பயணம்
பஞ்ச் வசனமில்லை. பாடல்களோ குத்தாட்டமோ இல்லை. ஆபாச வசனங்கள் இல்லை. ஹீரோ அனாயாசமாக நூறு அடியாட்களை ஒற்றை விரலாலே தூக்கிப் பந்தாடும் பில்டப்கள் இல்லை. ஹீரோயின் கவர்ச்சியாக ஆடிப் பாடவுமில்லை. தனி காமெடி டிராக் இல்லை. இவை இல்லாத தமிழ்த் திரைப்படத்திற்கு வெற்றி இல்லை என்ற சித்தாந்ததை உடைத்தெறிந்திருந்து வந்திருக்கிறது 'பயணம்' திரைப்படம்.
படத்திற்குப் படம் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து திரைக்கதையையும் அழகாகச் செதுக்கி வெற்றிப் படத்தை இயக்கி வரும் ராதா மோகனுக்கும் படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜிற்கும் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துகள்.
சென்னையிலிருந்து டில்லி செல்லும் விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு விமானக் கோளாறு காரணமாகத் திருப்பதியில் தரை இறக்கப்படுகிறது. முக்கிய மந்திரி, திரைப்பட நடிகர் உட்பட எழுபத்தைந்து பயணிகள் கடத்தப்பட்ட விமானத்தில் தீவிரவாதிகளால் அச்சுறுத்தப்படுகிறார்கள். கடத்தல்காரர்களின் தேவைகள் என்ன? என்பதைக் கண்டறிய பிரகாஷ்ராஜ் மற்றும் உயரதிகாரிகளின் தலைமையில் குழு கூடுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மேஜர் நாகார்ஜுனாவும் அழைக்கப்படுகிறார். பயணிகளின் உயிர்ப்பாதுகாப்பு ஒரு புறம், கடத்தல்காரர்களின் கட்டளைகள் ஒருபுறம், அரசிற்கும் பத்திரிகையாளர்களுக்கும் பயணிகளின் உறவினர்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தவிக்கும் இவர்கள் எடுத்த முடிவுகள் என்ன? பயணிகள் காப்பாற்றப்பட்டார்களா? போன்ற பெரும் சஸ்பென்ஸ்களுக்கு அதிரடியாக விடை தருகிறது.
இப்படி ஒரு அருமையான படம் பார்த்து எத்தனை மாதங்களாச்சு. எதைச் சொல்ல? எதைச் சொல்லாமல் விட என்றே தெரியாத அளவு படத்தில் ஏகப்பட்ட சிறப்பம்சங்கள். நாகார்ஜுன், பிரகாஷ்ராஜ், ரிஷி, சானா கான், பிரிதிவிராஜ்(பப்லு),மனோ பாலா, தலைவாசல் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மோகன்ராம், பிரம்மானந்தம், படவா கோபி, ஜெயஸ்ரீ என்று எக்கச்சக்க நட்சத்திரக்கூட்டங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை. அந்தக் கதையைக் கையாண்டிருக்கும் விதமும் நேர்த்தி.
அறுவை சிகிச்சைக்காக வரும் குட்டிப்பெண், கணவரிடம் கோபித்துக் கொண்ட மனைவி, மருமகளின் பிரசவத்திற்குச் செல்லும் மாமியார், மாமனார்,பாதிரியார், கர்னல் என்று ஒவ்வொரு பயணிகளுக்கும் இழையோடும் உணர்வுகள் ஒவ்வொன்றும் சிறுகதைகள். படத்தைப் பார்த்து விட்டு வெளிவரும் போது அனைத்துப் பாத்திரங்களும் மனதில் நிற்பது பாத்திரங்களைப் பார்த்து பார்த்துச் செப்பனிட்ட இயக்குனரின் கடின உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி.
நாகார்ஜுன் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் நடித்திருக்கும் படம். வயதுப்பிள்ளைகளின் தகப்பன் என்று சொல்ல முடியாத அளவிற்கு இளமையான தோற்றம். நடிப்பிலும் அதிக மதிப்பெண்களை அள்ளிக் கொள்கிறார். தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதைத் தொடரலாமே நாகார்ஜுன்?
பிரகாஷ் ராஜ்ஜின் நடிப்பும் அருமை. முடிவெடுக்காமல் பேசிக்கொண்டே இருக்கும் அதிகாரிகளிடமும் தீவிரவாதிகளிடம் தன் இயலாமையையும் கோபத்தையும் காட்டும் இடம் அப்ளாஸ்.
ஷைனிங் ஸ்டாராக பப்லு திரையில் பேசிய பஞ்ச் வசனங்களை ஷாம்ஸ் அவரிடம் பேசி பேசி உசுப்பேற்றுவதும் திரைக்கும் நிஜத்திற்கும் சம்பந்தமில்லை என்று பிரிதிவிராஜ் பரிதவிப்பதும் அட்டகாசமான டைமிங் காமெடி. என்றோ தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் கணவன், கோபித்துக் கொண்ட மனைவியிடம் 'ஷாப்பிங் போயிட்டு வர இவ்வளவு நேரமா?' என்று கேட்கும் கணவன், ரிஷியின் தொலைபேசி எண்ணைக் கேட்கும் சானாகான் என்று அனைவரும் மனதை அள்ளுகிறார்கள்.
விமானம் கடத்தப்பட்ட செய்திகளைப் படிக்கும் போது உச் கொட்டி விட்டு அடுத்த செய்திகளைப் படிக்கப் போகும் வாசகர்களுக்கு படத்தின் பளீர் உண்மைகள் மனதை உறைய வைக்கும்.
டைட்டில் பாடலைத் தவிர படத்தில் வேறு பாடல் இல்லை. அது குறையுமில்லை. ப்ரவீன் மணியின் பின்னணி இசை அட்டகாசம். கலை இயக்குனர்களின் உழைப்பு பெரும்பாலும் வெளியில் தெரியாமலேயே போய் விடுவது அவலம். கலை இயக்குனர் கதிரைப் பாராட்டியே ஆக வேண்டும். விமானமும் விமான நிலையமும் இவரது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டது என்பது நம்பவே முடியாத தத்ரூபம்.
'அழகிய தீயே', 'மொழி', 'அபியும் நானும்' முந்தைய திரைப்படங்களில் இருந்து வேறுபட்ட கதைக்களத்தைத் தெரிவு செய்து திரைக்கதையையும் விறுவிறுப்பாக்கி திரைப்படத்தைக் கண் கொட்டாமல் பார்க்கும் படி செய்திருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். சாதா மோகனில்லை இந்த அசாதாரண சாதனை மோகன். மொத்தத்தில் 'பயணம்' த்ரில்லர் சவாரி.
Well said Gayathri!! I saw the movie after reading your review. I was able to really appreciate your correct comments.
It is rare to hear good tamil reviews now a days and your tamil is really inspiring
May your honest comments continue and let our ears get honey like tamil