நான் காந்தி அல்ல

 

திருஷ்டி பூசணிக்காய் உடைக்கும் வழக்கத்தை கண்டுபிடித்தவன் எவனோ அவனை எங்கிருந்தாலும் பிடித்து தர தரவென இழுத்து வந்து தலையிலேயே பூசணிக்காய் உடைக்க வேண்டும்.

ஏற்கனவே நம்ம ஊர் சாலைகள் இருக்கும் படு கேவலமான நிலையில் நடந்து செல்வதே பெரும் கஷ்டம். இதில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் நிலைமை படு கொடுமை. இப்படிப்பட்ட நிலையில் திருஷ்டி கழிக்கிறேன் பேர்வழி என்று பூசணிக்காயை எடுத்து வந்து நான்கு ரோடு சந்திக்கும் நட்ட நடு வழியில் உடைத்து விட்டு எனக்கென்னவென்று செல்லும் ஆசாமிகளை கொலை முயற்சி வழக்கில் உள்ளே தள்ளினாலும் தப்பில்லை.

ஆயுத பூஜையை முன்னிட்டு சேலத்தில் இப்படி உடைக்கப்பட்ட பூசணிக்காய் வழுக்கி டூ-வீலர் விழுந்ததில் அதில் உட்கார்ந்து வந்த 12 வயது சிறுமி ரோட்டில் விழுந்து பின்னே வந்த டிராக்டர் ஏறி சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார்.

oooOooo

“நான் காந்தி அல்ல” என்று அன்னா ஹசாரே அருளுரை வழங்கியிருக்கிறார். 

“எனக்கென்று எந்த இலக்கும், கொள்கையும் இல்லை. சுயநலமற்ற வகையில் கடைசி வரை செயல்படவே விரும்புகிறேன். நான் பிரதமர் பதவிக்கெல்லாம் சற்றும் பொருந்த மாட்டேன். அரசியலில் புகும் ஆர்வமும் இல்லை. அது எனக்கு ஒத்துவராது” என்றும் பேசியிருக்கிறார் அவர். வெகுவிரைவில் அவர் பிரதமர் பதவி போட்டிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! எந்தக் கொள்கையும், இலக்கும் இல்லாமலா அந்த உண்ணாவிரத ஸ்டண்ட் எல்லாம் அடித்தார்? தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்திற்கும் சற்றும் குறைவில்லாத பேச்சு போலத் தெரிகிறது.

இன்னும் கொஞ்ச நாள் கழித்து, “நான் பொல்லாதவன்”, “நான் போக்கிரிராஜா” என்றெல்லாம் ‘தலைவர்’ படப் பெயர்களாக எடுத்து விட்டாலும் விடுவார் போல!

oooOooo

உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு களைகட்டத் தொடங்கி விட்டது. கருணாநிதியின் குடும்ப அரசியலை ஊருக்கு ஊர் சென்று திட்டித் தீர்க்கும் விஜயகாந்த், தனக்குப் பிறகு தனது மகன்கள் சினிமாவில் நடித்தாவது பொது நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவார்கள் என்று உறுதி மொழி கூறி வருகிறார். கருணாநிதிக்கு வந்தால் தக்காளி ஜூஸ்.. இவருக்கு மட்டும் தான் ரத்தமாம்!

அவரது மனைவி பிரேமலதா தான் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு முழு முயற்சி எடுத்தவர் என்ற பேச்சு அடிபட்டது நினைவிருக்கலாம். இப்போது உள்ளாட்சித் தேர்தலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக தேமுதிகவை முதல்வர் கண்டு கொள்ளாமல் விட்டுவிடவே, ஆங்காங்கே பொதுக்கூட்டங்களில் அதிமுகவை தாக்கிப் பேசுகிறார் பிரேமலதா! வாரிசு அரசியல் திமுகவிற்கு மட்டும் தான் இருக்கக்கூடாது என்பது தான் தேமுதிகவின் கொள்கையோ?!

oooOooo

”தாமஸ் ஆல்வா எடிசன் கூட பல்பை கண்டுபிடித்தார். இப்ப அந்த பல்பு உங்கள் வீட்டில் எரியாது. அது வேற விஷயம்” – இப்படி பேசியிருக்கிறார் பிரபல அரசியல் பெரும்புள்ளி குஷ்பு.

அதாவது தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறதாம். அதனால் பல்புகள் எரியாதாம்! வாங்கம்மா வாங்க! போன ஆட்சியை காவு வாங்கியதில் பெரும் பங்கு வகித்தது ஸ்பெக்ட்ரமா, கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமா, மின்சார வெட்டா, நில அபகரிப்புகளா என்ற தலைப்பில் பேச்சரங்கம் நடத்தினால் முதல் மூன்று இடத்திற்குள் மின் வெட்டு கண்டிப்பாக இடம் பிடித்து விடும். அப்படிப்பட்ட நிலையில் தமிழகத்தை இருளில் வீழ்த்திய கட்சியின் சார்பில் பேசுகிறோம் என்ற நினைவு இருக்கிறதா இல்லையா?!

பிரபல காமெடி நடிகர் வடிவேலு போன தேர்தலின் போது திமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். கூடவே தேர்தல் முடிந்த கையோடு, “ராணாவாவது, கானாவாவது” என்று திருவாய் மலர்ந்து தேர்தல் முடிவு வரும் போது அத்தனை பேரும் கருணாநிதி காலடியில் வந்து விழுவார்கள் என்கிற ரீதியில் பேசினார். தேர்தல் முடிவும் வந்தது. தலைதெறிக்க ஓடியவர் தான். திரையுலகிலும் அவர் மீது மறைமுக தடை விதித்து விட்டார்கள். எந்த ஒரு படத்திலும் இப்போது அவர் நடிக்கவில்லை.

சமீப காலமாக, “நானாத்தான் ரெஸ்ட் எடுத்துக்கிட்டிருக்கேன்” என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

திமுகவின் பிரசார பீரங்கி குஷ்புவின் கணவர் சுந்தர்.சி. எடுக்கும் அடுத்த திரைப்படத்தில் வடிவேலு நடிக்கிறார் என்ற செய்தி வந்தது. அதனை அவசர அவசரமாக மறுத்திருக்கிறார் சுந்தர்.சி. “வடிவேலு என் அடுத்த படத்தில் நடிக்கவில்லை” என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். 

“அந்தக் கடையை ஊத்தி மூடி, லைட்டை ஆஃப் பண்ணி, ஷட்டரை க்ளோஸ் பண்ணிட்டேன்” என்று தனது அரசியல் அத்தியாயம் குறித்து வடிவேலு ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தும் அவரை இன்னமும் யாரும் திரைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் செளக்கியமே என்று சும்மாவா சொன்னார்கள்?

oooOooo

“திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் மரியம்பிச்சை மறைந்ததினால் இடைத் தேர்தல் வந்திருக்கிறது. அவரது உறவினர்கள் யாரையாவது தேர்தலில் நிறுத்த வைப்பார்கள். எனவே நாம் போட்டியிட வேண்டாம் என்று இருந்தோம். ஆனால் சம்பந்தமேயில்லாமல் ஒருவரை வேட்பாளர் ஆக்கியிருக்கிறார் ஜெயலலிதா. இது சிறுபான்மை சமூகத்திற்கும், மரியம்பிச்சை குடும்பத்திற்கும் எதிரான நடவடிக்கை. அதனால் தான் நாங்கள் எதிர்த்து போட்டியிடுவோம் என்று முடிவெடுத்து கே.என்.நேருவை போட்டியிட வைத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார் மு.கருணாநிதி.

அடடே.. கே.என்.நேரு எப்போதிலிருந்து ‘அந்த’ சிறுபான்மை சமுதாயத்தில் இணைந்து கொண்டாராம்?

உண்மையிலேயே அப்படிப்பட்ட ஒரு எண்ணம் கருணாநிதிக்கு இருந்திருந்தால் தங்கள் கட்சி சார்பில் ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் தேர்தலில் போட்டியிடுடச் செய்திருக்க வேண்டியது தானே?

ஊருக்கு தான் உபதேசம்!

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : October 5, 2011 @ 10:22 pm