ணி எடுத்து நீட்டும் பணத்துக்குக் கைநாட்டு வாங்கும்போது முகத்தை அருகில் பார்த்துக்கொள்ளும் கட்சிக்காரர்கள். சற்றுத் தள்ளி இருந்து வேடிக்கை பார்க்கிற ரெவின்யூ அதிகாரிகள்.

அரசாங்கமும் அரசியலும் வேறு வேறா? இல்லையா? நீண்ட நாளாக முத்துராமனுக்கு இந்தக் குழப்பம் உண்டு. அவனுக்கு இத்தகைய சம்பவங்களெல்லாம் அதிர்ச்சியளித்த காலம் மலையேறிவிட்டது. அடையாற்று ஓரத்தில் அவனது காலனியே ஒரு சமயம் பற்றவைக்கப்பட்டபோது முதல் நாள் இரவு அவனுக்குத் தகவல் தெரிந்துவிட்டது.

‘ஐயோ’ என்று அவனையறியாமல் பதறியபோது சட்டென்று சில கரங்கள் அவன் வாயை அடைத்தன.

‘த.. சும்மாருடா.. இவனே மாட்டிவுட்றுவான் போலருக்குதே.. எவண்டாவன்? இன்னா, இன்னா ஆயிருச்சி இப்ப? குடிசைன்னா பத்திக்கத்தான் செய்யும். சும்மா ஒண்ணுமில்ல. வூட்டுக்கு ஆயிரம் தந்துருவாங்க. கூரை மாத்திக் குடுத்துடுவாங்க. ரெண்டு நாளைக்கு சோத்துப்பொட்டலம், தண்ணி பாகிட் எல்லாம் உண்டு. அரசியல்னா நாலும் இருக்கத்தான் செய்யும். இன்னிக்கி அடிக்கிற கையி நாளைக்கி காலீல அணைச்சிரும்.

கவலையே படாத. போ.. போய் வூட்ல இருக்கற சாமான் செட்டெல்லாம் எடுத்து பேக் பண்ணி வெச்சிரு ரெடியா. பத்திக்கின வுடனே வெளில ஓடியா.. முன்னால வந்து மானத்த வாங்காத.’

முத்துராமனுக்கு அப்படியொரு அனுபவம் புதிது. கட்சிக்காரன் தான். கொடி கட்டக்கூடியவன் தான். மைக் டெஸ்டிங் ஒன் டூ த்ரீ என்று மைக்கில் தன் குரலைக் கேட்டுத் தானே சிரித்துக்கொள்பவன் தான்.

தலைவர்கள் யார் வந்தாலும் வாழச்சொல்லிக் கோஷம் போடுகிறவன் தான். அரசியலில் எல்லாமே சகஜம் என்பதும் தெரியாதவன் அல்ல. ஆனாலும் நாளைக்காலை தன் காலனி பற்றி எரியப்போகிறது என்று கேள்விப்பட்டபோது அவனுக்குள் ஏற்பட்ட பதற்றத்தை அத்தனை சுலபத்தில் தணிக்க முடியவில்லை.

‘என்னண்ணே.. இப்பிடி சொல்றிங்க.. இதெல்லாம் தப்பில்லியா?’

‘தபாரு முத்துராமா.. உங்கப்பாரு மொத்தமா ஆயிரம் ரூவாவ பாத்து எத்தினி நாளாயிருக்கும்னு யோசிச்சிப் பாரு. அட அவர வுடு. நீ பாத்திருக்கியா? காலு ஒடிய ஒடிய மெசினு அடிக்கற. பேண்டு தெச்சா நாப்பது ரூவா, சட்டை தெச்சா இருவது ரூவா. உம்பேட்டைல எத்தினி தலைங்க பேண்டு போடுதுங்க. கழுத எல்லாம் லுங்கிய வழிச்சிக் கட்டிக்கினு சுத்தி வர்ற கூட்டம்தானே? சாப்பிடுய்யா.. ஆயிர ரூவா. எவன் தருவான்?

குடிசைக்கு புச்சா கூரை போட்ருவாங்க. நிம்மதியா, சந்தோசமா இரு. அரசியல் தெரியணும்னா இந்த அடிப்படைல்லாம் புரிஞ்சிக்கணும் மொதல்ல..’

‘இருந்தாலும்..’

‘அட எவண்டாவன்? டாக்டருக்குப் படிக்கறவன் மொதல்ல தவளைய அறுக்கணும்டா.. போய் கேட்டுப்பாரு.. த.. சரி, உங்கப்பார கேளு. அவருக்குத் தெரியாத மேட்டரா? தெரிஞ்சவனாச்சேன்னு முன்கூட்டி சொல்லிவெச்சா ஏண்டா இப்பிடி ரவுசு பண்ணுற?’

முத்துராமனுக்கு அப்போதும் ஆறவில்லை. வீட்டுக்குப் போய் அப்பாவைத் தனியே கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லி விசாரித்தான்.

‘அப்பிடியா?’ என்று சிரித்தவர், ‘ஒனக்குத்தாண்டா புச்சு. குப்பத்துல எந்தப் பெரிச வேணா கேட்டுப்பாரு.. சர்தான், செலவுக்காச்சுன்னுவானுக.’ என்று பேசியபடியே உள்ளே திரும்பி, ‘கற்பகம்.. ஏய், எங்கடி போய்த் தொலைஞ்ச.. காலீல பத்திக்குதாம். எல்லாத்தையும் ஏறக்கட்டு..’ என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு பீடியை எடுத்து வாயில் வைத்தபடி வெளியே போனார்.

அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. தனக்கு அரசியல் புரிந்துகொண்டிருக்கிறது என்றும் தோன்றியது. மறுநாள் காலை அவர்கள் பேசிய நேரத்துக்குச் சற்றும் தாமதமில்லாமல் யாரோ ஒருவன் பீடியை இழுத்து ஏதோ ஒரு குடிசையில் வீசிவிட்டுப் போக, அரைமணி நேரக் கூச்சல் குழப்பத்துக்குப் பிறகு நிவாரண உதவிகள் ஜீப்பில் வந்து இறங்கின. பேப்பர்காரர்களும் டிவிக்காரர்களும் வந்து சூழ்ந்துகொண்டபோது அழுதபடி அவனது தந்தையும் பேட்டி கொடுத்தார். எல்லாம் எதிர்க்கட்சி சதி.

‘த.. என்னா வளவளன்னு பேசிக்கிட்டு? தம்பி வந்திருக்காரு.. போய் ஒரு டீயானா வாங்கியாங்களேன்..’

சட்டென்று நினைவு கலைந்த முத்துராமன், சாந்தியின் தந்தை என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பதை நினைவுகூரப் பார்த்தான்.

‘டீயெல்லாம் வேணாங்க.. பசங்களோட படம் பாக்கலாம்னிட்டு வந்தேன்.. தியேட்டர் வாசல்ல உங்க பொண்ண பாத்தேன். சௌக்கியமான்னு கேக்க வந்தா சட்டுனு பத்திக்கிச்சின்னு ஆளு வருது..’

சாந்தி சிரித்தாள். இப்படி ஒரு தருணத்தை அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. எதிர்பாராமல் சந்திப்பு. எதிர்பாராத தீவிபத்து. எதிர்பாராத வருகை. எல்லாமே சாதாரணம் போல உட்கார்ந்து பேசுகிற லயம். மாப்ள வந்திருக்காரு என்று பதறக்கூடிய அம்மா கூட அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக எதிரே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாள். அத்தனை சுவாதீனம் எப்படி சாத்தியமானது? துக்ககரமான ஒரு சம்பவத்தில் இதெல்லாம் சாத்தியமே. யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லி நெருங்கிவிட முடியும். கண்ணைத் துடைத்துவிட்டுக் கையைப் பற்றிக்கொள்ள முடியும்.

ஆனால் குப்பம் பற்றி எரிந்த சம்பவத்தை யார் இங்கே துக்க சம்பவமாக நினைக்கிறார்கள்?

அவள் நிமிர்ந்து சுற்றுப்புறத்தை ஒரு கணம் நோட்டம் விட்டாள். அத்தனை மக்களும் வீதியில் தான் இருந்தார்கள். அவரவர் குடும்பங்களுடன். அவரவர் உடைமைகளுடன். அழுதது உண்மை. பதறியது உண்மை. அது தீ என்னும் நிஜமான தகிப்பு கொடுத்த அழுகையும் பதற்றமும். ஆனால் தெரியாத தீ அல்ல. அறியாத சம்பவமல்ல. முன்பும் நடந்திருக்கிறது. முந்தைய தலைமுறையும் பார்த்திருக்கிறது. அதற்கு முந்தையவர்களும் கூட. சுதந்தர இந்தியாவில் பற்றிக்கொள்ளாத குப்பங்கள் கிடையாது. நிவாரணம் அளிக்காத அரசியல் கட்சிகள் கிடையாது.

ஆனால் இந்த சுவாதீனத்துக்கு இதுவா காரணமாக இருக்கமுடியும்? ம்ஹ¤ம். வேறென்னவோ தனக்குத் தெரியாத இழை ஒன்று குறுக்கே ஓடிக்கொண்டிருக்கிறது என்று சாந்தி நினைத்தாள். எதுவானால் என்ன?

அந்தக் கணம் அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. காண்பித்துக்கொண்டுவிடக்கூடாது என்றும் நினைத்தாள். சிரித்தாள்.

(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 21, 2010 @ 1:51 pm