பச்சை யானையே எழுந்து வந்தாலும் எதுவும் நடப்பதில்லை

ராசா புயல் கரையை கடந்துவிட்டது. மதராசிகளை கிண்டலடிப்பதற்கு இன்னொரு காரணம் சிக்கிவிட்டது. ராஜினாமா நியூஸ் எப்படியும் வருமென்று ஞாயிற்றுக்கிழமை முழுக்க கையில் காமிராவோடு காத்திருந்தார்கள். என்ன பேசவேண்டும் என்பதையும் ஸ்கிரிப்டாக எழுதி அறிவாலயத்திலிருந்து அனுப்பி வைத்திருந்தார்கள் போலிருக்கிறது. துளியும் பிசகவில்லை. சசி தரூர், அசோக் சவான் வரிசையில் ராசாவையும் சேர்த்துவிட்டு டெல்லி சானல்கள் ஓய்ந்துவிட்டன. கூட்டணிக்காரர்கள் கைகுலுக்கிக்கொண்டார்கள்.இதுக்கு மேல் என்னதான் செய்யறது என்று போயஸ்தோட்டமும் நொந்துவிட்டது. ஜேபிசியெல்லாம் தேவையில்லை என்று சிதம்பரமும் தீர்ப்பெழுதிவிட்டார்.சவப்பெட்டி ரெடி!

கே டிவியில் ராகம் தேடும் பல்லவி. மொக்கை திரைக்கதை. சொதப்பலான பாடல்கள். டிபிகல் டி.ராஜேந்தர் படத்து வில்லன். எப்போதும் பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுவதுதான் முழு நேர வேலையாம். வில்லனும், காமெடியனும் வரும்பேதெல்லாம் விரசம் வழிகிறது.போதாக்குறைக்கு ஜெயலட்சுமியும் ஜெயமாலினியும் இருப்பதையெல்லாம் குலுக்கி ஒரு ஆட்டம் போடுகிறார்கள். இதையெல்லாம் தாண்டி ரிமோட்டை மாற்றாமல் இருந்ததற்கு காரணம் லொகேஷன்.பச்சைப்பசேல் வயல்வெளி, காற்றில் ஆடும் தென்னங்கீத்து,சிதைந்து கிடக்கும் தெருவோர கோயில்கள், டவுசர் போடாத மண்ரோடு குட்டீஸ், ரயில் வராத மீட்டர் கேஜ் தண்டவாளம், அழுக்கு படிந்த சுண்ணாம்பு உதிர்ந்த சுவர்கள். எண்பதுகளின் மாயவரம், அப்படியே டிவிக்குள் எழுந்து வந்து நின்றுகொண்டது. 

சன்டிவியில் வாங்க பேசலாம். பட்டிமன்ற ராஜாவும் பாரதியும் நேருக்கு நேர் உட்கார்ந்து நடத்தும் நிஜமான உரையாடல். 80 கொண்டாடும் வாலி பற்றி இயல்பாக பேசினார்கள். வாலிபக் கவிஞரின் வார்த்தை விளையாடல்களை பகிர்ந்துகொண்டார்கள். தெரிந்த சங்கதியாக இருந்தாலும் சொல்லும் விதத்தில் கவர்ந்தது. உதாரணம், உலகம் சுற்றும் பன். அரசியல்,சினிமா தவிர ஏராளமான விஷயங்கள் இருக்கிறது என்பதை ஒவ்வொரு காலையிலும் இவர்கள் நிரூபிக்கிறார்கள். ஒருவர் பேசுவதை இன்னொருவர் மறுப்பதில்லை. அப்படியே ஏற்றுக்கொள்வதுமில்லை. தமிழனுக்கு தேவையான பாடம்!    

ராஜ் டிஜிட்டலில் ஏதோ ஒரு பழைய படம். போன வருஷம் கிரீன் பார்க்கில் பார்த்த அதே இளமை பிளஸ் சிரிப்போடு இருந்தார் ஜெயசுதா. பீச் மணலில்  கையால் கோலம் போட்டபடியே கமலோடு ரொமான்ஸ். டயலாக் இல்லை. பின்னணியில் வெறும் லல்லால்லாதான். லொக்கேஷன் பீச்சாக இருந்தும் லாங் ஷாட் எதுவுமில்லை. கமல், ஜெயசுதா, கோலம் போடும் கைகள். காமிரா மூன்றையும் மாறி மாறி சுருட்டுகிறது. கமல், டைட் குளோஸப்பில் பிரமாதமாய் எக்ஸ்பிரேஷன் காட்டுகிறார். உதட்டை சுழிக்கும் காட்சியில் கொஞ்சம் பிசகினாலும் வில்லத்தனமோ, காமெடியோ ஏதோ ஒரு முத்திரை விழுந்துவிடும். கமல், காதல் இளவரசனாம். ஏனோ கடைசிவரை பிரமோஷன் கொடுக்கவில்லை. காதல் சக்ரவர்த்தியாகி இருக்கவேண்டும். ஜெமினி கூட நோ அப்ஜெக்ஷன் சொல்வார். 

 

ஆங் சான் சூகியின் விடுதலையை எல்லா சேனல்களுமே பரபரப்பாக கொண்டாடினார்கள். ராஜாவும், டெல்லி விபத்தும் லைம்லைட்டுககு வந்தபின்னர் யாரும் கண்டுகொள்ளவில்லை. சூகி பற்றி பிபிஸி ஒரு ஸ்பெஷல் டாக்குமெண்டரி ஒளிபரப்பியது. பர்மா, மியன்மார் அரசியல், வரலாற்று பின்னணியோடு சூகியின் போராட்டத்தை அலசியிருந்தார்கள். 65 வயது, 15 வருஷம். இதுக்கு நாடு கடத்துவதே பெட்டர் என்று சொல்லியிருப்பார்கள். வீட்டுக்காவலில் இருந்து வெளியே வந்ததும் பரபரப்பான ஸ்டேட்மெண்ட் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம். தேர்தலுக்குப் பின்னர் விடுதலை செய்யப்படுவார் என்பது போனவாரமே உறுதியாகிவிட்டது. எழு அடி, நாலு இன்சில் ஒரு வெள்ளை யானையை மியன்மாரில் கண்டுபிடித்தார்கள். அங்கே வெள்ளை யானை தென்பட்டால் அரசியல் மாற்றம் நிச்சயமாம். இங்கே நிலைமை வேறு. பச்சை யானையே எழுந்து வந்தாலும் எதுவும் நடப்பதில்லை!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 16, 2010 @ 3:06 pm