வாமனன்

அப்பாவி ஒருவன் தன் மீது விழும் கொலைப்பழியை எப்படி துடைக்கிறான் என்ற ஒருவரிக் கதைதான் வாமனன். ஆனால் அதை சொன்ன விதத்தில் சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர்.

ஜெய்க்கு சினிமாவில் ஹீரோவாகும் ஆசை. ஊ‌ரிலிருந்து கிளம்பி வந்து நண்பன் சந்தானத்தின் அறையில் தங்கி சென்னையில் வாய்ப்பு தேடுகிறார். கண்ணில் தெரிகிற வித்தியாசமான கேரக்டரை பின் தொடர்ந்து ஸ்டடி செய்தால், நல்ல நடிகன் ஆகலாம் என்கிறார் சந்தானம். ஜெய் பின் தொடர்வது ரகுமானை. இது ஒரு கதை. முதலமைச்சர் நாற்காலிக்கு ஆசைப்படும் வில்லன் கோஷ்டி, வருங்கால முதல்வரை போட்டு தள்ள, அந்த வீடியோ எவிடென்ஸ் கிடைக்கிறது ஒரு விளம்பர பட இயக்குனருக்கு. அந்த எவிடென்சை துரத்தும் வில்லன் கோஷ்டியின் சேசிங் இன்னொரு கதை.

இதற்கிடையே ப்ரியா – ஜெய் காதல் வேறு. காதலும் கலாட்டாவுமாக செல்லும் கதையில் க்ரைமை சேர்க்கிறது லட்சுமிராயின் மரணம். மாடலாக வந்து சொற்ப நேரத்திலேயே உயிரை விடுகிறார் லட்சுமிராய். அவரது கொலைப்பழி ஜெய் மீது விழ, படம் சூடுபிடிக்கிறது. ஜெய்தான் கொலையாளி என்று போலீஸ் துரத்த, கொலைக்கு மூலகாரணம் அமைச்சர் டெல்லிகணேஷ் தான் என்பதை கண்டுபிடிக்கிறார் ஜெய். அமைச்சருக்கு எதிராக ஆதாரத்தைத் திரட்டி தன்னை நிரபராதி என்று நிரூபிக்கவேண்டிய நிர்பந்தத்தில் உள்ள ஜெய் ரகுமானின் துணையுடன் தனது முயற்சிகளைத் தொடர்கிறார். முடிவில் என்ன ஆனது என்பதே கிளைமாக்ஸ்.

அறிமுக பில்டப்புகளை தவிர்த்து பார்த்தால், ஜெய்யின் நடிப்பு ஓக்கே ரகம். சூப்பர் ஹீரோவாக பன்ச் டயலாக் பேசி டார்ச்சர் பண்ணாமல் யதார்த்தமாக வருகிறார். இதைத் தொடர்ந்தால் கோடி புண்ணியம். தன்னை ஊருக்கு அனுப்புவதிலேயே குறியாக இருக்கும் சந்தானத்தோடு சேர்ந்து இவர் அடிக்கும் ரகளைகள் சூப்பர். கையில் கிடைத்த ப்ரியாவின் பேக் ஒன்றை கவனமாக யூஸ் பண்ணி அதை காதல் பாஸ்போர்ட் ஆக்கிவிடும் அவரது ஸ்டைல் ஆஹா ஸ்டைல்… அதுவும் அத்தை ஊர்வசியை மடக்கி போட ஜெய் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே வயிற்றை பதம் பார்க்கின்றன. ஊர்வசியின் நடிப்பு ஒரு சபாஷ் அல்ல பல சபாஷ் போட வைக்கிறது.

கதாநாயகி ப்‌ரியாவுக்கு அதிக வேலையில்லை. அதீத கவர்ச்சி காட்டுவதுடன் முடிந்து போகிறது லட்சுமிராயின் அத்தியாயம். கொஞ்ச நேரம் வந்தாலும் ஓரளவிற்கு மனதில் நிற்கும்படி அமைந்துள்ளது அவரது பாத்திரம். அதிசயமாக சந்தானம் இந்தப்படத்தில் இரட்டை அர்த்த வசனம் இல்லாமலே காமெடியில் கலக்குகிறார்.

அரசியல் சண்டையில் டெல்லி கணேஷை தீர்த்து கட்டும் சம்பத், அவருக்கு உதவி செய்யும் போலீஸ் அதிகா‌ரி தலைவாசல் விஜய் என அனைவரும் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்துள்ளனர். ஆச்சரிய அதிசயம் ரகுமான்.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், யுவனின் இசையும் படத்திற்கு பலம். பழக்கமான கதை என்றாலும் ரசிக்கும்படி தந்ததற்காக இயக்குனர் அஹ்மத்துக்கு பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 8, 2010 @ 2:03 pm