Worldcup Final – As it happened
The Match
எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்காமல் நியூசிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி ஒரு புறம். தொடர்ந்து பாகிஸ்தானை உலகக் கோப்பை போட்டிகளில் வீழ்த்திய இந்திய அணி மறுபுறம். தொடக்கம் முதலே நன்றாக ஆடி வரும் இலங்கை அணி. மிக சாதாரணமாகத் தொடங்கினாலும் தேவைப்பட்ட பொழுதெல்லாம் தனது ஆட்டத்தின் தரத்தை உயர்த்திக் கொண்ட இந்திய அணி என்று சமமான இரு அணிகள் மோதும் ஆட்டம். முரளிக்காக இலங்கை அணியும் சச்சினுக்காக இந்திய அணியும் கோப்பையை வெல்ல வேண்டும் என்று இரு அணிகளின் ரசிகர்களும் வேண்டிக் கொண்டிருக்கும் ஆட்டம்.
The Toss
ஆரம்பத்திலேயே குழப்பம். டாஸில் டெய்ல்ஸ் எனக் கேட்டு சங்ககரா தோற்றதாக எல்லோரும் நினைக்க, தான் டாஸில் பூவாத் தலையா எனக் கேட்கவேயில்லை என்று சங்ககரா சாதிக்க, ட்ராமா தொடங்கியது. தோணி அதனைப் பெரிதுபடுத்தாமல் மீண்டும் டாஸைப் போட்டு இந்த முறை சங்ககரா வென்று பேட்டிங் செய்யப் போவதாக முடிவு செய்தார். 1983ஆம் வருடம் இதே போல ஒரு சனிக்கிழமையன்று நாம் டாஸில் தோற்றதுதான் ஆறுதல்.
The Teams
காயம்பட்ட நெஹ்ராவிற்கு பதிலாக அஷ்வின் வருவார் என அனைவரும் எதிர்ப்பார்த்திருக்கையில் வந்தது ஸ்ரீசந்த். இவர் ஒழுங்காகப் போடவேண்டுமே என்ற பயம் எல்லா இந்திய ரசிகர்களின் முகத்திலும் தெரிந்தது. இலங்கை மேத்யூஸ், மெண்டிஸ், ஹெராத் மற்றும் சமர சில்வாவிற்குப் பதிலாக பெரேரா, ரந்திவ், குலசேகரா மற்றும் கபுகடேராவைக் களமிறக்கினர்.
The Lankan Innings
ஜாகீர் மூன்று மெய்டன் ஓவர்களுடன் தொடங்கிய பொழுது இந்திய அணி இந்த ஆட்டத்தை சீக்கிரமே முடித்துவிட வேண்டும் என்று களமிறங்கியது போல் இருந்தது. இந்திய அணியின் பீல்டிங் குறிப்பிடத்தக்க வகையில் பிரமாதமாக இருந்தது. தரங்கா சீக்கிரமே அவுட் ஆகி விட, தில்ஷனும் நன்றாக ஆடத் தொடங்கிய வேளையில் தன் விக்கெட்டை இழந்தார். சங்ககாராவும் ஜெயவர்தனேவும் நன்றாக ஆடி இலங்கை அணி மேலும் விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் நூறு ரன்களைத் தாண்டி கொண்டு சென்றனர். அதன் பிறகு ஒரு பக்கத்தில் தொடர்ந்து விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் ஜெயவர்த்தனே அருமையாக ஆடிக் கொண்டிருந்தார்.
45 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பவர்ப்ளே தொடங்கியது. பவர்ப்ளேக்களில் ரன் எடுப்பதே கஷ்டமாக இருப்பதை இதுவரை கண்டிருந்த ரசிகர்கள் இலங்கை 230-240 ரன்கள் மட்டுமே எடுக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அடுத்த ஐந்து ஓவர்களில் ரன் மழை. 63 ரன்கள் அடித்தார்கள் இலங்கை அணியினர். 50 ஓவர்கள் முடியும் பொழுது 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்திருந்தனர்.
The Century
ஒரு நல்ல வீரரின் அடையாளம் தேவைக்கேற்ற மாதிரி விளையாடுவது. அதற்கு சிறந்த உதாரணம் இன்று ஜெயவர்த்தனே விளையாடிய இன்னிங்க்ஸ். இரண்டு விக்கெட் விழுந்த நிலையில் களத்தில் இறங்கிய அவர் நிதானமாக விளையாடி மேலும் விக்கெட் விழாமல் செய்து அணியை நிலைக்கு கொண்டு வந்து பின்னர் அடித்தாட ஆரம்பித்தார். 84 பந்துகளில் 100 ரன்களை எட்டிய அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு சிறந்த இன்னிங்க்ஸ் என்பதில் சந்தகமேயில்லை.
The Start
இரண்டாவது பாலில் சேவாக் அவுட். 13 பந்துகளில் 18 ரன் எடுத்த சச்சினும் 7ஆவது ஓவரில் அவுட். இதுவரை இருவரும் இவ்வளவு குறைந்த ரன்களுக்கு அவுட் ஆனதே இல்லை. இனி அவ்வளவுதான். நமது மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களுக்கு ஆடவே தெரியாது என்ற விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்க கம்பீரும் கோலியும் நிதானமாக ஆடி சங்ககராவும் ஜெயவர்த்தனாவும் எப்படி இலங்கை அணியை நிதானமாக கரை சேர்த்தார்களோ அப்படி ஆடத் தொடங்கினர்.
The Recovery
எந்த விதமான ரிஸ்கும் எடுக்காமல் அதே சமயம் ரன் ரேட் அதிகம் ஏறிவிடாபது ஒன்று இரண்டு என ரன்களையும் எடுத்து அழகாக விளையாடினர் கம்பீரும் கோலியும். ஆறே ஆறு நான்குகளுடன் 56 பந்துகளில் தனது ஐம்பதை பூர்த்தி செய்தார் கம்பீர். இருவரும் இணைந்து 83 ரன்கள் எடுத்த நிலையில் தில்ஷன் தனது பந்துவீச்சில் அருமையான ஒரு கேட்சை பிடித்து கோலியை அவுட் ஆக்கினார். கம்பீருக்கு நல்ல சப்போர்ட் கொடுத்தாலும் தனது வழக்கமான அடித்தாடும் ஆட்டத்தை ஆட முடியாமல் கஷ்டப்பட்டார் கோலி என்றே சொல்ல வேண்டும். அவருடைய விக்கெட் விழுந்த பின் எல்லா ஆட்டங்களிலும் நன்றாக விளையாடி வரும் யுவராஜ் களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, வந்ததோ தோணி.
இப்படி ஒரு முக்கியமான கட்டத்தில், நல்ல பார்மில் இருக்கும் யுவராஜை விடுத்து தோணி வந்தது சரியா என்று கேள்விகள் சீறத் தொடங்கின. மிக மிக நிதானமாக ஆடத்தொடங்கினார் தோணி. ஆனால் கோலியும் கம்பீரும் ஆடிய மாதிரியே இவர்கள் இருவரும் தொடர்ந்து ஒன்றும் இரண்டுமாக எடுத்து தொடர்ந்து ரன்கள் வருமாறு பார்த்துக் கொண்டனர். இலங்கை அணியின் பீல்டிங் இந்தக் கட்டத்தில் வெகுசுமாராகவே இருந்தது. நான்கு பவுண்டரிகளுடன் 52 பந்துகளில் தனது ஐம்பதைப் பூர்த்தி செய்தார் தோணி.
The Finish
41 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் 52 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இந்தியா. தோணி 60 ரன்களோடும், கம்பீர் 97 ரன்களோடும் களத்தில் இருக்கின்றனர். முதுகுவலி, கால்பிடிப்பு என்று இருவருக்குமே உபாதைகள். ஆனால் 3 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்திருக்கின்றது என்பதால் இந்தியாவிற்குத்தான் சாதகம் என்ற நிலை. அதுவரை நிதானமாக ஆடிய கம்பீர் ஒரு வேகத்தில் பிட்சில் முன்னே சென்று பந்தை தூக்கி அடிக்க முயன்று அவுட் ஆனார். உலகக் கோப்பை இறுதியாட்ட நூறு கனவும் கலைந்தது. நூறைக் கோட்டை விட்டாலும் இது அவருடைய கிரிக்கெட் வாழ்வில் ஒரு முக்கியமான இன்னிங்க்ஸ் என்பதில் சந்தேகமே கிடையாது.
கம்பீரைத் தொடர்ந்து களமிறங்கியவர் யுவராஜ். பாலுக்கு ஒரு ரன் என்ற நிலமையே நீடிக்க கடைசி மூன்று ஓவர்களில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் நன்றாக பந்துவீசிய மலிங்காவின் ஓவரில் தொடர்ந்து ரெண்டு பவுண்டரிகள் அடித்தார் தோணி. அதற்கு அடுத்த ஓவரிலேயே நாலு ரன்கள் தேவையாக இருந்த பொழுது ஆட்டத்தின் மிகப் பெரிய சிக்சரை அடித்து வெற்றிக் கனியைப் பறித்தார் தோணி. வெறும் 79 பால்களில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் அவர்.
அந்த கடைசி சிக்சர் தரையில் விழுவதற்கு முன்பே கொண்டாட்டங்களைத் தொடங்கினார் யுவராஜ். ஆனால் அப்பொழுதும் அதிக அலட்டல் இல்லாமல் ஒரு புன்சிரிப்புடன் இருந்தார் கேப்டன் கூல். இந்திய அணியுடனாட கடைசி ஆட்டத்தில் ஒரு மிகப்பெரிய பாரத்தை இறக்கிய நிம்மதியோடு காணப்பட்டார் இந்திய அணியின் கோச் கேரி க்ரிஸ்டன்.
28 வருடக் கனவு நினைவாக மாறியது. சச்சின் டெண்டுல்கரின் முகத்தில் இதுவரை கண்டிராத ஒரு சந்தோஷம். ஹர்பஜன், யுவராஜ் கண்களில் ஆனந்தக் கண்ணீர். மும்பை ஸ்டேடியத்தில் இருந்த கூட்டம் மொத்தமும் இவர்களோடு ஆனந்தக் கூத்தாடியது. தன் வாழ்வில் மறக்க முடியாத இரவு என்று வர்ணித்தார் சச்சின். மற்ற வீரர்கள் அனைவரும் இது சச்சினுக்காக வென்ற கோப்பை என்று சொல்லிய பொழுது சச்சின் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு தெரிந்தது.
இந்தியா மீது நம்பிக்கை வைத்த ரசிகர்களின் ஆசையை நிராசையாகச் செய்யாமல், கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நம் வாழ்த்துகள்!
>> அதே சமயம் ரன் ரேட் அதிகம் ஏறிவிடாபது <> இந்தியா மீது நம்பிக்கை வைத்த ரசிகர்களின் ஆசையை நிராசையாகச் செய்யாமல், கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நம் வாழ்த்துகள்! <<
நானும் வாழ்த்துகள் சொல்லிக்கிறேன். நன்றாக இருந்தது விமர்சனம். நன்றி!
இதென்ன பின்னூட்டத்தில பாதியை காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு.
Asking Run Rate கட்டுக்குள் வச்சாங்கன்னு தெளிவாக சொல்லுங்கன்னு கமெண்ட் போட்டிருந்தேன். சட்டுன்னு படிக்கும்போது ‘ரன் ரேட்டை கம்மியா வச்சிருந்தா ஏன் பாராட்டறார்’னு தோணுது.