தண்ணீர் தண்ணீர்

புட்டுக்கு மண் சுமந்த வரலாறு

புட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் திருவிளையாடல் வெறும் புராண கதையாக மட்டுமில்லாமல் ஊர் கூடி உழைப்பு தானம் செய்யும் கலாச்சாரத்தை பறைசாற்றுகிறது. ஆனால் நாம் அதனை வெறும் சடங்காக மட்டும் பாவித்து திருவிளையாடல் காட்சிகளை கண்டு ரசித்துவிட்டு அலைகின்றோம். புராண காலத்தில் வைகை ஆற்றில்வெள்ளம் கரைப்புரண்டு ஓடியப்போது மதுரையை காப்பாற்ற அன்றைய பாண்டிய மன்னன் வீட்டுக்கு ஒருவர் ஆற்று கரையை பலப்படுத்தவும், அரிப்பைத் தடுக்கவும் வருமாறு உத்தரவிட்டதாகவும், புட்டு விற்று பிழைப்பு நடத்தி வந்த வந்தியகிழவி என்னும் மூதாட்டி தனது குடும்பத்தில் ஆண்கள் யாருமே
இல்லாததாலும், தன்னால் மண்சுமக்க முடியாததாலும் மிகவும் வேதனையுற்று இருந்தப் போது சிவப்பெருமான் தானே கூலி ஆள் வேடமேற்று அம்மூதாட்டியின் சார்பில் மண் சுமக்க வந்ததாகவும், மூதாட்டி கொடுத்த புட்டை வயிராற தின்ற சிவப்பெருமான் மண் சுமக்காமல் கரையில் படுத்து உறங்குவதைக் கண்ட பாண்டிய மன்னன் சிவபெருமானின் முதுகில் பிரம்பால் அடித்ததாகவும், அந்த அடி அகிலம் முழுவதும் எதிரொலித்ததாகவும் கடந்த கால புராணக் கதை கூறுகிறது. இன்று வைகையாற்றில் வெள்ளம் என்பது சிறுவர்களின் கேலி பேச்சாகிவிட்டது. முல்லை பெரியாறு 'வெல்லத்தை' தமிழகத்திற்கு தர கேரளம் முரண்டு பிடிப்பதால் ராமநாதபுரம் வரையிலான மக்களின் குடி தண்ணீர் தேவைக்கூட கேள்விகுறியாகி விட்டது.
 
ஆழ்ந்த நித்திரையில் அரசு
 
இன்று தமிழகத்தின் சிறியதும் பெரியதுமான 37,500 நீர் நிலைகள் சரியாக தூர் வாரப்படாததாலும், பராமரிக்கப்படாததாலும் மழை நீர் கடலில் கலந்து வீணாகிறது. மதுரையில் இருந்த பெரிய நீர் நிலைகள் காணாமல் போய் அங்கே நீதிமன்றங்கள், வணிகவரி, மாநகராட்சி, சட்டக்கல்லூரி, மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு, வருவாய் வைப்பு நிதி ஆணையம் என கான்கிரீட் காடுகள் உண்டாகி உள்ளன. மதுரையின் நிலத்தடி நீர் 600 அடிக்கும் கீழே போய்விட்டதாக நிபுணர் குழு அறிக்கைகள் எச்சரிக்கின்றன. இது போன்ற பேரழிவு சூழலில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு ஆழ்ந்த நித்திரையில் சுகமாக சுருண்டு படுத்துள்ளது.
 
நெஞ்சம் பதைக்கிறது
 
ஜனவரி மாதம் தாண்டினாலே மதுரையின் ஏதாவது ஒரு மூலையில் பெண்கள் காலி குடங்களுடன் மறியல் செய்வதையும், அவர்களை அப்புறப்படுத்த காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு  மல்லுக்கு நிற்பதையும் கண்டு நெஞ்சம் பதைக்கிறது. அரசாங்கத்தைப் பொருத்தவரை நம்மிடமிருந்து உருட்டி மிரட்டி பறிக்கும் வரி பணத்தை தனது ஆடம்பர அறிவிப்புகளுக்கும், இலவச விநியோகங்களுக்கும் செலவிட்டதுபோது மீதியை ஒரு சில மாவட்டங்களில் வெள்ள நிவாரணத்திற்கோ அல்லது வறட்சி நிவாரணத்திற்கோ செலவிடுகின்றது. ஓப்பந்ததாரர்கள் இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்தி விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கரையோடு செயல்படுகிறது. மழை பெய்தாலும், பொய்த்தாலும் ஒப்பந்தக்காரர்கள் பாடு கொண்டாட்டம் தான்.
 
அளப்பரிய மனித சக்தி

நீர் நிலைகளை காப்பாற்ற, மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நாம் உலக வங்கியிடமும், வளர்ந்த நாடுகளிடமும் கையேந்தி நிற்கவேண்டியதில்லை நம்மிடம் அளப்பரிய மனித சக்தி குவிந்து கிடக்கின்றது. இந்த தேசத்தின் மீது உண்மையான அக்கரை கொண்ட பல நேர்மையான பொறியாளர்கள், நீதிபதிகள், நீரியல் வல்லுநர்கள், தன்னார்வ ஆர்வலர்கள் இருக்கின்றார்கள்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் எல்லோரும் கூடி மதுரையில் உள்ள ஏரிகளில் ஆளுக்கு ஒரு தட்டு மண் அள்ளினாலே எல்லா ஏரி குளங்களையும் ஆழப்படுத்தி தூர் வாரிவிடலாம். Pந்ட் ஒப்பந்தக்கார‌ர் தேவை இல்லை, மதிப்பீடு(எஸ்டிமேட்) தேவை இல்லை, உலக வங்கி கடன் தேவை இல்லை. நாம் அனைவரின் ஒரு நாள் உழைப்பு தானம் மாத்திரமே போதும். லெனின் அறைகூவலால் சோவியத்தில் இது சாத்தியமாகி உள்ளது. 1957ல் தேர்தல் மூலம் அரசியல் அதிகாரத்திற்கு வந்த இ.எம்.எஸ் நம்புதிரிபாட் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்த நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யரால் கேரளத்தில் சாத்தியமாகி உள்ளது. தமிழ்நாட்டில் இது சாத்தியமாகுமா? இங்கும் அது சாத்தியமே. வீட்டிற்கு ஒருவரை அழைப்போம். யாரையும் கட்டாயப்படுத்தாமல் முடிந்தவர்களை பங்கு கொள்ள சொல்லலாம். உடல் வலிமை உள்ளவர்கள் மண்வெட்டி தூக்கட்டும், இயலாதவர்கள் கரைகளில் நின்று ஊக்கப்படுத்தட்டும். ஊழைப்பவர் தாகம் தீர தண்ணீர் மொண்டு கொடுக்கட்டும்.
 
நட்புறவு மலரும்

எப்போதும் குண்டாந்தடிகளோடு விரைப்பாக திரியும் ஆயுதப் படைக் காவலர்கள், காவல்நிலையங்களில் பணிபுரியும் (சட்டம் ஒழுங்கு) காவலர்களில் ஒரு பகுதியினர், ஊர் காவல் படையினர், இவர்களை மக்களோடு இணைந்து உழைப்பு தான திட்டத்தில் பங்கேற்க செய்யலாம். காவலர் பொதுமக்கள் நட்புறவும் மலரும். ஏரி, கண்மாய் தூர் வாரும் பணியும் நடக்கும்.

தமிழகத்தில் ஏறக்குறைய எல்லா பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசிய சேவை திட்டம் அல்லது தேசிய மாணவர் படை செயல்படுகின்றது. N.S,S., என்று அழைக்கப்படும் இந்த மாணவர் பெருந்திரள் வருடத்தில் பத்து நாட்கள் கிராமப்புறங்களில் முகாமிட்டு சமூக சேவை செய்தல், வார நாட்களில் போக்குவரத்து சீர்படுத்துவது, மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு உதவுவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இது பாராட்டுக்குரியது. இந்த மாணவர் சக்தியை நாம் சரியான முறையில் நேர்வழியில் கொண்டு செலுத்தினால் இந்தியா நிச்சயம் உலகிற்கு வழிகாட்டும் நல்லரசாக திகழும். இந்த தேசபக்த பணியில் N.S,S.,N.C.C., மாணவர்கள், விருப்ப முள்ள ஆசிரியர்கள் என நாளைய இந்தியாவை களத்தில் இறக்கலாம்.

உழைப்பு தான் – கரசேவை
 
உப்பு சப்பில்லாத சில்லரை வழக்குகளில் சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள் மற்றும் குறுகிய கால சிறைவாசிகள் இவர்கள் ஆளுக்கு ஒரு மண் வெட்டியும் கூடையும் தூக்கினால் ஆரோக்கியமான ஆக்கப்பூர்வமான கரசேவையாக மாற்றமுடியும்.

இதை யார் முன்னெடுத்து செல்வது, யார் அறைகூவல் விடுப்பது? இதுவே நம்முன் பூதகரமாக எழுந்து நிற்கும் கேள்வி. இன்று நம் மத்தியில் நேர்மையான தலைவர்கள் இல்லை. இந்த பொறுப்பை இயற்கையின் மேல், சுற்று சூழலின் மேல், மக்களின் மேல் நம்பிக்கை கொண்டுள்ள உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அழைப்பு விடுக்கலாம். அந்த இனிய நாளிற்காக, அறைகூவலுக்காக நம்பிக்கையோடு காத்திருப்போம். இந்த தேசத்திற்காக எல்லோரும் ஒன்று கூடி ஒரு நாள் உழைப்பு தானம் செய்யலாமே? அது தான் உண்மையான புட்டு திருவிழா.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 14, 2010 @ 11:26 pm