அனந்தபுரத்து வீடு

துரோகம் செய்த எதிரிகளைப் பழி வாங்கும் கெட்ட ஆவிகள் படங்களே பார்த்து சலித்துப் போன நம் கண்களுக்கு அனந்தபுரத்து வீட்டின் நல்ல ஆவிகள் நிம்மதியைத் தருகின்றன. சென்னைவாசியான நந்தா தன் காதல் மனைவி, பேச முடியாத குழந்தையுடன் தன் சொந்த கிராமமான அனந்தபுரத்திற்கு வருகிறார். நந்தாவின் பெற்றோர் ஆவிகள் செய்யும் கலாட்டாக்களும் நந்தாவின் கிராமத்து வருகைக்கான பின்னணியுமே கதையின் முக்கியப் புள்ளிகள். நாகா தனக்கே உரிய பாணியில் சற்று திகிலுடன் கதையை நகர்த்தி இருக்கிறார். இருந்தாலும் பாசமான பெற்றோர் ஆவிகள் என்பதாக முதல் காட்சிகள் அமைந்து விடுவதால் அதிக திகிலில்லாமல் ஆவிகளை ரசிக்க முடிகிறது. மகனின் குடும்ப வரவிற்காக வீட்டைச் சுத்தம் செய்து சமைத்து வைக்கிறது தாயின் ஆவி. பேரனுக்கு விளையாட்டு காட்டுவது, மனைவியை அடித்த மகனைக் கைத்தடியால் விளாசுவது என்று அசத்துகிறது தந்தை ஆவி. ஆவிகளைக் கெட்டதாகவே காட்டி வந்த திரை இயக்குனர்களுக்கு மத்தியில் ஆவிகளை நல்ல விதமாகக் காட்டிய இயக்குனருக்கு நன்றி சொல்லலாம்.
 
 நந்தா நன்றாக நடித்து உள்ளார். சில காட்சிகளில் நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆவிகளைக் கண்டு பயப்படும் சாயாசிங் பாசமான மாமனார், மாமியார் என்றவுடன் அமைதியாகிறார். சிறுவன் ஆர்யனின் முகத்தில் ஓராயிரம் வெளிப்பாடுகள். பேசாமலேயே சிறப்பாக நடித்திருக்கிறான். அலட்டாமல் அசத்தியிருக்கும் அந்த வில்லனும் சிறப்பாகப் பங்காற்றியிருக்கிறார்.   நந்தாவிடம் " நீ பணத்தை ஏற்பாடு பண்ணு, உன் குடும்பத்தை நான் பார்த்துக்குறேன்" என்று கண்களாலேயே அளக்கிறாரே, பேஷ் பேஷ் நடிப்பு நன்னாயிருக்கு. இடைவேளைக்குப் பிந்தைய படத்தின் நீளம் குறைக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. இவர்களைச் சுற்றியே சுவாரஸ்யமாகக் கதை பின்னப்பட்டிருந்தாலும் அக்கம்பக்கத்தினர், ஊரார் ஆகியோரைக் காட்டியிருந்தால் இன்னும் ஒன்றியிருக்கலாம்.
 
ரமேஷ் கிருஷ்ணாவின் இசையில் ஒரே ஒரு தித்திப்பான பாடல். அருண்மணி பழனியின் ஒளிப்பதிவு அத்தனை அருமை. அனந்தபுரத்து வீட்டையும் அதன் பின் உள்ள குளத்தையும் அழகாகக் காட்டியிருக்கிறார்.அன்பான ஆவிகளாகக் கற்பனை செய்து திரையில் செதுக்கிய நாகாவிற்கு ஒரு ஓஹோ. அனைவரும் பார்க்க வேண்டிய அனந்தபுரத்து வீடு – அன்பான ஆவிகளின் கூடு.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 21, 2010 @ 8:59 pm