தரம் தாழ்ந்து அரசியல் நடத்தும் கருணாநிதி
இந்த 2G ஸ்பெக்ட்ரம் குறைபாடுகள் வந்தாலும் வந்தது, பத்திரிகைகளில் இதைத்தவிர வேறெந்த செய்திக்கும் முக்கியத்துவம் இல்லை. இதுவரையில், கண்டறியாத, கேள்விப் படாத முறைகேடுகள் காணப்படுகிறன. இந்த முறைகேட்டில் திமுகவிற்கும், காங்கிரசுக்கும் பெரும் பங்கு உண்டு என்று பரவலாகப் பேசப்படுகிறது. சுப்பிரமணிய ஸ்வாமியும் அவர்களின் விகிதாச்சாரப் பங்கை தொலைக்காட்சியில் கூறியிருக்கிறார்.
இந்தியப் பிரதமர் தன் மௌன விரதத்தைக் கலைக்கவே இல்லை. கடந்த 21 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிப்போய் உள்ளது. எந்த அலுவலும் நடைபெறவில்லை. எதிர்க் கட்சிகள் JPC வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றன. UPA யில் அங்கம் வகிக்கும் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், சரத்பாவரின் கட்சிகளும் JPC ஐ ஆதரிக்கின்றன. பிரணாப் முகர்ஜி, கபில்சிபலைத் தவிர இதைப்பற்றி வேறு
யாரும் பேசுவதில்லை. "ராசா எந்தத் தவறும் செய்யவில்லை" என்று நன்நடத்தைப் பத்திரம் அளித்தபிறகு பிரதமர் இதைப்பற்றிப் பேசவே மறுக்கிறார். ராசா, பிரதமரின் அறிவுறை மீறியதற்காகட்டும், TRAI யின் வழிகாட்டுதலை மீறியதற்காகட்டும், எதற்கும் அவர் பேசுவதே இல்லை. பேசக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக உறுதியாக இருக்கிறார். மௌனத்தினாலேயே எல்லாவற்றியும் மூடி, மறைத்துவிடலாம் என்று என்ணியிருப்பதாகவே தெரிகிறது. எவ்வளவுநாள் மௌனத்தில் குளிர்காய்கிறார் எனப் பார்ப்போம்.
இதற்கு மாறாக தமிழக முதல்வர் இந்தப் பிரச்சனையை அவருக்கே உரிய பாணியில் அணுகி இருக்கின்றார். இதை ஒரு "தலித்" பிரச்சனையாக்கி திசைதிருப்ப முயன்றிருக்கின்றார். இதை சமீபத்தில் "ஆரிய-திராவிட யுத்தமென்றார்." நிரூபர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது "பார்ப்பனர்" சதி என்றார். "பூணல்" போடாததால்தான் இந்தக் கதி யென்றார். முதல்வர் தன் தகுதியை எவ்வளவு தாழ்த்திக் கொண்டு பேச முடியுமோ அவ்வளவு தாழ்த்திக் கொண்டு இருக்கிறார். அவர் எப்பொதுமே தரம் தாழ்த்திப் மற்றவர்களைப்பேசியே அரசியல் நடத்தி வந்து இருக்கின்றார்.
சுதந்திரக்கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்துக் கொண்டபோது ராஜாஜியை "மூதறிஞர்" என்றார். கூட்டணி முறிந்தவுடன் "ஆச்சாரியார்" என்றழைப்பார். அவரை "குல்லுக்க பட்டர்" என்று முரசொலி வர்ணனை செய்யும். நாஞ்சில் மனோகரன் திமுகவில் இருந்தபோது "நாஞ்சிலார்" என்று செல்லமாக அழைப்பார். அவர் அ.தி.மு.க. விற்குச் சென்றபிறகு "மந்திரக்கோல் மைனர்" என்று முரசொலி கூறும். அவசரநிலையின் போது அப்போதைய பிரதமரை "சேலை கட்டிய ஹிட்லர்" என்றார். அவருடன் கூட்டணி வைத்துக்கொண்டபோது "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!!" என்றார். காமராஜ் அவர்களைப் பற்றி அவர் பேசியதையெல்லாம் காங்கிரசார் நினைத்துப் பார்த்தால் இன்று கூட்டணியே வைத்துக்கொள்ள மாட்டார்கள். இவையெல்லம் பழங்கதை. தரம் தாழ்ந்து அரசியல் நடத்துவதுதான் அவரின் நிலை.
வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் இன்னும் என்னவெல்லாம் பேசப்போகிறாரோ.. ஆண்டவனுக்கே வெளிச்சம்.