வயதான இளைஞன்

 

சமீபத்தில் வெளியான இரண்டு ஹிந்தி படங்களில் (பா, 3 இடியட்ஸ்) அதன் கதாநாயகர்கள் தங்கள் வயதைக் காட்டிலும் குறைந்த வயது கொண்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். ரஜினிகூட அப்படிப்பட்ட   கதாபாத்திரங்களில்தானே நடிக்கிறார் என்று கேட்கலாம். சிவாஜியில் ரஜினியின் கதாபாத்திர வயது 28. ஆனால் அவர்  அலட்டிக் கொள்ளாமல் விக் மட்டும் மாட்டிக்கொண்டு  நடித்துவிட்டுப் போயிருப்பார். வயதான வேடங்களுக்கு நாடகநடிகர்போல வெள்ளைத் தாடியை ஒட்டவைத்தால் அடுத்த நிமிடம் அவர் தாத்தா ஆகிவிடுவார்.

 

 ஆனால் பா, 3 இடியட்ஸ் ஆகிய இரண்டு படங்களின் கதாநாயகர்கள் சிறுவயதாகத் தோற்றமளிக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்கள். 44 வயது அமீர்கான் நிஜமாகவே கல்லூரி மாணவர்போல தெரிவது வெறும் ஒப்பனையால் மட்டுமே கொண்டுவருகிற வித்தை அல்ல. சினிமா மீதான முழு ஈடுபாட்டையே ஹிந்தி நடிகர்கள் வெவ்வேறு விதத்தில் பிரதிபலிக்கிறார்கள். அதேசமயம் இங்கே ஒரு கேள்வி எழுகிறது. இவர்கள் ஏன் இளமையான கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும்? பேசாமல் 20 வயதுக்குட்பட்ட நடிகர்களையே நடிக்க வைத்திருக்கலாமே? ஏன் இந்த வீண்சிரமம்? 

 

பொக்கிஷம் படத்தில் சேரனின் மனைவியாக வருகிற பெண்ணுக்கு கதையின்படி குறைந்தது 50 வயதாவது இருக்கவேண்டும். ஆனால் ஊருக்கு நியாயம் பேசும் சேரன் எந்தளவுக்கு இமேஜ் என்கிற வட்டத்தில் விழுந்துவிட்டார் என்பதற்கு அந்தக் கதாபாத்திரமே நல்ல உதாரணம். 50 வயதுப் பெண் கதாபாத்திரத்துக்கு சேரன் தேர்ந்தெடுத்தது 30 வயதுக்குக் குறைவான ஒரு மாடலை. மாடலுக்கு 50 வயதுண்டான ஒப்பனையைச் செய்து நடிக்க வைத்துவிட்டார். அதனால்தான் அந்தக் கதாபாத்திரம் திரையில் பல்லிளித்தது. ஒரு 50 வயதுப் பெண்ணை தன் ஜோடியாகக் காட்ட சேரனின் கெளரவம் இடம் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கும் சேரனுக்கும் படத்தில் ஒரு காட்சிகூட கிடையாது. ஆனாலும் சேரனின் இமேஜ் நடுவில் புகுந்து ஓர் இளம்பெண்ணை அக்கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துவிட்டது.  சேரன் போன்ற ஒருவரே இந்தத் தவறைச் செய்யும்போது தமிழ் சினிமாவில் மசாலா படங்களில் நடிக்கும் நடிகர்களின் நிலையைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்துக்கொள்ளலாம். 

 

 இந்தியனில் கமல் வயதான வேடத்தில் நடித்தபோது எழாத கேள்விகள், ஒரு நாயகன் இளமையான கதாபாத்திரத்தில் நடிக்கும்போது எழுகிறது. இதற்கு ஒரே காரணம்தான். அந்த வேடத்துக்குரிய தோற்றமும் உடல்மொழியும் கிடைக்கவில்லை என்றால் கேலிப்பேச்சுகள் எழத்தான் செய்யும். ஒரு கதாநாயகன் குழந்தையாக நடிப்பதுகூட தவறில்லை,  திரையில் நாம் பார்ப்பது குழந்தையாக இருக்கும்வரை. இந்த விஷயத்தில் கதாபாத்திரத்துக்குரிய தன்மைகளை நேர்த்தியாகக் கொண்டுவந்தவர் வாரணம் ஆயிரம் சூர்யா. காரணமே இல்லாமல் அந்தப் படத்தில் இளவயது சூர்யா திரையில் சில நிமிடங்கள் வருவார். அதற்காக சூர்யாவின் மெனக்கெடல் உண்மையிலேயே ஆச்சரியத்தக்கது. கல்லூரி மாணவன் வேடத்தையே தமிழ்க் கதாநாயகர்களால் சமாளிக்காத ஒரு சூழலில் 12 வது படிக்கும் பள்ளி மாணவனாக சூர்யா தன் உடலை குறிப்பாக முக அமைப்பை அந்த வயதுக்கேற்ப மாற்றியிருப்பார். ஆனால் சூர்யாவின் உழைப்புக்குத் கிடைத்திருக்கவேண்டிய நியாயமான வாய்ப்புகள் அந்தப் படத்தில் அவருக்கு வழங்கப்படவில்லை.  அதனால் அவரும் விஜய் பாணியில் அயன், ஆதவன் என்று இறங்கிவிட்டார். 

 

இந்திய சினிமாவில் கமல்ஹாசனை விடவும் கடும் உழைப்பாளி அமீர் கான். ஹிந்தி சினிமா போன்ற ஒரு பணம் விழுங்கும் உலகத்துக்குள் இருந்துகொண்டு அவர் செய்யும் சாகசங்கள் நிச்சயம் இதுவரை எந்த இந்திய கதாநாயகனும் செய்யாதவை. இந்திய சினிமாவை உலகத் தரத்துக்கு அழைத்துச் செல்லும் உண்மையான முயற்சிகள் அவை. தாரே ஜமின் பர் மாதிரியான படத்தில் நடித்தவர்தான் திமிறிய தோள்களுடன் கஜினியில் வந்தார். இப்போது தயிர் சாதம் சாப்பிட்டுக் கல்லூரிக்குக் கிளம்பும் ஐஐஎம் மாணவன்போல 3 இடியட்டில் நடித்திருக்கிறார். படம் வெளிவருவதற்கு முன்பு பல கேள்விகள் எழுப்பிய மும்பை மீடியா இப்போது கைத்தட்டி கல்லூரி மாணவன் அமீரை ரசிக்கிறது. அமிதாப்பும் பா படத்தில் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திகொள்ள வைத்துவிட்டார். 

 

ஒரு நியாயமான உழைப்புக்கு கிடைக்கவேண்டிய வரவேற்பையும் அங்கீகாரத்தையும் எந்த ஏமாற்றமும் இல்லாமல் ஒரு கலைஞன் அடைகிறபோதுதான் அது அவனையும் அவன் சார்ந்த கலையையும் அடுத்தக் கட்டத்துக்கு இட்டுச் செல்லும். ஹிந்தி சினிமாவில் அதுதான் நடக்கிறது.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 25, 2010 @ 12:41 pm