கொசு – 22

அத்தியாயம் இருபத்திரண்டு

‘சேச்சே. என்னண்ணே நீங்க? அந்தாளு ஒரு கொசு. அவனுக்குப் போயி துப்பாக்கி அது இதுன்னுகிட்டு. வெத்துவேட்டுண்ணே. இன்னியவரைக்கும் உங்க மூஞ்சி முன்னால வந்து நின்னு ஒரு வார்த்த பேசியிருப்பாரா? உங்கள பாத்தாலே பேதியாயிரும்ணே. தள்ளி நின்னுக்கினு கொலைக்கறாரு. தொண்டத்தண்ணி வத்தினா தன்னால அடங்கிருவாரு.’

முதலில் ஒரு கணம் பயந்தாலும் முத்துராமன் சுதாரித்துக்கொண்டான். கொன்றுவிடு என்பது ஒரு வெறுப்பில் சொல்லப்படும் வார்த்தை. அதன் பின்விளைவுகள் குறித்து யோசிக்கத் தெரியாத அளவுக்கு எம்.எல்.ஏ. தங்கவேலு அத்தனை அடிமுட்டாள் இல்லை. ஆனால் வட்டம் போகிற போக்கைப் பார்த்தால் எப்படியும் யாராலாவது பெரிய இழப்பு இருந்தே தீரும் என்றே அவனுக்குத் தோன்றியது. ஒரு பெரிய மாநாடு நடக்கப்போகிறது. மாநிலம் தழுவிய மாநாடு. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் முக்கியஸ்தர்களும் பங்குபெறப் போகிற மாநாடு. கட்சி வரலாற்றில் 1962க்குப் பிறகு அத்தனை பெரிய மாநாடு திட்டமிடப்பட்டதில்லை என்று பேசிக்கொண்டார்கள். சில மிக முக்கிய முடிவுகளை எடுக்கவிருப்பதாகவும் எம்.எல்.ஏ. சொன்னார். அதிலொன்று தலைவரின் ஓய்வு அறிவிப்பாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டது.

‘வயசாயிருச்சிரா முத்து. இதெல்லாம் காலாகாலத்துல கல்யாணம் மாதிரி நடந்துரணும். இல்லன்னு வெச்சிக்க, பின்னால ஒருத்தனும் மதிக்கமாட்டான். அதுவுமில்லாம ரெண்டாம் மட்டத்துல போட்டி பொறாமை சாஸ்தியாயிருச்சி. ஒருத்தனை ஒருத்தன் எப்ப, எப்படி கவுக்கலாம்னு பாத்துக்கினு கீறானுங்க. ஒண்ணு சொன்னா நம்புவியா? நம்ம பீர்க்கங்கரணை ஜெயபாலு, வேளச்சேரி ராமகிஷ்டன், மருங்காபுரி தணிகாசலம் மூணு பேரும் எதிர்க்கட்சிக்குப் போனாலும் போயிருவாங்க போலருக்குது.’

‘ஐயோ, என்னண்ணே சொல்றிங்க? நாம ஆண்டுக்கிட்டிருக்கம் இப்ப. எப்பிடி அவங்க..’

‘அதான் அரசியல். அடுத்த எலக்சன்ல செயிக்கமாட்டம்னு ஒரு கணக்கு. போறும் இவனுகளுக்கு வோட்டுப் போட்டதுன்னு மக்கள் நினைச்சிட்டாங்கன்னு வையி. அவ்ளோதான். நாம என்னா ஊழல் பண்ணமா, கொள்ளை அடிச்சமா, ஒண்ணுங்கிடையாது. ஆனாலும் சனங்களுக்கு சமயத்துல போரடிச்சிரும். மாத்திப் போட்டுப் பாப்பமேன்னு புத்திக்குள்ள ஒரு குட்டிச்சாத்தான் கொரலு வுடும். எத்தினிவாட்டி இப்படி நடந்திருக்குது தெரியுமா?’

‘அது சரிண்ணே. அதுக்காக கட்சி மாறுவாங்களா? ஒரு காரணம் வேணாங்களா? தலைவரு அவங்களுக்கு என்னா கொற வெச்சாரு? மூணு பேரும் மினிஸ்டராவுல்லா இருக்காங்க?’

‘அதான் சொல்லுறனே? போரடிச்சிரும். மினிஸ்டரா இருக்கறதும் போரடிக்கத்தான் செய்யும். கணக்குப் போட்டுப் பாரு. பத்தொம்பது  வருசம் இருந்திருக்காங்க. அடுத்தக் கட்டம்னு ஒண்ணு கெடியாது. மினிஸ்டர். அவ்ளோதான். எப்ப ஆட்சி அமைச்சாலும் ஒரு சிட்டு கேரண்டி. ஒரு அம்பாசிடர் காரு கேரண்டி. ஒரு கட்டத்துக்குமேல பணம் கூட போரடிக்கும் முத்து. ஆறு மாதிரி ஓடிக்கினே இருந்துட்டு, சடாருன்னு குட்டையா குந்திக்கிட்டா எப்பவுமே பேஜாருதான். நானெல்லாம் நேத்திக்கி வந்தவன். நீ நாளைக்கு வரப்போறவன். நமக்கு இதெல்லாம் கெடியாதுன்னு வையி. கொட்டை போட்டவனுக நெலைமை கஸ்டம்தான்.’

‘என்னண்ணே இவ்ளோ சாதாரணமா சொல்லுறிங்க?’

‘சொல்லித்தான் ஆவணும். ஒனக்கும் தெரியணும்ல? கட்சில நெறைய பொகைச்சல் இருக்குதுய்யா. இந்த மாநாட்டுல தீத்துரணும்னு தலைவர் நினைக்கறாரு. நாலஞ்சு பேரை கட்சிப்பணிக்கு வாங்கன்னு ஓப்பனா கூப்ட்டுக்கிட்டு அவரும் ரிசைன் பண்ணிருவார்ன்னு சொல்றாங்க. புச்சா நாலஞ்சு மினிஸ்டர்ஸ் போடப்போறாங்க. அதுல ஒண்ணு நானு. இன்னொண்ணு பாளையங்கோட்டைக்காரரு. இது ஆல்மோஸ்டு •பிக்ஸ்டு. நடுவால கொஞ்சம் பேஜார் பார்ட்டிங்க தொந்தரவு இருக்குது. அதுக்குத்தான் உன்னாண்ட சொன்னேன்.’

‘அது ஒரு மேட்டரே இல்லண்ணே. நான் வெள்ளிக்கெழம போயிடுறேன். தலைவர் •பேமிலி முழுக்க என் மேற்பார்வைல தான் இருக்கும்னு அங்க அண்ணன் சொல்லிருக்காரு. ஜாலியா, தமாஸா பேசிக்கினே இருக்க சொன்னாரு. சுத்தி சுத்தி கொடநாடு எஸ்டேட்டு வெவகாரத்த வெளில எடுக்கணும்னாரு. நூறு ஏக்கரு ரெடியா இருக்குது, வேணும்னா முடிச்சிரலாம்னு எம்.எல்.ஏ. சொல்லிவுட்டிருக்காரும்மா, விருப்பமான்னு கேட்டுக்கறேன். சரின்னாங்கன்னா மிச்சத்த நீங்க பாத்துக்கப்போறிங்க.’

‘அதாண்டா. இப்ப நானே கேட்டுருவேன். அடுத்த மினிஸ்டரா ஆக்கப்போறாங்கன்னு கட்சிக்குள்ளார பேசிக்கிட்டிருக்கறப்ப, நான் போய் அம்மிணியாண்ட பேசினேன்னு தெரிஞ்சிதுன்னா,எவனாச்சும் குடிய கெடுப்பான். எனக்கு வேண்டப்பட்டவன், பக்கத்துலயே இருக்கறவன் எவனாச்சும் போனாலும் பிரச்னைதான். அதான் முன்னப்பின்ன மூஞ்சி தெரியாத ஒன்னிய இந்த வேலைக்குப் போட்டேன். அதுவுமில்லாம விசுவாசமானவன். உங்கப்பாரு காலத்துலேருந்து உங்க •பேமிலிய தெரியும். நீயும் நாலு காசு சேக்கவேணாமா?’

‘அதெல்லாம் இருக்கட்டும்ணே. உங்க உப்பத்தின்னு வளந்தவன். உங்களுக்கு ஒரு உதவி செய்யறதுன்னா மத்ததெல்லாம் அப்பறம்தாண்ணே. எப்பிடியாச்சும் நீங்க மினிஸ்டர் ஆயிட்டிங்கன்னா எங்க குப்பத்துக்கு அப்பவாச்சும் ஒரு நல்லது நடக்காமலா போயிரும்?’

தங்கவேலு சிரித்தார். ‘என்னா பயடா நீ? அப்பமும் குப்பத்தத்தானா யோசிப்ப? தபாரு. ஆட்சி கையில வந்திரிச்சின்னா மாநிலமே ஒரு குப்பம்தாண்டா. என்னாவேணா செய்யலாம்.’

‘பொதுவா அப்பிடித்தாண்ணே நினைக்கறது. ஆனா எப்பவும் குப்பங்கள யாரும் கண்டுக்கறதில்லண்ணே.’

‘சைசு பிராப்ளம்டா. எது செஞ்சாலும் நம்மாளுங்களுக்கு பெரிசா தெரியணும். நாப்பதுக்கு அறுவது சைசுல •ப்ளெக்ஸ் அடிச்சி போர்டு வெக்கணும். கட்சியில ஒரு கவனம் கெடைக்கணும். உங்க குப்பத்துல மொதல்ல இருவதுக்கு இருவது போர்டு வெக்க எடம் இருக்குதா சொல்லு.’

முத்துராமன் அமைதியாக நின்றிருந்தான்.

‘அதான். எல்லா குப்பத்துலயுமே இதான் பிரச்னை. செய்யற வேலை வெளில தெரியாம போயிரும். ஒண்ணு சொல்லுறென். எந்த அரசியல்வாதியும் சனங்க நல்லா இருக்கணும்னு நினைச்சி வேலை செய்யறதில்ல இப்ப. இருவதாம் நூற்றாண்டு நடுவுலேருந்து ஒலக தருமம் மாறிடுச்சி. தான் நல்லா இருக்கணும். தின்னுட்டு ஏப்பம் வந்தப்பறம் கையில இருக்கற பொறைல கொஞ்சம் கிள்ளிப் போடுறது. தின்னது தெரியாம, போட்டது மட்டும் தெரியறமாதிரி நடந்துக்கறது. இது மக்களுக்கும் பழகிருச்சி. அவங்க கேள்வி கேக்கறதில்லடா. கேக்கலைன்னா கிடைக்காதுன்னு இன்னொரு தருமம் இருக்குது. அது இயேசுநாதர் காலத்துலேருந்து இருக்கற தருமம். தெரியும்ல?’

முத்துராமன் சிரித்தான். இதுதான் தன் சந்தர்ப்பமா? சரி கேட்டுவிடலாம் என்று முடிவு செய்து, ‘தப்பா எடுத்துக்காதிங்கண்ணே. நான் இப்ப கேக்குறேன். என்னிய ஒரு கவுன்சிலராக்குவிங்களா?’

தங்கவேலு அட்டகாசமாகச் சிரித்தார். ‘அப்பிடி போட்றா அருவாள. சரியாத்தான் வளத்திருக்காரு உங்கப்பா.’

‘இல்லண்ணே. நான்..’

‘டேய், இப்பிடி வெளிப்படையா பேசின பாரு. இதான் உன்னாண்ட எனக்குப் புடிக்குது. சேவைதான் செய்யிறேன், ஒண்ணும் வேணாம்னு டயலாக் வுட்டிருந்தன்னா உன்னிய நம்பியிருக்க மாட்டேன். இப்ப பேசுனபாரு. இது கரெக்டு. உன்னிய நம்பலாம். சாவறவரைக்கும் நம்பலாம். சொல்லு. என்னா வோணும் உனக்கு? கவுன்சிலர் ஆவணுமா?’

‘அப்படி இல்லண்ணே. நான் அரசியலுக்குப் புதுசு. எடுத்ததும் கட்சில பெரிய பதவியெல்லாம் நினைக்கவே முடியாது. உங்க நிழல்ல இருக்கணும். அதேசமயம் நானும் வளரணும். அப்பால.. கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்கண்ணே. மாநாடு முடிஞ்ச பத்தாவது நாள் கல்யாணம் நீங்கதான் வந்து நடத்திக்குடுக்கணும்.’

‘தெரியும் தெரியும். கேள்விப்பட்டேன். நல்லாரு. ஆனா ஒண்ணு தெரிஞ்சிக்க. கவுன்சிலர் ஆவுறது பெரிய விசயமில்ல. எப்ப அது பெரிய விசயமில்லியோ, அப்ப பெரிசா லாபமும் இல்ல. கொஞ்சம் வெயிட் பண்ணின்னா வேற ரூட்ல போட்டுருவேன். அரசியல்னு எறங்கிட்டா சம்பாதிச்சிரணும் முத்து. நாளைக்கு என்னா ஆவுமோ, ஏதொ? இருக்கறப்ப, கிடைக்கறப்ப சம்பாதிச்சிரணும்.’

‘புரியுதுண்ணே.’

‘எதுனா தொழில் வெச்சிக்கிறியா?’

‘ஒண்ணூமில்லண்ணே. டைலரிங் பண்ரேன். மாசம் அறுநூறு ரூவா வந்தா பெரிசு.

‘எனுக்கு பினாமியா வேலை பண்றியா? இங்க மடிப்பாக்கத்துல ஒரு லே அவுட் போடப்போறேன். ரியல் எஸ்டேட்டு. எடுத்து ஒழுங்கா செஞ்சிக்குடுக்கறியா? நல்ல சில்லறை வரும்.’

‘சரிண்ணே’ என்றான் உடனடியாக. அப்பிடியே அந்த கவுன்சிலர் போஸ்டு..’

‘செய்யலாம்டா. பெரிய விசயமில்ல. ஆனா அட் ரஸ் இல்லாம போயிருவ. கொஞ்சம் வெயிட் பண்ணன்னா பெருசா அறுவடை பண்ணலாம். படிப்படியா வரணுங்கறது ஒரு இது. டமால்னு வர்றது வேற வழி. என் வழி ரெண்டாவதுதான். படிப்படியா வரணும்னு நெனச்சித்தான் அந்தப் பரதேசி இன்னிக்கி வட்டச்செயலாளரா ரிடையர் ஆவப்போறான். அதுவும் சொம்மா இல்ல. நாறிப்போய் வெளில போவப்போறான் பாத்துக்கினே இரு.’

அவர் பேசிக்கொண்டே இருந்தபோது போனடித்தது. எடுத்து ஹலோ என்றார். அப்படியா, அப்படியா என்று கேட்டுக்கொண்டார். சந்தோஷமும் குழப்பமுமாக முகத்தில் ஏற்பட்ட மாறுதல்களை முத்துராமன் கவனித்தான். வைத்ததும், என்னண்ணே என்று கேட்டான்.

‘அது ஒண்ணுமில்லரா. அந்தப் பரதேசியோட ஓட்டல எவனோ கொளுத்திட்டானாம். பத்திக்கிட்டு எரியுதாம். சைதாப்பேட்டையே வேடிக்கை பாக்குதாம். பாக்கட்டும், பாக்கட்டும். அதுக்கு வேண்டியதுதான். அத்தவிடு. நாளைக்கு காலைல இங்க வந்துரு. ஒரு முக்கியமான சோலி இருக்குது. தலைமையகத்துக்குப் போவணும். பெரிச பாத்துட்டு வரவேண்டியிருக்குது’ என்று அலட்சியமாகச் சொன்னார். முத்துராமனுக்கு திக்கென்றிருந்தது. மேற்கொண்டு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, வெளியே வந்து பைக்கில் தாவி ஏறி உதைத்தான். இருபது நிமிடத்தில் சைதாப்பேட்டை. கேட்டை கிராஸ் செய்து அந்தப் பக்கம் போய் மார்க்கெட்டில் நுழைந்து சந்துகளில் நெளிந்து ஹோட்டல் வளாகத்தைத் தொட்டபோது பாதி எரிந்துவிட்டிருந்தது. தீயணைப்பு வண்டி ஒன்று தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது.

பதறி அருகே ஓடியபோது வட்டம் அவனை வெற்றுப்பார்வை பார்த்தபடி நடுவில் நின்றுகொண்டிருந்தார்.

‘அண்ணே..’ என்று அருகே போனான்.

‘திருப்தியாடா இப்ப? கொளுத்திட்டல்ல? கொளுத்திட்டில்ல? அவன் சொன்னத முடிச்சிட்டல்ல? மறக்கமாட்டண்டா. சத்தியமா மறக்கமாட்டேன்!’ என்று காதோரம் சொன்னார்.

(தொடரும்)

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 23, 2010 @ 1:53 pm