கொசு – 26

அத்தியாயம் இருபத்தி ஆறு

குளித்த ஈரத்தில் அடித்த விபூதி, பொழுதுபோல் மெல்லப் புலர்ந்தது. அம்மா அதிசயமாகப் பார்த்தாள். வாய்விட்டு முருகா என்று சொல்லிக்கொண்டு அவன் கண்மூடி விபூதி பூசியதில்லை. அவசரத்தில் ஒரு கோடு இழுத்துக்கொண்டே காலில் செருப்பை மாட்டிக்கொள்ளும் வேகம் அங்கே தினசரிக் காட்சி. உழைப்பே கடவுள். வியர்வையே விபூதி. ஒரு பதவி கிடைத்துவிட்ட பிறகு பளிச்சென்று வெள்ளைச் சட்டை அணிந்து விபூதி துலங்கத் தன் மகன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் காட்சியொன்றை முத்துராமனின் அம்மா அவ்வப்போது கனவு போல் தரிசிப்பது வழக்கம். சுகமாகத்தான் இருக்கும்.

எழுந்த பெருமூச்சு மகனுக்குத் தெரிந்துவிடக்கூடாதென்று கவனமாக வேறு புறம் பார்த்தபடி குடிசையைவிட்டு வெளியே போனாள்.

ஸ்டூலின்மீது ஆறிக்கொண்டிருந்த காப்பியை வாயில் ஊற்றிக்கொண்டபடிக்கு முத்துராமன் வெளியே வந்தான்.

‘நான் போயிட்டு வந்துடறம்மா. நோட்டீஸ் கட்டு வந்துருச்சி. உள்ளார வெச்சிருக்கேன். தம்பிய பேர் எளுதிவெச்சிர சொல்லு. லிஸ்டு தனியா பக்கத்துல வெச்சிருக்கேன்’

‘ரொம்ப தொலுவு போறியான்ன?’

‘பக்கம்தான்’ என்று ஒரு மாறுதலுக்குத் தன் பைக்கைத் தவிர்த்துவிட்டு, தம்பியின் சைக்கிளில் புறப்பட்டான்.

பொதுவாக பைக்கில் போகும்போதெல்லாம் ஒரு எம்.எல்.ஏ.வாக ஏனோ உணரத்தோன்றுகிறது. காற்றுக்குப் பறக்கும் வேட்டி. பின்பக்கம் பிய்ந்துபாயத் துடிக்கிற தலைமுடி. வேகம் கொடுக்கிற கற்பனை சுகம். விற்றுவிட்டுப் பணத்தில் வீட்டுக்கு நல்ல தரை போடலாம். எஞ்சிய பணத்தில் இன்னொரு சைக்கிள் வாங்கலாம். சைக்கிள் நல்லது. சுற்றுச்சூழலைக் கெடுக்காதது. தேக ஆரோக்கியத்துக்கு உகந்தது. தவிரவும் மேடுகளில் அழுத்தி மிதித்து முன்னேறும்போதெல்லாம் இருக்கிற வாழ்க்கையை நினைவுபடுத்திக்கொண்டு இருக்கக்கூடியது.

‘இன்னாடா இது பைக்க எடுத்துக்கிட்டு போவல?’

ஒரு கணம் தாமதித்தான். ‘போரடிக்குதும்மா. இன்னமே தம்பி ஓட்டட்டும். எனக்கு இது போதும்’

சட்டென்று வந்துவிட்ட சொல்லை நினைத்து சிரித்துக்கொண்டான். அவனுக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? கொஞ்சநாள் ஓட்டட்டும். அப்புறம் விற்றுவிட்டு வீட்டுக்குத் தரை போடலாம்.

ஏறி மிதித்ததில் சைக்கிள் அவனையறியாமல் எழும்பூருக்குத்தான் போனது. மூச்சிறைத்தது. முத்துக்களாக வியர்வை. நெற்றியில் அடித்த விபூதியை சட்டைக் கையால் துடைக்கவேண்டியதானது. எம்.எல்.ஏவின் வெள்ளைக் கைக்குட்டையை அவன் அடிக்கடி ரசிப்பதுண்டு. எடுத்து ஒற்றிக்கொள்ளும் லாகவம் அந்தஸ்துடன் இலவச இணைப்பாக வந்திருக்கும் என்று நினைத்துக்கொள்வான். சந்தேகமில்லை. அது ஒரு திறமைதான். கைக்குட்டையில் லாகவமாகத் துடைத்துக்கொள்வதல்ல. அரசியலில் நீந்திக் கரை சேர்வது. ஒரு பதவியில் தன்னை அச்சாக இணைத்துக்கொள்வது. ஓடுகிற வேகத்தில் சுழலத் தெரிவது.

வருத்தம் ஒன்றுமில்லை. ஆனால் ஓர் ஏமாற்றம் இருந்தது. அருவருப்புணர்வு கலந்த ஏமாற்றம். மிகச் சாதாரணமான ஒரு கடைநிலைத் தொண்டனைத் தூக்கிப் போட்டுப் பந்தாடிவிட்ட அரசியல்வாதிகள். தன் விஷயத்தில் இத்தனை மெனக்கெடுவது என்றால் அரசியல் சதுரங்கத்தின் சக்கரவர்த்திகள் மோதிக்கொள்ளும்போது எத்தனை திறமையும் தேர்ச்சியும் அவசியம்?

அவனுக்கு வியப்பாக இருந்ததெல்லாம் ஒன்றுதான். சிங்காரவேலு கொளுத்திப்போட்ட சந்தேகப் பொறி பற்றிக்கொண்டு தீயானபோதுகூட சாந்தி வீட்டில் அவனால் வெறுமனே ஊதி அணைத்துவிட முடிந்தது. ‘என் தரப்பு இதுதாங்க. ஒரு கல்யாணத்த நிறுத்த பெருசா மெனக்கெட வேணாம். நீங்க சொல்லுற ஒரு காரணம் போதும். இன்னொரு பொண்ண பாக்கத்தான் பாளையங்கோட்டை போனதா அவுங்க சொல்லியிருக்காங்க. நல்லவேளை அங்க ஒரு சின்னவூடு வெச்சிக்கினு இருக்கேன்னு சொல்லல. அந்தவரைக்கும் சந்தோசம்தாங்க. பத்திரிகை அடிக்க குடுத்திருக்குது. இப்பமே போய் நிறுத்திர சொல்லிடுறேன். தீவிர அரசியலும் கல்யாணமும் ஒரே டயத்துல நம்ம லை•புக்குள்ளாற நுழைஞ்சிது. ரெண்டும் ஒரே டயத்துல இப்பம் போயிட்டுவாடா வெண்ணைங்குதுங்க. சர்தான்னு போயிருவேன். ஒண்ணும் கஸ்டம் இல்லிங்க. என்னா ஒண்ணு, தோத்துப்போயி திரும்பினாலும் கெட்ட பேரோட திரும்பிடக்கூடாதுன்னு பாக்குறேன். கண்டிப்பா வர வெள்ளிக்கிழம திரும்ப பாளையங்கோட்டைக்குப் போவத்தான் போறேன். முன்னமே சொன்னமாதிரி கட்சி மாநாடுங்க. தந்தி பேப்பர்ல பாத்திருப்பிங்களே? அதான். மாநாட்டு மேடைல இருவத்தஞ்சி எலவச திருமணம் செஞ்சி வெக்கறாங்க. கவலப்படாதிங்க. அதுல கூட நான் கிடையாது. நம்ம ராசி எப்பவும் கீழ குந்திக்கினு விசிலு வுடறதுதான். வரட்டுங்களா?’

பல நிமிடங்கள் பேசாதிருந்துவிட்டு, சாந்தியின் அப்பா எழுந்துவந்து கைகளைப் பிடித்துக்கொண்டார். ‘மன்னிச்சிருங்க மாப்ள. நான் பொண்ண பெத்தவன். அரசியலெல்லாம் எங்களூக்குத் தெரியாது. வீடு தேடிவந்து உங்காளுங்களே நாலு பேர் இந்தமாதிரின்னு சொல்லிட்டுப் போனா வயிறு பகீருங்குது.’

‘அட நீங்க வேறங்க. வடபளனி பக்கம் போனா ஒன் அவருக்கு இத்தினி ரூவான்னு வாடகைக்கு கைக்குழந்தையே கிடைக்கும். வாங்கிட்டு வந்து நாம்பெத்ததுன்னுகூட சொல்லியிருப்பானுக. ஐயா, நம்பிக்கை வேணுங்க. நான் ஒலக உத்தமன்னு சொல்லிக்கல. அதே சமயம் கண்டிப்பா கேவலமானவன் இல்லிங்க. நீங்க நம்பறதுக்காக இத சொல்லல. எனக்கே ஒருக்கா சொல்லிக்க வேண்டியிருக்குதுங்க.’ என்று சாந்தியைப் பார்த்தான். புன்னகையற்ற அதே சாந்தி. அதே பார்வை. தன் விருப்பம் என்று ஒன்று இவளுக்கு இருக்கிறதா என்று அப்போதும் அவன் நினைத்தான். எப்போதும் அது இருந்ததில்லை என்றே தோன்றியது. பாதகமில்லை. அதுவும் ஒரு கொடுப்பினையாகத்தான் இருக்கவேண்டும்.

‘மறந்துடுங்க மாப்ள. நாங்க பேசுனது தப்பு. உங்கள நான் நம்புறேன். கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும்’ என்று சொன்னார் சாந்தியின் அப்பா.

‘நல்லதுங்க. ஆனா நான் மாநாட்டுக்குப் போவுறது உறுதிங்க. அதுல எந்த மாறுதலும் இல்ல. சொன்னபடி போயிட்டு வந்ததும் கல்யாணம்.’ என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

பைக்கின் ஸ்டாண்டைத் தள்ளிய கணத்தில் உள்ளுக்குள்ளிருந்து ‘ஒரு நிமிசம்’ என்று குரல் கேட்டது. சாந்திதான். முத்துராமன் சற்று ஆச்சர்யப்பட்டான். நின்று திரும்பினான். அவள் வெளியே வந்தாள்.

‘நீங்க எம்.எல்.ஏ. ஆயிட்டிங்கன்னா இந்தமாதிரியெல்லாம் பிரச்னை வராதில்ல?’

ரகசியமாகச் சிரிக்கிறாளா என்ன? இந்தச் சந்தர்ப்பத்தில் இப்படியெல்லாம் நகைச்சுவை உணர்வுடன் பேசுவதற்கு மிகப்பெரிய நெஞ்சழுத்தம் வேண்டும். தருணம் எதுவானாலும் நிறுத்தி ரசித்து வரிசையில் அனுப்பப் பெரிய தேர்ச்சி வேண்டும். உணர்ச்சியற்றவள் என்று நினைத்தது தவறோ?

முத்துராமன் சிரித்தான். ‘இப்பவும் சொல்லுறேன் சாந்தி. எம்.எல்.ஏ. ஆவுறது பெரிய விசயமில்ல. அரசியல்வாதி ஆவுறதுதான் கஸ்டம். அது முடியுமான்னுதான் தெரியல.’

போய்விட்டான். எப்படியும் புரிந்திருக்காது என்று தோன்றியது. அவசியமும் இல்லை.

0

ஆல்பர்ட் தியேட்டர் வாசலில் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டுக் காத்திருந்தான். சாந்தியை முதல் முதலில் தனியே சந்தித்த அதே இடம். அங்குதான் வரச்சொல்லி இருந்தான். நாலு வார்த்தை பேசுவதற்குள் அவளது குடிசை அப்போது பற்றிக்கொண்டுவிட்டது. அர்த்தமில்லாமல் பதற்றப்பட்டு, உடன் ஓடி, கருகி அணைந்த குப்பத்தின் வீதியில் ஒரு மணி நேரம் நின்று, ஆறுதல் சொல்லி…

பொதுவில் குடிசைகளும் குடிசைவாசிகளும் அதிர்ச்சிகளில் அதிக நேரம் செலவிடுவதில்லை. ஒப்பாரி முடிந்ததும் பைசல். அவலம் வாழ்க்கையாகிவிட்டபிறகு அதிர்ச்சி மதிப்புகள் ஒரு பொருட்டில்லை. சூட்சுமங்களும் சூழ்ச்சிகளும் அரசியல்வாதிகளுக்குத்தான். விளைவுகள் மட்டுமே அடித்தட்டை பாதிக்கின்றன. பாதிப்பு என்பது பெரிய சொல். தொடுகின்றன. அவ்வளவுதான். துடைத்துப் போட்டுவிட்டு எழுந்துபோகத் தெரிந்தவனுக்குக் காக்கை எச்சம் ஒரு பொருட்டில்லை.

சாந்தி வந்தபோது கையில் மாலை தினசரி ஒன்றை வைத்திருந்ததை அவன் கண்டான். புன்னகை செய்தான்.

‘உங்க கட்சி பேப்பருதான். உங்கள கட்டிக்கப்போறனில்ல? சரி, பேப்பராச்சும் படிக்கலாம்னு வாங்கினேன். சந்தோசமா?’

மீண்டும் சிரித்தான். அதைப் பிடுங்கித் தூரப் போட்டான்.

‘ஐய, இன்னா இது?’

‘வேணாம் சாந்தி. பேப்பர் படிச்சி ஒண்ணும் தெரிஞ்சிக்க முடியாது. பேப்பர்ல அரசியல் எதும் வராது. அறிக்கைங்கதான் வரும்.’

‘உங்க தலைவரோட சித்தப்பா புள்ள எம்.பி. ஆயிட்டாராமே?’

அவனுக்குச் சங்கடமாக இருந்தது. தனக்காக அரசியலில் நாலு வார்த்தை பேச விரும்புகிற பெண். இதுவும் வலிந்து வரவழைத்துக்கொண்டதாகத்தான் இருக்கும். ஐயோ பாவம் என்று தோன்றியது. வேறு ஏதாவது பேசலாம் என்று நினைத்தான். சேலை எடுக்க எப்ப போறிங்க என்று கேட்டான்.

‘அதெல்லாம் அம்மா பாத்துக்கும். நீங்க எதுக்கு வரசொன்னிங்க? அத சொல்லுங்க மொதல்ல.’

‘சும்மாதான். நாளைக்கு பாளையங்கோட்டை போறனில்ல? வர மூணு நாளாவும். பாத்துட்டுப் போலாம்னிட்டு..’

‘அதான் செவ்வாக்கெழம வண்டில காத்தில்லாம வந்திங்களே.’

‘இப்பம் பாக்கணும்னு தோணிச்சி. காத்தடிச்ச சைக்கிள்ள வந்திருக்கேன். கூட வரியா?’

‘சைக்கிள்ளயா?’ என்று சட்டென்று சுற்றுமுற்றும் பார்த்தாள். விரும்பினாள் என்று தெரிந்தது. பின்னால் ஏறப்போனவளைத் தடுத்து முன்பக்கம் பாரில் ஏறிக்கொள்ளச் சொன்னான். வெட்கப்பட்டாள். ஏறிக்கொண்டாள். ‘எங்க போறோம்?’

‘சும்மா ரெண்டு ரவுண்டு சுத்திட்டு வூட்டாண்ட கொண்டு விட்டுடுறேன். என்னமோ தோணிச்சி. உன்னிய பாக்கணும்னிட்டு.’

‘மாநாட்டு வேலைங்க இல்ல?’

முத்துராமன் வாய்விட்டுச் சிரித்தான். ‘தொண்டனுக்கு வேலை விசிலு வுடறதுதான் சாந்தி. அது வேல கூட இல்ல. ஒரு சந்தோசம். ரசிகர் மன்ற ஆளுங்க மாதிரி. செலருக்குப் புரியும். செலருக்குக் கேவலமா தோணும். எப்பிடி நெனச்சாலும் தப்பில்ல. செலபேருக்கு பீடி சிகரெட்டு. செலபேருக்குத் தண்ணி. எனக்கும் எங்கப்பாருக்கும் அரசியல்.’

‘ஏமாத்திட்டாங்களாங்க?’ சட்டென்று கேட்டாள். முத்துராமன் அமைதியாக மிதித்தான். ஏமாற்றம்தான். சந்தேகமில்லை. அந்த வேதனையைக் காட்டிலும் சாந்தி வீட்டைக் குறிவைத்து ஒரு சூழ்ச்சி வலை பின்னப்பட்டது மிகவும் வலித்தது. ஆனால் எளியவர்களால் சுலபமாக வலைக்குள்ளிருந்து மீண்டுவிட முடிகிறது. பற்றவைக்கப்பட்ட குப்பத்தை நீரூற்றி அணைத்துவிட்டு, எரித்தவர்கள் கொடுக்கும் காசைக் கையெடுத்துக் கும்பிட்டு வாங்கிக்கொண்டு வேறு ஓலை வேய்வது மாதிரி. எல்லாம் இயல்பு. எல்லாமே கடந்துபோகிறவை.

‘ரொம்ப கஸ்டமா இருக்குதுங்களா?’

‘இல்ல சாந்தி. தெளிஞ்சிட்டேன்.’

‘என்னான்னு?’

‘கண்டிப்பா நா சொன்னமாதிரி ஒருநாள் எம்.எல்.ஏ.ஆவேன். ஊருக்கு நல்லது செய்வேன். எப்பன்னு கேக்காத. தெரியாது. உம்புருசன் சாவறவரைக்கும் அரசியல்லதான் இருப்பான். அது மாறாது. ஆனா இவனுக பண்ற அரசியல கண்டிப்பா நாஞ்செய்யமாட்டேன்.’

‘அன்னிக்கி நீங்க முழுவெவரம் சொன்னப்ப பாதி புரிஞ்சிது. மிச்சத்த நைட்டு தூங்கசொல்ல யோசிச்சிப் புரிஞ்சிக்கிட்டேன். இன்னாத்துக்கு இப்பிடி ஒரு அப்பாவிய போட்டு பந்தாடணும்? மாறவேமாட்டாங்களா?’

‘கஸ்டம் சாந்தி. தமிழ்நாட்டு அரசியல்வாதிங்க குணம் கொசு மாதிரி. அப்பப்ப மருந்தடிச்சி வெக்கலாம். ஆனா கம்ப்ளீட்டா ஒழிச்சிரமுடியாது. கொசுவால மிஞ்சிப்போனா என்னா பண்ணமுடியும்? கடிக்கும். மலேரியா வரும். மருந்து சாப்டு சரி பண்ணிக்கிடவேண்டியதுதான். உங்கப்பாவாண்ட பேசி உன்னிய தள்ளிக்கினு வந்தேன் பாரு. அந்தமாதிரி.’

சாந்தி சிரித்தாள்.

‘ஒண்ணு பண்ணுறிங்களா? எனக்கும் அரசியல் கத்துக்குடுத்துருங்க. உங்களுக்கு சுளுவா இருக்கும்ல?’

முத்துராமன் சட்டென்று பிரேக்கை அழுத்தினான். வண்டி குலுங்கி நின்றது. சாந்தி திரும்பினாள்.

‘நெசமாத்தான் சொல்லுறியா?’

‘ஆமாங்க. யோசிச்சிப் பாத்தேன். உங்களுக்குப் பிடிச்சமாதிரி இருந்துடலாம்னு தோணிச்சி. எங்கூட்ல இருக்கறவரைக்கும் எங்கம்மா, அப்பாவுக்குப் புடிச்சமாதிரி இருக்கேன். உங்கூட்டுக்கு வந்தப்பால, உங்களுக்குப் புடிச்சமாதிரி இருக்கறதுல என்ன தப்பு?’

முத்துராமன் புன்னகை செய்தான். அவள் முகவாயில் திடமாகக் கைவைத்துத் திருப்பி, கண்ணை உற்றுப்பார்த்து சொன்னான்: ‘அப்படின்னா நீ அரசியல் கத்துக்கவேணாம். டைலரிங் கத்துத்தரேன். கத்துக்க. ரெண்டு பேரும் சேர்ந்து வேலை செய்வோம்!’

முற்றும்

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 23, 2010 @ 1:53 pm