சகலகலா டாக்டர் டாக்டர்

+2 மட்டுமே படித்து விட்டு ‘டாக்டர்’ என்று போர்டு மாட்டிக் கொண்டு ஃப்ராடுத்தனம் செய்து கொண்டிருந்த சில டாக்டர்களை போலீஸ் கைது செய்திருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்,திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் நடந்த அதிரடி ரெய்டில் சுமார் 49 போலிகள் மாட்டியிருக்கிறார்கள். இன்னமும் எஸ்கேப் ஆனவர்கள் எத்தனை பேரோ!

புனிதமான மருத்துவத் தொழிலில் புல்லுருவிகள் ஊடுருவி பல ஆண்டு காலம் ஆகின்றன. ‘ரமணா’ திரைப்படத்தில் இத்தகைய பணப் பிசாசுகளைப் பற்றி புட்டுப் புட்டு வைத்தும் கூட இன்னமும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

கேட்டால், “எவ்வளவு செலவு செய்து எம்.பி.பி.எஸ்., படித்திருக்கிறோம். அந்த காசை மீட்டெடுக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்புகிறார்கள். உன்னை எவன் செலவு செய்து படிக்கச் சொன்னான்? 

மயிலாடுதுறையில் ராமமூர்த்தி என்றொரு டாக்டர் இருக்கிறார். இன்றளவுக்கும் பத்து ரூபாய் தான் அவருடைய ஃபீஸ். அருகாமையிலுள்ள கிராமப்புறங்களில் இருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து அவரிடம் வருவார்கள். நோயாளியைப் பார்த்த உடனேயே என்ன பிரச்னை என்பதைக் கண்டு பிடித்து விடுவார். அவர் பரிந்துரைக்கும் மருந்து கூட மிகக் கம்மியான விலை கொண்டதாகத்தான் இருக்கும். சமயங்களில் சில நோயாளிகளிடம் அவருக்கு கொடுக்க வேண்டிய பத்து ரூபாய் கூட இருக்காது. அவர்களை உட்கார வைத்து விட்டு, அடுத்த நோயாளியைப் பரிசோதித்து விட்டு அவர்களிடமிருந்து ஃபீஸ் வாங்கி இவர்களிடம் கொடுத்து மருந்து மாத்திரை வாங்கிக் கொள்ளச் செய்வார்.

நோயாளிகள் அவரை தெய்வமாகவே இன்னமும் கொண்டாடுகிறார்கள்.

ஊருக்கு ஒரு மருத்துவர் இப்படி மனித தெய்வமாக நடமாடுகிறார்கள். ஆனால் ஏனையோர் பல் வலி என்றால் நாக்கை அறுத்து அனுப்புவோர் தான் அதிகம்.

இதில் போலிகள் வேறு சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம். ஒவ்வொரு மருத்துவரும் தன்னுடைய க்ளீனிக்கில் தன்னுடைய மருத்துவ படிப்பு சான்றிதழை ஃப்ரேம் செய்து மாட்டி வைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் கூட தேவலை. ஆனால் இந்த மாதிரியான கொள்ளையர்கள் அதையும் டூப்ளிகேட் தயாரித்து விடுவார்கள்.

ஒருபுறம் மருத்துவப்படிப்பை பயின்று ஊரார் வயிற்றில் அடிக்கும் கொள்ளையர்கள் பலர். மறுபக்கம் போலிகள். ஐயோ பாவம் பொது ஜனம்.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் ஒரு டாக்டர் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து செல்ஃபோன்களை ‘ஆட்டயப்’ போட்டாராம். சக டாக்டர்கள், பேஷண்ட்டுகள் செல்ஃபோனை திருடி எடுத்துச் சென்று விடுவாராம். அடிக்கடி செல்ஃபோன்கள் காணாமல் போனதால் ரகசிய காமரா பொறுத்தி பார்த்த போது அன்னாரின் கைங்கரியம் தெரிய வந்திருக்கிறது. செல்ஃபோனும் கையுமாக பிடிபட்டிருக்கிறார். இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். இப்படியெல்லாம் நேரடியாகவும் திருட ஆரம்பித்துவிட்டார்கள் போல!

oooOooo

’மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி’ குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அவருக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த சில இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அதில் சிலர் உண்ணாவிரத மேடையில் மோடியைப் பார்த்து வணக்கம் சொல்லி தொப்பி அணிவிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் மோடி அதை மறுத்திருக்கிறார். இது போதாதா, மோடி எதிர்ப்பாளர்களுக்கு? ஏன் அந்தத் தொப்பியை அணியவில்லை. இதிலிருந்து மத நல்லிணக்கம் என்று அவர் சொல்வது பொய் என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு மதத்தினரும் தங்களுக்குரிய எல்லைக்கோட்டைத் தாண்டாமல் இருக்கும் வரை பிரச்னை என்பது எழவே எழாது. அன்றைக்கு மோடியிடம் தொப்பியைக் கொடுத்து அணியச் செய்தவர்களுக்கு பதிலுக்கு மோடி தம் மத வழக்கப்படி நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு விட்டிருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பார்களா?

நம் ஊரில் தான் நோன்பு சமயத்தில் குல்லா அணிவித்து நோன்புக் கஞ்சியைக் குடித்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்து மதச் சார்பின்மையை பறைசாற்றுவார்கள் அரசியல்வாதிகள். அதே வேளையில் தங்கள் கட்சி உறுப்பினர் பக்தி மயமாக குங்குமம் இட்டுக் கொண்டு வந்தால், “உன் நெத்தியிலே ரத்தமாய்யா?” என்று கிண்டல் செய்வார்கள். வளைத்து நெளித்து அரசியல் வாழ்வுக்கு பிரச்னை என்று வரும் போது தங்கள் குடும்பத்தினரை கோவில் கோவிலாக ஏறி இறங்கி யாகங்கள் வளர்க்கச் செய்வார்கள். அப்போது வைக்கப்படும் குங்குமம் எல்லாம் ரத்தமாகத் தெரியாது. எங்கேயாவாது, எப்போதாவது தம் குடும்பத்து உறுப்பினர்கள் வைத்திருக்கும் குங்குமத்தை கிண்டல் செய்திருக்கிறார்களா இந்த பகுத்தறிவுவாதி எனும் போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் பெரிசுகள்?

மோடி பாராட்டுக்குறியவர். அவரை பகிரங்கமாக சப்போர்ட் செய்யும் அந்த இஸ்லாமிய அமைப்புகளும் பாராட்டுக்குறியவையே!

oooOooo

”உள்ளாட்சித் தேர்தலில் சூழ்ச்சி செய்து ஜெயித்து விட நினைக்கிறது ஆளும்கட்சி” என்று திமுக தலைவர் மு. கருணாநிதி. பாம்பின் கால் பாம்பறியும் என்று சும்மாவா சொன்னார்கள். 

அவர்களது ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் எந்த லட்சணத்தில் ஜனநாயக முறைப்படி நடந்தது என்று மக்கள் அனைவருக்குமே தெரியும். ‘ஜனநாயக முறைப்படி’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்த தேர்தல்களிலும், அந்தக் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களிலும் நன்றாகவே தெரிந்து கொள்ளலாம்!

எங்கே அதே ரீதியில் இவர்களும் தேர்தலை நடத்தி விடுவார்களோ என்ற பயத்தால் தான் இந்தப் புலம்பல். ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் முறையாக தேர்தல் நடந்தாலே பல இடங்களில் ஆளும் கட்சி வெற்றி பெறும் என்பது தான் நிதர்சனம்!

தொடர்புடைய படைப்புகள் :

2 thoughts on “சகலகலா டாக்டர் டாக்டர்

 • October 25, 2011 at 3:13 am
  Permalink

  neengal oru faar right. Do you really understand Hindu religion as fanatism?

  Reply
 • September 21, 2011 at 11:18 pm
  Permalink

  உங்கள் மனதில் பட்டவற்றை சொல்லி உள்ளீர்கள்

  எல்லோரும் இன்புற்று இருப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 21, 2011 @ 11:02 pm