சுரணையற்ற அரசுகளும் உதிரம் குடிக்கும் ஓநாய்களும்

 

 

மீனவர் ஜெயக்குமாரை சுட்டுக்கொன்று, சுனாமியில் விரலிழந்து நீந்த முடியாத மனிதரை கயிற்றால் கட்டி கடலில் தள்ளியதற்குப் பின் நடைபெற்ற நாடகத்தைக் கண்ட தமிழகத்தில் மீண்டும் ஒரு உணர்வெழுச்சி. இணையத்தில் கோபக்கணைகள். இணைய விண்ணப்பங்கள். ஆங்காங்கு போராட்டங்கள். சில நாட்களில் 30 ஆயிரம் ட்விடுகளிட்டு  உலக அளவிலும் இந்திய அளவிலும் இணையத்தில் ஓங்கு குரலாக ஒலிக்கிறது. நடுவில் தமிழகத்தில் 500 மீனவர்கள் இலங்கையில் போய் சரணடைப்போவதாக வேறு செய்தி வந்தது. ஏன் இத்தனை கோபம். கண்ணீர்?

தமிழர்கள் ஆதீத உணர்வைக் காட்டுபவர்கள் என்று ஒரு பெயர் உண்டு. இருந்தாலும் எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம். ஒரு பில்லியன் இந்தியர்களில் ஒரே ஒரு தமிழன் (இந்தியன்?) இறந்ததிற்கா இத்தனை கூச்சல் கூப்பாடுகள்.

 

இல்லை. இதற்கு மேலும் பொறுத்திருப்பது மடமை என்ற கடுங்கோபம்.

 பல்வேறு நாடுகளிலிருத்து வரும் இணையக்குரல்கள், அரசியல் குழுக்கள், பொதுமக்கள், தேர்தல் நேர ஆதாயக் கணக்கர் என்று வெவ்வேறு வகையான நிலைப்பாடுகள்.  அவை சார்ந்த எண்ணங்கள் எதிரொலிக்கின்றன. இவை எல்லாவற்றை விலக்கினாலும் பொதுவாக பொங்கும் ஆத்திரம் மூன்று காரணிகளினால்.

1 )இந்திய தமிழக அரசுகளின் வழமையான நாடகம் 

2) பொது மற்றும் தேசிய ஊடகங்களின் மௌனம்.

3) இலங்கையின் சீண்டல்.

 

கிட்டத்தட்ட 600 மீனவர்களுக்கு மேல் கடந்த பல வருடங்களில் சுட்டுக்கொல்ப்பட்டு இருக்கிறார்கள். இது என்ன குத்துமதிப்பான கணக்கு? இந்தியாவில் புள்ளிவிவரங்கள் மிகவும் அரிதாகவே நம்பத்தகுந்ததாக இருக்கும். மீனவர் படுகொலைச் சம்பவங்களின் கணக்கெடுப்பு என்று ஒன்று கூடக் கிடையாது. எப்போதோ எடுத்த அதிகாரபூர்வ கணக்கெடுப்பு வெறும் 50 க்கு மேற்பட்டோர் சுடப்பட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது .

புள்ளிவிவரம் சேகரிக்கும் அளவிற்கு இந்தியர்களை சுட்டுக்கொல்வது இந்திய இறையாண்மைக்கு இலங்கை அளிக்கும் இழிவுப்பரிசு. மேலும் அதைக்கூட சரியாகச் சொல்லமுடியாத இந்திய அரசின் மெத்தனம் எத்தனை கேடானது.

ஒவ்வொரு முறை இம்மாதிரி பிரச்சனைகள் வரும்போதும் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவிப்பதும் அதை வாங்கி குப்பையில் போட்டுவிட்டு தன் வேலையைப் பார்ப்பது பாக்கிஸ்தானும் சீனாவும்  மட்டுமின்றி இலங்கையும்தான். அவ்விருநாடுகளிடமும் அணுகுண்டு உண்டு அதனால் சண்டையிட முடியாது என்று ஒரு சப்பைக்கட்டு. இலங்கையிடம் என்ன இருக்கிறது. எதற்காக இந்தப் பயம்.  தட்டிக்கேட்டகக்கூட தைரியமில்லாத இந்திய அரசு. இப்பிரச்சனையில் கருத்துத் தெரிவிக்கும் அனைவரையும் தூண்டிக் கோபமடையச் செய்த நிகழ்வு என்றால் அது தமிழக முதல்வர் இப்பிரச்சனைக்காக தந்தி அனுப்பியது அடுத்தது ‘முன்னாள் முதல்வர் என்ன செய்தார்’ என்று தார்மீகமின்றி பதில் கேள்வி கேட்டதாகத்தான் இருக்கும். இந்திய அரசிற்கு நெருக்கடி கொடுக்கவேண்டிய பதவியில் இருப்பவர்கள் விட்டேத்தியாக பதில் சொல்லிக்கொண்டிருத்தால் ஆத்திரம் அடைவோர் ஆயுதம் கிடைக்க தாக்குதலில் ஈடுபட்டனர். வன்முறைக்கு வன்முறை பதில் இல்லையென்றால் பின் என்னதான் பதில்?

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் போதும் முத்துக்குமரனின் இழப்பின் பின்னும் கடும் அமளி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தமிழக இந்திய அரசுகள் இலங்கையின் கொலைவெறியை வேற்றுநாட்டு பிரச்சனை என்று கூறிக்கொண்டிருந்தது. புலிகள் சுட்டுக்கொல்கிறார்கள், வெறும் பதினைந்து இருபது கீலோமீட்டர் கொண்ட கடல்பகுதிகளிலும் கண்ணுக்குதெரியாத கோட்டைப் போட்டுக்கொண்டு அதை தாண்டிவிட்டார்கள் அதனால் நடவடிக்கை , கடத்தல் தொழில் செய்கிறார்கள். புலிகளுக்கு உதவுகிறார்கள். கச்சத்தீவு முழு உரிமை எங்களுக்கே என்று பல்வேறு காரணங்கள் கூறிய இலங்கை அரசு இப்போதயை கொலையை இலங்கையின் வடக்கில் வாழும் தமிழ்மீனவர்கள் செய்திருக்கலாம் என்று தமிழகத்தமிழனுக்கும்  மிச்சம் மீதி இருக்கும் இலங்கைத் தமிழனுக்கும் வம்பிழுக்கிறார்கள்.

சரி அவ்வாறே வைத்தாலும் இதை ஆராய்ந்து சொல்ல வேண்டியது யார் பொறுப்பு. நாட்டு மக்களின் உயிர் காக்கவேண்டிய இந்திய தமிழக அரசுகளின் பொறுப்பு இந்தப் பிரச்சனையில் என்ன? அதற்கான என்ன புதியதான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது?

கச்சத்தீவைப்  திரும்பப் பெற்றால் பிரச்சனை தீரும் என்று சிலர் அரசியல் செய்கிறார்கள். இலங்கை அபிமானியாக கருதப்படும் இந்து ராம் போன்றவர்கள் கச்சத்தீவு ஒரு வெற்றிடம், வாய்ச்சவடாலுக்கு உகந்தது என்று மறுப்புச் சொல்கிறார்கள். மீனவர்களைக்கேட்டால் கச்சத்தீவு தான் இந்தப்பிரச்சனைக்கு தீர்வு என்கிறார்கள். இதில் உண்மை என்ன என்று ஆராய வேண்டிய அரசுகளின் பதில், மௌனம்.

‘உண்மையில் இந்தியாவுக்கு அக்கறை இருந்தால் அந்த ராணுவக்குழு மீது இலங்கை என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேட்கவேண்டும். அந்த ராணுவ வீரர்களையும் அவர்களுக்கு பொறுப்பாக உள்ள அதிகாரியையும் கோர்ட்மாஷியல் செய்து தண்டிக்கச்செய்யவேண்டும். அதன்பின் இலங்கை ராணுவம் இந்தியாமேல் கையை வைக்குமா? இன்று அவர்கள் அங்கே கைவிடப்பட்டு கிடக்கும் இந்த மாபெரும் தேசத்தை எண்ணி சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.. 

நடுக்கடலில் நிர்வாணமாக்கி ஓரினச்சேர்க்கைக்கு  வற்புறுத்தும் (அதுவும் தந்தைக்கும் மகனுக்கும் மாமனார் மருமகனுக்கும்) என்று கொக்கரிக்கும் கடற்படையைக்கொண்ட இலங்கை எப்போதுமே நரித்தனமாகவே நடந்துகொள்ளும். ஏதாவது ஆதாயம் பெற்றுக்கொள்வதற்காகவே அந்தப்பக்கம் சீனாவுடன் கைகோர்த்துக்கொள்ளும். அதற்கு பயந்து இந்தியாவோ கச்சத்தீவு முதல் ராடார் வரை கொடுத்துகொண்டிருக்கிறது. இலங்கையின் அடாவடிகளை அமரிக்காவே தட்டிக்கேட்க முடியாமல் நடுவில் இந்தியாவை பகடையாக்கும் தைரியமும் அளிப்பது எது ?

மிகவும் அலட்சியமாக ‘நடுக்கடலில் சுடப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது காயப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் மீனவரை யார் சுட்டார்கள் என்று விசாரணை நடத்துவோம்’ என்று வழவழா என்று பதில் சொல்லும் இலங்கைத் தூதரை தில்லியில் கூப்பிட்டு கண்டிப்பதால் என்ன பயன் வந்துவிடும்.

பொது மற்றும் நடுநிலை ஊடகங்களாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் பல்வேறு வகையான ஊடகங்களும் ஒரு பத்தி எழுதிவிட்டு யார் உள்ளாடை போடாமல் வருவது எந்தப்பெண் எந்த ஆணுடன் சுற்றுகிறாள் என்று விடலைகளுக்கு தீனி போட்டுக் காசுபார்க்கின்றன.

தேர்தல் கால அரசியல்வாதிகளும் அரசாங்கமும் ஒரு பக்கம், TRPக்கும் முதலாளிகளுக்கும் lobbyக்களுக்குமான ஊடகம் ஒருபுறம், பாதுகாக்க வேண்டிய கடற்படையோ வேடிக்கை பார்க்க வேண்டிய அவலம் என்று  தினம் தினம் செத்துப்பிழைக்கும் மீனவர்களைக் காக்க இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் இப்போதைய அவசரத்தேவை ஒரு தலைவன். இப்போது இருக்கும் மற்றெல்லோரும் கலைஞர் வார்த்தையில் சொல்வதானால் ‘சோற்றால் அடித்த பிண்டங்கள்’.

மேலும் விவரங்களுக்கு http://www.savetnfishermEn.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 30, 2011 @ 12:32 am