நான் மகான் அல்ல

போதையில் வழிமாறி தவறுக்கு மேல் தவறாகச் செய்யும் இளைஞர்களை, அப்பாவை இழந்த கார்த்தி பழிவாங்கும் கதை – பழைய கதைதான், ஆனால் சொல்லிய விதம் வித்தியாசம்,

கார்த்திக்கு நன்றாகவே நடிக்க வருகிறது. இயல்பான காட்சியமைப்புகளில் நெக்ஸ்ட் டோர் இளைஞனைக் காட்டுகிறார்.  அப்பா அம்மா, ஏன் தங்கையைக்கூட விட்டுவைக்காமல் காசு பீராய்வது, விக்ரமன் ஸ்பெஷல் லாலலாக்களுடன் இல்லாத காதல் தோல்வியை உருக்கமாகச் சொல்லி காஜலை மடக்குவது, வேலைக்குப் போகிறேன் என்று பேங்க் கலெக்‌ஷனுக்குப் போய் அங்கே பேங்க் மேனேஜரின் குடும்ப வாழ்க்கையில் குண்டு வைப்பது — எல்லா இடங்களிலும் இயல்பை மீறாத நக்கல்.

காஜலுக்கு ரெண்டு பாட்டு ட்யூட்டி. கடமை கண் போன்றது! இரண்டாம் பாதியில் ஒரு காட்சியிலும் ஆளையே காணோம். பாடல்கள் இனிமையாகவே இருக்கின்றது – யுவன் என்னைக் கவர்வதில் இன்னொரு படி ஏறி இருக்கிறார். பின்னணி இசையும் உறுத்தவில்லை – க்ளைமாக்ஸ் சண்டையில் பின்னணியில் அதகளம் செய்திருக்கிறார் யுவன்.

முதல் பாதியை அட்டகாசமாக நகர்த்த உதவுவது பாஸ்கர் சக்தியின் வசனங்கள். மெல்லிய நகைச்சுவை, நக்கல் – கார்த்தி பேசும் எல்லா வசனங்களிலுமே தெரிக்கிறது. கலெக்‌ஷனுக்குப் போய் கண்ணீரோடு திரும்பி வரும்போது நண்பனிடம் “அஞ்சு கலெக்‌ஷன்! ஆனா எல்லாரும் நாளைக்குதான் தருவாங்களாம்”; காஜலின் அப்பா மிரட்ட அழைத்துவந்த தாதாவிடம் இயல்பாக “உங்களைப்பாத்தா எனக்கு நாயகன் கமல்சார்தான் ஞாபகம் வருது” தெருவில் போகும் ஒரு ஆளை திடீரென வணக்கம் சொல்லி “குடும்பஸ்தண்டா.. இப்பல்லாம் குடும்பஸ்தனைப் பாத்தாலே மரியாதை வருது” அதகளம் செய்திருக்கிறார்.

முதல் காட்சியிலேயே வந்தாலும் அந்த போதை மருந்து கல்லூரி மாணவர் கோஷ்டிக்கு கண்களை உருட்டிக்கொண்டு பார்க்க பயங்கரமாக பில்ட் அப்புக்கு கட்டியம் சொல்வதைத்தவிர வேறு வேலை இல்லை க்ளைமாக்ஸ் வரை. ஆனாலும் க்ளைமாக்ஸில் பார்க்கிறவர்களையெல்லாம் வெட்டித்தள்ளுகிறார்கள் – அதீதமான வன்முறை.

பார்க்கும்போது சுவாரஸ்யமாக இருந்தாலும் வெளியே வந்ததும் சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மிகக் குறைந்த துப்புகளை வைத்துக்கொண்டு அப்பாவைக் கொன்றவர்களை எப்படிக் கண்டுபிடிக்கப்போகிறார் என்று ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தால் – சப்பையாகத் துப்பறிகிறார்கள். இவ்வளவு சுலபமா சென்னையில் ஒரு கருத்த நிறைய தலைமுடி கொண்ட இளைஞனைக் கண்டுபிடிப்பது?

அப்படியென்ன முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் சம்மந்தமே இல்லாத திரைக்கதை? இரண்டும் தனிப்பட்ட அளவில் நன்றாகவே இருந்தாலும் ஒட்டவே இல்லையே.. எதோ ஒரு பாதி திணிக்கப்பட்டிருக்கிறது போலத் தெரிகிறது.

எது எப்படியோ, பார்த்ததற்காக வருத்தப்படவைக்கவில்லை! அம்மட்டில் சந்தோஷம்!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 27, 2010 @ 4:43 am