கொசு – 15

அத்தியாயம் பதினைந்து

‘சரி வுடுப்பா. மேட்டரு இதான். வேலைய நிறுத்தணும். மேலிடத்து உத்தரவு. மீறி செஞ்சிங்கன்னா இன்னொருதபா சும்மா இருக்கமாட்டோம். டேய், வாங்கடா..’

அவர்கள் போய்விட்டார்கள். ஆற்றங்கரையில் குப்பத்து இளைஞர்கள் மட்டும் நின்றுகொண்டிருந்தார்கள். அதிர்ச்சி கலந்த வியப்பு. பதற்றம் கலந்த கவலை. கோபம் கலந்த குழப்பம். என்றைக்கோ யார் முயற்சியாலோ அந்தப் பிராந்தியத்தின் குப்பைகளைச் சேகரிக்கக் கொண்டுவந்து போடப்பட்ட குப்பைத் தொட்டிக்குள்ளிருந்து நாயொன்று தலைநீட்டி எட்டிப்பார்த்தது.  ‘வழ்ழ்’ என்றது. குப்பைகள் தொட்டியை மீறத் தொடங்கும்போது, தொட்டிகள் நாய்களின் இல்லங்களாகிவிடுகின்றன. கூச்சலில் அமைதி குலைக்கப்படும்போது தொட்டிவாசிகள் கோபம் கொண்டுவிடுகிறார்கள்.

‘இன்னாடா ஆச்சு உனக்கு? சுயபுத்தியோடதான் இருக்கியா? இல்ல சரக்கேத்திக்கினு வண்ட்டியா?’ சடாரென்று கோபமுடன் நெருங்கி, கொத்தாகச் சட்டையைப் பற்றிய நண்பனை சிரமப்பட்டுத்தான் விலக்க முடிந்தது முத்துராமனால்.

‘ஏண்டா உனுக்கு அறிவில்ல? யாருடா அவனுங்க? எத்தினி பேரு? நாம எத்தினி பேரு? போட்டுத்தள்ள எம்மாநேரம் ஆவும்? பொட்டையாட்டம் சமாதானம் பேசிக்கினு கீற? கேட்டா, நம்மாளுங்களையே மொறைக்கற? அவனுங்க எதிர்ல நமக்குள்ள தகராறு வாணான்னுதான் சொம்மா இருந்தோம். இல்லேன்னா மவன, உனுக்கும் சேத்து வுழுந்திருக்கும்!’

‘அடச்சே, சொம்மா கெட!’ என்று சீறினான் முத்துராமன்.

‘போடு! போட்டுத்தள்ளு! உள்ள தள்னான்னா ங்கொப்பன் தாவு தீந்துரும். இன்னாத்துக்குடா வீண் வம்பு நமக்கு? அவனுங்க யாரு, என்னான்னு தெரியல. எவன் அனுப்பி வந்திருக்காங்கன்னு யாரானா கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டிங்களா? நல்ல காரியம் நடக்குறத கெடுக்கணும்னு வாறவன், நல்லவன் அனுப்பியா வந்திருப்பான்? இந்தமாதிரி ஆளுங்க வந்தாங்கன்னு போயி தலைவராண்ட சொன்னா, அவரு பாத்துக்கறாரு. அத்தவிட்டுட்டு அவன் அடிக்க வந்தான்னு நீயும் திருப்பி அடிச்சேன்னா யாருக்குடா நஷ்டம்? படிக்காத சென்மங்கன்னுதானே இந்தாட்டம் ஆடப்பாக்குறானுங்க? ஆமா, நான் தற்குறிதான்னு தூக்கிக் காட்டணுமா?’

கூட்டம் சற்று யோசித்தது.

‘இருந்து இருந்து ஒருத்தன் நம்ம குப்பத்துக்கு நல்லது பண்றேன்னு வாரான். அதைக் கெடுக்கணும்னு ஒருத்தன் வர்றான். நமக்கு காரியம் பெருசா? வீரியம் பெரிசா? ஆமாடா. நீ பெரிய வீரன் தான். ஒப்புக்குறேன். இப்ப என்னா? யாரயானா அடிக்கணும், போட்டுத்தள்ளணும். அவ்ளோதானே? இந்தா.. நான் நிக்கறேன். அடி! அடிங்கடா! கம்னாட்டிங்களா..’

உரத்த குரலில் முத்துராமன் வெடித்தபோது அவர்கள் சற்றுப் பின்வாங்கினார்கள். முத்துராமனுக்கு உள்ளுக்குள் வியப்பு கூடிக்கொண்டே போனது. தனக்குள் இரண்டு நபர்களாகப் பிரிந்து நின்று செயல்படுவதுபோலச் சொற்களற்று உணர்ந்தான். இதற்கு முன் இப்படிப் பேசியதில்லை. இப்படி நடந்துகொண்டதில்லை. பல சண்டைகள் வந்திருக்கின்றன. எல்லாம் தெருத் தகராறுகள். அவற்றில் கலந்துகொண்டிருக்கிறான். நியாயம் பேசியிருக்கிறான். ஆனால் அதெல்லாம் கூட்டுக்குரல்களில் ஒன்றாகத்தான் அமைந்திருக்கிறது. இப்படித் தனித்து ஒலித்ததில்லை. பத்துப் பேர் கவனம் செலுத்திக் கேட்கத் தக்கதாக இருந்ததில்லை.

திடீரென்று தன் இருப்பின் அர்த்தமும் தன்மையும் மாறிவிட்டதா என்ன? வலுக்கட்டாயமாக மாற்ற விரும்புகிறோமா?

யோசித்துப் பார்த்தால், உண்மையில் அவனுக்குக் கோபமில்லை. யார் மீதும். சூழ்நிலையின் பதற்றம் அவனைத் தொடவேயில்லை. பழைய முத்துராமனாக இருந்திருந்தால், இப்படி முன்பின் தெரியாத நாலு பேர் தாக்க வந்தது தெரிந்தால் கொதித்துக் குமுறியிருப்பான். இப்போது எப்படியோ ஒரு அமைதி வந்து குடிபுகுந்துவிட்டது. தாக்கவந்தவர்களிடம் அமைதிப் பேச்சு நிகழ்த்தியபோதும் சரி, பின்னால் தன் சொந்த நண்பர்களின் கோபத்துக்கு பதில் கோபமாகக் கண்ணாமூச்சி ஆடியபோதும் சரி. சூழல் பாதிக்கவில்லை. தகிப்பு இல்லை. தவிப்பு இல்லை. பதற்றமோ, பயமோ அற்றுப் போயிருந்தது. எப்படி இது, எப்படி இது என்று உள்ளுக்குள் இன்னொரு மனிதன் வியந்துகொண்டே இருந்தான்.

அரசியலில் பயில வேண்டிய முதல் பாடம் இதுதானா? எதனாலும் பாதிக்கப்படாமலிருப்பது? எருமை மாட்டுத் தோலை இதயத்துக்கு அளிப்பது?

அப்படியும் தெரியவில்லை. தன் தனிப்பட்ட வளர்ச்சிக்கு இந்தச் சம்பவம் இடையூறாக இருந்துவிடக்கூடாது என்கிற முன் ஜாக்கிரதைதான் காரணம் என்றும் அவனுக்குத் தோன்றியது. குண்டர்களை அனுப்பியது யார்? எம்.எல்.ஏவாக இருக்கலாம். அவரது அடிப்பொடிகளில் யாராவதாக இருக்கலாம். அல்லது சிங்காரம் அண்ணனின் தனி எதிரிகள் யாராவது இருக்கலாம். ஒருவேளை கட்சி மேலிடமே நினைத்திருக்கலாம். இவன் எதற்கு இப்படி ஸ்டண்ட் அடிக்கிறான்? கொஞ்சம் தட்டி வைப்பது நல்லது.

நினைக்கலாமே? என்ன தப்பு? யாருக்கு வேண்டுமானாலும் தோன்றியிருக்கலாம். நேற்று வரை இல்லாத சமூக அக்கறை திடீரென்று தலைவருக்கு முளைத்ததன் காரணமே சுயநலம்தான் அல்லவா? எம்.பி. சீட். அல்லது எம்.எல்.ஏ. சீட். பொருளுக்குரிய விலையாகத்தான் அவர் இந்தச் சீரமைப்புப் பணியை நினைத்தார். ஒளிவு மறைவு ஏதுமில்லை. தன்னிடமே வெளிப்படையாகத்தானே சொன்னார்? அப்புறமென்ன?

சொல்வதற்கில்லை. இம்மாதிரி இன்னும் நாலைந்து குப்பங்களைக் கூட அவர் தத்தெடுத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கலாம். அரசியலில் எதுவும் சகஜம். எல்லாமே சகஜம். நல்லதும் கெட்டதும். அன்பும் காழ்ப்பும். தழுவுதலும் தழுவிய கரத்தால் குத்துதலும்.

இந்த சூட்சுமம் தனக்குப் புரிந்துவிட்டதாக முத்துராமனுக்குத் தோன்றியது. சந்தோஷமாக இருந்தது. எத்தனை கவனமாகப் பேசித் தன் நண்பர்களை வாயடைக்கச் செய்துவிட முடிந்தது? பழைய முத்துராமனால் இது முடியாது. நிச்சயமாக முடியாது. அவன் சாது. நண்பர்களின் கோபத்தைத் தன் கோபமாக மாற்றிக்கொள்ளுபவன். அவர்களது சந்தோஷத்தைத் தன் சந்தோஷமாகக் கருதக்கூடியவன். இன்னும் அவன் இறந்துவிடவில்லை. ஆனால் உள்ளுக்குள் அடைத்துவைத்துவிட்டதாக நினைத்தான். தூங்கட்டும் கொஞ்சநாள். சாதுவாக, நல்லவனாக இருந்து சாதித்தது அதிகமொன்றுமில்லை.  தையல் மிஷின் அடித்து மாதம் இரண்டாயிரம். கட்சி வேலை பார்த்து இன்னும் இரண்டாயிரம். அவ்வளவுதான்.

போக நினைக்கும் உயரங்களுக்குப் பொருத்தமில்லாத தொகை. வைத்துக்கொண்டு நாக்கு வழிக்கக்கூட முடியாது. இதோ, திருமணமாகப் போகிறது. சாந்தி. வருகிறவளுக்கு என்ன கனவுகள் இருக்குமென்று சொல்லமுடியாது. நிச்சயம் இருக்கும் ஏதாவது. கனவின்றி வாழத்தான் முடியுமா என்ன? தனக்கில்லையா? சடாரென்று அரசியலில் மேலே உயரும் கனவொன்று வந்து தீப்பொறி போல் பற்றிக்கொண்டதே. சென்ற வருடம் வரை அவன் நினைத்திருக்கவில்லை. நினைத்திருந்தாலும் நினைப்பை வலுப்படுத்தும் விதத்திலான வாய்ப்புகள் வந்ததில்லை.

வட்டச் செயலாளர் சிங்காரம் அண்ணன் அழைத்ததில் ஆரம்பித்தது. நினைத்துப் பார்த்திராத வேகத்தில் எம்.எல்.ஏ. அழைத்துவிட்டார். பேட்டையில் விஷயம் பரவிவிட்டது. முத்துராமனுக்குத் தனியொரு அந்தஸ்து உருவாகியிருந்தது. தலைவர்களுடன் நெருக்கமானவன். கூப்பிட்டு ஏதோ பேசுகிறார்கள். சாட்சிக்கு ஒரு சமூக நலப்பணி ஆரம்பமாகியிருக்கிறது. போதாது?

‘தபாருங்கடா. எனக்கு ஒண்ணுமில்ல. இத்தினி வருசமா கஸ்டப்பட்டுக்கிட்டு இருந்துட்டோம். எதோ சாமியே பாத்து அனுப்பிவெச்சமாதிரி தலைவரு கூப்ட்டு அனுப்பி காசக் குடுத்து குப்பத்த நேராக்குன்னு சொல்லி அனுப்பியிருக்காரு. எவனோ களவாணிப் பயலுக வம்பு பண்ண வர்றானுங்கன்னா, மொறையா நாம அத எப்பிடி தடுக்கணுமோ அப்பிடி தடுக்கணும். போலீசு கம்ப்ளைண்டு குடுக்கலாம். தலைவராண்ட போயி சொல்லலாம். அத்தவுட்டுட்டு திருப்பி அடிக்கறேன், போட்டுத் தள்றேன்னு எறங்கினா வேலையும் கெடும், பேரும் கெடும். நாளைக்கி இன்னொருத்தன் இந்தப் பக்கம் ஓட்டு கேக்கக்கூட வரமாட்டான். நாசமாப் போங்கடான்னு போய்க்கினே இருப்பான். மொத்தம் எத்தினி ஓட்டு? நூத்தம்பது தேறுமா? அத்த கள்ள வோட்டா போட்டுக்கிட்டு போவுறதுக்கு எம்மா நேரம் ஆவும்? யோசிச்சி வேலை செய்ங்க. அவ்ளோதான் சொல்லுவேன்!’

எச்சரிக்கும் விதத்தில் பேசிவிட்டு அவன் திரும்பி நடந்தபோது, ‘முத்து.. டேய், நில்லுடா.. நில்லுடாங்கறேன்ல? டேய்.. மன்னிச்சிருடா.. போவாத. போவாதடா..’

பின்னால் வந்த கூட்டத்தைத் திரும்பாமலேயே மானசீகமாக அவன் உணர்ந்தான். சடாரென்று முகத்தில் ஒரு புன்னகை அரும்பியது. கடவுளே! உனக்கு எப்படி நன்றி சொல்வேன்? இதையல்லவா இத்தனை காலமாக என்னவென்று புரியாமல் எதிர்பார்த்திருந்தேன்?

எல்லோருமே தெரிந்தவர்கள்தான். எல்லோருமே நண்பர்கள்தான். நல்லது சொன்னால் எடுத்துக்கொள்ளக் கூடியவர்களும் கூட. ஆனால் இப்போது பின்னால் வரும் தோரணை வேறாக அல்லவா தெரிகிறது? தலைவனின் பின்னால் திரளும் தொண்டர்களைப் போல?

என்றால் நான் தலைவராகிவிட்டேனா? நினைக்கவே அவனுக்குச் சிலிர்ப்பாக இருந்தது. அழுகை வந்தது. ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லி கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு கடும்பாடி அம்மன் கோயிலுக்குப் போய் அங்கப்பிரதட்சிணம் செய்யவேண்டுமென்று தோன்றியது. அடக்கிக்கொண்டான்.

‘நில்லுடாங்கறோம்ல?’

உரிமையில் எழும் ஓங்கிய குரல். அதுவும் அவனுக்குப் புரிந்தது. நின்றான். திரும்பினான்.

‘மன்னிச்சிட்டேன்னு சொல்லு. இதான் லாஸ்டு. இனிமேப்பட்டு நீ சொல்லாம எதையும் செய்யமாட்டோம்.’

‘சீ போடா. போய் வேலைய பாருங்க.’

அவர்கள் தயங்கினார்கள். ‘திரும்ப வந்தானுங்கன்னா?’

‘வரமாட்டானுங்க’

‘எப்படி சொல்ற?’

முத்துராமன் யோசித்தான். எப்படிச் சொல்கிறோம்? ஏதாவது செய்யவேண்டும் என்கிற உத்தேசம் இருந்தது. ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. சிங்காரண்ணன் ஊரில் இல்லை. வெளியூர் சென்றிருக்கிறார். அதனாலென்ன? எம்.எல்.ஏவிடமே சென்று விஷயத்தைச் சொல்லலாம். யாரோ வந்து காரியத்தைக் கெடுக்கிறார்கள் என்று அப்பாவியாகப் பேசலாம். அவர்தான் ஏவியவர் என்று தெரியவந்தால், அதற்கு ஏற்ப அடுத்தக் காயை நகர்த்திக்கொள்ளலாம். நாளைக்கு வட்டம் ஊர் திரும்பி என்ன ஏது என்று விசாரித்தால், வேறு மாதிரியாகச் சொல்லிவிடலாம். அவர் இல்லாத காரணத்தால்தான் எம்.எல்.ஏவிடம் போகவேண்டியிருந்ததாக. பார்த்துக்கொள்ளலாம். என்ன இப்போது? இன்று என்பதைவிடவா நாளை பெரிது? நாளைக்குள் உலகமே அழிந்தாலும் அழியலாம். தனக்கே விடிந்தாலும் விடியலாம். ஒரு முடிவுக்கு வந்தவனாக நண்பர்களைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

‘பாத்துக்கறேன்னிட்டன்ல? விடு. நீங்கபாட்டுக்கு வேலைய பாருங்க. நான் எம்.எல்.ஏவ பாத்துட்டு வந்துடறேன்.’

சடாரென்று திரும்பி வேகமாக நடையை எட்டிப் போட்டபோது தன் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படியாக ஆரவாரமான பின்னணி இசையொன்று ஒலிப்பதாக உணர்ந்தான்.

(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 23, 2010 @ 1:54 pm