கொசு – 19

அத்தியாயம் பத்தொன்பது

‘அதுல பாருங்க தம்பி, ஆங்.. பேரென்ன சொன்னீக? முத்துராமன். நல்ல பேரு. நா என்ன சொல்லவாரேன்னா, அரசியலுக்கு வர்றதுன்னா பதினாறு வயசுல வந்துரணும். இருவது வயசுல செயிலுக்குப் போயி பாத்துரணும். அப்பத்தேன் முப்பதுல கட்சிக்காரன் மதிக்க ஆரம்பிப்பான். நாப்பதுல மக்களுக்கு நம்மளத் தெரிய ஆரமிக்கும். அம்பதுல மினிஸ்டர் ஆயி அறுவதுல சாவறதுக்குள்ள கொஞ்சம் சொத்து சேத்துவெச்சிட்டுப் போயி சேரலாம். நடுக்கா, நாலஞ்சு போராட்டம், தடியடின்னு பேப்பர்ல நம்ம பேரு வந்திச்சின்னா ஒரு கவனம் கெடைக்கும். எங்கப்பா பதிமூணு வயசுல எதிர்க்கட்சித் தலைவரோட கொடும்பாவிய எரிச்சிருக்காருன்னா பாத்துக்கிடு.’

முத்துராமன் கருத்தேதும் சொல்லாமல் கைகட்டிக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு வியப்புதான். எம்.எல்.ஏ. தங்கவேலு கொடுத்தனுப்பிய •பைலை அவன் ஓட்டலுக்கு வெளியே நின்றபடி ஒரு புரட்டு புரட்டிவிட்டுத்தான் இந்த திருநெல்வேலிக்காரரிடம் கொடுத்திருந்தான். வித்தியாசமாக ஏதும் அவன் கண்ணில் தட்டுப்படவில்லை.

ஆனால் சொல்லிவைத்தமாதிரி இவர் •பைலைத் திறந்ததுமே பின்புறம் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு தாளை நீக்கி அதன் அடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துவிட்டாரே!

நிதானமாக அதைப் படித்து முடித்து, மடித்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, ‘ம்.. அப்பறம்.. என்ன சாப்புடறீங்க தம்பி?’ என்று ஆரம்பித்தவரை அவனுக்குப் புரியவில்லை. சில நிமிடங்களுக்கு முன்னர்தான் யாரோ ஒரு தொண்டனை கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கி, ‘நாளைக்கி சுலோசனா மொதலியார் பாலத்துக்கு அடியில ஒம்பொணம் கெடக்கும் சாக்கிரத’ என்று எச்சரித்துவிட்டு வந்திருந்தார்.

அந்தக் கோபமும் உக்கிரமும் ஆங்காரமும் அவனுக்கு பார்த்தபோது மிகுந்த அச்சத்தைக் கொடுத்தது. ரொம்ப வெவகாரம் புடிச்ச ஆளா இருப்பாரு போலருக்கே என்று நினைத்துக்கொண்டான். மாட்டிக்கொண்டிருந்த அந்த இளைஞன் மிகவும் வத்தலாக இருந்தான். ஏதோ நிதி விவகாரமாகத்தான் இருக்கவேண்டும் என்று முத்துராமனுக்குத் தோன்றியது. தேன் அடித்தவன் புறங்கை நக்காமல் இருக்கமுடியாது. என்ன பத்திருபது எடுத்திருப்பானோ என்னமோ? அவன் முகத்தைப் பார்த்தால் அதற்குமேல் களவாட யோக்கியதை அற்றவனாகத்தான் தோன்றியது.

‘ஒரு ஒழுக்கம் இல்லாம என்னாத்த இவனுக அரசியலுக்கு வந்து சாதிக்கப் போறானுக?’ என்று பொதுவில் கேட்டபடி திருநெல்வேலிக்காரர் அவன் தோளை அணைத்து வெளியே வந்தார்.

‘ஐயா, தங்கவேலண்ணன் எதுக்கு என்னிய உங்களாண்ட அனுப்பிவெச்சாருன்னு எனக்குத் தெரியலிங்க. இந்த •பைலை கொண்டு குடுத்துட்டு வாடான்னாரு. குடுத்துட்டேன்..’ என்று நீட்டியபோது, அவனை ஏற இறங்கப் பார்த்தார்.

‘அப்பிடியா? ஒண்ணும் சொல்லலியா? லெட்டருல வேற என்னமோல்ல எழுதியிருக்காரு?’

‘என்னதுங்கய்யா?’

‘அட வேறென்ன? மாநாடு நடக்கப்போவுதில்ல? இங்க கொஞ்சம் எடுத்துப் போட்டு செய்யிற ஆளு பலம் கம்மி. வேலைக்காரனுக இருக்காங்க. இத்த செய்யி, அத்த செய்யின்னா மாடா ஒழைப்பானுக. ஆனா புத்திக்காரன் கம்மி. அதுவுமில்லாம இந்த மாநாடு கொஞ்சம் விசேஷமாட்டு. தலைவரு நாலஞ்சு முடிவுங்கள ஸ்டிராங்கா அறிவிப்பாருன்னு தெரியுது. தங்கவேலு சொன்னாப்ல. மெட்ராசுல பத்து நிமிசத்துக்கு ஒரு சேதி பொறக்குது. இங்க திருநவேலிக்கு வந்து சேர்றதுக்குள்ள எல்லாம் பழசாயிடுது.’

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அவர் பேசுவது போலிருந்தது அவனுக்கு. அவருடன் இருந்த நாலைந்து தொண்டர்கள் அசப்பில் தொண்டர்கள் போலில்லாமல் குண்டர்கள் போலிருந்ததையும் அவன் கவனித்தான். முரட்டு உருவமும் பொருந்தாத வெள்ளைச் சட்டையும் வேட்டியும் வார் செருப்புமாக. ஒவ்வொருவர் கழுத்திலும் அரை கிலோவுக்குக் குறையாமல் நகைகள் இருந்தன.

‘ஐயா, சொல்லுறன்னு தப்பா எடுத்துக்காதிங்க. நான் ரொம்ப புதுசு. எனக்குப் பெருசா ஒண்ணும் தெரியாது. அண்ணன் போயிட்டுவாடான்னாரேன்னு வந்தேன். நீங்க சொல்லுறத பாத்தா பெரிய பொறுப்பு ஏதோ தருவிங்க போலருக்குது. எனக்கு அதுக்கெல்லாம் தகுதி இல்லிங்கய்யா.’

திருநெல்வேலிக்காரர் மனம் விட்டு ரசித்துச் சிரித்தார். ‘அட இருக்கட்டும்லெ. தனக்குத் தகுதி இல்லைன்னு புரிஞ்சி வெச்சிருக்காம்பாரு, அதுதாம் மொத தகுதி. நான் கேக்குதேன், இங்க யாருக்கு என்ன தகுதி இருக்குது? தெரிஞ்சத செய்யிறோம். கோசம் போடுதோம். பழம் விழுந்தா திங்குறது. கல்லு விழுந்தா தேய்ச்சி விட்டுக்கிட்டு திரும்ப ஒருக்கா அடிச்சிப் பாக்குறது. அவ்ளதானே?’

‘இருந்தாலும்..’

‘அட பெரிசா ஒண்ணும் இல்ல தம்பி. மாநாட்டுக்கு அதிக நாள் இல்ல. இன்னும் எட்டே பகல். ஏழே ராத்திரி. டவுன்ல இருக்குற லாட்ஜெல்லாம் புக் பண்ணியாச்சி. தலைவர் குடும்பத்துக்கு மரகத வினாயகம் தோட்டத்துல கெஸ்ட் அவுசு ஏற்பாடு பண்ணியிருக்கு. நம்ம பசங்க எல்லாத்தையும் பக்காவா பாத்துக்கிடுவாங்க. ஒன்ன எதுக்காக தங்கவேலு அனுப்பிவெச்சாருன்னா, ஒரு காரியம் இருக்குது..’ என்று சொல்லி நிறுத்தியவரை கேள்வியுடன் பார்த்தான் முத்துராமன். என்ன காரியம்?

‘கட்சில இருவது வருசம் ஒழைச்சவனுக்குக் கூட கெடைக்காத பரிசுய்யா இது! மனசோட வெச்சிக்க. இப்பத்திக்கு மூச்சு விடாத. தலைவரு •பேமிலி தங்கப்போற கெஸ்ட் அவுஸ¤க்கு நீதான் மூணு நாளும் சூப்பர்வைசரு.’

‘ஐயா! என்ன சொல்லுறிங்க?’ பதறிவிட்டான் முத்துராமன்.

‘அட ஆமாங்கறேன். இதெல்லாம் கொஞ்சம் பெரிய எடத்து அரசியல். ஒனக்கு முளுக்க வெளங்குமான்னு தெரியல. தங்கவேலு என்னாண்ட சொல்லிவுட்டது இதான். அவரு நமக்கு நாப்பது வருச சிநேகம். ரத்தமும் சதையுமா வளந்துட்டம். இப்ப ஒரு காரியம் பண்ணலாம்னு யோசிச்சப்ப, சரியான ஆளா பாத்து அனுப்பு தங்கம்னு சொல்லியிருந்தேன். அதான் உன்னிய அனுப்பியிருக்காரு.’

‘என்னால நம்பவே முடியலிங்கய்யா. நான் ஒரு குப்பை. எங்கியோ குப்பத்துல கெடக்குறவன்.. என்னியப் போயி.. ஐயா, அதெல்லாம் போலீசு, செக்யூரிடி ஆளுங்க இருப்பாங்களேங்க?’

‘எவன் இருந்தா ஒனக்கென்னப்பு? தலைவர் •பேமிலிய பாத்துக்கிட வேண்டியது நம்ம பொறுப்பு. வேளைக்கு சாப்பாடு, டிபன், கூல் டிரிங்கு அப்பால என்ன கேக்குறாங்களோ அது ஒழுங்கா கிடைக்கணும். அசிஸ்டெண்டு மாதிரி உன்னிய போட்டுரசொல்லியிருக்காரு தங்கம்.’

‘இப்பமே தலை கிறுகிறுக்குதுங்கய்யா..’

‘பாத்து, பாத்து. ஒம்மேல எம்புட்டு நம்பிக்கை வெச்சிருப்பாருன்னு பாத்துக்கிடு. நீ யாரு என்னான்னு எனக்குத் தெரியாது. ஆனா தங்கம் சொன்னா சரியாத்தான் இருக்கும்னு தெரியும்.’

‘நான் வேற என்னா செய்யணுங்க?’

‘அட இந்த வேலை போதாதா ஒனக்கு? எம்புட்டு பெரிய காரியம் தெரியுமா? எளுவத்தேழுல இதே வேலைய ஒருக்கா நாம்பாத்திருக்கேன். அம்மிணிக்கு அப்ப பிரசவகாலம். வூட்டாண்ட சாதிசனம் குய்யாமுய்யான்னு கத்திக்கிட்டு இருந்ததுங்க. என்னா தகப்பண்டா இவன்னு காறித்துப்பினாங்க. கண்டுக்கலியே நான்? அப்ப அஞ்சுநாள் மாநாடு. முழுநாள் ஊர்வலம். தலைவரு வீட்டு அம்மாவுக்கு நெழலா இருந்தேன். பத்து நிமிசத்துக்கு ஒருக்கா எளநீர், வேளைக்கு மாத்திர மருந்துங்க, சாப்பாடு அது இதுன்னு பாத்துப்பாத்து செஞ்சேன். கண்ணசரல முத்து! என்னா ஆச்சு? எண்பத்திரெண்டுல சீட்டு கிடைச்சிது! பாடுபட்டு செயிச்சேன். இன்னிக்கிப் பாரு..? அட நாளைக்கி?’ என்றபோது அவர் கண்ணில் தென்பட்டு ஓடிவிட்ட கனவை அவன் கவனமாகக் குறித்துக்கொண்டான்.

‘சந்தோசமா இருக்குதுங்க. தங்கவேலண்ணன் எம்மேல இத்தினி நம்பிக்கை வெச்சிருக்காருங்கறதே எனுக்கு பெரிய விசயங்க. நீங்க அவரோட சிநேகிதரு. முன்னப்பின்ன தெரியாதவன்னு பாக்காம இம்மாம்பெரிய பொறுப்ப குடுத்திருக்கிங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா பண்ணுறேங்கய்யா.’

‘அதான்யா வேணும். இங்க பாளையங்கோட்டைல இல்லாத ஆளா, இல்ல அவங்களேதான் கூட்டிக்கிட்டு வரமாட்டாங்களா? அப்பிடி இல்ல முத்து. ஒரு காரியம் நல்ல படியா, நெனச்சபடி முடியணும்னா நாமதான் மெனக்கெடணும்’

‘சொல்லுங்கய்யா’ என்றான் மேலும் நெருங்கி, தலையைக் குனிந்து அவரருகே காதைக் கொடுத்து.

‘கெட்டிக்காரனா இருக்குற. நல்லதுதான். இப்பம் வேணாம். நைட்டு நம்ம க்ளப் அவுசாண்ட வந்துரு. அங்க வெச்சி சொல்லுதன். இங்க தொண்டருங்க நெறையப்பேரு இருக்காங்க. ஒவ்வொருத்தனும் ஒவ்வொண்ணு நெனச்சிப்பானுக. இன்னாடா தலைவரு திடீர்னு மெட் ராஸ்காரன் ஒருத்தன புடிச்சிக்கிட்டு ரகசியம் பேசுதாரேன்னு தப்பா எடுத்துக்குவாங்க. தொண்டர்கள் இல்லாம நாம அரசியல் பண்ணிரமுடியுமான்ன? அவங்கதான் சீவாதாரமே. என்ன நாஞ்சொல்லுறது?’

‘அ.. ஆமாங்க’

‘சாப்டியா தம்பி?’

‘ரயிலடிலயே டிபன் சாப்டேங்க.’

‘அடச்சே.. என்னாய்யா நீயி. அங்க துண்ணா வயித்தால போவும். டேய், இவனே.. சங்கரபாண்டி, தம்பிய நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போப்பா. அம்மாவாண்ட சொல்லி சாப்பாடு போடசொல்லு. முத்து, நீ சாப்ட்டு கொஞ்சம் படுத்துத் தூங்கு. நான் ஆறுமணி சுமாருக்கு வந்துருதேன். வந்ததும் நாம க்ளப் அவுசுக்குப் போயிருவோம். என்ன?’

‘தூங்கல்லாம் வேணாம்ணே. உங்களோடவே இருந்துடறேனே?’ என்றான் மெல்லிய வெட்கமுடன்.

‘அதான் சொன்னன்ல? நம்ம பசங்க கொஞ்சம் குழம்பிருவானுகப்பா.. நான் அவங்களுக்கு எதனாச்சும் சொல்லி, சமாளிச்சி வெக்கணும். தலைவரு •பேமிலிய கவனிக்கற பொறுப்பு யாருக்கு வரப்போவுதுன்னு அத்தினிபேரும் சப்பு கொட்டிக்கிட்டு இருக்காக. இப்ப யாருக்கும் இல்லைன்னு தெரிஞ்சிட்டா வேலை கெடும். புரிஞ்சிக்கப்பா. நீ வீட்டாண்ட போயிரு. நான் வரேன்..’

மாநாட்டுத் திடல் களைகட்டத் தொடங்கியிருந்தது. லாரிகளில் வந்திறங்கிய கட் அவுட்டுகள் நிமிடப் பொழுதில் எழுந்து நின்றன. கைகூப்பிய தலைவர். கையாட்டும் தளபதிகள். புன்னகைக்கும் செயல்வீரர்கள். வாழ்த்தும் நெஞ்சங்கள். பந்தல் வேலை படு ஜரூராக நடந்துகொண்டிருந்தது. பந்து பந்தாகத் தாம்புக் கயிறுகள் உருட்டிவிடப்பட்டுக்கொண்டிருந்தன. வேட்டியை மடித்துக் கட்டி திருநெல்வேலிக்காரர் வேலைகளில் முழுகிவிட்டார்.

பிரமிப்புடன் பார்த்தபடி நடந்த முத்துராமன் தனக்கு என்ன நேர்ந்துகொண்டிருக்கிறது என்பதே புரியாமல் குழம்பினான். உடன் வந்த நெல்லைத் தொண்டன், தொண்டையைச் செருமிக்கொண்டு, ‘நீங்க செய்யப்போற வேலைலதாங்க உங்க ஊரு எம்.எல்.ஏ., எங்க ஊரு எம்.எல்.ஏ. ரெண்டு பேத்தோட எதிர்காலமே இருக்குது.’ என்று சொன்னான்.

மிரண்டு போனான் முத்துராமன்.

(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 23, 2010 @ 1:54 pm