கொசு – 09

அத்தியாயம் ஒன்பது

முத்துராமனுக்கு அது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. அவனுக்குத் தெரிந்த அவனுடைய அப்பா, ஒரு காலத்தில் மிகத் தீவிரமான கட்சிக்காரர். வாரம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் இரவில் வீடு தங்குவார். அந்தத் தினங்களிலும் அவரைப் பார்க்க யாராவது வந்துவிடுவார்கள். வாசலில் இதே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து அவர் கட்சி அரசியல் பேசிவிட்டு, வந்தவரை வழியனுப்பிவைத்துவிட்டு அப்படியே படுத்துவிடுவார். முத்துராமன் கண் விழிக்கும் காலைப் பொழுதுகளில் அநேகமாக அவர் வீட்டை விட்டுப் புறப்பட்டிருப்பார்.

கட்சியின் நம்பிக்கைக்குரிய பேச்சாளர்களுள் ஒருவராக அவர் பிராந்தியத்தில் பிரபலம். இரவு ஒன்பதரை மணிவாக்கில் மேடை ஏறி மைக்கைப் பிடித்தால் ஒன்று அல்லது ஒன்றரை மணிநேரம் நின்ற இடத்தில் ரவுண்டு கட்டி அடிப்பார் என்று பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறான். கிண்டலுக்குப் பெயர்போன பேச்சாளர். எதிர்க்கட்சிக்காரர்களைப் பெயர் சொல்லி விளித்து, விரல் உயர்த்தி நக்கலடிக்கும் வித்தகர். இருபது பேர் கூடும் கூட்டத்தை நாற்பதாக்குவதற்குக் கண்டிப்பாக அவர் அந்தக் காலத்தில் தேவைப்பட்டிருக்கிறார்.

ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் நூற்று இருபத்தைந்து ரூபாய் அவருக்குக் கிடைக்கும். தவிரவும் ஒன்றிரண்டு சோடாக்கள். தமிழரசன் பேச்சுக்குத் தமிழ்நாட்டிலேயே எதிர்ப்பேச்சில்லை என்று மாவட்டச் செயலாளர் ஒருமுறை அவரைப் புகழ்ந்திருக்கிறார். கட்சிப் பத்திரிகையில் ஆறு முறை அவரது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கூட்ட விவரம் வெளியாகியிருக்கிறது. இரண்டு முறை நெற்றியில் ரத்தம் வரும் அளவுக்கு அடிபட்டிருக்கிறார். கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர் வீடு வந்து நலம் விசாரித்துப் போனதற்குச் சாட்சியாகப் புகைப்படம் இருக்கிறது.

ஒரு எம்.எல்.ஏ. ஆகியிருக்கலாம். ஏனோ முடியாமல் போய்விட்டதில் அவர் அரசியலிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு விட்டார். அந்த விஷயத்தில் குடும்பத்தில் அனைவருக்குமே வருத்தம்தான்.

முத்துராமனின் தாத்தா, சித்தப்பாக்கள், மாமன்கள் அனைவரும் காரணம் புரியாமல் பலநாள் இதுபற்றிப் பேசிப்பேசி மாய்ந்திருக்கிறார்கள்.

‘வுட்றா.. அவ்ளோதான். என்னால இதுக்கு மேல முடியல. எம்புள்ள சாதிப்பான் போ..’ என்று ஒரு வரியில் முடித்துக்கொண்டு எழுந்துபோய்விடுவார். முத்துராமன் ஒரு சமயம் தன் அம்மாவிடம் இது குறித்துப் பேசியிருக்கிறான்.

‘மருவாத இல்லாத எடத்துல என்னாத்துக்குப் பொழங்கிட்டுக் கெடக்கணும்? அவுரு வூட்லயே கெடக்கட்டும். என் ஒடம்புல தெம்பு இருக்கற வரைக்கும் நான் ஒழைச்சி சோறு போடுவேன்’ என்று சொன்னாள்.

அப்பாவின் அரசியல் துறவறத்துக்கு ஒரு வகையில் அம்மா காரணமாக இருந்திருப்பாளோ என்றுகூட முத்துராமன் யோசித்திருக்கிறான். ஆனால் பெண்கள் சொல்லி, விலகக்கூடிய விஷயம் அல்ல அது. ஒரு ஆர்வம் போலத்தான் மனத்தில் விழுகிறது. மெல்ல மெல்ல உடம்பினுள் பரவி ஒவ்வொரு நரம்பிலும் நிரம்பிவிடுகிறது. பிறகு கட்சிக்கொடியின் நிறம் மானசீகமாக ரத்தத்தில் தோய்ந்து ரத்தத்தின் நிறத்தை மாற்றித் தன்னுடைய நிறத்தை ஏற்றிவிடுகிறது. வெள்ளைச் சட்டைக்கும் வெள்ளை வேட்டிக்கும் மனம் விருப்பப்படுகிறது. படியச் சீவிய தலையில், பணிவு வரவழைத்துக்கொள்ளும் இரு கரம் கூப்பிய வணக்கத்தில் மேலான அரசியல்வாதியாக சித்தம் உணர்கிறது. யார் சொல்லியும் இதை மாற்றிக்கொள்ள முடியும் என்று முத்துராமனுக்குத் தோன்றவில்லை.

‘அப்படி நெனைக்காதடா.. உங்கம்மா என்னைத் தடுத்ததில்ல. ஆனா எல்லா பொம்பளைங்களும் உங்கம்மா மாதிரி இருந்துறமாட்டாளுங்க. புருசன் முந்தானைக்குள்ள இருக்கணும்னு நெனச்சாக்கூட பரவால்ல..

இப்பல்லாம் பொண்ணுங்க முந்தானையாவே அவந்தான் இருக்கணும்னு நெனைக்கறாங்க.. நாஞ்சொல்றது புரியுதா? தன்னைத்தவிர இன்னொரு விசயத்துல அக்கறை காட்ற புருசன யாருக்கும் புடிக்காம போயிருது முத்து..’

ஆடிப்போய்விட்டான் முத்துராமன். அவன் இப்படி உட்கார்ந்து சொந்த விஷயம் பேசக்கூடிய தந்தையை இத்தனை வருடங்களில் முதல் முறையாகச் சந்தித்திருந்தான். பரீட்சை எழுதாதபோது ஏன் எழுதவில்லை என்று கேட்காத தந்தை. கட்சிக்கூட்டங்களுக்குப் போகத் தொடங்கியபோது எச்சரிக்கையாகக் கூட ஏதும் சொல்லாத தந்தை. பலநாள் வீட்டுக்கே வராமல் சுற்றிக்கொண்டிருந்தபோதும் கண்டுகொள்ளாத மனிதர். ஒரு திருமணம் என்று நிச்சயமானதும் இத்தனை அக்கறை, இத்தனை கரிசனம் காட்டக்கூடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை.

‘புரியுதுப்பா.. ஆனா யாருக்காகவும் நம்ம லட்சியத்த விட்டுறமுடியாதில்ல? எனக்கு அரசியல்தாம்பா மொதல்ல. குடும்பமெல்லாம் அப்பாலதான்’ என்றான் மெதுவாக.

நீண்டநேரம் அவர் மௌனமாக அமர்ந்திருந்தார். ஒரு பெருமூச்சு எழுந்திருக்கவேண்டும். பிறகு மெல்லச் சொன்னார். ‘நானும் இப்படிச் சொல்லிக்கினு திரிஞ்சவன் தான். திரிஞ்சத நெனச்சி இப்பவும் வருத்தப்படல.

ஆனா வூட்டுக்கும் கொஞ்சம் செஞ்சிருக்கலாம்னு எப்பவாச்சும் தோணுது. ப்ச்.. கட்சி, கடவுளெல்லாம் காலணா காசு கையில இருந்தா இன்னும் நல்லாருக்கும் முத்து. காசில்லாதப்பத்தான் நமக்கு இதுலல்லாம் புத்தி நிலைக்குது. தப்பிச்சிக்கத்தான் இப்பிடி அலையறமோன்னு சமயத்துல தோணிரும். எளவு, நம்ம கட்ன பாவத்துக்கு அவுங்களும் கஸ்டப்பட்டாவணும். உங்கம்மா எப்பவாச்சும் எரிஞ்சி வுளுந்தா நான் என்னிக்கானா பதில் பேசி பாத்திருக்கியா? எனுக்கு கட்சி இருந்தவரைக்கும் கட்சி. இல்லேன்னு ஆனப்பறம் காஜா பீடி. அவளுக்கு என்னா இருக்குது சொல்லு? பாவம், யாரப்போயி திட்டுவா? எப்பிடி தன்னோட ஆத்தாமைய தீத்துப்பா? சர்தான் கத்திக்கினு போன்னு சொம்மா கெடந்துருவேன். கவனிச்சிருக்கியா?’

கவனித்திருக்கிறான். ஆனால் அதற்கு இதுதான் அர்த்தமாக இருக்கும் என்று யோசித்ததில்லை. தனக்குத் தெரியாத நூலிழை ஒன்றில் தன் தந்தை ஒரு மாய மணி கோத்துக்கொண்டிருக்கிறார் என்று இப்போது உணர்ந்தான். ஆயிரம் கஷ்டங்களுக்கு இடையிலும் வீடு சிதறிவிடாமல் கட்டிக்காக்கிற மணி.

‘அதச் செய்யின்னுதான் உன்னாண்ட சொல்றேன். நீ இஸ்டப்பட்டபடி அரசியல்ல முன்னுக்கு வரணும்னுதான் நானும் நெனைக்கறேன். ஆனா வூட்ட லேசா நெனச்சிராத. ஒலகத்துல இருக்கற எல்லா பொம்பளைங்களும் நல்லவங்கதான். மாமியாராவும் மருமவளாவும் ஆகாத வரைக்கும். ஆயிருச்சின்னா எப்பவேணா பத்திக்கும். அப்பிடி ஒரு நெலம வந்து நீ வூட்ட பாக்காம ஊர் மேஞ்சிக்கிட்டிருந்தன்னா, மக்கி மண்மேடா ஆயிரும் முத்து. தனியா போவணும்னுவா. அவ மூஞ்சிய திருப்பிக்கினு பூச்சி காட்டுவா. இவ மூக்க சிந்திக்கினு ஒப்பாரி வெப்பா. பாக்க சகிக்காது..’

அவனுக்கு சுவாரசியம் வந்துவிட்டது. நெருங்கி அவரருகே அமர்ந்து, ‘நீ எப்பிடிப்பா சமாளிச்ச?’ என்றான் புன்னகையுடன்.

‘ம்ஹ¤ம். ரொம்பக் கஷ்டப்பட்டேன். கல்யாணம் கட்டிக்கினு ரெண்டரை வருசம் தனியாத்தான் இருந்தேன். கிண்டியாண்ட எஸ்டேட் தாண்டி ஆத்தங்கரைல குடிசை ஒண்ணு பதிமூணு ரூவாய்க்கு வாடகை. நீ பொறக்கற வரைக்கும் அங்கதான். அப்பால என்னிக்கோ ஒருநாள் ஒரு வேகம் வந்து, வாடி நம்மூட்டாண்டன்னு இஸ்துக்கினு வந்துட்டேன். கொஞ்சநாள் நல்லா நடிச்சேன் முத்து. வூட்டாண்ட வந்தாலே சவுண்டு வுட்டுக்கினுதான் வர்றது. ஐயோ வந்துட்டானேன்னு நெனப்பா உங்கம்மா.. என்னியவிட எங்கம்மா தேவலன்னு அவ நெனைக்கற அளவுக்கு நடந்துக்கிட்டேன். அப்பால அவளுக்கும் ஒறவு சனம் பழகிருச்சி. உன்ன எல்லாரும் தூக்கிக் கொஞ்ச ஆரமிச்சாங்களா? அவளுக்கு அது போதும்னு தோணிருச்சி. ஊர் மேயற புருசன். ஒறவாச்சும் ஒழுங்கா இருந்தா போதும்னு விட்டுட்டா..’

‘நெசமாவே மாமியார் மருமவன்னா ஒத்துப்போவாதாப்பா?’

‘தெரியலடா.. ஆனா அப்பிடித்தான் இருக்குது. பதறாம குந்திக்கினு யோசிச்சிப் பாத்தா ரெண்டு பேருமே தனித்தனியா நல்லவங்களாத்தான் தெரிவாங்க. நம்ம மேல அவுங்க வெக்கற ஆசைதான் அப்பிடி மோதிக்க சொல்லுதுன்னு நினைக்கறேன்.’

‘அப்பசெரி. புத்தரு கரீட்டாத்தான் சொல்லிக்கிறாரு.’

தமிழரசன் புன்னகை செய்தார். ‘அது தப்பிச்சிக்கினு ஓடசொல்றதுடா.. கோழையாட்டமா இருப்பாங்க? ஆசை வெக்காதன்னா கரீட்டா ஒண்ணுத்தும்மேல வெக்காதன்னு அர்த்தம். எல்லாத்தையும் ஆசைப்பட்டுட்டா பிரச்னையே வராது பாரு. தபாரு, பொறந்த பாவத்துக்கு வாழ்ந்து தீக்கணும். வாழறதுக்கு சாட்சியா நாலு நல்லது பண்ணணும். இவ்ளோதான் மேட்டரு. நடுவுல நாம சுருண்டு வுழறமாதிரி ஆச்சின்னா அதுக்கு நாமதான் காரணமா இருக்கணும். அடுத்தவங்கள உள்ளார வுட்றகூடாது. அவ்ளோதான். புரியுதா?’

பலதும் புரிவது போலவும் எதுவுமே புரியாத மாதிரியும் இருந்தது அவனுக்கு. வியப்புடன் அவன் தந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் நண்பர்கள் அரக்க பறக்க ஓடிவந்தார்கள்.

‘இன்னாடா இந்நேரத்துல?’ வேகமாக எழுந்துகொண்டான் முத்துராமன்.

‘முத்து, கொஞ்சம் வரியா? ஒரு முக்கியமான சோலி..’ என்றான் ஜெயச்சந்திரன்.

அவன் திரும்பித் தன் தந்தையைப் பார்த்தான். அவர் சிரித்தார்.

‘மணி ஒண்ணாவுதேன்னு பாக்கிறியா? போபோ.. இதத்தான் இம்மாநேரம் சொல்லிக்கினு இருந்தேன். உங்கம்மாவுக்கு நீ வந்தது தெரியாதில்ல? அந்தவரைக்கும் ஓக்கே. புரியுதா இப்ப?’

அவனும் சிரித்தான். வரேம்பா என்று கிளம்பினான்.

‘டேய், திரும்பவும் தண்ணிகிண்ணி போடாதிங்கடா.. போட்டது போதும்’ என்று குரலெடுத்துக் கத்தினார் தமிழரசன். அவர்கள் திரும்பிப் பார்க்காமல் ஓட்டமும் நடையுமாகப் போனார்கள்.

மாந்தோப்பு ஸ்கூல் அருகே வந்ததும், ‘இங்கியே உக்காரலாம்டா’ என்றான் முத்துராமன். சுற்றுச் சுவரில் தாவி ஏறி முதலில் அவன் அமர்ந்தான்.

‘கால் வலிக்குது. அதுவும் இல்லாம காலீல வேலைவேற இருக்குது. இன்னிக்கி மூணு தெருவுல ரோடு போடுறாங்க..’

‘மாப்ள ஒரு முக்கியமான விசயம்டா.. உங்காளு குப்பத்தாண்ட கொள்த்திப் போட்டது யாருன்னு தெரிஞ்சிருச்சி..’

முத்துராமனுக்குச் சட்டென்று அந்தச் சொற்றொடரின் அர்த்தம் முழுவதுமாக உள்ளுக்குள் இறங்கவில்லை.

உங்காளு என்பதைத் தன் எதிர்கால மனைவி என்று மொழிபெயர்த்து உணரச் சில வினாடிகள் தேவைப்பட்டன. உணர்ந்ததும் ஆர்வமாகக் கேட்டான். யாரு?

‘டென்சன் ஆவாத. நம்ம வெறகுமண்டி மருதன் தான். மேலிடம் சொல்லித்தான் செஞ்சிருக்கான்.’

தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு.

(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 23, 2010 @ 1:56 pm