கிரிக்கெட் நிகழ்கால ஊழல் – ஸ்பாட் பிக்ஸிங்

தனி மனித ஒழுக்கம், கிரிக்கெட் கண்ணியம் , தலைமைப் பண்பு , ஆட்ட நேர்த்தி என அனைத்திற்கும் முன்னுதாரணமாகப் பார்க்கப்பட்ட ஹான்ஸி குரோனியேவின் "சில கிரிக்கெட் ஆட்டங்களின் முடிவுகளை முன்கூட்டியே கணித்தேன், நான் முழுக்க முழுக்க நேர்மையானவனும் அல்ல” என்ற ஒப்புதலிலும் அதன் தொடர் அதிர்வுகளிலும்  கிரிக்கெட் உலகமே ஸ்தம்பித்துப் போய் 10 வருடங்கள் ஆகிய நிலையில் , கிரிக்கெட் ரசிகர்களை மீண்டும் வேதனையில் ஆழ்த்த ஸ்பாட் – பிக்ஸிங் முகமது அமீர், ஆசிப் மற்றும் சல்மான் பட் உருவங்களில் வந்துள்ளது.

முதலில் ஸ்பாட் – பிக்ஸிங் என்றால் என்ன எனப் பார்ப்போம். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் சில நாடுகளில் சூதாட்டம் சட்டப்பூர்வமானது. எந்த அணி ஜெயிக்கும் , ஒவ்வொரு அணியும் எத்தனை விக்கெட்டுகள் எடுக்கும், எத்தனை நோ-பால், வைடுகள் வீசப்படும் என்ற அளவில் பணம் கட்டப்பட்டு பெட்டிங் நடைபெறும். உதாரணமாக, டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று, உணவு இடைவேளை வரை 90 ரன்கள் எடுக்கப்படும் என்று பெட்டிங் கட்டப்படுகிறது என வைத்துக்கொள்ளுங்கள், இதற்கு எதிராக பெட்டிங் கட்டுபவர்களுக்கு எத்தனை ரன்கள் குறைவாக எடுக்கப்படுகிறதொ அத்தனை ஆயிரம் மடங்கில் பணம் திரும்பக் கிடைக்கும். 78 ரன்கள் எடுக்கப்படுகிறது என்றால் 12,000 பவுண்டுகள் கிடைக்கும். இதில் ஆதாயம் அடைபவர் என்ன செய்வாரென்றால், இடைத் தரகர்கள் வழியாக மட்டையாளர்கள் ரன்கள்
ஏதும் அடிக்க வேண்டாம் என அறிவுறுத்துவார்.. ஒட்டு மொத்த ஆட்ட முடிவை இது எதுவும் பாதிக்காது என்பதாலும் பெரிய தவறில்லை என்பதாலும் சில மென்மையான ஆட்டக்காரர்கள் சில ஆயிரம் பவுண்டுகளுக்கு வீழ்ந்து விடுவார்கள்.  ஆட்டத்தில் குறிப்பிட்ட நிகழ்வுகளை, ஆட்டத்தை நேரிடையாகப் பாதிக்காத விடயங்களை முன் கூட்டிய முடிவு செய்வதுதான் ஸ்பாட் பிக்ஸிங்.  ஆட்டத்தின் முடிவை முன் கூட்டியே தீர்மாணிக்க குறைந்தது 6 ஆட்டக்காரர்களாவது தேவை, ஆனால் ஸ்பாட் பிக்ஸிங்கிற்கு ஒன்று அல்லது இரண்டு ஆட்டக்காரர்கள் இருந்தால் போதுமானது.

2000 ஆம் ஆண்டு  கிரிக்கெட் சூதாட்ட ஊழலுக்குப் இந்தியாவுக்கு கிடைத்த கங்குலியின் தலைமையும், தென்னாப்பிரிக்காவிற்கு வாய்த்த ஷான் போலக், ஸ்மித் ஆகியோர்களின் வழிநடத்தல்,  கிரிக்கெட் சூதாட்ட ஊழல் வடுக்களில் இருந்து முறையே அந்தந்த அணிகளைப் பெருமளவில் மீட்டுக் கொண்டு வந்து விட்டது.  அசாருதீன், அஜய் சர்மா, அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர், நயன் மோங்கியா, நிகில் சோப்ரா என அனைவரும் அவர்களுக்கு ஏற்றவகையில் கிரிக்கெட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு தண்டனையைப் பெற்றுவிட்டனர். ஹான்ஸி குரோனியே போய் சேர்ந்து விட்டார், நிக்கி போயே, ஹென்றி வில்லியம்ஸ் மற்றும் கிப்ஸ் ஆகிய தென்னாப்பிரிக்க ஆட்டக்காரர்களும் உப்பைத் தின்றதற்காக தேவையான அளவு தண்ணீர் குடித்து விட்டனர்.

ஆனால் பாகிஸ்தானைப் பொருத்தமட்டில் மீண்டும் அதே பல்லவி, வெறும் குற்றச்சாட்டுகள், நிருபிக்கப்படவில்லை, நிருபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. கிரிக்கெட் குற்றச்சாட்டுகளை விசாரித்த நீதிபதி கய்யாம் பின்னொரு நாளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் பலரைத் தனக்குப் பிடிக்கும் என்பதால் கடினமான தண்டனைகளைத் தர மனம் ஓப்பவில்லை என்றதில் இருந்து பாகிஸ்தானின் விசாரணை எந்த லட்சணத்தில் நடந்தது எனத் தெரியும்.

பாகிஸ்தானிய கிரிக்கெட் வீர்ர்கள் அடிக்கடி இவ்வகையிலான பிரச்சினைகளில் மாட்டுவதற்கு காரணம், போதிய படிப்பின்மை, சரியான வழிகாட்டல் இல்லாமை, வழிகாட்டுதல் இருந்தாலும் இது போன்ற குறுக்கு வழியில் காசு பார்ப்பதற்கான வழிகளைச் சொல்லித் தரும் மூத்த ஆட்டக்காரர்கள், வெளிநாடுகளில் மட்டும் ஆட வேண்டிய கட்டாயம், ஸ்திரமற்ற கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என ஆதியில் இருந்து அந்தம் வரை பாகிஸ்தான் அணிக்கு பிரச்சினைகள்தான். இருக்கும் தலைவலிகள் போதாது என,  பாகிஸ்தானியர்களுக்கு ஒரே ஆறுதலான கிரிக்கெட்டிலும் துரோகங்கள் தொடர்ந்து நடப்பதைப் பார்க்கையில் அந்த ரசிகர்களைப் பார்த்து அனுதாபப்பட மட்டுமே முடிகின்றது.  சல்மான் பட் தலைமையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் இங்கிலாந்திற்கு எதிராகவும் டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று, அப்பாடா, விடிவு காலம் வந்து விட்டது என்ற நினைத்திருந்தபொழுது , சல்மான் பட்டும் இதில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது வேதனையான விசயம். பந்தை பல்லால் கடித்து மாட்டிய அதிரடி மன்னன் ஷாகித் அப்ரிடி இருக்கும் வரை கிரிக்கெட் வீரர்களை விலைக்கு வாங்க முடியாது என சூதாட்ட தரகர் மஸ்ஜித் வாக்குமூலம் கொடுத்திருப்பது மட்டுமே கொஞ்சம் நஞ்சம் கவுரவத்தை விட்டு வைத்திருக்கிறது. 

அடுத்த வாசிம் அக்ரம் எனக் கருதப்பட்ட முகமது அமீர், இடைத்தரகர் சொன்னதுபடியே மிகப்பெரும் நோ-பாலை வீசியதை மீண்டும் பார்க்கையில் வெறுப்பாகத்தான் இருந்தது. குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில் சரியாக அந்த பந்து வீசப்படுவதற்கு முன்னால் சல்மான் பட், முகமது அமிரீடம் சென்று உரையாடி விட்டு வருவார். நோ – பால் வீடியோ …

இந்தியாவைப் பொருத்தமட்டில் ஏற்கனவே ஐபிஎல் சூதாட்ட மையமாக உருவடுத்து வருவது கவலைக்குரிய விசயம், ஏற்கனவே இங்கிலாந்தில் இருந்து செயற்படும் சூதாட்ட இணையதளங்கள் ஐபிஎல்லை முன்வைத்தும் பெட்டிங்குங்கள் நடத்துகின்றன. இந்திய அணியின் இளம்வீரர்கள் இதில் எல்லாம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க போதுவான அளவில் உளவியல் ஆலோசனைகளை வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் கடமைப்பட்டுள்ளது.

எப்பொழுதெல்லாம் சூதாட்டம் ஊழல் பிரச்சினைகள் தலையெடுக்கின்றனவோ, அப்பொழுதெல்லாம் கிரிக்கெட் பெட்டிங் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும் என கூக்குரலும் உடன் சேர்ந்து ஒலிக்கும். கிரிக்கெட் பெட்டிங் சட்டப்பூர்வமாக இருக்கும் இங்கிலாந்தில்தான் இந்த ஸ்பாட் பிக்ஸிங் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது., சில வாரங்களுக்கு எஸ்ஸக்ஸ் கவுண்டி அணியின் 
டேனிஷ் கனேரியாவும்(பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்), மெர்வின் வெஸ்ட்ஃபீல்டும் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக பிடிபட்டனர். கிரிக்கெட் வரலாற்றைப் பின்னோக்கி பார்த்தோமானால் 16ம் ஆம் நூற்றாண்டிலேயே கிரிக்கெட் சூதாட்டம் இங்கிலாந்து கவுண்டி அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆட்டங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அடிப்படையில் கிரிக்கெட் சூதாட்டம் என்பது, குறிப்பிட்ட அணி வெற்றி பெறும் என பணம் கட்டி பணம் ஜெயிப்பதோ தோற்பதோ ஆகும், இது சட்டப்பூர்வமாக இருக்கலாம் அல்லது தடை செய்யப்பட்டு கள்ள சந்தையிலும் நடக்கலாம். கிரிக்கெட் சூதாட்ட ஊழல் என்பது, பெட்டிங் பணப் பரிவர்த்தனை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து ஆட்டக்காரர்களை விலைக்கு வாங்கி ஆட்ட முடிவுகளையோ சில நிகழ்வுகளையோ முன் கூட்டியே முடிவு செய்வது. இது கள்ள சந்தையிலும் நடக்கும் , சட்டப்பூர்வமாக்கப்பட்ட சூதாட்டங்களிலும் நடக்கும். கள்ளத்தனமாக சூதாட்டம் நடைபெறும் இடங்களை விட, வெளிப்படையாக சூதாட்டம் அனுமதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் இப்படி ஆட்டக்கார்களை விலைக்கு வாங்குவது சொல்லப்போனால் எளிதான விசயம். வெளிப்படையாக ஏதோ ஆசிய விளையாட்டு வீரர்கள் பேராசைக் காரர்களாகவும் துரோகிகளாகவும் சித்தரிக்கப்பட்டாலும் சில புரோக்கர்கள் தூண்டில்களாக இருந்தாலும் அனுமதிக்கப்பட்ட கிரிக்கெட் பெட்டிங் சந்தையிலும்  பின்புலத்தில் மேற்கத்திய பணசக்திகளின் பங்கு இல்லை என ஒதுக்கிவிட முடியாது. சூதாட்டம் எந்த வகையிலும் விளையாட்டில் நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சூதாட்டமே தவறு என்ற நிலையில் அதிலும் ஊழல் என்பதை சராசரி ரசிகனாய் ஜீரணிக்கவே முடியவில்லை. சூதாட்டங்களும் ஊழலும் எல்லாவிதத்திலும் கிரிக்கெட்டை விட்டு தள்ளியே வைக்கவேண்டும்.  இன்று நட்ட ரோஜா இன்றே பூக்க வேண்டும் என்ற நினைக்க வைக்கும் நுகர்வு வியாபர  உலகில்,  விட்டில் பூச்சிகளாய் சில ஆயிரம் டாலர்களுக்கும் சில நாள் இரவு வாழ்க்கைக்கும் கிரிக்கெட் வீரர்கள் வீழ்வதை தனி மனித ஒழுக்கமும் நேர்மையும் மட்டுமே தடுக்க முடியும்.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “கிரிக்கெட் நிகழ்கால ஊழல் – ஸ்பாட் பிக்ஸிங்

  • September 24, 2010 at 5:27 am
    Permalink

    It is showing the improvement of vinayooki against corruption in cricket.
    keep it up vinayooki.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 5, 2010 @ 10:58 pm