கோ – விமர்சனம்
ஒளிப்பதிவாளர் பதவியில் இருந்து இயக்குனராகி விட்ட கே.வி. ஆனந்தின் ஒவ்வொரு படமும் புத்தம் புதுசு. கதைக்களமும் வித வித தினுசு.
'கனா கண்டேன்'- நாகரிகக் கந்துவட்டிக்காரனிடமிருந்து மீண்டு புத்திசாலி இளைஞர் தன் லட்சியத்தை எட்டிப் பிடிப்பது.
'அயன்' – கடத்தல் தொழில் உண்மைகளையும் கதாநாயகனின் கடத்தல் லீலைகளையும் கலகலப்பாகச் சொல்லியிருக்கும் படம்.
கோ- பத்திரிகையாளர்களைப் பெருமைப்படுத்தி வந்திருக்கும் படம். பத்திரிகையாளன் நினைத்தால் மோசமான ஆட்சி தருபவர்களைத் துகிலுரிக்கவும் முடியும். நல்லாட்சி தருபவர்களை அரியணையில் அமர்த்தவும் முடியும் என்பதை அசத்தலாகச் சொல்லி இருக்கும் படம்.
பத்திரிகையாளன் என்றதும் உறக்கமில்லாத கண்கள், தாடி,மூக்குக் கண்ணாடி, சாப்பிட்டு பல நாட்கள் ஆனது போன்ற தோற்றம், ஜோல்னா பை, உண்மையைக் கண்டறிந்ததும் எந்த நேரத்திலும் எதிரியால் வீழ்ந்து விடுபவர்களாகவே திரையில் பத்திரிகையாளர்களைப் பற்றிப் பார்த்துப் பழக்கப்பட்ட கண்களுக்குப் புது பத்திரிகை சொர்க்கத்தைக் கண் முன் காட்டி இருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். பத்திரிகையாளர்களைப் பற்றி உயர்வாகச் சித்திரித்து நிறைய திரைப்படங்கள் வரவில்லை. அந்தக் குறையை 'கோ' தீர்த்துள்ளது.
'தின அஞ்சல்' பத்திரிகையின் துறுதுறு புகைப்படப் பத்திரிகையாளர் ஜீவா அலுவலகத்தில் எல்லாருக்கும் செல்லப்பிள்ளை. இவர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களைப் புகைப்படங்கள் எடுத்து காவல் துறைக்குக் கொடுத்து உதவுகிறார். இதனடிப்படையில் காவலதிகாரிகள் கொள்ளையர்களில் சிலரைப் பிடிக்க ஒரே இரவில் ஜீவா மீடியாக்களில் பிரபலமாகிறார். கார்த்திகாவும் பியாவும் ஜீவாவுடன் பணியாற்றும் திறமையான பத்திரிகையாளர்கள். கோட்டாசீனிவாச ராவ் தன் அரசியல் வாழ்க்கைக்காக 13 வயது சிறுமியை விவாகம் செய்யப் போகும் செய்தியைக் கார்த்திகா வெளியிட அரசியல் விளையாட்டைக் கோட்டா கார்த்திகாவிடம் காண்பிக்க அவருக்குப் பணியை இழக்க வேண்டிய சூழல். இந்தப் பிரச்சினையிலிருந்து கார்த்திகாவைக் காப்பாற்ற ஜீவா மேல் காதல் தோன்றுகிறது. தன் தோழி பியாவின் காதலுக்காகத் தன் காதலை மறைக்கிறார். ஜீவாவும் கார்த்திகாவைத் தான் விரும்புகிறார் என்ற உணமை பியாவிற்குத் தெரிய அவர் விலக இவர்கள் காதல் சுபம்.
தேர்தல் நேரத்தில் 'சிறகுகள்' என்ற அமைப்பு ஊழலற்ற ஆட்சி அமைய போராடுகிறது. அதன் தலைவர் அஜ்மலுக்கு ஜீவாவும் அவரது பத்திரிகையும் உதவுகிறது. ஆளுங்கட்சியின் முதலமைச்சர் பிரகாஷ்ராஜின் நெருக்கடி ஒரு புறம், கோட்டாசீனிவாசராவின் வில்லத்தனம் மறுபுறமாக அஜ்மலை ஜெயிக்க விடாமல் சதி செய்ய இறுதியில் நடந்தது என்ன? என்பன விறுவிறு காட்சிகள்.
ஜீவாவையும் அஜ்மலையும் அழகாகவும் வண்ணமயமாகவும் காட்டியிருக்கிறார் இயக்குனர். நடிப்பிலும் திறமைசாலிகள் என்பதை நிரூபித்திருக்கின்றனர். கார்த்திகாவின் நடிப்பு பரவாயில்லை ரகம். முதல் படம் என்பதால் மன்னிக்கலாம். பியாவின் முகபாவாங்கள், துறுதுறு கண்கள், நடிப்பு கார்த்திகாவை விட அதிக மதிப்பெண்கள் அள்ளிக் கொள்கின்றன. கோட்டாவின் நடிப்பு அபாரம். 'தமிழ்ப்பத்திரிகை தானே, அப்போ தமிழில் பேசு' என்ற நக்கலும் நையாண்டியும் காமெடி கலந்த வில்லத்தனமும் அபாரம். பிரகாஷ் ராஜின் நடிப்பிற்கேற்ற தீனி கிடைக்கவில்லை. இவர் ஒரு நிருபரை அடிக்கும் காட்சி சமீபத்தில் வேட்பாளர் ஒருவரை விஜயகாந்த் அடித்ததையே காட்டுகிறது. சோனாவின் தமிழ்ப் பிரச்சாரமும் குஷ்புவின் பிரச்சாரத்தைக் காப்பியடித்தே எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு நல்ல திரைப்படத்தில் குறைகளும் இயல்பு மீறல்களும் இல்லாமலில்லை. ஒரே கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் சேர்ந்து 'சிறகுகள்' அமைப்பு தொடங்குவது சரிதான். மருத்துவம், சட்டம் எல்லாம் ஒரே கல்லூரியில் கற்றுத் தருவார்களா என்ன? குறைகளைக் களைந்து விட்டுப் பார்த்தால் அட்டகாசமான திரைப்படம் தான். பத்திரிகையாளராக சில காலம் பணியாற்றியதால் இயக்குனர் ஆனந்திற்கு இப்படம் கைவந்த கலையாகியிருக்கிறது. ரிச்சர்ட்.எம். நாதனின் ஒளிப்பதிவு கண்களுக்குக் குளுமையாகவும் அமர்க்களமாகவும் இருக்கிறது. ஹாரீஸ் ஜெயராஜின் இசையும் சுபாவின் பங்களிப்பும் பலம் என்றால் இடைவேளைக்குப் பின் வரும் இரண்டு பாடல்கள் பலவீனம்.
பத்திரிகைத் துறையின் பலம், பத்திரிகையாளனுக்கு இருக்க வேண்டிய சமூகப் பொறுப்பு, நல்லாட்சி அமைய ஒவ்வொரு இளைஞனுக்கும் இருக்க வேண்டிய ஆர்வம் என்று பல்வேறு செய்திகளை அறிவுரைகளாக வழங்காமல் பக்கம் பக்கமாக வசனம் பேச விடாமல் பாத்திரங்கள் வாயிலாக அறிவுறுத்திய இயக்குனர் ஆனந்த்தையும் தயாரிப்பாளரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
'கோ' என்றால் அரசன் என்று பொருள். இந்த அரசன் வசூல்களை அள்ளுவான், பார்வையாளர்களின் உள்ளங்களை வெல்லுவான்.