அழிவுப்பாதையை நோக்கி தி.மு.க

ரங்கநாதன் தெரு… சென்னை மாநகரத்திலேயே சதா சர்வகாலமும் பரபரப்பாக இருக்கும் தெருக்களில் தலையாயது இது தான். குண்டூசி முதல் யானை அங்குசம் வரை இங்கே கிடைக்காத பொருட்களே கிட்டத்தட்ட இல்லை எனலாம்.
 
பெரிய கடைகளாகட்டும், ப்ளாட்ஃபாரக் கடைகளாகட்டும் அனைவருமே எப்போதுமே பிஸியாகவே இருப்பார்கள்.
 
உஸ்மான் ரோட்டிலிருந்து ரங்கனாதன் தெருவிற்குள் நுழையும் போது இரண்டு பழச்சாறு கடைகள் மிகவும் பிரபலம். இடதுபுறம் இருக்கும் கடையில் அதிமுக படங்களும், கொடிகளுமாகப் பறக்கும். வலது புறக் கடையில் திமுக! இரண்டு கடைகளிலுமே அந்தந்த கட்சி அபிமானிகள் ரவுண்டு கட்டி ஜூஸ் குடித்துக் கொண்டிருப்பார்கள். பொதுமக்களும் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக கடை மூடப்பட்டது. காரணம் தெரியவில்லை.
 
சில வருடங்களுக்கு முன்பு சிறிய அளவில் ரங்கநாதன் தெருவில் துணிமணி, பாத்திரக்கடைகள் ஆரம்பித்த சிலர் கடும் உழைப்பினால் இன்று பெரும் பணக்காரர் பட்டியலில் இருக்கிறார்கள். 
 
அப்படியே கடைகளை விரிவு படுத்துகிறோம் என்று ஒரு நான்கைந்து பிரபல நிறுவனங்கள் ஒட்டு மொத்த ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் ரோட்டை வளைத்துப் போட்டு விட்டார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டம் அங்கே. வெளிப்புறப்பார்வையில் அவர்கள் போட்டியாளர்கள் என்ற பிம்பம் எழுப்பப்பட்டாலும் உள்ளுக்குள் அவர்கள் எல்லாம் அங்காளி,பங்காளி தான் என்றொரு பேச்சும் இருக்கிறது.
 
மக்கள் கூட்டம் குவிகிறது. தினசரி பல கோடி ரூபாய் வியாபாரம் நடக்கிறது. அரசுக்கு ஒழுங்காக வரி கட்டப்படுகிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்று சொல்கிறார்கள் விபரம் அறிந்தோர். சரி, மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இருக்கிறதா? வசதியா, அப்படி என்றால்?! தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குவியும் கடையில் மக்கள் உட்கார வசதியாக நாற்காலிகள் கூட கிடையாது. “அதெல்லாம் போட்டா மக்கள் அப்படியே உட்காந்திடுவாங்க. அதுக்கெல்லாம் இடம் இல்லை” என்கிறார்கள். மக்கள் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளில் கூட பொருட்கள்.. பொருட்கள்.. பொருட்கள்.
 
மக்கள் இயற்கை உபாதைகளுக்காக கழிப்பறை வசதிகள்? அதை கட்டும் இடத்தில் நான்கைந்து பொருட்களாவது வைக்கலாமே என்கிறார்கள். மீறி இருந்தாலும் அதை பராமரிப்பது கிடையாது!
 
இதெல்லாம் பரவாயில்லை.. இதையே அரசாங்கத்திடமும் அலட்சியம் காண்பித்தால் என்ன ஆகும்? 
 
அரசாங்கமும் அலட்சியமாக இருக்கும். இருந்தது. இப்போது கோர்ட் தலையிட்டு அனுமதியின்றியும், அனுமதிக்கப்பட்டதற்கு மேலும் ஆக்கரமித்து கட்டப்பட்ட சுமார் 100 கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இது நடந்தது ஜூலை மாதத்தில். அப்போதே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து விட்டால் இந்த ஏழை வியாபாரிகளுக்கு தீபாவளி சமயம் பெரு நஷ்டம் ஏற்பட்டு வாழ்க்கை பெரும்பாடாகி விடும் என்பதால், தீபாவளிஎல்லாம் முடிந்த பிறகு கடந்த திங்கள் கிழமையன்று கடைகளை மூடி சீல் வைத்திருக்கிறார்கள். மறுநாள் மின்சாரம், குடிநீர் ஆகியவற்றையும் துண்டித்திருக்கிறார்கள்.
 
பாதிக்கப்பட்ட வியாபாரிகள் போயஸ் கார்டன் நோக்கி ஓடியிருக்கிறார்கள்.
 
பெரு நிறுவனங்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுவிடும் என்று சொத்தை வாதம் புரிபவரை மிகப் பெரிய பொருளாதார மேதை என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கும் நம் நாட்டில், லோக்கல் பெரு நிறுவனங்களான இந்தக் கடைகளை மூடி விட்டால் மாநிலத்தில் பொருளாதாரமே கண்டிபடிக்கு பாதிக்கப்பட்டுவிடுமாம். வணிகர் சங்கத் தலைவர் கண்ணீர் விட்டிருக்கிறார்.
 
சட்டத்தை மீறி கட்டும் போதெல்லாம் கண்டும் காணாமல் இருந்து விட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்கிறார்கள். வரவேற்போம்.
 
அவர்கள் கண்டும் காணாமலுமா இருந்திருப்பார்கள்? கண்டதற்கு பதிலாக காணாமல் இருக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்திருக்கும். அதான் மேட்டர்!
 
'அங்காடித் தெரு’ என்று ஒரு திரைப்படம் வெளியான பிறகு தான் அங்கே உள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் பரிதாப நிலை வெளியுலகிற்கு தெரிய வந்ததாம். அதிகாரிகள் சிலர் அவர்கள் குடியிருந்த இடங்களுக்கெல்லாம் சென்று சோதனை நடத்தினார்களாம். ஒரு சினிமா வந்து தான் அரசு அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிற நிலையில் தான் இருக்கிறதா நிர்வாகம்?!
 
ரிலையன்ஸ் நிறுவனம் காய்கறி வியாபாரத்தில் மாநிலம் முழுவதும் குதித்தால் அது சிறு வியாபாரிகளை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூக்குரல் எழுப்பும் வணிகர் சங்கம், இந்த ரங்கநாதன் தெரு வியாபாரிகள் பெரிய அளவில் துணிமணி, பாத்திரம் மற்றும் இதர பொருட்கள் வியாபாரத்தை வளைத்துப் போட்டு வருவதை மட்டும் வரவேற்பது புதிர் அல்லவா?!
 
வளசரவாக்கத்தில் இருக்கும் ஒருவர் ஒரு கணினி மேசை வாங்க வேண்டும் என்றாலோ, டிவி வாங்க வேண்டும் என்றாலோ, ஃப்ரிட்ஜ் வாங்க வேண்டும் என்றாலோ உடனே ரங்கநாதன் தெரு கடையைத்தான் சொல்கிறார். அப்படியெனில் இங்கே வளசரவாக்கத்தில் இருக்கும் சிறு வியாபாரிகள் நிலை?! அவர்களெல்லாம் இந்தத் தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்குச் சென்று விடலாமா?!
 
ரங்கநாதன் தெரு கடைகளுக்கு ஆப்பு அடிக்க முக்கிய காரணகர்த்தா, ‘டிராஃபிக் ராமசாமி’. அவர் சில வருடங்களுக்கு முன் தொடர்ந்த பொது நல வழக்கினால் தான் மேற்படி கடைகள் விதிமுறைகளை மீறி ஆக்கரமித்து கட்டப்பட்டுள்ளன என்று கோர்ட் வாயிலாக அரசாங்கத்துக்கு தெரிய வந்திருக்கிறது!
 
ரங்கநாதன் தெரு கடைகளின் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை ரங்கநாதன் தெருவோடு நின்று விடக்கூடாது. மாநிலம் முழுதும் அனைத்து ஆக்கரமிப்பாளர்கள் மீதும் பாரபட்சமின்றி எடுக்க வேண்டும்.
 
எல்லாவற்றிற்கும் கோர்ட் தலையிட்டு தான் நடவடிக்கை எடுக்கச் சொல்ல வேண்டுமென்றால் அடுத்த தடவையிலிருந்து பேசாமல் கோர்ட்டையை கூப்பிட்டு நாட்டையும், மாநிலத்தையும் ஆளச் சொல்லி விடலாம்!
 
ooOoo
 
கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட மே 13ம் தேதி காலை 9 மணி..
 
அந்த பிரபல தமிழ்த் தொலைக்காட்சியில் ‘பிரபல பத்திரிகையாளர்கள்’ என்று சொல்லப்படும் இரண்டு பேர்  வந்து உட்கார்ந்தார்கள்.
 
பத்திரிகையாளர் ஒருவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவரும் வந்து அமர்ந்தார்கள். 
 
“அனைத்து பத்திரிகைகளுமே அதிமுக கூட்டணி தான் வெற்றி பெரும் என்று பொய்யாகப் புழுகியுள்ளன. அல்லது இரண்டு தரப்புக்குமே சரிசமமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என்றெல்லாம் கருத்துக் கணிப்புகள் போட்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஒருவர் தான் கண்டிப்பாக திமுக பெரு வெற்றி பெரும் என்று சரியாக கணித்திருக்கிறீர்கள். அது எப்படி?” என்றார் முதலாமவர்.
 
“அவிய்ங்க எல்லாம் கருத்துக் கணிப்பே செய்யலை. அது எல்லாமே கருத்து திணிப்பு. மேசையிலே உட்காந்து தமிழ்நாடு முழுக்க சுத்திப் பார்த்த மாதிரி அவிய்ங்களா ஒரு கணக்கு போட்டுக்கிட்டாய்ங்க. ஆனா நாம ஒரு ஆளு தான் தமிழ்நாட்டிலே இண்டு இடுக்கு விடாம உள்ளே நொழைஞ்சு மக்கள்கிட்ட கருத்தை வாங்கி அறிவியல் முறையிலே கருத்துக் கணிப்பு வெளியிட்டோம். அதனால கண்டிப்பா சொல்றேன், இந்தத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெரும். 200 இடங்களுக்கு மேல் அந்தக் கூட்டணி வெல்லும். திமுக தனித்து பெருன்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்” என்று புளகாங்கிதப் பட்டார் அந்தப் பத்திரிகையாளர்.
 
இப்படி பேசிக் கொண்டிருக்கையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் ஸ்க்ரோலிங்கில் ஓட ஆரம்பித்தன. (வழக்கம் போல) தபால் வாக்குகள் பத்து பதினைந்தில் திமுக முன்னணி என்று செய்தி. 
 
”பாத்தீங்களா… வெற்றிச் செய்தி வர ஆரம்பிச்சிடுச்சு. தேர்தல் முடிவு முழுசும் வரும் போது கருத்துக் கணிப்புன்ற பேரிலே திமுக தோக்கும்ன்னு சொன்ன பத்திரிக்கைக்காரனுங்க மூஞ்சிய எங்கே கொண்டு வெச்சுப்பாங்க?” என்று எகத்தாளமாகப் பேசினார் நம்மாள்.
 
ஒரு அரை மணி நேரத்தில் பரவலாக வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வர ஆரம்பித்தன. அது வரை பல்லும் வாயுமாக பெரும் சிரிப்புடன் அமர்ந்திருந்த இரண்டு பேருக்கும் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது.
 
“விளம்பர இடைவேளைக்குப் பிறகு நிகழ்ச்சி தொடரும்” என்று சொல்லிவிட்டு போனவர்கள் தான். இதோ உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்று கூட திரும்ப வரவில்லை! 
 
அதிமுக சட்டமன்றத் தேர்தலிலும் சரி, திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலிலும் சரி, உள்ளாட்சித் தேர்தலிலும் சரி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. 
 
இப்போதும் தனது பெரிய மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சி அதிகாரிகளை மிரட்டி தான் தோல்வி பெற்ற இடங்களை வென்றுவிட்டதாக அறிவித்து ஜெயித்திருக்கிறது என்றும், ஏதேதோ புள்ளி விபரங்களை அள்ளி விட்டு கதை விட்டுக் கொண்டிருக்கிறது.
 
மக்கள் இந்த மாதிரியான மூன்றாம் தரப் பத்திரிகைகளை நம்புவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகி விட்டன என்பது வேறு விஷயம்.
 
முதல் பக்கத்தில் கருணாநிதி & குடும்பத்தினர் ஆதிக்கத்தை தவறே இல்லாதது போல சித்தரித்து எழுதும் அதே பத்திரிகையில் வயதான காலத்தில் அடிக்க முடியாத ஜால்ராவை கஷ்டப்பட்டு அடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெரியவர் நடுப்பக்கத்தில் எழுதுகிறார், “லிபியாவில் கடாஃபியின் மகன்களும், குடும்பத்தினரும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்ததால் தான் அவருக்கு வீழ்ச்சி” என்று! ஐயா பெரியவரே, இதே பேச்சை கருணாநிதிக்கும் சொல்வீரா? 
 
ஜால்ரா, அல்லக்கை பத்திரிகையாளராக இருக்க வேண்டியது தான். தவறில்லை. ஆனால் எந்த ஒரு சமயத்திலும் சக பத்திரிகையாளர்களை அவனுங்க மூஞ்சியை எங்கே கொண்டு வெச்சுப்பானுங்க என்றெல்லாம் கேள்வி கேட்டால் அடுத்த 20 நிமிடங்களிலேயே கேட்ட மூஞ்சியை எங்கே கொண்டு வைப்பது என்று தெரியாமல் தலை தெறிக்க ஓட வேண்டியாகி விட்டதே!
 
மேலே சொன்ன பெரியவர் ஒரு கட்டுரையில் எழுதுகிறார், “பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம் வைத்தார் ஒரு சிவசேனைக்காரர். இந்துத்துவாக்களின் வக்கிரத்திற்கு இது எடுத்துக்காட்டு”!
 
விபூதி, குங்குமம் வைத்ததே வக்கிரம் என்றால், சிலைகளை உடைத்தும், வயதானவர்களை உதைத்தும் செய்த காரியமெல்லாம் எந்த வகையில் சேர்த்தி என்று அந்த பெரியவர் எழுதவில்லை.
 
தேவையுமில்லை. இந்த மாதிரியான ஆட்களின் ஜால்ரா சப்தம் அதிகரிக்க அதிகரிக்க திமுக அழிவுப்பாதையை நோக்கி மேன்மேலும் நகர்ந்து கொண்டே இருக்கும் என்பதால் அப்படியே விட்டு விடுவோம்!

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “அழிவுப்பாதையை நோக்கி தி.மு.க

  • November 2, 2011 at 11:49 pm
    Permalink

    போறபோக்குல ஷாப்பிங் போயிட்டு .., பதிவிட்டதுக்கு முதல்ல வாழ்த்துக்கள்…! ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுனாலே ஆயிரத்தெட்டு நொள்ளை கேள்வி கேக்கும் இந்த அதிகாரிகள், இப்படி ஆள் நிக்கக்கூட முடியாதமானிக்கி கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தது.. மனுஷ உயிரை காவு வாங்கவா…! மீண்டும் ஒரு பெரிய விபத்து வந்தாத்தான் அறிவு கண் திறக்குமோ..!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 2, 2011 @ 7:29 pm