பவர் ப்ளே – சில சிந்தனைகள்
20-20 ஆட்டங்கள் வந்த பின் 50 ஓவர் ஆட்டங்களின் மவுசு குறைய ஆரம்பித்தது. aaஇதில் சுவாரசியத்தைக் கூட்ட செய்த மாற்றங்களில் ஒன்றுதான் பவர்ப்ளே. பவர்ப்ளே மூன்று கட்டங்களாக ஆட்டத்தில் வருகின்றன.
ஒரு அணி பேட்டிங் செய்யும் பொழுது முதல் பத்து ஓவர்களில் 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே இரண்டு ஆட்டக்காரர்கள் மட்டுமே பீல்ட் செய்ய முடியும். அது தவிர இருவர் கட்டாயமாக பேட்ஸ்மன் அருகே கேட்ச் பிடிக்கும் நிலைகளில் இருந்து பீல்டிங் செய்ய வேண்டும் என்பதும் விதி. இது கட்டாயமாக செய்ய வேண்டிய பவர்ப்ளே.
இதைத் தவிர பௌலிங் அணியின் தேர்ந்தெடுப்பில் தொடர்ச்சியாக ஐந்து ஓவர்களும் பேட்டிங் அணியின் தேர்ந்தெடுப்பில் ஐந்து ஓவர்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பவர்ப்ளேக்களாக விளையாடப்படுகின்றது. இவை முறையே பௌலிங் பவர்ப்ளே, பேட்டிங் பவர்ப்ளே என அழைக்கப் படுகின்றன. இவ்விரண்டு பவர்ப்ளேக்களில் 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே மூவர் மட்டுமே பீல்டிங் செய்யலாம்.
பேட்டிங் அணி சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நேரத்தில் பௌலிங் டீம் அவர்களுடைய பவர்ப்ளேயை எடுத்து பேட்டிங் செய்பவர்களை அடிக்க செய்து அவுட் ஆக்க முயற்சிக்கலாம் என்றும், ஆட்டத்தின் கடைசி நேரத்தில் பாட்டிங் டீம் பவர்ப்ளே எடுத்தால் எல்லைக் கோட்டின் அருகே அதிகம் பீல்டர்கள் இல்லாமல் நான்கும் ஆறுமாக ரன் குவிக்கலாம், ஆட்டம் களை கட்டும் என்பதுதான் இவ்விதிகள் வந்ததற்குப் பின்னணி.
ஆனால் இந்த உலகக் கோப்பையில் நடப்பது என்ன? முதல் பத்து ஓவர்கள் முடிந்த உடனே பௌலிங் பவர்ப்ளே எடுக்கிறார்கள். ஒரு அணி கூட இதில் வேறு விதமாக நடந்ததாகத் தெரியவில்லை. ஆக கட்டாய பவர்ப்ளே பத்து ஓவர்களில் இருந்து பதினைந்து ஓவர்களாக நீட்டிக்கப்பட்டது போல்தான் தெரிகிறது. பேட்டிங் அணியினர் அடித்தாடுகிறார்களா, அல்லது ஒன்று இரண்டு என எடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொள்கிறார்களா என்று எதுவுமே இந்த முடிவை பாதிப்பதாகத் தெரியவில்லை.
பௌலிங் பவர்ப்ளேதான் இப்படி என்றால் பேட்டிங் பவர்ப்ளே இன்னுமும் கொடுமை. எப்பொழுது எல்லாம் ஒரு அணி பேட்டிங் பவர்ப்ளே எடுக்கிறதோ அப்பொழுது அடித்தாட வேண்டியது கட்டாயம் என்பது போல தேவையில்லாத ஷாட்களை ஆடி விக்கெட் இழப்பதுதான் நடக்கிறது. பேட்டிங் பவர்ப்ளேயில் சரிவர ஆட முடியவில்லை என்று அதனை எடுக்காமல் வேறு வழியின்றி 45-50 ஓவர்களில் கட்டாயமாக பவர்ப்ளே என்பது போலத்தான் பல ஆட்டங்களில் நடைபெற்று வருகிறது.
34 ஓவர்கள் முடிந்த பின் பந்து மாற்றப்படுவதால் சில அணிகள் அதனைத் தொடர்ந்து பேட்டிங் பவர்ப்ளே எடுப்பதுதான் பெரிய மாற்றம். ஆனால் எனக்கு நினைவில் இருக்கும் வரை பௌலிங் பவர்ப்ளே எல்லா ஆட்டங்களிலுமே 11ஆவது ஓவரில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் சில கேள்விகள் எனக்குண்டு.
· பௌலிங் பவர்ப்ளே எதற்காக கட்டாய பவர்ப்ளே முடிந்த உடனேயே எடுக்கப்பட வேண்டும்?
· இரண்டு பேட்ஸ்மென் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஏன் பேட்டிங் பவர்ப்ளே எடுக்கக் கூடாது?
· கடைசி ஓவர்களில் பல விக்கெட்டுகள் விழுந்த பின் பவர்ப்ளே எடுப்பதை விட பேட்டிங்கில் சிறந்து விளங்குபவர்கள் ஆடும் பொழுது எடுப்பது நல்லதல்லவா?
· பெரும்பாலான அணிகள் மூன்று அல்லது நான்கு பௌலர்களை அணியில் சேர்த்துக்கொண்டு பத்து முதல் இருபது ஓவர்கள் வரை பார்ட் டைம் பௌலர்களைக் கொண்டு போடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் ஆட்டத்தின் நடுவிலேயே பயன்படுத்தப்படுகின்றனர். அவர்கள் பௌலிங் செய்யும் பொழுது பவர்ப்ளே எடுக்கலாமே?
· அப்படி பவர்ப்ளே எடுத்தபின் முக்கிய பௌலர்கள் போடத் தொடங்கினால் அவர்களால் இறுதியில் போட முடியாமல் போகும். அதுவும் பேட்டிங் அணிக்கு நல்லதுதானே?
· பவர்ப்ளேயின் பொழுது பேட்டிங் அணிகள் பெரும்பாலும் கஷ்டப்படுவதைப் பார்த்த பின்னும் பவர்ப்ளே அல்லாத நேரத்தில் எல்லைக் கோட்டின் அருகே இரண்டு மூன்று பீல்டர்களை மட்டுமே நிறுத்திவிட்டு மற்றவர்களை ஏன் அருகே கொண்டு வரக் கூடாது?
ஒரு மாமூலான விஷயமாக இல்லாமல், பவர்ப்ளேயை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வித்தியாசமான சிந்தனை தேவை. அதை நான் இதுவரை அயர்லாந்து அணியினரிடம் மட்டுமே கண்டுகொண்டுள்ளேன். அவர்கள் அதிக அளவு 50 ஓவர் ஆட்டங்கள் ஆடாததினால் புதிய சிந்தனைகளோடு விளையாட வந்திருக்கின்றார்களா ?
சச்சினையும் கோலியையும் ஒரு ஓவர் ஸ்பெல் போட வைத்த தோணி, பவர்ப்ளேயிலும் புதுமைகள் செய்வாரா? அப்படிச் செய்தால் அது எதிரணியை நிலைதடுமாறச் செய்து இவருக்கு ஒரு பெரும்பலத்தைத் தரும் என்பது நிச்சயம்.
>>>>>>பேட்டிங் அணி சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நேரத்தில் பௌலிங் டீம் அவர்களுடைய பவர்ப்ளேயை எடுத்து பேட்டிங் செய்பவர்களை அடிக்க செய்து அவுட் ஆக்க முயற்சிக்கலாம் என்றும்
பவர்ப்ளேயை எடுக்காமலேயே கூட இதனை செய்ய முடியுமே!
எனக்குப்புரிந்தவரை, பவர்ப்ளே என்பது பந்து வீசும் அணிக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு. அந்தக்கட்டுப்பாடு, அணிக்கு எப்போது மிகச்சிறும் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைக்கிறோமோ அப்போது எடுத்தல் புத்திசாலித்தனம். மற்றபடி, இதை ஒரு உத்தியாக நினைக்கலாகாது.
சதீஷ், நீங்கள் ரிவ்யூ கேட்டு தீர்ப்பு உங்களுக்கு சாதகமா இருந்தால், அது கணக்கில் இருந்துக் கழியாது.
சதீஷ்,
ஒவ்வொரு அணிக்கும் இரண்டு ரிவ்யூ வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ரிவ்யூ சாதகமாகும் பட்சத்தில் அது குறைக்கப்படுவதில்லை. உதாரணமாக செவாக் ரிவ்யூ இந்தியாவுக்குப் பாதகமாக அமைந்ததால், ஒரு ரிவ்யூ குறைந்தது. ஆனால் சாதகமான ரிவ்யூக்களால் இந்த குறைப்பு ஏற்படுவதில்லை. எனவே சச்சின் அவுட் என்பது ரிவ்யூவிற்குப் பின் அவுட் இல்லை என்று மாற்றப்பட்டதால் அதனால் நமக்கு மீதம் இருந்த ரிவ்யூக்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை.
In indvspak semi’s match how come we got 3 drs (shwag,sachin.&msd) during our batting while the rule allow only 2.any body can explain pl