விலையேற்றம் தவிர்க்க முடியாதது

பேருந்துக் கட்டணத்தையும், பால் விலையையும் திடீரென உயர்த்திருக்கிறார் ஜெ.
 
சமீபத்தில் தேர்தல்கள் எதுவும் இல்லாத நிலையில் இப்படி விலை உயர்வை அறிவித்திருக்கிறார் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். அடுத்ததாக மின் கட்டணமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மத்திய அரசு அடிக்கடி அறிவிக்கும் பெட்ரோல் கட்டண உயர்வைப் போல அல்லாமல் எப்போதோ ஒரு முறை மாநில அரசு அறிவிக்கும் இந்த மாதிரியான விலை ஏற்றங்கள் தவிர்க்க முடியாதவை தான். வோட்டு விழாதோ என்ற எண்ணத்தில் விலை ஏற்றத்தை அறிவிக்காமல் ஒத்தி வைத்துக் கொண்டே இருந்தால் கடைசியில் சம்பந்தப்பட்ட துறை ஒட்டு மொத்தமாக திவாலாக வேண்டும் தான்.
 
ஒருபுறம் எக்கச்சக்க இலவசங்கள், மறுபுறம் விலையேற்றமே செய்யக்கூடாத நிலை.. இப்படியே தொடர்ந்தால் அரசு எப்படி செயல் பட முடியும்?
 
‘டாஸ்மாக்’ வருமானம் மூலம் தான் பல இலவசங்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது அரசு. இந்த மாதிரியான தவிர்க்க முடியாத விலையேற்றங்கள் தேவையில்லை என்றால் அடுத்தபடியாக மீண்டும் லாட்டரிச் சீட்டை அரசு கொண்டு வர வேண்டிய துர்பாக்கிய நிலை வரும். தேவையா அது?
 
வருடம் தோறும் நமக்கு சம்பளம் மட்டும் உயர வேண்டும். ஆனால் அதற்கு ஈடாக அரசு விலையேற்றம் செய்தால் அதனைக் கண்டித்து அறிக்கைகளும், கருத்துகளும் பாயும். 
 
‘போன ஆட்சியில் விலையேற்றம் இல்லை. இந்த ஆட்சியில் ஏன்?” என்று கேட்பதே வேடிக்கையான கேள்வி. போன ஆட்சியில் ஏன் விலையேற்றம் செய்யவில்லை? சம்பந்தப்பட்ட துறை அதனால் அடையும் நஷ்டத்தை எப்படி சரி கட்டலாம் என்று இருந்தார்கள்? அதற்கெல்லாம் விளக்கம் கிடைக்காது. ‘கஜானா காலி, களஞ்சியமும் காலி’ என்ற நிலையைத் தான் கொண்டு வர முடிகிறது திமுக ஆட்சியால் ஒவ்வொரு முறையும்!
 
விலையேற்றம் தவிர்க்க முடியாதது. ஆனால் ஒட்டு மொத்தமாக அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிவித்திருப்பது தான் எதிர்பார்க்காதது. 
 
விலையேற்றத்தை கண்டிப்பவர்கள் இந்த விலையேற்றம் இல்லாமல் அரசு நிர்வாகத்தை எப்படி சீராக செயல்படுத்த முடியும் என்ற ஆலோசனையும் தரலாம்! அதை விட்டு விட்டு கண்டிக்க மட்டும் தான் தெரியும் என்று சொல்வது கேலிக்கூத்து!
 
ooOoo
 
சென்னை வளசரவாக்கம் பகுதியில் நகராட்சி அலுவலகத்தின் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் சிக்னல் முக்கால்வாசி நேரம் வேலை செய்வதே இல்லை. மீறி வேலை செய்தாலும் அதை யாருமே மதிப்பதில்லை. இது குறித்து பல முறை பல இடங்களில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் சம்பந்தப்பட்டவர்கள் கண்டு கொள்ளவேயில்லை. போன மாதம் கூட சென்னை டிராஃபிக் போலீஸ் வைத்திருக்கும் ஃபேஸ் புக் பக்கத்தில் இது குறித்து புகார் தெரிவித்திருந்தேன். ஆனால் அந்தப்  பக்கத்தில் செய்யப்படும் புகார்களில் எது எதில் ஃபைன் போட்டு வசூல் செய்யலாமோ அதை மட்டும் தான் அவர்கள் கவனத்தில் கொள்வார்கள் போலிருக்கிறது. புகார் கிடப்பில் போடப்பட்டது.
 
நான்கைந்து நாட்கள் முன்பு அந்த சிக்னலில் பச்சை ஒளிர்ந்து அதன் காரணமாக டூ வீலரில் ரோட்டை கிராஸ் செய்ய முயன்றவர் மீது சிக்னலை மதிக்காமல் வந்த அரசுப் பேருந்து மோதி, அவர் சம்பவ இடத்திலேயே பலி! பின்னால் உட்கார்ந்து வந்த அவரது மனைவிக்கு படு காயம். இன்னும் கொடுமை என்னவென்றால் மோதி ஆள் இறந்து விட்டார் என்று தெரிந்த உடன் பேருந்தை ஓட்டி வந்த அயோக்கிய டிரைவர் அவசர அவசரமாக பேருந்தை கிளப்பிக் கொண்டு போனது தான். உள்ளே உட்கார்ந்திருந்த பெரும்பாலான மக்களும் அவரவருக்கு தாமதமாகிறதே என்ற நிலையில் சும்மா இருந்து விட்டார்கள். அப்போதே பஸ்ஸில் இருந்த மக்கள் ஒன்று திரண்டு அந்த அயோக்கிய நாயை அடித்துத் துவைத்திருக்க வேண்டும். சிக்னலை மதிக்காமல் வந்தது தவறு. ஆள் மீது மோதி சாகடித்தது மாபாதகம். அதையெல்லாம் விட அங்கிருந்து தப்பி ஓடியது மன்னிக்க முடியாத க்ரிமினல் குற்றம். இதன் பிறகு அந்தப் பகுதி மக்கள் சாலை மறியல் நடத்தி இரண்டு மணி நேரங்களுக்கு அந்தப் பக்கம் பேருந்துகள் செல்ல முடியவில்லை. எல்லா ஏரியாக்களிலும் ட்ராஃபிக் ஜாம் என்று ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து அப்டேட் செய்யும் சென்னை டிராஃபிக் போலீஸ் இந்தச் செய்தியை மூடி மறைத்து விட்டது.
 
மீண்டும் இதைச் சுட்டிக்காட்டி அவர்கள் பக்கத்தில் தகவல் தெரிவித்தேன். அதனை உடனடியாக நீக்கி விட்டார்கள். மறுநாளில் இருந்து அந்த டிராஃபிக் சிக்னல் வழக்கம் போல செயல் படுகிறது. அதாவது சிக்னலில் சிகப்பு எரிந்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை.
 
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பெரும்பாலோருக்கு தாங்கள் ராக்கெட் செலுத்துவாகத்தான் நினைப்பு. ஆட்டோக்காரர்களை விட படு கேவலமாக இடது புறம், வலது புறமெல்லாம் இண்டிகேட்டரே இல்லாமல் திருப்புவது. பஸ் நிறுத்தத்திற்கு பல அடி தூரங்கள் முன்னரே நடு ரோட்டில் நிப்பாட்டுவது என்று இவர்கள் செய்யும் அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?!

தொடர்புடைய படைப்புகள் :

4 thoughts on “விலையேற்றம் தவிர்க்க முடியாதது

 • December 12, 2011 at 9:42 am
  Permalink

  தாங்கள் கூறிய கருத்துகள் எல்லாம் மிக மிக சரியாக உள்ளது.கருணாவின் ஆட்சியிலும் விலையேற்றத்திற்கு இதே காரணங்கள் பொருந்துமே .அம்மா ஆட்சிக்கு வருமுன்பு மின்சாரத்தட்டுபாடு கருணாவின் கையாலாகாத்தனம் என்றார் .இன்று தனக்கு ஆடத்தெரியா மல் ரோடு கோணல் என்கிறார் .விலைவாசி குறித்து மிக கடுமையாக கருணாவை சாடினார் .இன்று விளக்கம் தருகிறார் .நாமும் விளங்கிக்கொள்ளவேண்டும் அவர்களது அரசியலை .போய் புள்ளைங்களை படிக்க வையுங்க அப்பா.

  Reply
 • November 26, 2011 at 1:27 pm
  Permalink

  //விலையேற்றத்தை கண்டிப்பவர்கள் இந்த விலையேற்றம் இல்லாமல் அரசு நிர்வாகத்தை எப்படி சீராக செயல்படுத்த முடியும் என்ற ஆலோசனையும் தரலாம்!//

  தவறு நண்பரே, இதை செய்யத்தான் ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுத்து முதல்வர், அமைசர்கள் என்று பதவி கொடுத்து உள்ளார்கள். இவர்களின் வேலை அதனை செய்வது தான்.

  எழுதி வைத்துகொள்ளுங்கள், இந்த விலை உயர்விற்கு பின்பும் இந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்கும்.

  Reply
 • November 18, 2011 at 7:27 am
  Permalink

  விலையேற்றம் தவிர்க்க முடியாது, நியாயம் தான் என்ற உங்களின் நடுநிலையான(?) கருத்துக்கு நன்றி. தற்போது ஆவின் அட்டை வைத்திருப்போர் பால் வாங்குபவர்கள் அதிகமா அல்லது வெளி மார்க்கெட்டில் ஆவின் பால் வாங்குபவர்கள் அதிகமா? ஆவின் பால் அட்டையில் வாங்கும் பாலுக்கும் அட்டையில்லாதவர் வாங்கும் பாலுக்குமே(ஆவின் டீலரிடம்) குறைந்தது 2 ருபாய் வித்தியாசமுண்டு. வெளிமார்க்கெட்டில், இதுவே 3 ருபாய் அதிகம். இந்த விலையேற்றத்தால், குறைந்தது 9 – 10 ருபாய் பால் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு. மின்சாரத்திற்கான விலையேற்றம், கண்டிப்பாக ஷாக் அடிக்கும் என்பது நிச்சயம். எற்கனவே, ரயிலில் பயணம் செய்ய கூட்டம் அலை மோதுகிறது, இனி கேட்கவே வேண்டாம். இந்த விலையேற்றத்தினால், மேல்-தட்டு மக்களுக்கு, எந்த பாதிப்பும் இல்லை, ஏனென்றால், இவர்கள் எண்ணி எண்ணி செலவு செய்யும் ரகத்தில்லை. அரசு ஊழியர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை, ஏனென்றால், விலைவாசி உயர உயர, இவர்களது, சம்பளம், பஞ்சப்படி, அஞ்சப்படி, என்று ஏறிக் கொண்டேயிருக்கும். பெரிதும் பாதிக்கபடப்போவது யாரென்றால், நடுத்தர வர்கம்தான். அதிலும் தனியாரிடத்தில் வேலைச் செய்யும் ஊழியர்கள் குடும்பம் பாடு திண்டாட்டம் தான். ஏனென்றால், விலைவாசி உயர்வது போல், இவர்களது சம்பளம் உயர போவதில்லை. அவர்களது வாழ்க்கைதரமும் உயர போவதில்லை என்பது உண்மை. நமது நாட்டில், அரசு ஊழியர்கள் எத்தனை சதவிகிதம்? தனியார் ஊழியர்கள் எத்தனை சதவிகிதம்? மேல்-தட்டு மக்கள்,நடுத்தர மக்கள் மற்றும் கீழ்-தட்டு மக்கள் எவ்வளவு சதவிகிதம்? என்று தெரிந்தால், இந்த விலையேற்றத்தினால் பாதிக்கப்படப்போகும் மக்கள் எவ்வளவு சதவிகிதம் என்பது தெரிந்து விடும். ராமன் ஆண்டாலும் – ராவணன் ஆண்டாலும், மக்களுக்காக அரசாங்கம் இல்லை. அரசாங்கத்திற்காக தான் மக்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்த அரசாங்கம் நன்றாக செயல்பட, மக்களாகிய நமக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று மட்டும் புரிகிறது. அண்ணா நாமம் வாழ்க! புரட்சி தலைவர் நாமம் வாழ்க! நீங்கள் எங்களுக்கு போட்ட நாமம் வாழ்க!

  Reply
 • November 17, 2011 at 7:00 pm
  Permalink

  ”விலையேற்றம் தவிர்க்க முடியாதது” – நடுநிலையாக….நன்றாக!

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 17, 2011 @ 10:14 am