ஷாஜி இசை விமர்சகரா?

இசைவிமரிசனம் என்பது காலங்காலமாக இருந்த வரும் விஷயம் என்ற போதும், முன்னோடிகளாகக் கருதப் படுபவர்கள் கல்கியும், சுப்புடுவும்தான். தற்காலத்தில் இசைவிமரிசனத்திற்கென்று எந்த ஒரு கறாரான வழிமுறைகளும் தோன்றாமல் தடுத்து நிறுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. ஏனெனில் இசை என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாக நிறுவப்படுவதை இவர்கள் முன்னேடுத்துச்சென்றர்கள். எந்த ஒரு கலையுமே தீவிர விமரிசனத்திற்குட்படுதல் அவசியம். இசை இதற்கு விதிவிலக்கல்ல. அதிலும் மிகவும் கறாராக மதிப்பிடப்படவேண்டிய ஒரு துறையாக இசை இருக்கிறது.
 
தற்போது இசை விமர்சனம் அல்லது இசை ஆராய்ச்சி என்ற பெயரில் வெளிவரும் கட்டுரைகள் அனைத்தும் மிகப்பெரும்பாலும் ரசனைக்குறிப்புகளாக மட்டுமே எஞ்சுகின்றன. அனுபவம் சார்ந்த தளத்தில் இருந்து ஒரு ஒப்பு நோக்கை மட்டுமே இன்றைய விமர்சகன் முன்வைக்கிறான். இத்தகைய  ரசிகனின் தளத்திலிருந்து இயங்க விமரிசகன் தேவையில்லை. ரசிகர்களே அதைப்பார்த்துக் கொள்வார்கள். இத்தகைய  ரசனை சார்ந்த குறிப்பு என்பது முற்றிலும் தன்வயமானது என்பதனால் அதனை விமரிசனமாகக் கொள்ளலாகாது.
 
விமரிசகர்கள் தங்கள் ரசனையை முன் வைத்து எழுதும் ஆக்கங்கள் அவசியமற்றவை. விமர்சகனின் பணி, சரியான தர்க்கத்தின் மூலம் நல்லதையும் அல்லதையும் வேறூபடுத்துக் காட்டி நிறுவுவதே. இம் முடிவுகளே ஒரு சாதாரணனை, கண்மூடித்தனமாய் விமர்சகனின் ரசனைக்குள் இட்டுச் செல்லாமல், அவனெக்கென்று ஒரு சுயமான, தேர்ந்த ரசனை உருவாக உதவும்.

இசையோ அல்லது மற்ற கலைகளோ ஏதேனும் ஒரு வகையில் செவ்வியலை நோக்கிச்சென்றுகொண்டே இருக்கிறது. செவ்வியல் என்பது ஒரு கோட்பாடாக இல்லாமல், ஒரு வகைப்படுத்தும் காரணியாக இல்லாமல், தன்னைத்தானே சரிசெய்துகொண்டு இன்னும் மேன்மைக்கு கொண்டுசெல்லும் ஒரு வழியாக மட்டுமே இருக்கமுடியும். ஏனெனில் செவ்வியல் என்பது இயக்கமே ஒழிய தத்துவம் அல்ல. 

செவ்வியல் இசை ஒரு நிலப்பரப்பிலுள்ள பல சமூகக்குழுக்களின் இசை வகைகளை முழுவதும் உள்வாங்கி வளர்வது. எனவே ஒரு இசைவிமரிசகன் செவ்வியல் தளத்தை தவிர்த்துவிட்டு, அது முன்வைக்கும் நாட்டார் கூறுகளை மட்டும் முன்னிருத்துவது காலத்தே பின்னோக்கிச்செல்வதற்கான முயற்சியே. அது நம் முன்னோர்களின் வாழ்க்கையை நாம் வாழ முற்படுவதுபோல மட்டுமே இருக்கமுடியும்.

ஒரு கலாசாரத்தின், அல்லது ஒரு சமூகத்தின் பண்பட்ட சிந்தனையின் விளைவே இசை – செவ்வியல் என்றாலும், அது எப்போதுமே சமூக எல்லைகளைத் தாண்டிச்செல்வதற்கான முயற்சியாகவே இருக்கிறது. செவ்வியலின் இயல்பே பண்பாட்டு, கலாசார, சமூக எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதற்குமான பொதுவான ஒரு தத்துவத்தை-மானுடத்தைப் பேசுவதாகவே இருக்கும். இந்நிலையில் அதன் எல்லைகளை சுருக்கிப்பேசுவது என்பது தவறாகத்தான் இருக்கமுடியும்.

கலாசாரத்தையும், அரசியலையும், கலைஞனின் வாழ்வையும் பற்றிப் பேசுவது, இன்றைய விமர்சகர்களின் மற்றொரு பொது அம்சம். அதாவது இசையைத்தவிர்த்து அத்தனையையும் பேசுவது என்று சொல்லலாம். பொழுதுபோக்கு, சமூகத்தோடு உரையாடுதல் போன்று இசைக்கு பல பயன்பாடுகள் இருக்கிறது. கேளிக்கையும், அரசியலும், போராட்டமும் அதில் சில. இவை பற்றிய கட்டுரைகள்,இசைவிமரிசனத்திற்குள் வருவதல்ல. இசை சம்பந்தப்பட்ட கட்டுரைகளாக இருந்தாலும் இவை இசை குறித்தவையல்ல என்ற போதம் நமக்கு அவசியமாகிறது.

இவ்வகை விமரிசனங்களில் பெரும்பாலும் ஒரு சாதாரண ரசிகன் அறியாத இசைக்கலைஞனின் வாழ்வுகுறித்த குறிப்புகள் ஏராளமாகக் காணப்படுகிறது. அதுவும் கலகம், புரட்சி, வன்புணர்ச்சி, வன்முறை, அதீத போதை வஸ்துக்களை பயன்படுத்துதல், பாலியல் தொழில் போன்ற குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றது. இது எவ்விதத்திலும் இசை சார்ந்ததல்ல. கட்டுடைத்த சங்கீதம் என்று இசைக்குள் வராத போதமில்லாத நிலையில் வெளிப்படும் பிதற்றல்கள் குறித்து மிகவும் சிலாகித்து எழுதப்படுகிறது.  விமரிசனங்களுக்கு இது மிகவும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது. ஆனால் இசை, நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை என்பதை நாம் அங்கே மீண்டும் மீண்டும் நினைவிருத்தவேண்டியதாக இருக்கிறது.

வாசகர்களால் கவனிக்கப்படும் எந்த ஒரு விமரிசகனும் இது என் தன்வயமான கருத்து மட்டுமே என்று சொல்வது நகைப்புக்குறியதாகிவிடும். தன்வயமான கருத்துக்களை விமரிசகன் தன் பொறுப்பிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு செய்கையாக மட்டுமே வைத்திருக்கிறான். போகிறபோக்கில் சில கருத்துக்களை தெரிவித்துவிட்டு அதற்கு பொறுப்பேற்காது அது தன்வயமானது மட்டுமே மற்றவர்களுக்கு அது தேவையென்றால் எடுத்துக்கொள்ளலாம் என்பதுபோலப் பேசுவது தவறு.

இசை குறித்து எழுதுவதற்கு முக்கியத் தகுதிகளாக நான் நினைப்பது

1.இசை குறித்த உண்மையான ஆர்வம்.
2.நாம் வாழும் நாட்டின் இசை வகைகளைக் குறித்த புரிதல்.
3.பிற நாட்டு இசை வகைகள் குறித்த புரிதல்.
4.இசையின் தோற்றம், வளர்ச்சி குறித்த வரலாற்று ஞானம்.
5.நல்ல கேள்வி ஞானம். நிறைய இசை கேட்பவராக இருத்தல்.
6.புறவயமாக இசையை அணுகும் இயல்பு.
7.இசையிலிருந்து தத்துவத்திற்கு இட்டுச்செல்லும் தொடர்பு குறித்த பிரக்ஞை.
8.கலையையும் கலைஞனையும் பிரித்துப் பார்க்கும் தேர்ந்த நோக்கு.
9.எந்த முன்முடிவுகளும், அரசியலும் இல்லாமல் அணுகுவது.

மேற்ச்சொன்ன அத்தனையையும் முன்வைத்து ஷாஜி எழுதிய "இசையின் தனிமை" என்ற புத்தகத்தை முழுவதுமாக நிராகரிக்கிறேன். இவற்றில் பல தன்னிடம் இல்லை என்று ஷாஜியே பலமுறை சொல்லியிருக்கிறார்.

ஷாஜி எழுதியவை ஒருபோதும் விமரிசனம் என்ற வட்டத்திற்குள் வர இயலாது. அதே சமயம் அவை ரசனை குறிப்பு என்ற வட்டத்திற்குள்ளும் அடங்காது. காரணம் அது செவ்வியல் மற்றும் இசை நுணுக்கங்கள் குறித்த சில கருத்துக்கள் மிகவும் மேம்போக்காக சொல்லிச்செல்கிறது. அதுவும் ஷாஜி அவர்கள் பலமுறை சொன்னதும் எழுதியதும் போல அவருக்கு செவ்வியல் இசை மீது எந்தவித ஈர்ப்போ,  மரியாதையோ, போதமோ  இல்லை எனும்போது  அவரது கருத்துக்கள் மிகவும் வலுவிழந்து போகின்றன. 

கேணி கூட்டத்தில் பேசும்போதும் அவர் செம்மங்குடி குறித்த ஒரு உரையாடலில் செவ்வியலை தெரிந்து கொள்ளப்போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார். இனி அவரது விமரிசனம் என்பது முழுவதும் ரசனைக் குறிப்புகள் மட்டுமே என்பதில் சந்தேகம் இல்லை. அத்தகைய ரசனைக்குறிப்புகள் எழுத பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள்.  இவர் அதில் ஒருவராக சேர்ந்திருக்கிறார்.

இவை அத்தனைக்கும் மேலாக ஷாஜி எனக்குத்தெரிந்தவரை அவரை இசை விமரிசகர் என்றோ இசை ஆய்வாளர் என்றோ சொல்லிக்கொண்டதில்லை. அவர் இக்கட்டுரைகளை இசைத் தொடர்பான கட்டுரைகள் என்றே குறித்திருக்கிறார். அவர் செய்த தவறு என்று நான் கருதுவது, விமரிசகர், ஆய்வாளர் பட்டங்களை ஆமோதித்ததுதான். அவரை ஆய்வாளர், விமரிசகர் என்ற கண்ணோட்டத்தைத் தவிர்த்துப் பார்த்தல் அவர் எழுதிய கட்டுரைகள்  முக்கியமற்றவை. ஏனெனில் அவர் விமரிசனம் என்று எதுவும் எழுதவும் இல்லை.

தொடர்புடைய படைப்புகள் :

12 thoughts on “ஷாஜி இசை விமர்சகரா?

 • September 17, 2010 at 11:40 pm
  Permalink

  சுப்புடுவை எல்லாம் சிறந்த விமர்சகர் என்ற பட்டியலில் சேர்க்கவேண்டாம். அவரும் பணம் வாங்கிக்கொண்டு எழுதுவார் என சங்கீத உலகில் பரிச்சயமான ஒரு கலைஞர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  Reply
  • September 18, 2010 at 10:37 am
   Permalink

   ஒரு இசை விமரிசகனின் தரத்தை புரிந்துகொள்ளும் ஞானம் எனக்கு நிச்சய்யம் இருக்கிறது. சுப்புடுவின் நேர்மை எப்போதுமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறேன். சுப்புடுவை எந்த இடத்திலும் சிறந்த விமர்சகர் என்ற விதத்தில் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். லலிதா ராமைக்கேட்டால் அவர் இவரைப்பற்றி புட்டு புட்டு வைக்கக்கூடும். ஆனாலும் அவர் இவரைப்பற்றிய பேச்சை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார். 🙂

   தற்போது வி.எஸ்.வி போன்ற பலர் எழுதிவந்தாலும் எனது பார்வையில் இசையுலகில் லலிதாராமைவிடத் திறமையான எந்த ஒரு விமர்சகனையும் இதுவரைப் பார்க்கவில்லை. லலிதாராம் இந்த குறுகிய காலத்தில் சாதித்தது மிக அதிகம். உதாரணமாக இவர் பெருமுயற்சியெடுத்து கொண்டுவந்த ஜி.என்.பி.யின் நூற்றாண்டு விழா புத்தகம் ஒன்றே போதுமானது. இசையின்பால் உண்மையான ஆர்வமும், ஞானமும், பரந்த அனுபவமும் கொண்டவர். அவரது கட்டுரைகளைப் படித்துப்பாருங்கள்.

   அவருக்கு எனது அறிமுகம் தேவையில்லைத்தான். ஆனாலும், அல்லதைச்சுட்டும்போது, நல்லதையும் சுட்டவேண்டிய கடமை உள்ளதால் சொல்கிறேன்.

   Reply
 • September 17, 2010 at 10:03 am
  Permalink

  சுமார் 20 அல்லது 25 வருஷங்களுக்குமுன் ஹிந்து ஆங்கில நாளிதழில் வெள்ளி தோறும் NMN என்ற பெயரில் வாரம் தவறாமல் சென்னையில் நடை பெற்ற கச்சேரிகளில் இருந்து சிலவற்றை ”விமர்சனம்” செய்துவந்தார். பாலக்காடு மணி அய்யர், செம்மங்குடி, மகாராஜபுரம் சந்தானம் முதல் ரவிகிரன், மேண்டலின் ஸ்ரீநிவாஸ் மற்றும் சௌம்யா வரை இவரால் எழுதப்பட்ட விமர்சனங்கள் எல்லோராலும் வரவேற்கப்பட்ட ஒன்று. சங்கீத அறிவை தவிர NMN இன் ஆங்கில ஆளுமையும் ரசிக்கக்கூடியதாக இருந்தது.

  Reply
 • September 17, 2010 at 2:09 am
  Permalink

  ஒரு உண்மை – மனுஷ்ய புத்திரன் ஒரு வியாபார தந்திரி. ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாரு மற்றும் ஷாஜி இவர்களுக்குள்ளே ஒருவரை ஒருவர் விமர்சித்து கொள்வதற்கான தளங்களை ஏற்படுத்தி, அதை வலைபூக்களில் பரவச்செய்து, இலக்கியத்தின் உள்ளே நுழையவோ அல்லது ஏற்கனவே நுழைந்து விட்ட தமிழ் மக்களின் மனங்களில் ஒரு கிலேசத்தை உண்டுபண்ணி, மனுஷ்ய புத்திரன் தனது உயிர்மை மூலம் ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாரு மற்றும் ஷாஜி – ன் எழுத்துக்களை பதிப்பித்து நன்றாக வியாபாரம் செய்கிறார். நல்லவேளை சுஜாதா இக்காலகட்டத்தில் இல்லை, இருந்தால் சுஜாதாவையும் இவர்களோடு மோத விட்டு பணம் சம்பாதித்து இருப்பார்.

  Reply

Leave a Reply to அனானி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 15, 2010 @ 10:47 am