கல்மாடி இன்னொரு மோடிதான்

 

சிரிப்பொலியில் மாணவன் என்றொரு பிளாக் ஒயிட் படம். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. பால் வடியும் முகங்கொண்ட ஜெய்சங்கர் தமிழ் வாத்யார். அவருடைய ஸ்டூண்ட்டாக பெரிய கிருதா வைத்த முத்துராமன். என்ன கொடுமை சரவணன்! கல்லூரியின் கரெஸ்பாண்டென்ட் பையன், வகுப்பில் என்னவெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் முத்துராமன் தவறாமல் செய்கிறார். ஆபிரஹாம் லிங்கன், லால்பகதுர் சாஸ்திரி, அண்ணாதுரை பயோகிராபியை நாலு வரிகளில் நச்சென்று வசனமாய் சொல்லி முத்துராமனை திருத்த முயற்சி செய்கிறாராம் ஜெய்சங்கர். படத்தில் எந்த கேரக்டர் குளோஸப்பில் வந்தாலும் நீள நீளமாய் வசனம் பேச ஆரம்பிததுவிடுகிறது. போரடிக்குதுப்பா என்று சொல்பவர்களை மாணவன் முன்னால் உட்கார வைத்து கட்டிப்போடவேண்டும்.சிரிப்பொலி, நல்ல அறுப்பொலி!

சன்டிவியும், கலைஞர் டிவியும் சீரியல்களில் மூழ்கிக் கிடக்கும்போது ஜெயா டிவியில் கொஞ்சமாய் வித்தியாசம் காட்டுகிறார்கள். ஜெயலலிதா பேச்சை 36வது தடவையாக ரிப்பீட் செய்வதை நிறுத்திவிட்டு உருப்படியாகவும் சிலது செய்து வைக்கிறார்கள். கண்ணாடி என்றொரு விவாதத்தை அனுஹாசன் நடத்துகிறார். இந்த வாரம் ஹெல்த் இன்சூரன்ஸ் பற்றி வெளுத்துக்கட்டினார்கள். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பிரிமீயத்தில் கொள்ளையடிப்பதாக ஒருவர் குமுறினார். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை கவனமாக தவிர்த்தார்கள். எல்லோரும் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க ஆரம்பித்துவிட்டால் பிரீமியமெல்லாம் நிச்சயம் குறைந்துவிடும் என்று தீர்ப்பு சொன்னார்கள். பிரைம் டைமில் வராவிட்டாலும் கண்ணாடி பளிச்சென்று இருககிறது. 

 

வஸந்த் டிவியில் ரகசிய கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை,தேடுகிறார்களாம்! மிட்நைட் நேரத்தில் தேடல் என்பது கூட ஜில்பான்ஸி விஷயமாகிவிட்டது. சாதாரண சப்பை கேள்விக்கு பத்து நிமிஷம் மூச்சுவிடாமல் பேசுகிறார் டாக்டர் காமராஜ். எந்தக் கேள்வியாக இருந்தாலும் ஒரே பதில்தான். சுற்றிச் சுற்றி அங்கேயே வந்து நின்றுகொள்கிறார் டாக்டர். இதுக்கு லாட்ஜ் வைத்தியரே தேவலை. நடு நடுவே நிகழ்ச்சியின் பெயரை வேறு குளோஸப்பில் காட்டுகிறார்கள். ரகசிய கேள்விகளில் வரும எல்லா 'க'வும் சிவப்பாக மிரட்டுகின்றன. ரிமோட்டை நகர்த்தாமல் அரைமணி நேரம் விடாமல் பார்த்தாலும் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்பதே புரியவில்லை. மாத்ரூபூதம் பார்த்தால் இன்னொரு முறை மரணிக்க விரும்புவார். 

இசையருவியில் அவளுக்கென்ன என்று நாகேஷ் ஆடிக்கொண்டிருந்தார். இடுப்பை வளைத்து உட்கார்ந்து, எழுந்து அநாயசமான ஆட்டம். டான்ஸில் பழம் தின்று கொட்டை போட்டட பெரிய ஹீரோக்களால் கூட முடியாத விஷயம். அழகு ஒரு மேஜிக் டச், ஆசை ஒரு காதல் ஸ்விட்சு என்னும் வாலியின் வார்த்தை விளையாடல் ஒருபக்கம், டி.எம்.எஸ், எல்.ஆர். ஈஸ்வரி கம்பீர குரல், எம்.எம்.எஸ் வியின் இசையெல்லாம் தாண்டி நம்மை கவனிக்க வைப்பது நாகேஷின் டான்ஸ். என்னவொரு அற்புதமான நடனம்!டான்ஸ் மாஸ்டர் யாரென்பதை தலையை தட்டி, கூகிளிட்டு பார்த்தும் தெரியவில்லை. யாராக இருக்கும்? 

சந்தேகமேயில்லை, கல்மாடி இன்னொரு மோடிதான். சளைக்காமல் இண்டர்வியூ கொடுக்கிறார். என்னுடைய வேலை மேற்பார்வை செய்வது மட்டும்தான். தவறு நடந்திருந்தால் என்னை குறை சொல்லமுடியாது என்று இதே டைம்ஸ் டிவியில் போனவாரம் அருள்வாக்கு சொன்னவர். பழுத்த அரசியல்வாதி மட்டுமல்ல அதிர்ஷ்டசாலியும் கூட. எந்தப் பிரச்னையும் இல்லாமல் காமன்வெல்த் நடந்து முடிந்தவிட்டது.விடாது கருப்பாய் டைம்ஸ் டிவி, கல்மாடியை துரத்துகிறது. டைம்ஸில் சொன்ன பதிலையே சிஎன்என் ஐபிஎன்னிலும் வேறு வார்த்தைகளில் சொல்கிறார். கேள்வியில் காரம் இருந்தாலும் முகபாவங்களில் மாற்றமில்லை. ஆனாலும் காமெடியில் கல்மாடியை மிஞ்சுபவர் ஆட்ட நாயகராக இருப்பவர் தீட்சித்துதான். தீட்சித்தின் அருள்வாக்கு – ஒலிம்பிக்ஸை ஏற்று நடத்த இந்தியா தயாராக இருக்கிறாதாம். சோதனை தீரவில்லை; சொல்லியழ யாருமில்லை!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : October 20, 2010 @ 10:34 pm