மைக் மோகனின் டான்ஸ்

யாருக்கும் இங்கே படமெடுக்கத் தெரியவில்லை என்று அதிரடியாக ஆரம்பித்தார் அந்த அம்மணி. துட்டு சானலும் கலைச்சேவையை ஆரம்பித்துவிட்டதோ என்று ரிமோட்டை நிறுத்தி நிதானமாக கேட்ட பின்னர்தான் புரொடெக்ஷன் சமாச்சாரம் என்பது புரிந்தது. பிராந்திய மொழி படங்கள்தான் எங்களுடைய முக்கியமான இலக்கு; அடுத்த வருஷம் ஒரு கலக்கு கலக்க இருக்கிறோம் என்றார். ஒவ்வொரு ஆண்டும் 900 சொச்ச படங்கள் வெளியாகிறதாம். அதில் 750 படங்கள் பிராந்திய மொழி படங்களாம்.  அப்போ மிச்ச சொச்சமெல்லாம்?  இதென்ன அதிகப்பிரசங்கித்தனமான கேள்வி.  இந்தியாவுக்கு வெளியே போய் எடுக்கப்பட்ட இந்திப்படங்கள்தான்.  

சித்திரத்தில் கமலா செல்வராஜ் கதை சொல்லிக்கொண்டிருந்தார். இன்ன பிற குட்டி சானல்களெல்லாம் கார்ட்டூன், கிராபிக்ஸ் என்று எங்கேயோ போய்க் கொண்டிருக்கும்போது சித்திரத்தின் அரதபழசான ஐடியா ரிமோட்டை நிறுத்தியது. எண்பதுகளின் சம்மர் லீவில் ஆல் இண்டியா ரேடியோவில் கதை நேரம் கேட்பது பரம சுகம். மனதுக்கு நெருக்கமான அந்தக் குரல்களெல்லாம் காற்றோடு கரைந்து போய்விட்டன. பிளாஷ் பேக் முடிந்து மீண்டு வந்தால் கமலா செல்வராஜ் விடாமல் கதை சொல்லிக்கொண்டிருந்தார். பாட்டி வடை சுட்ட கதையெல்லாம் இப்போது எடுபடுமா?  சுற்றிலும் உட்கார்ந்திருந்த மூன்று வாண்டுகள் எங்கேயோ பராக்கு பார்த்துக்கொண்டிருந்தார்கள். பாவப்பட்ட ஜென்மங்கள்!

லிசியை ஞாபகமிருக்கிறதா? நதியாவுக்குப் பின்னர் கவனிக்க வைத்த கேரள கண்மணி. இப்போது பிரியதர்ஷனின் பெண்மணி. வள்ளுவர் கோட்டத்து வாசலில் ஏசி காரில் கருப்பு மிடியில் போனவாரம் பார்த்த லிசிக்கும் ஜீ டிவியில் ஆடிப்பாடிய லிசிக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனந்த ஆராதனையாம். சகிக்கவே முடியாத பாடல். ஆனாலும் காஸ்ட்யூம், டான்ஸ் மூவ்மெண்ட், காமிராவெல்லாம் பிரமாதம். மைக் பிடிக்க மட்டுமல்ல மோகனுக்கு நன்றாக டான்ஸ் ஆடவும் தெரிந்திருக்கிறது.  25 வருஷத்து முன்னால் தெரிந்திருக்க வேண்டிய சங்கதி.  டூ..டூ லேட்!

தஞ்சை பெரியகோயிலின் 1000வது ஆண்டு நிறைவு விழா. பாலிமர் டிவியில் கரகாட்டக்காரர்கள் வருத்தப்பட்டார்கள். பெரியகோயில் வளாகத்தில் கரகாட்டம் நடத்த இதுவரை அனுமதிக்கப்பட்டதேயில்லையாம். ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. பள்ளியக்ரஹரத்தில் கரகாட்டம் ஆடுபவர்களுக்கு தனித்தெருவே இருக்கிறது. தஞ்சாவூரில்தான் ஏராளமான கரகாட்டக்குழுக்கள் இருக்கின்றன. இரண்டு நாள் கழித்து பாலிமரில் இன்னொரு செய்தித் தொகுப்பு. கரகாட்டக்குழுக்கள் ரிகர்சலில் பிஸியாக இருந்தார்கள். 100வது ஆண்டு நிறைவு விழாவின் முதல் நிகழ்ச்சியே கரகாட்டம்தான். அதுவும் பெரியகோயில் நந்தி மேடைக்கு அருகில். திருக்குவளைக்காரர் அவ்வப்போது அசத்துகிறார்!

ஸ்ரீசங்கரா டிவியில் தயானந்தா சரஸ்வதி சுவாமிகளின் உபன்யாசம்.  தமிழ், ஆங்கிலம் என்று டிராக் மாறி மாறி பேசுகிறார். மொழி ஒரு தடையேயில்லை.  வேஷமும், பாஷையும் ஒன்றுதான் என்கிறார். இல்லாத ஒன்றை இருப்பது போல் வெளிக்காட்டிக்கொள்வதாம்! சரி, நமக்கெதுக்கு அரசியல்?  டம்பம் பற்றிய பீஸ் சுவராசியமாக இருந்தது.  'ஒரு பாகவதர் இருந்தார்.. ராமாயணம், மகாபாரதமெல்லாம் பிரமாதமாக கதாகாலேட்சபம் செய்வார்.  கச்சேரிக்கு நடுவே யாராவது முக்கியஸ்தர்கள் வந்தால் அப்படியே நிறுத்திவிடு மேடையிலேயே ஒரு அறிமுகம் கொடுப்பார்.  ஸ்ரீமான் சங்கர சாஸ்திரி அவர்கள் இன்று இங்கே வந்ததற்கு நான் புண்ணியம் பண்ணியிருக்கணும்.  எவ்வளோ நல்ல காரியங்கள் பண்ணிக்கொண்டிருக்கிறார். நிறைய அன்னதானம், தர்மகாரியெங்களெல்லாம் செய்யறார். அவர் வீடு எப்போதும் எழைகளுக்காக திறந்தே இருக்கும் என்றெல்லாம் அள்ளிவிடுவார். இதெல்லாம் முடிந்தபின்னர்தான் மற்ற புராணத்திற்கே வருவார்.

இதற்கு பயந்தே ஒரு மிராசுதார் கச்சேரிக்கு வராமலே இருந்தார். ஒருமுறை நேரில் பார்த்துப் பேசும்போது ஏன் வருவதில்லை என்று இவர் கேட்டார்.  அங்கே வந்தால் என்னைப் பத்தி மேடையிலே பேசிடுவீங்க. எனக்கு தர்மசங்கடமா இருககும். அதான் வர்றதில்லை என்றார். நீங்க அடுத்த முறை கச்சேரிக்கு வாங்க. நான் உங்களைப் பத்தி எதுவும் சொல்லமாட்டேன் என்று பாகதவரும் பதில் சொன்னார். அதை நம்பி அவரும் வந்தார். பாகவதர் வழக்கமான கச்சேரியை ஆரம்பித்தார்.  இவரைப் பத்தி நான் சொல்லப் போவதில்லை.  என்னைப் பத்தி எதுவும் சொல்லவேண்டாங்கிறார். அம்மாதிரி நினைக்கிறவங்க ரொம்ப குறைச்சல்.  தன்னைப் பத்தி புகழ்ந்து யாரும் சொல்லவே கூடாதுன்னு நினைக்கிறார்.  உலகத்துல இவரைப் போல் பெரிய மனுஷங்களையெல்லாம் நாம பார்க்கவே முடியாது….சிலதை மாத்தவே முடியாது!'

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 25, 2010 @ 3:06 pm