உலகக் கோப்பை – இனி….

 

இது வரை நடந்ததைப் பற்றி எளிதாகப் பேசியாகி விட்டது. இனி கணிப்பு. அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும் நான்கு அணிகளுமே வெல்லும் வாய்ப்பை உடையவைதான். இருந்தாலும் ஒவ்வொரு அணியின் நிறைகுறைகளைப் பார்த்து எந்த அணி வெல்லும் வாய்ப்புகள் அதிகம் என்று பார்க்கலாம்.

முதலில் நியூசிலாந்தும் இலங்கையும் மோதும் ஆட்டம். இதுவரை நடந்த ஆட்டங்களை வைத்துப் பார்த்தால் இலங்கை அணி ஜெயிக்கும் வாய்ப்பே அதிகம். ஆனால் பாகிஸ்தானோடும் சரி, தென்னாப்பிரிக்காவோடும் சரி, இதே நிலமையில் இருந்த நியூசிலாந்துதான் வெற்றி பெற்றது.

இலங்கையைப் பொறுத்த வரையில் பேட்டிங் இதுவரை எந்தப் பிரச்சனையையும் தரவில்லை. தொடர்ந்து நல்ல விதமாக ஆடி வந்தவர்களுக்கு ஒரு ஷொட்டு போல நடந்தது இங்கிலாந்தை பத்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வெற்றி. பாகிஸ்தானிடம் வெறும் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதைத் தவிர அவர்கள் தொட்டதெல்லாம் வெற்றிதான்.

மலிங்காவும் முரளியும் நன்றாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார்கள். தில்ஷனும் இவர்களுக்கு தன்னால் இயன்ற அளவிற்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறார். ஆனால் இலங்கைக்கு பிரச்சனை அவர்கள் பீல்டிங்தான். அதிக அளவில் கேட்சுகளை பிடிக்காமல் விட்டதுக்குப் பரிசு இருந்தால் அது இவர்களுக்குத்தான் என்ற அளவில்தான் இவர்கள் பீல்டிங் இருக்கிறது. அதையும் சரி செய்துவிட்டார்கள் என்றால் இவர்களைத் தடுத்து நிறுத்துவது சிரமம்தான்.

அடுத்தது நியூசிலாந்து. சில மாதங்களுக்கு முன்பு பங்களாதேஷிடமும் பின்னர் இந்தியாவிடமும் தர்ம அடி வாங்கிய அணியா இது என்று பிரமிக்க வைக்கும்படி ஆடி வருகிறார்கள். கென்யாவிடமும் ஜிம்பாப்வேயிடமும் விக்கெட் இழப்பேதுமின்றி ஜெயம். கனடாவுடனும் கூட பெரிய வெற்றி. ஆனால் முன்னணி அணிகளான ஆஸ்திரேலியாவுடனும் இலங்கையுடனும் தோல்வி என்று தாங்கள் இன்னமும் சின்னப் பசங்களிடையே மட்டும் ரௌடி என்பது போல ஆடி வந்தவர்கள் பாகிஸ்தானோடு ஜெயித்தது ஒரு பெரிய வெற்றிதான்.

பேட்டிங் ஒரளவு தேவலாம் என்றாலும் பௌலிங்கில் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி யாருமே இல்லை. தென்னாப்பிரிக்காவுடனான வெற்றியில் இவர்கள் செய்ததை விட அவர்கள் செய்யாமல் விட்டதே அதிகம். ஆனால் ஒரே அணியாக விளையாடி தங்கள் குறைபாடுகள் தெரியாமல் ஆடி வருகிறார்கள். இதுவரை அரையிறுதியைத் தாண்டியது இல்லை. இதுவரை வந்ததே இந்த அணிக்கு சாதனை என்ற நினைப்பே இவர்கள் தோல்விக்கு வழி வகுக்கலாம்.

இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது இலங்கை வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது.

அடுத்தது இரண்டாவது அரையிறுதி ஆட்டம். பாகிஸ்தானுடன் இந்தியா மோதுகின்றது. ட்ரீம் மேட்ச் என்ற அந்தஸ்துக்கு எல்லா வகையிலும் பொருத்தமான ஒரு ஆட்டம். இரு அணிகள் மீதும் ஏகத்திற்கு எதிர்பார்ப்புகள். காலிறுதிக்குப் பின் இறுதி ஆட்டத்தில் தோற்றாலும் பரவாயில்லை, இந்த ஆட்டத்தை ஜெயித்தே ஆக வேண்டும் என்பது போல் தோணி பேசியதும், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே தீருவோம் என்று அப்ரிதி பேட்டிகள் கொடுப்பதிலும் இருந்து இரு அணிகளும் கொண்டுள்ள தீவிரத்தை அறிய முடிகின்றது.

இந்தக் கோப்பையின் மிகச் சிறந்த பௌலிங் அணி என்றால் கண்ணை மூடிக் கொண்டு அது பாகிஸ்தாந்தான் எனச் சொல்லிவிடலாம். அக்தார், குல் என்று வேகமாய்ப் போடும் வீரர்கள் ஒரு புறமிருக்க, அணித்தலைவர் ஆன பின்  பொறுப்புடன் பந்து வீசு மூட்டைக் கணக்கில் விக்கெட்டுகளை அள்ளும் அப்ரிதி மறுபுறம். அவருக்குத் துணையாக ஹபீஸ் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள். எந்தவிதமான பிட்சுகளிலும் பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்கக் கூடிய அணி இது.

பௌலிங்தான் அப்படி என்றால் பேட்டிங்கும் சோடை போகாத அளவு இருக்கிறது. ஆஸ்திரேலியாவிடம் பெற்ற விக்கெட் இழப்பில்லா வெற்றி, இவர்கள் நிதானமாக ஆடினால் எவ்வளவு நன்றாக ஆட முடியும் என்பதற்கான அளவுகோல். பீல்டிங்கில் கொஞ்சம் சுமார்தான் ஆனாலும் அந்த குறையை மறைக்கும் வகையில் பௌலிங்கும் பேட்டிங்கும் இருக்கும் அணி பாகிஸ்தான்.

பாகிஸ்தான் எப்படி பௌலிங்கில் சிறந்த அணி என்று சொல்லுகிறோமோ அதுபோல பேட்டிங்கில் சிறந்த அணி என்றால் இந்தியாதான். சில ஆட்டங்களில் இறுதியில் மடமடவென விக்கெட்டுகள் சரிந்து ஆல் அவுட் ஆனதும் உண்டு என்றாலும் யாரேனும் ஓரிருவர் ஒவ்வொரு ஆட்டத்தில் அடித்துக் கரை சேர்த்துவிடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ரெய்னா, அஷ்வின், கோலி, யுவராஜ் பீல்டிங்கிலேயே 30-40 ஓட்டங்களைத் தடுத்து விடுகின்றனர். அஷ்வின், ஹர்பஜன், சாகீர் நன்றாக பந்து போட்டாலும் மீதி  20 ஓவர்களில் ஏராளமாக ரன் கொடுப்பது வழக்கமாகிவிடுகிறது.

மொகாலி வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் எப்படி மாற்றங்கள் இருக்கும் என்பது சுவாரசியமானதாக இருக்கும். அஷ்வின் நன்றாக பந்து வீசுகின்றார். ஹர்பஜன், ஜாகீர் கட்டாயம் அணியில் இருக்க வேண்டும். முனாப்புக்குப் பதிலாக ஸ்ரீசந்த் வரலாம் என்பது என் எதிர்பார்ப்பு. தன் மாநிலம் என்பதால் இதுவரை சிறப்பாக ஆடிவரும் யுவராஜ் இன்னும் ஒரு ஆட்டநாயகன் விருது வாங்க வேண்டும் என்று நினைப்பார். அக்தார் சச்சினுக்கு பந்து வீசுவது நல்லதொரு போட்டியாக இருக்கும்.

மேற்கிந்திய தீவுகளையும், ஆஸ்திரேலியாவையும் தோல்வியுறச் செய்த அதே வீரியத்துடன் பாகிஸ்தான் ஆடுமானால் வெற்றி அவர்களுக்குத்தான். ஆனால் தொடர்ந்து மூன்று முறை அதுபோல ஆடுவது என்ற கன்சிஸ்டென்ஸி அவர்களுக்குக் கிடையாது. எனவே அவர்கள் சொதப்பலாம். அப்படிச் செய்தால் இந்தியா வெல்லும். அப்ரிதி சச்சினை நூறு எடுக்க விட மாட்டோம் என்று உசுப்பேற்றி விட்டிருக்கிறார். எனவே சச்சின் நூறு அடிக்க நல்ல சந்தர்ப்பம் வாய்க்கலாம்.

மூளை பாகிஸ்தான் வெற்றி என்றாலும் மனம் இந்தியா வெல்லும் என்கிறது.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 28, 2011 @ 11:18 pm