தெய்வத்திருமகள்

கதையுடனும் பாத்திரங்களுடனும் உருகி மருகி  சிரித்து சிந்தித்து அழுது பல்வேறு உணர்ச்சிகள் மனதிற்குள் நிகழ கண்கள் குளமாக, உள்ளம் கனமாகத் தவித்து ரசித்த அற்புதமான திரைப்படம்.

ஐந்து வயது பெண் குழந்தைக்கும் ஆக்டிசக்குறைபாட்டுடன் இருக்கும் தந்தைக்குமான கதை. வளரும் குழந்தையை ஆரம்பப் பள்ளி சேர்க்கும் வரை தட்டுத் தடுமாறி வளர்த்து விடுகிறார் வளர்ந்த குழந்தையான விக்ரம். குழந்தையைக் கொடுத்து விட்டு இறைவனடி சேர்ந்த மனைவி இல்லாத குறை தெரியாமல் வளர்க்கும் இவரிடமிருந்து குழந்தையின் தாத்தாவின் குடும்பம் தந்திரமாக ஏமாற்றிக் குழந்தையைப் பிடுங்கிக் கொண்டு போகிறது. குழந்தையின் பிரிவு தந்தைக்கும் தந்தையின் பிரிவு குழந்தைக்குமாக வழக்கறிஞர் அனுஷ்காவின் துணையுடன் நீதிமன்றத்தில் நியாயத்திற்குப் போராடுகிறார். நியாயம் கிடைத்ததா? குழந்தையும் விக்ரமும் ஒன்று சேர்ந்தார்களா? உருகாதார் உள்ளத்தையும் உருக வைக்கும் இறுதிக்காட்சி.

கிருஷ்ணாவாக விக்ரமும் அவரது பெண் நிலாவாக சாராவும் முதன்மைப் பாத்திரங்கள்.  'இராவணன்' படத்தில் மனிதர் ஏமாற்றி விட்டாரே என்று வருத்தத்தில் இருந்தேன். அவரும் என்ன செய்வார் இயக்குனர் சொன்னதைத் தானே செய்தார். இந்தப் படத்திற்காக விக்ரமின் உழைப்பைப் பாராட்டியே ஆக வேண்டும். பேச்சு, நடை, நடவடிக்கை என்ற அனைத்திலும் ஆக்டிசைக்குறைபாடு, இதை நடிக்க மிகுந்த பயிற்சி எடுத்து சிரமப்பட்டிருக்க வேண்டும். தேசிய விருதுக்குத் தைரியமாகக் காத்திருக்கலாம். அவ்வளவு அற்புதமான நடிப்பு.  குட்டிப் பெண் சாராவும் இவரது மகளாகவே வாழ்ந்திருக்கிறார். அப்பாவைப் பிரிந்த இவர் நிலாவுடன் பேசுவதும் நீதிமன்றத்தில் சீரியஸாக வாதாடிக் கொண்டிருக்கும் போது சைகையால் பாசத்தைப் பகிர்ந்து கொள்ளும் விதமும் அள்ளல். 

அனுஷ்காவிற்கு அருமையான பாத்திரம், விக்ரமிற்கு உதவும் வழக்கறிஞர் வேடம், அழகாக நடித்து ரசிகர்களை ஈர்க்கிறார்.  நீதிமன்றத்தில் பழுத்த அனுபவசாலி நாசருடன் மோதும் காட்சிகள் பலே.கவர்ச்சியாகப் பயன்படுத்தாமல் இயல்பாய்க் காட்டியது மகிழ்ச்சி.

என்ன ஒரே ஒரு குறை, விக்ரம் இடிக்குப் பயந்து அனுஷ்காவைக் கட்டிப் பிடித்தவுடன் 'பாடவா டூயட் பாடலை' என்று கனவுக்காட்சிக்குப் போனது தான் நெருடல். இயக்குனரை விக்ரமிற்கும் அனுஷ்காவிற்கும் ஜோடிப்பாடல் வைக்கச் சொல்லி  யாரேனும் நச்சரித்தன் விளைவாக இருக்கலாம். ஆனால் பாடலும்  படமாக்கிய விதமும் அனுஷ்காவும் அவ்வளவு அழகு. நீரவ்ஷாவின் ஒளிப்பதிவைக் குளிரக் குளிரப் பாராட்ட வேண்டும். அமலாபால் சில காட்சிகளில் வந்தாலும் கூட நிறைவான பாத்திரம். நல்ல வேளை இவரும் விக்ரமுடன் கனவுக்காட்சிக்குச் செல்லவில்லை.

சந்தானத்தின் கதையுடன் இயைந்த நகைச்சுவை இதம். இரட்டை அர்த்த வசனங்கள் வாய்மொழியாதது மிகப்பெரிய ஆறுதல். மற்றபடி நாசர், எம்.எஸ்.பாஸ்கர், விக்ரமின் தோழர்கள், குழந்தையின் தாத்தா,அனுஷ்காவின் தோழி, அவரைச் சுற்றும் வக்கீல் காதலர் போன்ற அனைவரும் கதைக்குத் தேவையான விகிதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பெரிய கண்களுடன் விக்ரமை வெறுக்கும் அந்தச் சிறுவனும் மனதில் பதிகிறான்.

'மதராசப்பட்டணம்' திரைப்படத்திலேயே தன்னை நிரூபித்த இயக்குனர் விஜய் இதில் ஒரு படி மேலே போயிருக்கிறார். 'ஐயாம் சாம்' படத்தின் தழுவல் என்று குறை கூறினாலும் தமிழுக்கேற்ப கதையை அமைப்பதற்கும் திறமை வேண்டும். மென்மேலும் சிறந்த படங்களைத் தர இந்தப் படத்தின் வெற்றிகளும் விருதுகளும்  இயக்குனருக்கு ஊக்கத்தைத் தரட்டும். ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை அற்புதம். பாடல்கள் அனைத்துமே அற்புதம்.

'ஒரே ஒரு ஊர்லே' பாடல் குழந்தைகளைக் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை.  

வசனங்களும் அத்தனை யதார்த்தம். 

'அம்மா ஏம்பா சாமிகிட்டே போயிட்டாங்க? சாமிக்கு அம்மா இல்லையா?’ போன்ற அழகான இயல்பான வசனங்கள், நீதிமன்றக்காட்சிகளிலும் நிதானத்தை மீறாத வசனமழை கதையுடன் ஒன்ற வைக்கிறது.  இயல்பை மீறாத காட்சி அமைப்புகள், பாத்திரத்தேர்வு, நடிக-நடிகர்களின் தேர்ந்த நடிப்பு , அருமையான இசை, அட்டகாசமான ஒளிப்பதிவு,  மனதைப் பிசையும் கதை, திரைக்கதை, நல்ல இயக்கம் என்று அனைத்தும் ஒரு சேரப் பெற்ற நல்ல திரைப்படம். சில குறைகள் இருந்தாலும் அவை படத்தின் நீரோடை போன்ற தெளிவான ஓட்டத்திற்கு  எந்தத் தடையும் தரவில்லை. 

தெய்வத்திருமகள்-வெற்றித்திருமகள்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : July 28, 2011 @ 10:02 am