கொசு – 08

அத்தியாயம் எட்டு

மண்ணும் கல்லும் மனிதர்களும் லாரிகளில் வந்து இறங்கியபோது, முத்துராமன் வேட்டியை மடித்துக் கட்டி, வானம் பார்த்து வணங்கியபடி தன் குடிசையை விட்டு வெளியே வந்தான். பரபரவென்று லாரிகளின் பின்புறத் தடுப்புகள் திறக்கப்பட்டு பலத்த ஓசையுடன் கல்லும் மண்ணும் சரிந்தது. தேர்தல் இல்லாத நேரத்திலும் தெய்வம் கண் திறந்து பார்க்கும். யாரங்கே, கூப்பிட்டுக்கொண்டிருக்க அவசியம் இல்லை. வீட்டு வேலைகள் முடிந்தால் யாரும் வந்து உதவிக்குக் கைகொடுக்கலாம்.

முன்னதாகத் தன் காலனியின் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆற்றங்கரை ஓரத்தில் அணிவகுக்கச் செய்திருந்தான் அவன். இது நம் ஏரியா. நம் பேட்டை. உதவிக்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். நடக்கப்போவது நமது பணி. எடுத்துப் போட்டுக்கொண்டு முடிந்ததைச் செய்வதுதான் நாட்டுக்கும் காலனிக்கும் நல்லது. சுகாதாரத் துறையும் பொதுப்பணித்துறையும் நகராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து செய்வதற்கு எத்தனையோ உண்டு நலப்பணிகள். கசக்கி எறிந்த குப்பைக் காகிதம் போல ஆற்றங்கரை ஓரத்தில் நாற்பது ஆண்டுகளாக கவனிப்பாரற்றுக் கிடக்கிற காலனி. காரணம் யோசித்துக்கொண்டிருக்க அவசியமில்லை. சற்றும் எதிர்பாராமல் வந்திருக்கும் வாய்ப்பு இது.

‘மாப்ள, நம்பவே முடியலடா. தலைக்குப் பத்து நூறு தேறிச்சின்னாக்கூட நல்லாத்தான் இருக்கும். பணப் பட்டுவாடா யார் பொறுப்பு? வட்டம் ஆள் அனுப்புறாரா? நம்மாண்டயே குடுக்குறாராமா?’

‘பிச்சிருவேன் மவனே. பத்து பைசா எவனும் தொடக்கூடாது சொல்லிட்டேன். ஆன செலவுக்கு கணக்கு எழுதி சப்ஜாடா செட்டில் பண்ணிரணும்னு சொல்லியிருக்காரு. அவரு சொல்லலைன்னாங்காட்லும் நான் அதத்தான் செய்யறதா இருந்தேன். ஊரான் வூட்டு நெய்யே எம்பொண்டாட்டி கையேன்னு எவனாச்சும் கோல்மால் பண்ண நெனச்சிங்கன்னா திரும்ப ஒருக்கா குப்பத்துப்பக்கம் வரமுடியாது சொல்லிட்டேன்..’

அவன் திடமாக, தீர்மானமாகச் சொல்லியிருந்தான். இரண்டு பெரிசுகளைக் கூப்பிட்டு, நதிக்கரை ஓரத்து அரசமரத்தடிப் பிள்ளையார் நிழலில் நாற்காலி போட்டு உட்கார வைத்து சம்பளமில்லாத தாற்காலிக மேஸ்திரி ஆக்கியிருந்தான்.

என்ன செய்யவேண்டும் என்று ஒரு திட்டம் இருந்தது. முதலில் சாக்கடைகள். சாலைக்கு மேலே ஓடும் கழிவுகளுக்குச் சாலையோரத்தில் இரண்டு கால்வாய் கட்டி மேல் புறம் மூட காங்கிரீட் வசதி. தாற்காலிக வசதிதான் என்றாலும் செம்மண் கொட்டிச் சமப்படுத்திய சாலைகள். சீரழிந்த குடிசைகளுக்கு புதிய ஓலைகள். ஆற்றங்கரை ஓரத்தில் சிறியதொரு தடுப்புச் சுவர். அப்புறம் கொசுக்கள்.

மருந்தடித்து அழித்துவிடக்கூடிய வம்சம் இல்லை அது. மக்கள் மனோபாவத்தில் மாற்றம் வரவேண்டும் என்று வட்டச் செயலாளர் சொல்லியிருந்தார். கைதட்டிய கூட்டத்தில் பெரும்பாலும் யாருக்கும் புரியவில்லை.

‘சுத்தமா இருக்கணும்னு சொல்றாரு பாண்டியம்மா. குந்திக்கினு இருக்கற எடத்துலயே மூக்க சிந்திப் போட்டுட்டு முந்தானைல தொடச்சிக்காதங்கறாரு. புரியுதா?’

சிரித்தார்கள். யாரும் சிரிக்க வேண்டாம் என்று முத்துராமன் கேட்டுக்கொண்டான்.

‘சிரிச்சி சிரிச்சித்தான்யா சீரழிஞ்சி போயிருக்கோம். நம்மள்ள எவன் வூட்லயானா அரிசி களைஞ்சிட்டு தண்ணிய வாசல்ல கொட்டாம இருக்கமா? நைட்டுல பாரு.. வூட்டு வாசல்ல படுத்துக்கினு இருப்பான். அப்பிடியே திரும்பி பொச்சுனு எச்சி துப்புவான். எந்திரிச்சி நாலடி போய் ஒண்ணுக்கடிக்கறவன் எத்தினி பேர் இங்க? சுத்துமுத்தும் பாத்துட்டு அப்பிடியே நடு ரோட்ல குந்திக்கிரவேண்டியது. மாநகராட்சி நவீன கழிப்பிடம்.

இருக்குதில்ல? நம்ம ஏரியாதான அது? எவனாச்சும் எட்டிப்பாக்க முடியுதா? காலு வெக்க முடியாதமாதிரி அசிங்கப்படுத்திவெச்சிக்கிறோம். கழுவித்தள்ளக்கூட எவனும் வரமுடியாதுரா. அப்பால எப்படி கொசு வராம இருக்கும்?’

இதற்கும் கைதட்டினார்கள். வட்டம் சிரித்தார். பாத்துக்க முத்துராமா என்று தோளைத் தட்டிவிட்டு சுமோவில் ஏறி மிதந்து போனார். முத்துராமன் வெறி கொண்டவன் போல் உழைக்கத் தொடங்கினான். இப்படி ஒரு வாய்ப்பு இன்னொரு சந்தர்ப்பத்தில் கிடைக்காது. ஊருக்கு நல்லது. உள்ளபடி தனக்கும் நல்லதுதான். அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் தயங்காமல் கவுன்சிலருக்கு நிற்கலாம்.

பிற்பகல் வரை வேலை மும்முரமாக நடந்தது. சாக்கடைகள் கிளறப்பட்டதில் எழுந்த துர்நாற்றத்தில் குப்பம் முழுவதும் மூக்கை மூடிக்கொண்டது. குழந்தைகள் அழுதன. டர்ர்ர்ர்ர் என்று சத்தமுடன் வந்து நின்ற புல்டோசர், ஆற்றங்கரை ஓரத்துக் குப்பை மேடுகளை அப்புறப்படுத்தின.

‘தபார்றா.. நம்மாளுங்க ரேஞ்சே தனிதான் இல்ல.. காமசூத்ரா கவர் இருக்குது பாரு.. அந்தா பாரு.. எவனோ இங்க நாலு குவாட்டர் எம்ஜிஎம் அடிச்சிருக்கான். பாட்டிலு கெடக்குது பாரு. அவவன் ரெண்ருவா பாகிட் சரக்குக்கு வழியில்லாம அல்லாண்டு கெடக்கறான். எவந்தலையத் தடவி மொட்ட போட்டானோ..’

குப்பை மேடுகள் பல ரகசியங்களை உள்ளடக்கி இருக்கின்றன. கிளறும்போது சரித்திரத்தின் பல கிழிந்த பக்கங்கள் கிடைத்துவிடுகின்றன. பென்சிலில் எழுதிக் கசக்கிப்போடப்பட்ட ஒரு காதல் கடிதத்தை எடுத்துப் பிரித்து வைத்துக்கொண்டு அது யார் கையெழுத்து என்று கொஞ்ச நேரம் அலசிக்கொண்டிருந்தார்கள்.

‘டேய், போதும் எந்திரிச்சி வாங்கடா..’ யாரோ குரல் கொடுத்தார்கள். உழைத்தவர்களுக்கான சாம்பார் சாதப் பொட்டலங்களுடன் வட்டச் செயலாளர் புன்னகையுடன் கைகூப்பும் விசிட்டிங் கார்ட் பின் செய்யப்பட்டிருந்தது.

முத்துராமனுக்கு சாப்பிட நேரம் இருக்கவில்லை. தன் நண்பர்களுடன் அவன் இருட்டும் வரை ஓயாமல் காலனி முழுதும் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு வீட்டிலும் சாக்கடைப் பாதைக்கான தடத்தை முடிவு செய்வது பெரிய காரியமாக இருந்தது. ஒரு ஒழுங்கில்லாமல் உருவாகியிருந்த காலனி. வாசல் புறம் மட்டுமே வழி இருந்தது. பின்புறம் என்று ஏதுமில்லாத இட நெருக்கடி. ஒவ்வொரு குடிசையின் பின்புறத்திலும் இன்னொரு குடிசை ஒட்டிக்கொண்டிருந்தது. அரையங்குல இடைவெளிகளில் அவர்கள் துணி உலர்த்திக்கொண்டார்கள். முறத்தில் மிளகாய் கொட்டி, கூரைச் சரிவுகளில் காயவைத்துக்கொண்டார்கள்.

ஒரு சாக்கடைக்கான நிரந்தர வழி என்று சிந்திக்க அவகாசமில்லாமலேயே நாற்பது வருடங்கள் சாக்கடையோடு ஓடிப்போய் அடையாறில் கலந்துவிட்டன. எத்தனை நூறு குழந்தைகள் அதற்குள் பிறந்து, வளர்ந்து ஆளாகிவிட்டன! இதே சாக்கடைதான். இதே குப்பம்தான். இதே கொசுக்கடிக்கு நடுவில்தான்.  துயரங்களைப் பொருட்படுத்தாமலிருக்க பழகிவிட்டது மனம். துயரமென்றே உணராத அளவுக்கு மரத்துவிட்ட மனம்.

அன்றைய பணிகள் முடிந்து ஆள்கள் கூலி வாங்கிக்கொண்டு மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றபிறகு அவன் நிலவரம் சொல்வதற்காக வட்டத்தின் அலுவலகத்துக்குப் போனான். அரை மணி காத்திருக்க வேண்டியிருந்தது. பார்த்துப் பேசிவிட்டு, மறக்காமல் நன்றி சொல்லித் திரும்பி, மீண்டும் நண்பர்களுடன் மறுநாள் பணி குறித்துப் பேசிவிட்டு, ஒரு உற்சாகத்துக்கு தொண்ணூறு மில்லி மட்டும் சாப்பிட்டு மேலுக்கு அரைப் பொட்டலம் பிரியாணியை முடித்து, விடைபெற்று வீடு திரும்பும்போது மணி பதினொன்றாகிவிட்டிருந்தது.

வீதி அடங்கிவிட்டது. வாசல்களைக் கால்களும் நபர்களும் நிறைத்திருந்தார்கள். நாயொன்று விடாமல் ஊளையிட்டுக்கொண்டிருந்தது. த, சொம்மாகெட என்று சொல்லியபடி அதனைக் காலால் ஒரு உதை உதைத்து அவன் தன் குடிசையின் வாசலை அடைந்தான்.

அப்பா வெளியே படுத்திருந்தார். கயிற்றுக் கட்டிலில் கண்ணயர்வு. வழக்கம் அதுதான். அவனும் அப்பாவும் வாசலில் படுப்பது. தம்பியும் அம்மாவும் வீட்டுக்குள்ளே. பேசிக்கொள்ளப் பொதுவில் இருவருக்கும் ஏதும் இருந்ததில்லை. எப்போதாவது பேச வாய் திறந்தால், வலிக்குதுடா ரொம்ப என்பார் முதல் சொல்லாக. கிட்டத்தட்ட வாழ்ந்து முடித்துவிட்ட வாழ்க்கை குறித்த அதிருப்திகளிலேயே அவர் நோயாளி ஆகிவிட்டதுபோல அவனுக்கு எப்போதும் தோன்றும்.

சத்தமில்லாமல் உள்ளே போகப் பார்த்தான். ஆனால் அப்பா தூங்கியிருக்கவில்லை. புரண்டு படுத்தவாறு, இப்பத்தான் வரியா என்று கேட்டார்.

‘அ.. ஆமாப்பா..’ சே. ஒரு பீடா போட்டிருக்கலாம்.

அவருக்கு சுவாசித்த காற்றின் ஒரு துளி நாசியைத் தொட்டால் போதும். அவர் அடிக்காத சரக்கா? மறைக்காத லாகவமா? ஒளித்து வைக்க என்ன இருக்கிறது?

‘உக்காரு’ என்றார் மெதுவாக. ‘உள்ள போனன்னா உங்கம்மாக்காரி பொலம்ப ஆரம்பிச்சிருவா. சரக்கடிக்காதன்னு சொல்ல எனக்கு யோக்கியத இல்ல. சரக்கடிச்சிட்டு வீட்டுக்கு வராத. புரியுதா?’

அவன் பேசாதிருந்தான்.

‘சாப்ட்டியா?’

‘சாப்ட்டேம்பா.. படுக்க வேண்டியதுதான். உடம்பெல்லாம் வலிக்குது..’

இரண்டுக்குமாகச் சேர்த்துச் சொன்னான். சொல்லிவிட்டுத் தன் கட்டிலை இழுத்து அவருக்குச் சற்றுத் தள்ளிப் போட்டான்.

அவர் நெடு நேரம் பேசவில்லை. ஆனால் ஏதோ பேச விரும்புகிறார் என்று அவனுக்குத் தோன்றியது. பேசினால் பதில் சொல்லவேண்டியிருக்கும். ஆனால் தூக்கம் வருகிறது. உழைத்த களைப்பு. நாய் விடாமல் ஊளையிட்டுக்கொண்டிருந்தது. அதுவேறு எரிச்சலாக இருந்தது. இரவில் அமைதியைத் தவிர பொதுவில் இன்னொன்று சரிப்படமாட்டேனென்கிறது.

‘இன்னிக்கி அந்தப் பொண்ணோட அப்பாரு வந்துட்டுப் போனாரு.’ என்று சடாரென்று ஓரிடத்தில் தொடங்கினார்.

முத்துராமனுக்கு முந்தைய தினம் ஆல்பர்ட் தியேட்டரில் பார்த்தபோது சாந்தி சொன்னது நினைவுக்கு வந்தது. ஆ, திருமணம்.

‘ஜனவரி கடேசில இருவத்தேழாந்தேதி வெச்சிக்கிரலாமான்னு கேட்டாரு’

பரபரவென்று அவன் கணக்குப் போட்டான். ஜனவரி இருபத்தி மூன்று, இருபத்தி நான்கு, இருபத்தைந்து மாநாடு. ஒரு பிரச்னையும் இல்லை.

‘வேலை நெறைய கெடக்குது. மொதல்ல மாவட்டச் செயலாளராண்ட சொல்லி அப்பாயின்மெண்டு கேக்கணும். நோட்டீஸ் அடிக்கணும். துணி எடுக்கணும். எல்லாத்துக்கும் பணம் வேணும் மொதல்ல. காதுல விழுதா?’

‘ம்..’ என்றான் மெதுவாக.

‘விளையாட்டில்லடா.. இது பெரிய காரியம். கல்யாணம் ஒருநாளோட செரி. வாழ்க்கை ரொம்ப பெரிசு முத்து.. சமயத்துல பேஜாரா தோணும். ஓடிரலாமான்னுகூட தோணும். உன் வயித்த நீ நெனச்சிப் பாக்கறது எப்பவாச்சும்தான். கல்யாணம்னு ஆயிடிச்சின்னா இன்னொரு வயித்துக்கு நீ பொறுப்பாயிருவ. மொத மாசமே கர்ப்பம்னிட்டான்னு வையி.. ஒண்ணோட ஒண்ணு இன்னொண்ணு.’

அவனுக்கு மிகவும் ஆச்சர்யமாகப் போய்விட்டது. அவனது அப்பா ஒருபோதும் இப்படியெல்லாம் பேசியவரல்லர். இப்படியெல்லாம் சிந்திக்கக் கூடியவர் என்றும் அவன் நினைத்ததில்லை. தன்னிடம் ஏதோ ஒன்று முக்கியமாக – மிக முக்கியமாக அவர் தெரிவிக்க விரும்புகிறார் என்று அவனுக்குத் தோன்றியது.

அவன் ஆர்வமாகக் கேட்கத் தயாரானபோது பின்னால் யாரோ வருவது போலிருந்தது.

(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 23, 2010 @ 1:56 pm