உறுமி

வரலாற்றை அடிப்படையாக வைத்த கற்பனைக் கதைகள் சுவாரஸ்யமாகவே இருக்கும். மற்ற கற்பனைகளைப் போலல்லாது இது போன்ற கற்பனைகளில் பல்வேறு விஷயங்களில் கவனத்துடன் செயல்படவேண்டியிருக்கும். திரைப்படத்தில் பயன்படுத்தும் மொழியில் இருந்து, உடைகளில் இருந்து, இடங்களில் இருந்து என ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்துடன் செய்யவேண்டும். வரலாற்றுப் புனைவுகளில், ஓர் உண்மைச் சம்பவத்தை எடுத்துக்கொண்டு, அதில் கற்பனையைக் கலப்பதில் என் ரசனையில் சிறந்த படம் ‘ஹே ராம்.’ காந்தியைக் கொன்றவர் கோட்ஸே என்பது வரலாறு. ஆனால் காந்தியைக் கொல்ல சாகேதராமும் முயன்றார் என்பது கற்பனையின் உச்சமாகிவிடுகிறது. இன்னொரு முக்கியமான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்.’ இத்திரைப்படம் வரலாற்றின் கடந்த காலத்தை நிகழ்காலம் வரை நீட்டித்து ஒரு புதிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உறுமியும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படமே.

வாஸ்கோ ட காமா முதன்முதல் இந்தியாவில் 1498ல் கோழிக்கோடு வந்தபோது, இந்திய மன்னவர்கள் வழக்கம்போல நல்ல வரவேற்பையே அளித்தார்கள். ஆனால் அது தொடரவில்லை. அவரிடம் இருந்து பொன்னையும் பொருளையும் எதிர்பார்த்த இந்திய அரசர், அவர் கொண்டு வந்து ஏமாற்றப்பார்த்த விலை மதிப்பே இல்லாத பொருள்களில் ஏமாறவில்லை. மேலும், அவரது வணிகம் தங்களுக்குப் பாதகமாக அமையுமே என இஸ்லாமிய வணிகர்களும் அவரைப் புறக்கணித்தார்கள். வேறு வழியின்றி விலைமதிப்பற்ற பொருள்களை வரியாகக் கொடுத்து, இங்கிருந்து மிளகு உள்ளிட்ட பொருள்களை வாங்கிச் சென்றார் காமா. வாஸ்கோ ட காமாவுக்கு அவரது நாடான லிஸ்பானில் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பதவிகளும் அளிக்கப்பட்டன.

இரண்டாவது தடவையாக வாஸ்கோ ட காமா 1502ல் மீண்டும் கோழிக்கோடு வருகிறார். இந்த முறை 20 கப்பல்களில் ஆயுதமேந்திய வீரர்களின் பாதுகாப்புடன் வருகிறார். இஸ்லாமியர்கள் மீது கடும் வெறுப்புக் கொண்டிருந்த காமா, அங்கிருக்கும் இஸ்லாமியர்களை ஒழித்துக் கட்டவேண்டும் என்று இந்திய அரசரிடம் தெரிவிக்கிறார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. காமா கடற்கரையையும் சில வீடுகளையும் ஒழித்துக்கட்டிவிட்டு, மெக்காவிலிருந்து திரும்ப வரும் ஒரு கப்பலையும் சிறை பிடிக்கிறார். அந்தக் கப்பலில் இருந்தவர்கள் பெரும்பாலும் இஸ்லாமிய வணிகர்கள். அவர்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள தங்கள் நகைகளையெல்லாம் தருவதாகச் சொல்லியும், அவர் மசியவில்லை. ஹிந்து அரசர் ஒரு நம்பூதிரியை தூதாக அனுப்பி வைக்கிறார். அந்த நம்பூதிரியை ஒற்றன் என்று சொல்லி,  அவரது காதையும் மூக்கையும் அறுத்ததோடல்லாமல், ஒரு நாயின் காதை வைத்துத் தைத்து அனுப்புகிறார் வாஸ்கோ ட காமா. அதோடு தான் சிறைப்பிடித்த அந்தக் கப்பலுக்குத் தீ வைக்கிறார். நான்கு நாள்கள் எரிந்து அக்கப்பல் கடலில் மூழ்குகிறது. அனைவரும் செத்துப் போகிறார்கள். இந்தியாவிலும் காமாவின் படுகொலைகளும் வெறியாட்டங்களும் தொடர்கின்றன. அப்பாவி பொதுமக்களையும் அப்பாவி முஸ்லிம்களையும் கொன்று குவிக்கிறார் காமா. ஒட்டுமொத்த போர்த்துகீசிய வணிகத்துக்கு இஸ்லாமியர்கள் போட்டியாக இருப்பதும், முதல்முறை இந்தியா வந்தபோது இஸ்லாமிய வணிகர்கள் அவரைப் புறக்கணித்ததும் அவரது வெறுப்புக்குக் காரணமாக இருந்திருக்கவேண்டும். அதோடு தங்கள் உலகளாவிய வணிகத்துக்கு முன் எல்லா நாடுகளும் அடிமை நாடுகளே என்ற எண்ணமும் காரணமாக இருந்திருக்கவேண்டும். இப்படி ஓர் எண்ணத்தைக் காரணமாகக் கொள்ளாமல், காமா போன்ற வைஸ்ராய்கள் நிகழ்த்திய எண்ணற்ற கொடுமைகளுக்கு விடை காண முடியாது.

3வது முறையாக வாஸ்கோ ட காமா இந்தியா வருவது 1524ல். வந்த சில தினங்களில் நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார்.

இந்த மூன்று உண்மை நிகழ்வுகளையும் வைத்துக்கொண்டு கதை பின்னியிருக்கிறார் சந்தோஷ் சிவன். நம்பூதிரி தூதுக்குப் போகும்போது, அரசரின் மகன் ஒருவனும் கூடப் போகிறான். அரசன் என்றால் பெரிய அரசனெல்லாம் இல்லை. குறு மன்னன் போல. அந்த மன்னன் தன் மகனையும் நம்பூதிரியையும் காப்பாற்ற கப்பலுக்குச் செல்கிறான். அங்கேயே வாஸ்கோ ட காமாவால் கொல்லப்படுகிறான். அவனது மகன் தப்பித்துவிடுகிறான். தப்பி கரைக்கு வரும்போது, கப்பலில் செத்துப் போனவர்களுக்கு இடையே ஒரே ஒருத்தி மட்டும் தங்கள் நகைகளை எல்லாம் கைகளில் ஏந்தி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள். அந்த நகைகளை வாங்கி அவற்றை உருக்கி ஓர் உறுமியாகச் செய்துகொள்கிறான். அது உறுமி மட்டும் அல்ல. அனைத்து மக்களின் உயிர் மூச்சு. அவனுக்கு உணவும் தங்க இடமும் அளித்து உதவுகிறான் ஒரு இஸ்லாமியத் தமிழ்ச் சிறுவன். இருவரும் வளர்ந்து எப்படி வாஸ்கோ ட காமாவை எதிர்கொண்டார்கள் என்பது கதை. அனைத்து மக்களின் ஓர் அடையாளமாக, குறியீடாக உறுமியை மாற்றியது சந்தோஷ் சிவனின் கற்பனைச் சாதனை.

இஸ்லாமியர்கள் கொல்லப்படவும் அவர்களின் வழித்தோன்றல்களில் ஆயிஷா என்னும் பெண்ணும் பரங்கியரை அழிப்பதையே தனது குறிக்கோளாகக் கொள்கிறாள். இவளும் அரசனின் மகனும் ஒன்று சேர்கிறார்கள். இதற்கிடையில் யார் தம்புரான் ஆவது, கூட இருந்தே நடக்கும் குழி பறிப்புகள் எனச் சிற்சில கிளைக்கதைகள். காதலும் உண்டு

கதை என்ற அளவில் மிகச் சிறப்பாகவே யோசித்திருக்கிறார் சந்தோஷ் சிவன். படத்தின் மிக முக்கிய பலம் அதன் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் இயக்குநராகும்போது எழும் சிக்கலே இப்படத்தின் பெரிய பலவீனம். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற எண்ணமே சந்தோஷ் சிவனுக்கு மேலோங்கியிருக்கிறது. அது ஒட்டுமொத்தமாக எப்படி சுவாரஸ்யாமான திரைப்படமாகிறது என்பதில் கொஞ்சம் சறுக்கிவிட்டார். இதனால் காட்சி காட்சியாக திரைப்படம் ஓடுவது போல ஓர் எண்ணம் தோன்றிவிடுகிறது. இத்தனைக்கும் ஒரு தெளிவான, சுவாரஸ்யமான கதை கையில் இருக்கிறது. ஏகப்பட்ட நீளமான காட்சிகள் நம் பொறுமையைச் சோதிக்கின்றன.

வாஸ்கோ ட காமாவை எதிர்த்த அரசனின் வழித்தோன்றல்கள் என்று காண்பிக்க எல்லா இடங்களிலும் ஆர்யாவையும் பிரிதிவி ராஜையும் நித்யா மேனோனையும் ஜெகதியையும் காண்பிக்கிறார்கள். இது ஒரு பெரிய குழப்பத்தையும், இவர் அவரா அவர் இவரா என்ற தேவையற்ற தேடலையும் ஏற்படுத்தி வைக்கிறது. அதிலும் வித்யா பாலன் ஒரு பாடல் காட்சிக்கு வருகிறார். சாதாரணப் படம் என்றால் குத்துப் பாட்டு என்று சொல்லிவிடலாம். இது வரலாற்றுப் படம் என்பதால் இப்பாடல் காட்சியை ஃபாண்டசி திரைப்படங்களில் வரும் மிஸ்டிகல் காட்சி என்று வகைப்படுத்தவேண்டும்! இந்த வித்யா பாலனும் நிகழ்காலத்தில் வருகிறார். ஒரு வரலாற்றுத் திரைப்படம் இப்படி மாவீரன்லு மாதிரி ஆகாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம். தங்களின் வரலாற்றை அறியாமல் சுரங்கம் தோண்டுவதற்கு தங்கள் இடத்தை விற்க வரும் பிரிதிவி ராஜும் பிரபு தேவாவும் மனம் திருந்தி அந்த இடத்தை விற்க மறுப்பதுதான் ஒரு வரிக் கதை. அது ஏன் என்பதற்கே வரலாற்றுக் கண்ணோட்டத்திலான இத்தனை பெரிய பதில். அல்லது வரலாற்றுக் கண்ணோட்டத்தைச் சொல்ல ஓர் உத்தி. என்ன, உத்தி கொஞ்சம் சுத்தி சுத்தி அடிக்கிறது.

9 பாடல்களாம். நான் 5 பாடல்களை மட்டும் ஓட்டியது நினைவிருக்கிறது. இது போன்ற படங்களுக்கு பாடல்களே சாபக்கேடு. படத்தோடு ஒன்றி வருமாறு பாடல்களை அமைக்காமல் எல்லா இடங்களிலும் பாடல்கள். இதனைத் தவிர்த்திருந்தால் அரை  மணி நேரம் மிச்சமாகி இருக்கும். இன்னொரு விஷயம், அநியாயத்துக்கு எல்லாரும் ஸ்லோ மோஷனில் நடக்கிறார்கள். ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். சண்டை போடுகிறார்கள். அதை எல்லாம் சாதாரணக் காட்சிகளாக அமைத்திருந்தாலே இன்னும் ஒரு 20 நிமிஷம் மிச்சப்படுத்தியிருக்கலாம்.

சரியாம ட்ரிம் செய்யப்பட்ட திரைக்கதையையும், சவ்வாக இழுக்காமல், தனது ரசனையைப் பின்னுக்குத் தள்ளி எது தேவையோ அதனை மட்டும் வைத்துப் படம் பண்ணியிருந்தால் மிக முக்கியமான வரலாற்றுப் புனைவாக இப்படம் பதிவாகியிருக்கும். இப்போது வரலாறு மட்டுமே படத்தில் எஞ்சி படம் என்னும் அனுபவம் காணாமல் போய்விட்டது. 

பிரிதிவி ராஜ் சிறப்பாகவே நடித்திருக்கிறார். பிரபு தேவாவைப் பார்க்கவே சிரிப்பாக வருகிறது. அவர் சீரியஸாக நடிக்கும் காட்சிகளிலும் சிரிப்பே வருகிறது. ஜெகதி – அட்டகாசம். ஆர்யா ஊறுகாய். 15ம் நூற்றாண்டுகளில் வரும் மலையாளமாக வரும் மொழி வசீகரிக்கிறது. இதுதான் சரியான மலையாளமா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் வசீகரிக்கிறது. ஆயிஷாவாக வரும் ஜெனிலாவின் திரைவாழ்க்கையில் இப்படம் ஒரு மைல்கல்லாக அமையும். அட்டகாசமான கதாபாத்திரம், அருமையாகச் செய்திருக்கிறார். 

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு – பிரம்மாண்டம், அற்புதம், அழகு. சிறிய சிறிய காட்சிகளுக்கெல்லாம்கூட உயிரை விட்டு எடுத்திருப்பது புரிகிறது. படத்தோடு தொடர்பே இல்லாத சிறிய சிறிய காட்சிகளையெல்லாம் பொறுக்கி எடுத்து ஒரு வீடியோவாக்கினால் அதனையே மெய்மறந்து பார்த்துக்கொண்டிருக்கலாம். யானைக்கு உணவளிக்கும் ஷாட், அடிக்கடி சேவலோ கோழியோ வாத்தோ படபடக்கும் காட்சி, அருவியில் நீர் விழும் காட்சி, அதிகாலை மற்றும் பொழுது சாயும் காட்சிகள் என மனதை கொள்ளை கொள்ளும் ஒளிப்பதிவுக்காகவாவது இப்படத்தைப் பார்க்கவேண்டும்.

ஒளிப்பதிவாளர்கள் இயக்குநர்கள் ஆகும்போது ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றுவதை ஒதுக்கி வைத்துவிட்டு, அதைவிட ஒட்டுமொத்தமாக திரைப்படத்தைப் பற்றி யோசிப்பது அவர்களுக்கு நல்லது. இல்லையென்றால், அழகான முயற்சி இப்படி அதற்கான நியாயத்தைப் பெறாமலேயே போய்விடும். 

ஏற்கெனவே, 15ம் நூற்றாண்டில் அரசர்கள் பேண்ட் போன்ற கீழ் உடையையும் அங்கி போன்ற மேல் உடையையும் கேரளத்தில் அணிந்திருக்கவில்லை என்றும், கேரளப் பெண்களுக்கு கச்சை அணியும் பழக்கம் அப்போது இருந்திருக்கவில்லை என்றும், ஹிந்து அரசர்கள் முடியை விரித்துப் போட்டுக்கொண்டு நடப்பதில்லை என்றும் விமர்சனங்கள் வந்துவிட்டன. ஒரு வரலாற்றுப் படத்தில் இதையெல்லாம் கவனமாகச் செய்வது முக்கியம். ‘தேவதை’ திரைப்படத்தை எடுப்பதற்கு முன்பாக, அந்தக் காலத்தில் அரசர்கள் எப்படி இருந்தார்கள் என்று டிராட்ஸ்கி மருதுவுடன் ஆய்வு செய்ததாக நாசர் சொன்னது நினைவுக்கு வருகிறது. திருவிழாக் காலங்கள் அல்லாமல் வேறு காலங்களில் அரசர்கள் மேலங்கி அணிவதில்லை, ஊர் மக்களும் மேலங்கி அணியாமல் துண்டையே அணிந்திருந்தார்கள் என்பதால் அப்படியே தேவதை திரைப்படத்தையும் எடுத்திருந்தார் நாசர்.

உறுமி தமிழில் வருகிறது என்று சொல்லியிருக்கிறார் சந்தோஷ் சிவன். டப்பிங்கில் தமிழில் விதவிதமாகப் பேசிக் கொன்றுவிடுவார்களோ என்று அச்சமாக உள்ளது. எனவே ஆங்கில சப் டைட்டிலோடு மலையாளத்தில் பார்ப்பதே நல்லது. வேறு வழி இல்லாதவர்களுக்கு தமிழ் உறுமியான ‘15ம் நூற்றாண்டு உறை வாள்’தான் ஒரே வழி.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “உறுமி

 • August 9, 2011 at 8:26 am
  Permalink

  அன்புள்ள ஹரன்,

  சமீபத்தில் நான் ரசித்த மலையாளப் படங்களில் ஒன்று Traffic. அதன் சினிமா மொழி என்னைக் கவர்நதது என்றால் பிரமிக்க வைத்தது ‘உறுமி“ ! இதற்கு ஒரு வருடம் முன்பு வந்த பழசிராஜா, கொஞ்சம் ஒளியுட்டி, நேர்கோட்டில் சித்தரிக்கப்பட்ட வரலாறு – புனைவைக் காணவில்லை. வரலாற்றில் புனைவை நேர்த்தியாகக் கலந்து, தேர்ந்த தொழில்நுட்பத்துடன் கண்டதும், உலக அரங்கில் தற்போதைய மலையாள சினிமாவின் முகம் என்றே வியந்தேன். உங்கள் விமர்சனம் படிக்க நேர்ந்தது.

  முதலில் சில நெருடல்கள். ஒரு வேளை உங்களை subtitle தவறவிடச் செய்திருக்கலாம். துாதுக்குப் போவது சாமூத்ரியின் மகன் அல்ல. படைத் தலைவனின் மகன். அதுபோல், ஆயிஷா கொல்லப்பட்ட முஸ்லிம்களின் வழித்தோன்றல் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அல்ல. அவள் ”அறய்ககல்” என்ற தனிப் பிரதேசத்தின் அரச குமாரி ( திருவிதாங்கூர் மன்னர் வழி போல அவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஒரு இஸ்லாம் சிற்றரச பரம்பரை ). கதையின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொள்ள இந்த புரிதல் உதவும்.

  ”தங்களின் வரலாற்றை அறியாமல் சுரங்கம் தோண்டுவதற்கு தங்கள் இடத்தை விற்க வரும் பிரிதிவி ராஜும் பிரபு தேவாவும் மனம் திருந்தி அந்த இடத்தை விற்க மறுப்பதுதான் ஒரு வரிக் கதை.” – ஒற்றைப்படையாக மிகவும் குறுக்கிவிட்டீர்கள் ! கதை நடந்த காலத்தின் அனைத்து கதை மாந்தர்களுக்கும் சமகாலத்திலும் பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐந்து நுாற்றாண்டுகள் தாண்டியும் அதே மனப்பான்மை பிசகாமல் பிரதியெடுக்கப்படும் சோகம் இங்கு நிகழ்கிறது. அன்று நாடு பிடிக்க வந்த காமாவின் வாரிசு, இன்று பன்னாட்டு கம்பனியின் அதிகாரியாக வருகிறான். அவர்களுக்கு அன்று அடிமைகளாக உதவியர்கள் இன்று தொழில் முறையில் உதவுகிறார்கள். சந்தோஷ் சிவன் சொல்ல வந்தது இதுவே.

  slow motion காட்சிகளால் சலிப்படைகிறீர்கள். இதைத் தவிர்த்து, பாடல்களையும் குறைத்தால் 25 நிமிடம் வரை மிச்சப்டுத்தலாம் தான். ஆனால், இத்தனைக்கு பிறகும், தான் குறைவற்ற வீரியத்தோடு காட்சிப்படுத்தினேனா, மனதில் கண்ட காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறேனா என்று தவிக்கும் அந்த கலைஞனின் சோகமுகம் தான் எனக்குத் தெரிகிறது. தனது இத்தனை வருட அனுபவத்தை, உழைப்பாகச் செலுத்தியிருக்கிறார் சந்தோஷ் சிவன் !

  வித்யாபலன் ஒரு ஆரக்கிள் பாத்திரம் என்று நினைக்கிறேன்..

  ஹரன், “ சலனம்.. சலனம் “ என்ற பாடலை ஒடவிடவில்லையே நீங்கள்..?

  அன்புடன்,
  வினோத்

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 8, 2011 @ 2:20 pm