செஸ் விளையாட்டு வீரர் ஆனந்த் இந்தியரா?
மனித மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. அதுவும் எப்போது? அவருக்கு ஹைதராபாத் பல்கலைக் கழகம் டாக்டரேட் பட்டம் கொடுக்கும்போது, நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்ற ஆனந்த் இந்தியரா என்ற சந்தேகம் வந்ததால் பட்டமளிப்பு விழா தள்ளிப் போடப்பட்டுள்ளது. அவருக்கு ஸ்பெயினில் சொந்தமாக வீடு இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் செஸ் போட்டிகள் அதிகம் நடப்பதால் அவர் அங்கு அடிக்கடி சென்று தங்குவது வழக்கம்.
அதனால் அவருடைய குடியுரிமை பற்றிய சந்தேகம் அமைச்சகத்திற்கு எழுந்துள்ளது. அவர் இந்திய பாஸ்போர்ட் நகலை அனுப்பியபின்னும் அரசாங்கத்திற்கு உரிய நேரத்தில் குழப்பம் தீரவில்லை. அதன் விளைவு அவரின் பட்டமளிப்புவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பாக அமைச்சர் கபில்சிபல் ஆனந்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார். இது தேவைதானா?
ஆனந்த் தமிழர், தென் நாட்டவர், கிரிக்கெட்டர் இல்லை என்று பல வித வாதங்கள் எழுந்தாலும், மனித மேம்பாட்டுத் துறையின் மெத்தனமே மூல காரணம். முதலில் அமைச்சகம் தன்னுடைய செயல்பாட்டு திறனை வளர்த்துக் கொள்ளட்டும். ஆனந்த் போன்ற பிரபலங்களுக்கே இந்த நிலமை என்றால் சாமான்யர்களின் கதி நினைக்கவே முடியவில்லை.
இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்தவர்களை.. நாம் பெருமைப் படுத்தாவிட்டாலும், இப்படி அவமானப்படுத்தவேண்டாம்.