நிமித்தக்காரன் கதைகள் – 1
நிமித்தம் என்பது ஜோதிடத்தில் ஒரு முக்கிய அம்சம். சில சமயம் ஜாதகம் மூலமாக சொல்ல முடியாததை நிமித்தங்கள் மூலமாக சொல்ல முடியும். நிமித்தம் என்பது ஒருவர் வாழ்க்கையில் நிகழப்போவதை வேறு ஒரு நிகழ்வின் மூலம் அறிந்து கொள்வது. அதில் தேர்ந்தவர்களை நிமித்தகாரன் என்றும் சொல்லுவதுண்டு.
நிமித்தத்திற்கும் சகுனத்திற்கும் நூலிழை வேறுபாடுதான். அதை பின்னர் பார்ப்போம். நிமித்தங்களை பற்றி விளக்கும் போது இந்த கதையை சொல்வதுண்டு.
ooOoo
ஒரு நிமித்தக்காரர் தன்னுடைய சீடர்களுடன் ஆஸ்சிரமத்தில் வசித்து வந்தார். ஒரு நாள் காலையில் சீடர்கள் கிணற்றில் தண்ணீர் இரைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெண் அழுது கொண்டே அங்கே வந்தாள்.
குரு அந்தப் பெண்ணிடம் காரணம் கேட்ட போது, தன் கணவன் தன்னை விட்டு போய்விட்டதாகவும், அவர் திரும்பி வருவாரா மாட்டாரா என்று தெரியாமல் அழுவதாக கூறினாள்.
குரு தன் சீடர்களிடம் உங்களுக்கு என்ன தோன்றுகிறது இவள் கணவன் திரும்பி வருவானா, மாட்டானா என்று கேட்டார். அவர் அந்த கேட்ட போது, கிணற்றில் ராட்டின கயிறு அறுந்து வாளி தண்ணீரோடு உள்ளே விழுந்தது. இதை நிமித்தமாக கருதிய சீடர்கள் கயிறு அறுந்துவிட்டது, ஆகையால் கணவன் வரமாட்டான் என்று கூறினர்.
அதே நிகழ்வை குரு, வாளி தண்ணீரோடு அறுந்து உள்ளே விழுந்தது. தண்ணீர் தண்ணீரோடு சேர்ந்தது, ஆகையால் சில தினங்களில் அவள் கணவன் மீண்டும் வருவான் என்று கூறினார். அதே போல சில தினங்களில் அந்த பெண்ணின் கணவனும் திரும்பி வந்தான்.
ஆக நிமித்தங்களை வைத்து பலன் சொல்வது மிகவும் கடினமாக விஷயம். அது பழகப் பழகவே சாத்தியப்படும்.
நிமித்தங்கள் பற்றி விளக்கமாக பிறகு பார்க்கலாம்.