ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை!

மீண்டுமொருமுறை கூடங்குளம் கொதிநிலையை அடைந்துள்ளது. இந்தமுறை இன்னும் அதிக வேகம் இன்னும் அதிக வெப்பம். இது இறுதிகட்ட வாய்ப்பு என்பதை மக்கள் உணரந்துள்ளனர். கேள்விப்பட்டவரை அனைத்து தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் பல தரப்பு மக்களும் ஒன்றாய் நின்று தங்கள் எதிர் குரலை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். வயிறு வற்றிப்போய் மனம் பசித்துக் கொண்டிருக்க 140 பேர் பத்தாம் நாளாக உண்ணாவிரதத்தில் இருக்கின்றனர், சிலர் நீர் கூட அருந்தாமல். ஊடகங்களோ பட்டும் படாமல் இதை வெறும் ஒரு பத்தி செய்திக் குறிப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. 

பலரும் ஏதோ திடீரென இந்தப் போராட்டம் உதித்துவிட்டதாக நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். கூடங்குளம் அணு உலை திட்ட நிலையில் இருக்கும்போதிலிருந்தே அதற்கு எதிர் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துபிட்டன. அப்போது நடந்த மக்கள் குறை கேட்கும் கூட்டங்கள் மிகச் சாதுர்யமாக அணு உலை அமைக்கப்படும் இடத்திற்கும் 87 கிலோ மீட்டர்கள் தள்ளி நடத்தப்பட்டன. மக்களுக்கும் நம் அரசுக்குமான தூரத்தின் சிறிய அளவைதான் அந்த 87 கி.மி. ஒரு மீனவனாக, ஒரு ஏழை பனையேறியாக, மழை பொய்த்துப்போன மண்ணிலும் ஏதேதோ விளைத்துக்கொண்டிருக்கும் ஒரு விவசாயியாக, ஒரு தினக்கூலியாக இருந்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் அவர்களுக்கு அது எண்பத்தேழாயிரம் கிலோமீட்டர்கள் என. இருந்தும் மக்கள் கூட்டமாய் சென்று தங்கள் எதிர்ப்பை அப்போதே பதிவு செய்தனர். தொடர்ந்து அணு ஆலை திட்டம் ஒவ்வொரு மைல்கல்லையும் தொடும்போதும் போராட்டங்கள் நடந்துகொண்டேயிருந்தன. பலரும் மதில்மேல் பூனையாய் இருந்துவந்தனர் என்பதுவும் உண்மை. சிலர் ஒரு ”தொழிற்சாலை” புதிதாய் வருவதால் நமக்கு இலபம்தானே, வேலைகள் கிடைக்குமே பூமி விலை ஏறுமே என தற்காலிக இலாபங்களை எண்ணி மௌனமாயிருந்தனர். ஃபுக்குஷிமா பேரழிவுக்குப் பின் எல்லோரும் ஒன்றாய் விழித்துக்கொண்டுள்ளனர்.

மார்ச் 11ல் ஜப்பானை உலுக்கிய 9ரிக்டர் நிலநடுக்கத்தினாலும் அதில் விளைந்த ஆழிப்பேரலைகளினாலும் ஃபுக்குஷிமாவின் அணுசக்தி ஆலை இடிபட்டு, அங்கிருந்த அணு உலைகளை குளிரூட்டச் செய்யும் கருவிகள் செயலிழந்து மூன்று உலைகள் 2800 டிகிரி செல்ஷியஸுக்கும் மேல் வெப்பமடைந்து வெடித்துச் சிதறின. இதில் ஃபுக்குஷிமாவுக்கும் 20 முதல் 25 கி,மி சுற்றளவு வரைக்கும் மெல்லக் கொல்லும் கதிரியக்கப் பொருட்கள் வெடித்துப் பரவின. மிகுந்த குளறுபடிகளுக்குப் பின் இந்தப் பகுதிகளில் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பலர் கிடைத்த வழிகளில் இடங்களை விட்டு வெளியேறினர். ஆறுமாதங்களுக்குப் பின்னும் இன்னும் பலரும் தம் பழைய குடியிருப்புகளுக்கு திரும்பி வர முடியாமல் உள்ளனர். திரும்பி வந்த சிலரும் அன்றாட வாழ்வின் சின்னச் சின்ன தேவைகளையும் அவநம்பிக்கையுடனும் சந்தேகங்களுடனும் செய்யவேண்டிய நிலையிலுள்ளனர். பலரும் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி மீண்டும் ஒருவர் ஒருவராக ஊரைவிட்டு ஓடிப்போய்க்கொண்டிருக்கின்றனர், தீவிர மன உளைச்சலுக்குள்ளாகி பலரும் சாவை எண்ணிக்கொன்டிருக்கின்றனர், செத்துப் போவதே மேல் எனத் தங்கள் வாழ்க்கையையே முடித்துக்கொண்டுள்ளனர், இவற்றில் பலர் விவசாயிகள். 

ஃபுக்கொஷிமாவைச் சுற்றி மண் முதல் விண்வரை கதிரியக்கம் பரவியுள்ளது. பள்ளிகளில் மைதானங்களின் மேற்பரப்பில் 50 சென்டிமீட்டர்வரைக்குமான மண்ணை அள்ளி அப்புறப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்,  குழந்தைகள் எப்போதும் முகக் கவசமணிந்துகொண்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் விளையும் எந்த காய்கனியையும் யாரும் உண்ண முடியாது. அங்கிருக்கும் காடுகளின் இலைகளில் கதிரியக்கம் ஊடுருவியுள்ளது, அவற்றை உண்ணும் கால் நடைகள் வழியாக மனிதர்களுக்கும் கதிரியக்க தாக்கம் வருகிறது. இன்னும் எரிந்துகொண்டிருக்கும் அணு உலைகளில் வெப்பத்தை குறைக்க நீரை இறைத்துக்கொண்டேயிருக்கிறார்கள், அது பெரும் நீராவி மேகமாக மேலெழும்புகிறது அவற்றிலும் கதிரியக்கம் ஊடுருவியுள்ளது. அது மேகமாக பல இடங்களுக்குச் செல்லும் அபாயம் நிலவுகிறது. உலகின் மிகப் பெரிய அணுசக்தி உலை வெடிப்பாகக் கருதப்படும் செர்னோபில் விபத்தைவிட ஃபுக்கொஷிமாவின் பாதிப்பு பெரிதானது என கருதப்படுகிறது. ஏறத்தாள 966கி,மீ சுர்றளவில் நிலம் வாழத்தகுந்ததில்லை என சில ஆதாரங்கள் சொல்கின்றன. 50 கி,மீ வரையிலும் நேரடி பாதிப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால் ஆறுமாதங்கள் ஆகியும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் அரசுகளும் தலையிட்டும் ஃபுக்குஷிமாவில் ஏற்பட்டிருக்கும் கதிரியக்கத்தின் துல்லிய அளவையோ அதன் பின்விளைவுகளையோ யாராலும் அறிய முடியவில்லை.

கதிரியக்கம் என்பது கண்ணுக்குத் தெரியாத அலையாகச் செல்லும் சக்தி. அது நம் மரபணுவை (டி.என். ஏவை) ஊடுருவும் சக்திகொண்டது. கதிரியக்கத்துக்கு ஆளானவர்கள் சிறிய அளவில் தைராய்டு பிரச்சனைகள் முதற்கொண்டு மிக மோசமான கேன்சர் வரைக்கும் அனுபவிக்க நேர்கிறது. அளவுக்கதிகமான நேரடி கதிரியக்க ஊடுருவல் உடலைச் சிதைத்து உயிரைப் பறிக்கும். மிகவும் கொடூரமான கதிரியக்க விளைவாக தலைமுறைகளைத் தாண்டி கதிரியக்கம் ஊடுருவி பிறக்கும் குழந்தைகளின் உடற்கூறுகளை மாற்றியமைத்துவிடுகிறது. உண்மையைச் சொல்லப்போனால் கதிரியக்கத்தின் மத்தியில் உருவாகி வளரும் கரு ஒன்று எதைப்போன்றதொரு குழந்தையாய் பிறக்கும் என்பதை யூகிக்கக்கூட முடியாது. அத்தனை கொடூரமான விளைவுகளை உருவாக்கக்கூடியது கதிரியக்கம். மனிதன் இதுவரை கண்டுபிடித்த ஆயுதங்களிலேயே அதிக உடனடிப் பேரழிவையும் தலைமுறைகள் தாண்டி நீடிக்கும் தாக்கத்தையும் உருவாக்கும் ஒரே ஆயுதாம் அணு குண்டு. செர்னோபில்லுக்குப் பிறகு அதன் சுற்றுப்பரப்பில் 30,000 முதல் 90,000 பேர்வரைக்கும் புற்றுநோயால் அவதியுற்றனர் என்கின்றன சில கணக்குகள். கதிரியக்கத் தன்மையுள்ள மூலப்பொருட்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த நிலத்தில் கிடந்து தலைமுறை தலைமுறையாக பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக உலகின் மிக முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான் அரசாங்கம் தன் மக்களை கைவிட்டுவிட்டதாக மக்கள் நம்புகின்றனர். இத்தகையப் பேரழிவை ஜப்பான் எதிர்பார்த்துத் திட்டமிடவில்லை என்பதே உண்மை. பின்னர் உலக அளவில் உதவிகள் வந்தபோதும் விபத்தையோ, கதிரியக்கப் பேரழிவுகளையோ அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது ஜப்பான் அரசு ஒரு விபரீத விளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிறது. அது இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த கதிரியக்க உச்ச வரம்புகளை உயர்த்திவிட்டு பிரச்சனைகள் இல்லை என்று கணக்கிடுகிறது. கதிரியக்கச் சூழலில் வேலைபார்ப்பவர்களுக்கு பாதுகாப்பான கதிரியக்க அளவாக 100 மில்லிசீவெர்ட்ஸிலிருந்து திடீரென 250மில்லிசீவெர்ட்ஸாக மாற்றியது. இதே போலவே உணவுக்கான கதிரியக்க உச்சவரம்பையும், கடலில் கலப்பதற்கான வரம்பையும் உயர்த்தியுள்ளது. உலகின் அரசுக்கள் பலவும் செய்துகொண்டிருப்பதையே ஜப்பான் அரசும் செய்கிறது. தகவல்கள் மறுக்க்கப்படுகின்றன, திரிக்கப்படுகின்றன, குறைக்கப்படுகின்றன. பாலுக்கு அழும் குழந்தையின் வாயில் ரப்பர் சூப்பியை வைத்து ஆறுதல் சொல்வதைப்போல அரசு பல பொய்களின் மூலமும் அரைத் தகவல்களின் மூலமும் மக்களை நம்பிக்கையுடன் வைத்திருக்கிறது. ஆனால் உண்மை மிகக் கொடியாதாக இருக்கிறது.

செப்டம்பர் 16, 2011ல் வெளிவந்துள்ள சைன்ஸ் பத்திரிகையில் ’அடுத்த ஃபுக்குஷிமாவை தடுப்பது’ எனும் தலைப்பில் அணுசக்தி தொழில் நுட்பத்தில் பல வருடங்கள் அனுபவமுள்ளவர்களும், தற்போதைய ஹார்வர்ட் விரிவுளையாளர்களுமான மாத்தியூவ் டன், ஒள்ளி ஹெயீனொனென் ஆகியோர் எழுதிய கட்டுரை ஃபுக்கொஷிமாவுக்குப் பின் உலக அளவில் மேற்கொள்ளப்படவேண்டிய பல முக்கியமான அணு சக்தி திட்ட மாற்றங்களை குறித்து அலசுகிறது. அதில் மிகுந்த அக்கறையுடன் கீழ்கண்ட வரிகள் எழுதப்பட்டுள்ளன. “உலகின் மிகப் பணக்கார நாடுகளில் ஒன்றானதும், அணு சக்த்தி தயாரிப்பில் மிகுந்த அனுபவம் கொண்டதுமான ஜப்பானிலேயே இத்தனை குறைகள் இருக்குமென்றால் இது இன்னும் கடுமையான அரசியல் மற்றும் நிர்வாகச் சமநிலையையும், பலனுள்ள மேற்பார்வைத் திறனும், நீடித்த அமைப்புகளையும் உருவாக்குவதற்கான தேவையை காட்டுகிறது” என்கின்றனர். அதைவிட முக்கியமாக ”அணுசக்தி பயன்படுத்தும் சில நாடுகள் பயனற்ற கட்டுப்பாட்டு மேற்பார்வைகளுடையவை, ஊழலில் திளைப்பவை, நிலையான அரசியலற்றவை” என கிட்டத்தட்ட நேரடியாகவே இந்தியா பாக்கிஸ்தானை குறிப்பிடுகின்றனர். 

நிர்ணயிக்கப்பட்ட தண்டவாளன்களில் ஓடும் ரயில்கள் மோதிக்கொள்வதையே தடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது நம் அரசு. இத்தனை இரயில் விபத்துக்களுக்குப் பிறகு இப்போதுதான் விபத்தை தடுக்கத் திட்டமிட ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. நம் அணு உலைகள் நடத்தப்படும் லட்சணங்களை செப்டம்பர் 11, 2010 தெகெல்காவின் கட்டுரை ஒன்று அதிர்ச்சியுடன் வெளியிட்டிருக்கிறது. கல்பாக்கம் அணு உலையில் தொடர்ந்து நடக்கும் விபத்துக்களை அது பட்டியலிட்டு அவை குறித்த உண்மையான தகவல்கள் எதையும் இந்திய அணுசக்தி மேலாண்மை அமைப்பு வெளியிடமறுத்துள்ளதை குறிப்பிடுகிறது. கல்பாக்கத்தை சுற்றி வசிக்கும் சேரி மக்கள் தொடர்ந்து புற்று நோய்க்கு ஆளாகி வருவதை அது சுட்டிக்காட்டுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் 'மிகக் குறைந்த அளவில் கேவலம் "வெறும்" 244 பேருக்கு' மட்டுமே புற்று நோய் வந்திருப்பதாக இந்திய அணு சக்தி அமைப்பு ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் உண்மையில் அந்த எண்ணிக்கை மிக அதிகம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்களும் அந்தப் பகுதி மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவர்களும். அணு உலைகளில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகளுக்கு புற்று நோய் ஏற்படுவதை குறிப்பிடுகிறது தெகல்கா. உண்மைகள் மறைக்கப்பட்டு தங்களுக்குத் தெளிவான ட்ராக் ரெக்கார்ட் இருப்பதாக மார்தட்டிக் கொள்கிறார்கள் நம் அதிகாரிகள். 

அணுசக்தியில் மின்சாரம் தயாரிப்பது உலகளவில் மிகவும் இலாபகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கடைசியாக அமைக்கப்பட்ட 10 அணு உலகளும் திட்டமிடப்பட்டதைவிட 300% அதிக செலவில் அமைக்கப்பட்டுள்ளன. கோடி கோடிகளாய் கொண்டு கொட்டியும் அணு சக்தியிலிருந்து இந்தியா பெறும் மின்சாரத்தின் அளவும் கேவலம் 2.7% மட்டுமே. இந்தியாவில் எந்த அணு உலையுமே அது அமைக்கப்பட்ட முழு திறனுக்கும் உற்பத்தியை செய்யவில்லை. திட்டங்கள் துவங்குகையில் எதிர்பார்க்கப்படும் மின்சார அளவுகள் எல்லாம் வெறும் பேப்பர்களிலேயே எழுதப்பட்டுள்ளன. ஆக இந்தப் பெரும் திட்டங்கள் யார் யாருக்கோ இலாபங்களை ஈட்டுவதற்காகவே செய்யப்படுகின்றன எனும் சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

ஃபுக்குஷிமாவுக்குப் பிறகு அணுசக்தி குறித்த உலகப் பார்வை ஒரு அதிரடி மாற்றத்தை அடைந்துள்ளது. ஜெர்மனி, இத்தாலி ஸ்விட்சர்லாந்து நாடுகள் முற்றிலும் அணு சக்தியை கைவிட முடிவெடுத்துள்ளன. அடுத்த சில வருடங்களில் ஒவ்வொன்றாக அவற்றின் அணு உலைகள் நிறுத்தப்படவுள்ளன. அவை மாற்று சக்தியை நோக்கி நகர முடிவெடுத்துள்ளன. மிகத் தீவிர  அணுசக்தி ஆதரவான நாடு ஃப்ரான்ஸ். அங்கேயே 63% மக்கள் அணுசக்திக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இத்தாலியில் 95%பேர் அணுசக்த்தி பயன்பாட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மே 25, 2011ல் வியன்னாவில் கூடிய ஆஸ்ட்ரியா, கிரீஸ், ஐயர்லாந்து, லத்வியா, போர்சுகல் உட்பட்ட எட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மந்திரிகளின் குழு அணு சக்தி பயன்பாட்டுக்கு எதிராக பிரகடனம் ஒன்றை செய்துள்ளனர். நோபல் பரிசு பெற்றவர்கள் 18 ஒன்றுகூடி ஃபுக்குஷிமாவுக்குப் பின் உலகளவில் அணுசக்தி பயன்பாடு மெல்ல ம்கைவிடப்படவேண்டும் என பிரக்டனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். "உலகில் 400 அணுமின் ஆலைகள் உள்ளன அவற்றிலிருந்து 7% மட்டுமே உலகின் மின்தேவை பூர்த்திசெய்யப்படுகிறது. ஆனால் இவற்றில் பலவும் விபத்துப் பகுதிகளில் அமைந்துள்ளன இது மனித குலத்துக்கே ஆபத்தானது." என்கின்றது இவர்களின் பிரகடனம். இந்தியாவைப் போலவே அணுசக்தியை பெரிதும் நம்பியிருந்த சீனா ஃபுக்குஷிமாவுக்குப் பின் அதைக் கைவிட்டுவிட்டு மாற்று மின்சக்தி தயாரிப்பில் உலகிலேயே அதிக ஆர்வம் காட்டும் நாடாக மாறிவிட்டிருக்கிறது.

ஆனால் இந்தியாவில் ஃபுக்குஷிமாவுக்குப் பிறகான அணுசக்தி அணுகுமுறை என்ற ஒன்றே வகுக்கப்படவில்லை. உலகின் மிகப் பெரிய அணு உலை விபத்தை இந்தியா கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. நான்குமுறை ச் கொட்டிவிட்டு வழக்கம்போல அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர் அதிகாரிகள். அரசாங்கமே சும்மாயிருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்.

கதிரியக்கப் பொருட்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் வீரியத்துடன் இருக்கும் தன்மையுடையவை. அது எத்தனை காலமென்றால் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் விவசாயத்துக்குள் நுழைந்து நாகரீகங்களாக உருமாற ஆரம்பித்தது, அதன் பின் எத்தனையோ பெரும் நாகரீகங்களும் பேரரசுகளும் உருவாகி மடிந்துபோயிருக்கின்றன, கோடி தலைமுறைகள் வந்துபோயிருக்கின்றன. அப்போது ஒரு கதிரியக்க விபத்து நடந்திருந்தால் இன்றளவும் அதன் பாதிப்பு நீடித்திருக்கும் என்றால்… இன்றைய மனிதர்களாகிய நாம் நமது சந்ததியினருக்கு எதை விட்டுச் செல்கிறோம் என்பது எத்தனை பெரிய கேள்வி.

அணு உலைகளின் நீடித்த ஆபத்துகளும் சரி, விபத்துக்களினால் ஏற்படும் பெரும் அழிவுகளும் சரி மிகக் குறைவானதாகவே அணுசக்தி ஆதரவாளர்களால் மதிப்பிடப்படுகின்றன. இதற்குப் பிண்ணணியில் அணுசக்தி மேலண்மை செய்யும் தனியார் நிறுவனங்களின் பெரும்பணம் செயல்படுவதை யாரும் மறுக்க முடியாது. இவர்களின் ‘லாபி’ அமைப்புகள் உலக நாடுகளெங்கிலும் செயல்பட்டு தங்களுக்கு சாதகாமன கொள்கைகளை உருவாக்கிக்கொள்கின்றனர். மிகக் குறிப்பாக வளரும் நாடுகளை இவை குறிவைக்கின்றன. இதுவரை தனியாருடன் அணு ஒப்பந்தங்களில் ஈடுபடுவதில்லை என இருந்த இந்தியா கொஞ்ச காலங்களுக்கு முன்பு அதை மாற்றியமைத்தது. பின்பு அணு விபத்துக்களின்போது மக்களுக்கு யார் உதவித்தொகை வழங்குவது என்பதுகுறித்த சட்டம் இயற்றப்பட்டது. இதுவும் முதலில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கைகழுவிவிட்டு ஓடும் வசதியை கொண்டிருந்தது. பின்னர் மக்களின் எதிர்ப்புக்குப் பிறகு இது கொஞ்சம் சரி செய்யப்பட்டுள்ளது. (தற்போது கூடங்குளம் திட்டம் இந்த சட்டத்துக்குள் அடங்காது என்று அரசு கைவிரித்துள்ளது). 

தனியார்மயமாதல் தன்னளவில் ஒரு கெட்ட பொருளாதாரக் கொள்கையல்ல. இன்று உலகளவில் வெற்றிகரமான ஒரே பொருளாதார வகைமையாக அதுவே உள்ளது. ஆனால் தனியார் மயமாதலில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதன் மூலம் மக்களுக்கு நன்மை பயக்கும்படி செய்வது அரசின் முக்கிய கடமை. அதைச் செய்யத் தவறும்போது இலாபம் மட்டுமே குறிக்கோளான தனியார் நிறுவனங்கள் கடற்கொள்ளைக்காரர்களைப்போல சூரையாடத் துவங்கிவிடுகின்றனர். இந்தியாவில் அப்படி ஒரு கட்டுப்பாடான அரசு இயந்திரம் இருக்கிறதா என்பது பெரும் கேள்வி. இதில் இன்னொரு உண்மையையும் நாம் பார்க்க வேண்டும். இதுவரை அணுசக்த்தித் துறையில் இலாபம் பார்த்து வந்த சீமன்ஸ் எனும் தனியார் நிறுவனம் இனிமேல் அந்தத் துறையில் தான் செயல்படப் போவதில்லை என அறிவித்துள்ளது. இலாபத்தை விட மனித இனத்தின் மீது அது காட்டியிருக்கும் அக்கறை பாராட்டத் தகுந்தது. ஆனால் நம் அரசோ பழைய அணுசக்தி தயாரிப்பு முறைகளை நம் தலையில் கட்டிக்கொண்டிருக்கிறது.

நம் தேவையில் வெறும் 2.7% மின்சாரத்தை தயாரிக்கும் அணு உலைகளினால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். இவற்றிற்குப்பதிலாக மாற்று மின்சக்தி உற்பத்தியை இந்தியா ஊக்குவிக்கவேண்டும். நமது மின்சாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய பல ஆலோசனைகளை பன்னாட்டு சக்தி நிறுவனம்(International Energy Agency) வழங்கியுள்ளது. இந்தியா தான் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 50%க்கும் மேல் வீணாக்கிவிடுகிறது என்கின்றன ஆய்வுகள். இதில் தேவயர்ற மானியங்களும், ஊழல்வழி இலவச மின்சாரம் பெறுவதும் உள்ளது. ஆக நாம் நமது மின்சார வினியோகத் திறனை மேம்படுத்துவது முதலில் அவசியம். ஆனால் அது குறித்து இங்கே யாரும் திட்டமிடுவதாகத் தெரியவில்லை. ஒரே ப்ராஜெக்டில் அதிக இலாபம் பார்க்கலாம் என்கிற அரசியல்தானே இது? IEA முன்வைக்கும் ஆலோசனைகளில் மிக முக்கியமானது ஒவ்வொரு பகுதிக்குமான மின்சாரத் தேவைகளை அந்தந்த பகுதிகளிலேயே உற்பத்தி செய்ய முயலவேண்டுமென்பதே. தற்போதைய மாற்று மின் உற்பத்தி முறைகளைக் கொண்டு இதை நிச்சயம் சாத்தியமாக்கலாம்.

இந்தியா தன் மின்சக்தித் தேவையை பூர்த்திசெய்துகொல்ள ஐ.இ.ஏ முன்வைக்கும் சில முக்கிய பரிந்துரைகள்.

1. மின்சக்தி தயாரிப்பை பயன்பாட்டிடத்துக்கு அடருகில் கொண்டு செல்வது. இதன்மூலம் சிறியதாக பல திட்டங்களைச்செய்து அந்தந்த பகுதிகளின் வேலைவாய்ப்பையும் பெருக்க முடியும்.

2. மின்சக்தி மானியங்கள் அதற்குத் தகுதியான மக்களுக்கு மட்டும் வழங்கப்படவேண்டும்/

3. மின் வினியோகம் முறைப்படுத்தப்பட்டு அதனால் ஏற்படும் பெரும் இழப்பை தவிர்க்க வேண்டும்.

4. மின்சக்தி திருடப்படுவது தவிர்க்கப்படவேண்டும். 

5. சூரிய சக்திமூலம் வீட்டுத் தேவைகளுக்கு மின்சக்தி தயாரிப்பு பரவலாக்கப்படவேண்டும்.

காற்றாலை மூலம் மின்சக்தி தயாரிப்பில் இந்தியா முதலிடத்திலுள்ளது. ஆண்டு முழுவதும் சூரிய ஒளி விழும் பகுதிகள் இந்தியாவில் ஏராளமாயுள்ளன. எந்தத் தீங்கும் விளைவிக்காத இவற்றைக் கொண்டு மின்சக்தியை உருவாக்குவதை தவிர்த்துவிட்டு தலைமுறைகள் தாண்டி பேராபத்துக்களை உருவாக்கும் அணு ஆலைகளை அமைக்க நம் அரசுகள் முடிவெடுப்பதன் பின்னணியில் ஒரே ஒரு மனநிலைதான் தென்படுகிறது. அது மக்களின் உயிரையோ, வாழ்க்கை தரத்தையோ கிஞ்சித்தும் கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை.

கூடங்குளம் அணு உலை அமைப்பதற்கு எதிராக டாக்டர் உதயகுமார் முன்வைத்திருக்கும் 13 முக்கிய கருத்துக்கள் இவை

1. கூடங்குளம் அணு உலைகள் அமைக்க ஜனநாயக முறைகள் கையாளப்படவில்லை. 

அணு உலையினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்களோ, பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த திட்டங்களோ தீட்டப்படவில்லை, அல்லது அவை மக்கள் பார்வைக்குத் தரப்படவில்லை.

2. தமிழக அரசு உலைக்கும் 2முதல் 5 கி,மீ வரை உள்ள இடங்கள் மக்கள் வாழத் தகுதியற்றவையாக வரையறுத்துள்ளது G.O. 828 (29.4.1991 – Public Works Department)  ஆனால் கூடங்குளம் அதிகாரிகள் மக்களிடம் வாய்மொழியாக அப்படி எதுவும் இல்லை என்று தன்னிச்சையாக பதிலளிக்கிறார்கள். இது அணு உலை ஆரம்பித்த பின்னர் தங்கள் வாழ்விடங்களிடமிருந்து மக்களை அப்புறப்படுத்தும் என்னும் பயத்தை அதிகப்படுத்துகிறது.

3. உலைக்கும் 30 கி.மீ சுற்றளவில் பத்து இலட்சம் மக்கள் வசித்துவருகின்றனர். விபத்து நேர்கையில் இந்தப் பெரிய மக்கள்திரளை பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்தியமற்றது.

4. அணு உலைகளை குளிரூட்டப் பயன்படுத்தப்படும் தண்ணீர் கடலுக்குள் செலுத்தப்படவுள்ளது. அது கடல் நீரிலும், மீன்களிலும் கதிரியக்கத்தை செலுத்தும். மீனவர்கள் மேலும் ஏழ்மைக்குத் தள்ளப்படுவார்கள் கேரளா உட்பட்ட தென்னிந்திய பகுதிகளில் இதன் தாக்கம் இருக்கும் ( கன்னியாகுமரி, முட்டம் உட்பட்ட அழகிய கடற்கரை சுற்றுலாத் தலங்கள் நேரடியாக பாதிக்கப்படும். குளச்சல் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களும் அதே கடல்வழியேயே அடையக்கூடியவை)

5. ஏற்கனவே தோரியம் பிரித்தெடுக்கும் (மணவாளக்குறிச்சி மணல் கம்பெனி) பணியில் இருந்தவர்களில் பலரும் புற்று நோயால் அவதிப்படுகின்றனர். இன்னொரு சோகம் இங்கே வேண்டாம்.

6. கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டுமானங்களின் தரங்கள் அங்கே வேலைபார்த்தவர்களாலேயே தரமற்றவை என கணக்கிடப்பட்டுள்ளன. (இவை வட இந்திய ஒப்பந்ததாரர்களால் செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட வேண்டும்) 

7. அப்போதைய சுற்றுச்சூழல் மற்றும் காட்டிலாகா அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூடங்குளத்தில் 3-6 அணு உலைகளுக்கு அனுமதி மறுத்துள்ளார். ஆக 1-2ம் சூழலுக்கு பாதுகாப்பானதா எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

8. பலரும் இந்தப் பகுதியில் எந்த இயற்கை சீற்றமும் வராது என தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு அது எப்படி நிச்சயமாகத் தெரியும். 2004ல் இதே அணு உலையின் கட்டுமானங்கள் சுனாமியால் இடிக்கப்பட்டன. மார்ச்19, 2006ல் இங்கே நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12, 2011ல் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது(ஃபுக்குஷிமாவில் இயற்கை சீர்றம் குறித்த இத்தகைய மேம்போக்கான நம்பிக்கைகள் திட்டத் தோல்விகளை உருவாக்கியுள்ளதை சைன்ஸ் பத்திரிகை பதிவு செய்கிறது. உண்மையில் உலகின் எந்த பகுதியில் 

என்ன நடக்கும் என்பதை துல்லியமாகக் குறிக்கும் எந்த அறிவியலும் உருவாக்கப்படவில்லை).

9. இந்தியப் பிரதமரே நம் நாட்டின் அனுசக்தி ஆலைகள் தீவிரவாதக் குறிகளாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

10. ரஷ்ய நிறுவனத்துடன் விபத்து உதவித்தொகை வழங்குவது குறித்த ஒப்பந்தங்கள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. ரஷ்யா தனக்கும் இந்திய அரசுக்கும் 2008ல் ஏற்படுத்தப்பட்ட இரகசிய உடன்படிக்கை தற்போதைய NPCIL சட்டத்தை மிஞ்சியதாக வாதாடிக்கொண்டிருக்கிறது.

11. கூடங்குளம் அணு ஆலையின் கட்டுமானச் செலவு குறித்து பல்வேறு முர்ணான தகவல்கள் வெளியிடப்படுகின்றன அவை இந்த திட்டம் யாருடைய இலாபத்துக்கு செய்யப்படுகின்றன எனும் கேள்வியை எழுப்புகின்றன. 

12. ஃபுக்குஷிமாவுக்குப் பிறகு உலக அளவில் அணுசக்தி குறித்த மாற்று அணுகுமுறைகள் உருவாகியுள்ளன. அமெரிக்காவோ ரஷ்யாவோ கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் எந்த புதிய அணு ஆலையையும் உருவாக்கவில்லை. இந்தியாவிலேயே மேற்கு வங்கமும், கேரள மாநிலமும் அணு சக்திக்கு எதிரான முடிவுகளை எடுத்துள்ளன. 

13. இந்திய அரசு அணு சக்தி மீது மதிகெட்ட ஈடுபாடுகொண்டுள்ளது. அதன் அணுத் திட்டங்களும் செயல்பாடுகளும் அதீத இரகசியத் தன்மையுள்ளவை, மக்களின் குற்றச்சாட்டுகளை கேட்கவே மறுக்கிறது அரசு. இதெல்லாம் உண்மையில் இந்திய மக்களின் இலாபத்துக்காகவா அல்லது அமெரிக்க ரஷ்ய ஃப்ரென்ச் நாட்டு கம்பெனிகளின் இலாபங்களுக்கா? நம் நாட்டின் (இன்றைய) நாளைய மக்களின் உயிரைவிடவும் இது மேலானதா?

இன்னும் சில முக்கியமான காரணங்களும் உள்ளன. கூடங்குளத்தில் பயன்படுத்தப்படவிருப்பது உலகில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட அணுமின் உற்பத்தி தொழில்நுட்பங்களில் ஒன்றில் உருவான கலன்கள். 1969 வாக்கில் இந்த தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாற்பதுவருடங்கள் தாண்டிய தொழில்நுட்பத்தை ஏன் நம் அரசு இத்தனை செலவில் இந்தியாவில் நிர்மாணிக்கிறது? அதுவும் ரஷ்யாவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு பழையதான உபகரணங்களை? அதீத வெப்பம் கொண்டியங்கும் கொதிகலன்களை குளிரூட்டவும் மின்சார உற்பத்திக்கு தேவைப்படும் நீருக்காகவும் தாமிரபரணி பேச்சிப்பாறை அணை ஆகிய விவசாய நீராதாரங்கலிலிருந்து தண்ணீர் ஆலைக்கு திருப்பிவிடப்படுகிறது. நீர்வளம் குறைந்துபோகும் நிலை வந்தால் விவசாயத்துக்கல்ல, அணு ஆலைக்கே முதன்மை அளிக்கப்படும். வீட்டில் விளக்கெரியும் ஆனால் அடுப்பெரியாது என ஒரு காலம் வரலாம்.

அணுசக்தி நம் நாட்டின் முதன்மையான தேர்வாக இருக்கக் கூடாது. மாற்று மின்சக்தி தொழில்நுட்பங்கள் மிக விரைவாக உருவாகிவரும் இந்த காலகட்டத்தில் இது ஒரு முட்டாள்தனமான தேர்வு. அணுசக்தி உற்பத்தி மக்கள் நெருக்கமே இல்லாத இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும். அதுவும் இயன்றவரை தவிர்க்கப்படவேண்டும். ஃபுக்குஷிமாவுக்குப் பின் நாம் நமது அணுசக்தி திட்டங்களை சீர்தூக்கி சரி செய்ய வேண்டும். நம் அணுசக்தி ஆலைகளின் பாதுகாப்பு தர நிலைகளை உலகளாவிய தன்னார்வ நிறுவனங்களைக் கொன்டு மதிப்பிட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஒரு வெளிப்படையான அணு சக்தி அணுகுமுறை நமக்கு உடனடியாகத் தேவை.

கூடங்குளத்தை பொறுத்தவரை அங்கே அணு உலை அமைப்பது மாற்றியமைக்கப்பட்டு அதை மாற்று மின் உறபத்தி நிலையமாகவோ கடலலையிலிருந்து மின்சாரம் உருவாக்கும் திட்டமாகவோ மாற்றப்படவேண்டும். அல்லது வேறேதும் திட்டங்களுக்காக அதை பயன்படுத்த வேண்டும். சென்னை தலைமைச் செயலகக் கட்டிடம் மருத்துவமனையாவதுபோல வேறேதும் பயனொன்றை கட்டாயம் அந்தக் கட்டுமானதுக்கு கண்டுகொள்ள முடியும். 

கூடங்குளத்தில் நடப்பது வெறும் கடற்கரையோரத்து மீனவர்களுக்கு ஆதரவான போராட்டமல்ல அது இந்திய அளவில் அணுசக்தி அமைப்புகளின் மெத்தனத்தையும் இரகசியத் தன்மையையும் பொறுப்பற்ற தன்மையையும் எதிர்த்து நிற்கும் போராட்டமே. இதற்கு தமிழ் மக்கள் ஆதரவளிப்பது மிக மிக அவசியமாகும்.

References and Sources:

http://www.peacejam.org/news/Stand-With-Nobel-Laureates-Against-Nuclear-Power-603.aspx

http://www.slideshare.net/icpgamesa/elecindia2002

http://www.iea.org/

http://www.kalpakkam.net/2011/09/thirteen-reasons-why-we-do-not-want.html

http://www.kalpakkam.net/2011/07/nuclear-or-broke-indias-obsession-with.html

http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne110910Accident_Sites.asp

http://www.guardian.co.uk/world/2011/sep/09/fukushima-japan-nuclear-disaster-aftermath

http://www.eai.in/ref/ae/wte/wte.html

http://english.aljazeera.net/indepth/features/2011/06/201161664828302638.html

http://indiainperil.blogspot.com/2009/05/how-electricity-wastage-is-officially.html

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை!

  • September 15, 2012 at 10:49 am
    Permalink

    நிர்ணயிக்கப்பட்ட தண்டவாளன்களில் ஓடும் ரயில்கள் மோதிக்கொள்வதையே தடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது நம் அரசு. இத்தனை இரயில் விபத்துக்களுக்குப் பிறகு இப்போதுதான் விபத்தை தடுக்கத் திட்டமிட ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 20, 2011 @ 10:39 am