ஃபெடரரா ? நடாலா ?

அமெரிக்க ஓபன் நடந்த இரு வாரங்களிலும், பெரும்பாலான இரவுகளை ஆட்டங்களைக் கண்டே கழித்தேன்.

போரிஸ் பெக்கரின் தீவிர விசிறி நான். அவர் ஆடிய காலங்களில், அவரை ஜெயிக்கும் அகாஸியைக் கண்டால் வெறுப்பாயிருக்கும். ஆடிய ஆட்டங்களில் இரந்த முரண் போலவே, இரு ஆட்டக்காரர்களின் பெர்ஸனாலிடிகளுக்குள் இருந்த முரணும், எனக்கு அகாஸி மீதிருந்த வெறுப்பை அதிகரித்திருக்க வேண்டும்.

காலப் போக்கில், பெக்கர் ஓய்வு பெற்றுவிட, அகாஸி தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தார். 1998-ல் உலக தர்வரிசையில் 50-க்குப் பின்னால் சென்றவர், மறு அவதாரமெடுத்துத் திரும்பினார். 1999-ல் ஃப்ரென்ச் ஓபனை வென்று, நான்கு கிராண்ட் ஸ்லாமையும் வென்ற வீரர்கள் பட்டியலுள் நுழைந்த போது என் எண்னங்கள் மாறத் துவங்கின. அவர் மீதிருந்து வெறுப்பை ஒதுக்கி அவரது ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்தேன். டென்னிஸின் தள்ளாத வயதில் 2003-ல் ஆஸ்திரேலியன் ஓபனை வென்ற போது, அவருடைய விசிறியாகவே மாறி இருந்தேன். (அகாஸி தன் கடைசி கிராண்ட் ஸ்லாம் ஆட்டத்தில் B.Becker-இடம் தோற்றார். B for Boris அல்ல Benjamin:-) இது பொன்ற வெத்து டிரிவியாக்கள் ஆயிரக் கணக்கில் நினைவிருக்கின்றன. அவசியமானவைதான் மறக்கின்றன.

இதை ஏன் இப்போது சொல்கிறேன்? அப்படிப் பட்ட உணர்வுதான் எனக்கு நடால் மீதும் தொன்றுகிறது.

பெக்கருக்குப் பின் நான் மிகவும் சிலாகித்து பார்த்த ஆட்டக்காரர் ஃபெடரர்தான். தொடர்ந்து வெற்றிகள் பெற்று 'sense of invincibility'-ஐ உருவாக்கி வைத்திருந்த ஃபெடரரை தரையிறக்க ஆரம்பித்தவர் நடால். இதனாலேயே எனக்கு இவர் மேல் வெறுப்பு. ஒரு விதத்தில், ஃபெடரரின் ஆட்டத்தின் கண்டிராத உயர் பரிமாணங்களை உலகுக்கு காட்டியவர் நடால்தான்.

களி மண் தரையில் நடால் கிங். புல்தரையிலோ ஃபெடரரை மிஞ்ச ஆளில்லை. ஒரு கட்டத்தில், பல டோர்ணமெண்டுகளில் தொடர்ந்து நடாலுடன், களி மண் தரையிலேயே இறுதிப் போட்டியில் மொதித் தோற்றுக் கொண்டிருந்தார் ஃபெடரர். அப்பொதெல்லாம், நடாலின் வெற்றிகளை புறங்கையால் ஒதுக்கிவிட்டு, எதிராளியை அவன் விரும்பும் களத்திலேயே மீண்டும் மீண்டும் மோதும் ஃபெடரரின் தைரியத்தை சிலாகித்ததே அதிகம்.

2007-ல் ஹாம்பர்க் ஓபனில் நடாலை களிமண் தரையில் ஃபெடரர் வீழ்த்திய பொது, என் சந்தோஷத்துக்கே அளவில்லை. எதிராளியைத் தவிடு பொடி ஆக்கிவிட வேண்டும் என்னும் ஆக்ரோஷம் நடாலிடம் கொப்பளித்துக் கொண்டே இருக்கும். சின்னச் சின்ன வெற்றிகளைக் கூட விஸ்தாரமாய் கொண்டாடும் இயல்பும் நடாலுக்கு உண்டு. கொலையே செய்தாலும் வலிக்காமல் செய்ய வேண்டும் என்னும் ஃபெடரரின் பாங்குக்கு நேர் எதிர் பாங்கு இது. இவையும் நடால் மேல் இருந்து வெறுப்பிற்கு எண்ணை ஊற்றியிருக்கலாம்.

ஃபெடரர் சாம்பிராஸின் 14 கிராண்ட் ஸ்லாமைத் தாண்டி, All time great, என்று போர்க் ஜாம்பவான்களாலேயே ஒப்புக் கொண்ட போது, என் பார்வையிலும் சில மாற்றங்கள் வர ஆரம்பித்தன.

ஃபெடரர் ரசிகன் என்பதை மீறி ஆட்டங்களை பார்க்க ஆரம்பித்தேன். 99.99% திருப்பி அனுப்ப முடியாத பந்துகளையும் நடால் தன் வேகத்தினால் அடைந்து, திருப்பியனுப்பவதோடல்லாமல், எதிராளி திணரும் விதமாகவும் பந்தைச் செலுத்தும் பாங்கை எத்தனை முயன்றாலும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

பந்தை எதிர் கோர்ட்டுக்குள் அனுப்ப வெண்டும். நம் கோர்ட்டுக்குள் விழுந்தால் எடுக்க வேண்டும். இவ்வளவுதான் ஆட்டம். சொல்வது சுலபம். செய்வது? நடாலுக்குச் சுலபமாய் முடிகிறது.

ஃபெடரரின் கோலோச்சுக்கு முக்கிய காரணம் அவர் உடல். இது வரை, பெரிய அளவில் எந்தக் காயமும் பட்டுக் கொள்ளாமல் உடலை வைத்திருந்த்தாலேயே இத்தனை பட்டங்களை வெல்ல முடிந்திருக்கிரது.

நடாலின் கதை வெறு. ஓட்டத்தை அதிகம் நம்பும் நடாலின் ஆட்டங்களில், உடல் தளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

2006-ல் அவருடைய பாதங்கள் பழுதடைந்த பொது, இனி அவரால் முன் போல ஓட முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. 2009-ல் வந்த முட்டி கோளாரு, அவரை விம்பிள்டனில் ஆட விடாமல் செய்தது.

வீழ்ந்த பின் முன்னை விட வீர்யமாய் எழுவது தமிழ் சினிமாவில் சுலபம். டென்னிஸ் உலகில் துர்லபம். அதைச் செய்து காட்டிய நடாலின் மன உறுதி என்னை அவர் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்தது.

கால்களா குதிரைகளா என்று பிரித்தறிய முடியா வேகம்! மயங்காமல் என்ன செய்ய?

இந்த ஆண்டில், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன், மூன்றையும் சுலபமாகவே வென்றுள்ளார். மூன்றும், மூன்று தளங்கள். ஒன்றில் சிறந்தவர்கள் மற்றதில் சோபிப்பது கடினம். உடல் உபாதை, எதிராளியின் சிறந்த ஃபார்ம், ஆட்டத்தில் பின் தங்கியிருத்தல் என்று பல கணங்களில் பல சோதனைகள். அத்தனையையும் மீறி 24 வயதுக்குள் 9 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார் நடால். அனைத்து கிராண்ட் ஸ்லாமுடன் சேர்த்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெறுவதை கோல்டன் ஸ்லாம் என்று குறிப்பர். கோல்டன் ஸ்லாம் வென்ற அகாஸியுடன் இப்போது நடாலும் இணைந்துள்ளார். (ஃபெடரர் ரசிகர்கள், அவர் பெற்ற டபிள்ஸ் ஒலிம்பிக் தங்கத்தை எண்ணி சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.)

வேறு வழியே இல்லை. நானும் ஒரு நடால் விசிறி என்று அறிவித்துவிட வேண்டியதுதான்.

Prince Nadal – Take a bow!

நடால் தவிர, இந்த ஆண்டு என்னை மிகவும் கவர்ந்த ஆட்டக்காரர் மோன்ஃபிஸ். இந்த பிரெஞ்சுக்காரர் ஆடுகையில் தெரியும் நளினம் அரியது. நடாலுக்கும், ஜோகோவிச்சுக்கும் ஈடு கொடுப்பது இவருக்குக் கஷ்டம்தான் எனினும், பார்ப்பதற்கு அற்புதமான ஆட்டம். எதிர்பாராத நேரத்தில் நெட்டுக்கு வருதல், கோர்ட்டின் முனையிலிருந்து டிராப் ஷாட் அடித்தல், எதிராளியின் தலைக்கு மேல் உயர்ந்திருக்கும் ராக்கெட்டின் முனையையை உரசியபடி லாப் ஷாட் அடித்தல் என்று பார்க்கப் பரவசமூட்டும் ஷாட்-கள் ஏராளமாய் ஆடுகிறார். இவரும், ராடிக்கை வீட்டுக்கு அனுப்பிய டிப்ஸரவிஷ்-ம் (Tipsarevic) ஆடிய ஆட்டம் பிரமாதமான கிளாசிக்.

'Super mom' க்ளைஜ்ஸ்டர்ஸ் போன வருட வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல என்று நிரூபித்துவிட்டார். முதல் சில ரவுண்டுகளில் கொஞ்சம் சொதப்பினாலும் எதிராளியை விட கம்மியாய் சொதப்பி வெற்றிக்குச் சேதம் வராமல் பார்த்துக் கொண்டார்.

1995-ல் ஸ்டெஃபி-செலஸ் ஃபைனலுக்குப் பின் நடந்த அனைத்து அமெரிக்க ஓபன் இறுதி ஆட்டங்களும், நேர் செட்களில் முடிந்துள்ளனவாம். இந்த வருடம் ஸ்வோனரேவா தோற்றார். பொதுவாகவே ‘Giant Killer'-களுக்கு ஒரு syndrome உண்டு. ஜெயித்தவுடன் ஆடும் அடுத்த ஆட்டத்தில் சொதப்புவார்கள். இம் முறை, நம்பர் 1 சீடிங் பெற்ற வொஸ்நியாகியை வென்ற ஸ்வோனரேவா இறுதிப் போட்டியில் க்ளைஜ்ஸ்டர்ஸுக்கு கஷ்டம் கொடுக்காமல் தோற்றுப் போனார். கடந்த சில வருடங்களில் சோடர்லிங்கும் சில போட்டிகளில் இப்படிச் செய்துள்ளார்.

This might be the most I've ever wanted Kim Clijsters to lose serve. She's such a great person, but this is difficult to watch right now."

இது one-sided ஆட்டத்தைப் பார்த்த மெக்கன்ரோவின் கமெண்ட்:-)

2005-ல் பட்டம் வென்ற Clijsters, அடுத்த மூன்றாண்டுகளில் டென்னிஸ் ஆடாமல் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். 2009-ல் திரும்பிய இவர், விட்ட இடத்திலிருந்து தொடர்வது பெரும் ஆச்சர்யம். ஸ்வோனரேவா Clijsters-ஐ விம்பிள்டனில் வென்றவர். இம் முறை நேர் செட்டில் வென்றது fitting revenge.

This win partly repeats history and mostly creates one!

எக்கெச்சக்கமாய் காற்றடித்த இந்த அமெரிக்க ஓபனில் பொதுவாக பெண்கள் பிரிவு ஆட்டங்கள் சுமாராகவே அமைந்தன. காற்றடிக்கும் போது சர்வீஸை பாக்ஸுக்குள் போடவே, பலர் திணறினர்.

ஐந்தாவது செட்டிலும் அமெரிக்க ஓபனில் டை பிரேக்கர் எதற்கு என்று விளங்கவில்லை.

இந்திய பாகிஸ்தான் ஜோடியான போபன்னா குரேஷி ஜோடி, இரட்டையர் பிரிவில் இறுதி ஆட்டம் வரை முன்னேறி பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் இவர்கள் ஆட்டங்களையும் பார்க்க வேண்டுக்ம் என்று நினைத்துக் கொண்டேன்.

இந்த வருடத்தில் இனி மாஸ்டர்ஸ் கப் மட்டும்தான் பாக்கி. அதையும் நடால் வெல்வாரா? ஃபெடரருக்கு இது மோசமான வருடம் என்பதோடு சரியா, அல்லது அவரது கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளை நாம் பார்க்கப் போவதில்லையா? போர்க் போல அதிகம் அடி படாமல் ஓய்வு பெறுவாரா? அல்லது மெக்கன்ரோ, கானர்ஸ் போல, தோற்றாலும் பரவாயில்லை என்று, பல வருடங்கள் ஆடுவாரா?

இப்படிப் பல கேள்விகள். பொறுத்திருந்த பார்ப்போம்.

அதுவரை ஃபெடரர் பெரியாளா, நடால் பெரியாளா என்று இவர் தொடங்கி வைத்திருக்கும் debate-ஐ தொடர்வோம்.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 15, 2010 @ 9:55 am