மக்களாட்சியா…. மந்திரிகளின் ஆட்சியா


ஜனநாயகம் என்பது மக்களால், மக்களின், மக்களுக்காக செயல்படும் ஆட்சியாகும். இப்படி மக்களால் எற்படுத்தபட்ட மக்களின் ஆட்சியில், மந்திரிகளும், அதிகாரிகளும், மக்களுக்காக செயல்படும் ஊழியர்களே தவிர, முதலாளிகள் அல்ல. மக்களுக்காகதான் அரசாங்கமே தவிர, அரசாங்கத்திற்காக மக்கள் அல்ல என்பதை ஆட்சியுள்ளவர்கள் புரிந்து செயல்படுகிறார்களா என்று கேட்டால், இல்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. "குடி உயர கோல் உயரும்" என்ற பழைய கிழமொழியெல்லாம், கிடப்பில் போட்டுவிட்டு, நாமும் நம் சந்ததியினரும் நன்றாக இருந்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மையோடு, சுய நலத்தோடு, செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த மக்களாட்சிக்கும்(?), இதற்கும் முன்னர், நாம் அடிமைப்பட்டிருந்த ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சிக்கும், அதற்கு முன்னே நடைபெற்ற மன்னராட்சிக்கும் என்ன வேறுபாடு என்றால் பேச்சுரிமை(?) ஒன்றை தவிர வேறு ஒரு மாற்றமும் இல்லை என்று உறுதியாக கூற முடியும். இப்போதும், இந்த மக்களாட்சியில் என்ன நடக்கிறது என்றால், மன்னராட்சி போல், ஒரே குடும்பத்து ஆட்சியோ அல்லது ஒரே கட்சியின் ஆட்சியோதான் நடைபெறுகிறது. எதிர்த்து கேட்டோமென்றால், ஆங்கிலேயரின் ஆட்சி போல் அடக்குமுறை ஏவி விடப்படுகிறது. மன்னராட்சிக்கும், ஆங்கிலேயரின் ஆட்சிக்கும் மாற்றாகதான், ஜனம் (மக்கள்) தான் நாயகனாக (முதலாளிகளாக) இருக்க வேண்டும் என்று "ஜனநாயகம்" என்ற மக்களாட்சியை ஏற்படுத்தினார்கள். ஓட்டு போடும் அந்த ஒரு நாள் மட்டும், மக்களை "முதலாளி" என்ற ஸ்தானத்தொடு சிம்மாசனத்தில் உட்கார வைத்து விட்டு, பிறகு, ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த மக்களின் பிரதிநிதிகள்(?) மக்களை "அடிமை"யை விட கேவலமாக நடத்துவதன் மக்களாட்சியா? இவர்கள் வைத்ததுதான் சட்டம், இவர்கள் செய்வதுதான் நியாயம் என்று மக்கள் நலனில் துளியும் அக்கறையில்லாமல், இப்போது நடக்கின்ற ஆட்சியை பார்க்கும் போது, "இம்" என்றால் "சிறைவாசம்", "ஏன்" என்றால் " வனவாசம்" என்ற ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சிதான் ஞாபகம் வருகிறது. தேர்தல் என்றாலே போதும், "மக்களே", ஓட்டு போட மறந்து விடாதீர்கள், உங்களின் "ஜனநாயக கடமை"யை நிறைவேற்றுங்கள், உங்களின் உரிமையை நிலைநாட்டுங்கள்" என்று பட்டி தொட்டியெல்லாம் கூவி, இந்த நாள், உங்களின் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நாள் என்று " அண்ணாமலை" பட டயலாக் போல் பில்டப் செய்வது, "தாங்க"முடியவில்லை என்றாலும், பின்னர் மக்களை "ஏங்க" வைப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இதற்கான சரியான பதில் "பகவத் கீதை"யில் உள்ளது… என்னவென்றால், "கடமையை செய், பலனை எதிர்ப்பார்க்காதே" என்பது தான். நாம் நம் ஜனநாயக கடமையை ஓட்டளிப்பதன் மூலம் ஆற்றி… எதிர்ப்பார்க்காத பலனை(மக்கள் நலன் நசுக்கப்படுவதுதான்)அடைந்து திண்டாடுவதுதான் நமது தலைவிதி என்று புலம்புவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்? 
 
ஜனநாயகத்தின் 4 தூண்களாக விளங்குபவை… (1) பாராளுமன்றம் (2) நிர்வாகம் (3) நீதித்துறை (4) செய்தித்துறை (இதில் ஊடகங்களும் அடங்கும்).இதில் பாராளுமன்றம், மக்கள் நலனை கருத்தில் கொண்டு சட்டங்களை இயற்றும் மிக பெரிய பொறுப்பில் உள்ளது. இதை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு நிர்வாகத்துறையிடம் உள்ளது. நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டங்களால் மக்களுக்கு எந்த தீங்கும் நேராதவாறு காப்பது நீதித்துறையின் கடமையாகும். . இவை அனைத்தும் மக்களிடையே கொண்டு சேர்ப்பது தான் செய்தித்துறை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்த 4 தூண்களுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது " மக்கள் நலன்" தான். அப்படிதான் இவர்கள் செயல்படுகிறார்களா என்று கேட்டால்.. இல்லை.. இல்லவே இல்லை என்று கூக்குரலிட முடியாமல்.. மனதிற்குள்ளே மௌனமாக சொல்லிக் கொள்வதுதான், காலத்தின் கட்டாயம். விவாதத்தின் முதலில், முக்கிய பொறுப்பில் இருக்கின்ற சட்டங்களை இயற்றும் பாராளுமன்றத்தை பற்றியும், அதை செயல்படுத்தும் நிர்வாக துறையான அரசாங்கத்தை பற்றி பார்ப்போம். மக்களின் பிரதிநிதி, மக்களுக்குக்காகவே சேவை செய்ய பிறந்தவர்கள், மக்கள் பணியே மகேசன் பணி என்ற போர்வையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளை கூட்டி, (எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும்) இவர்களால் இயற்றப்பட்ட சட்டங்கள், இப்போது நீதிமன்றங்களில் விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது ஊரறிந்த விஷயம். இதை நடைமுறைப்படுத்த வேண்டிய மாநில அரசுகளும் எதிர்ப்பது இன்னும் வேடிக்கை. மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு இயற்றப்பட்ட சட்டங்கள் என்றால், அது நீதிமன்ற படிக்கட்டுக்கு போக வேண்டிய அவசியமும் இருந்திருக்காது, எதிர்க்கட்சிகளும், மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டிய தேவையும் இல்லை. மக்கள் விரோதத்தை சம்பாதிக்கும் வகையில் இந்த பாராளுமன்றம் சட்டங்களை இயற்றி செயல்பட்டதினால், அது விவாதத்திற்கு வித்திட்டது. நீதிமன்றத்திற்கு போன விஷயங்களை பற்றி நாம் விவாதிக்கப் போவதில்லை. அங்கு போனதற்கு உண்டான ஒரு சில காரணங்களைப் பற்றி விவாதிப்போம். 
 
நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கு, இந்த ஆட்சியாளர்கள், அன்னிய செலவாணி போதுமானதாக இல்லை, மக்களுக்கு மானியம் வழங்குவதற்கும், வாங்கிய கடன் களுக்கு வட்டி கட்டுவதற்கும், நமது நாட்டின் வருமானம் போதவில்லை போன்றவை இவர்கள் சொல்லும் சில காரணங்கள். இதுவரை மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள எந்த பட்ஜெட்டாவது, உபரி பட்ஜெட்டாக போட்டார்களா என்றால், எல்லாம் துண்டு விழும் "பற்றாக்குறை" பட்ஜெட்டாகதான் உள்ளது. போகிற போக்கை பார்த்தால், துண்டல்ல.. எட்டு முழம் சேலையே விழுந்தாலும் ஆச்சரியமில்லை. வரவு எட்டணா… செலவு பத்தணா".. என்று வரவுக்கு மீறிய செலவுகளை ஏற்படுத்திவிட்டு, இப்போது "துந்தணா..துந்தணா". என்று பாடி, மக்களை மேலும் வதைப்பது எப்படியிருக்கிறது என்றால்.. "வரம் தந்த சாமியின் மீதே.. கை வைத்த கதை" போல் அல்லவா இருக்கிறது. இன்றும், இந்த சட்டங்களை இயற்றும் பாராளுமன்ற இரு அவைகளும் கடந்த 9 நாட்களாக எந்த அலுவலும் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி( இது இன்னும் நீடிக்குமா அல்லது முடியுமா என்று தெரியாது) ஆனால், இந்த முடக்கத்தினால், நம் நாட்டிற்கு ஒரு நாளைக்கு சுமார் ரூபாய் 2 கோடி என்று, இதுவரை ரூபாய் 18 கோடி நஷ்டம் என்று செய்தி வெளியாகியுள்ளது. . இந்த நஷ்ட கணக்கு யார் தலையில் விழும் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவர்கள் பாராளுமன்ற அவையில் கேள்வி கேட்பதற்கே லஞ்சம் வாங்கியவர்களுக்கு, இதெல்லாம் சர்வ சாதாரணம். ஆனால், அரசும், அரசு சார்ந்த நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை ஒன்று இதோ… எந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தினாலும் இந்த பெட்ரோல் விலையை மட்டும் கட்டுப்படுத்த முடியாது என்று வாரம் ஒரு முறை இந்த அரசுகள் விலை ஏற்றுவதற்கு பல காரணங்கள் கூறினாலும், மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது, கச்சா எண்ணை விலை உயர்ந்ததால், எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதுதான். மக்களே… இதோ கடந்த மார்ச் 31 2011 தணிக்கை செய்யப்பட்ட எண்ணை நிறுவனங்களின் லாப நஷ்ட கணக்கு உங்கள் பார்வைக்கு : பாரத் பெட்ரோலியம் – நிகர லாபம் : ரூபாய் 1546 கோடி; இந்தியன் ஆயில் கார்பரேஷன் : நிகர லாபம் : ரூபாய். 7445 கோடி. (www.moneycontrol.com). கேக்கிறவன் கேனையனாக இருந்தால் கேப்பையிலே நெய் வடியுது என்கிற கதைப் போல் அல்லவா இருக்கிறது.
 
இதுதான் மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட ஆட்சியா? தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற நெருப்பு இல்லையென்றால், இந்த பாரளுமன்ற (மக்களின்) பிரதிநிதிகள், நீர்,நிலம், காற்று, ஆகாயம், என்ற நான்கு பூதங்களோடு ஆடிய அரசியல் விளையாட்டுக்கள்(அதாங்க ஊழல்) வெளிச்சத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இருந்திருக்காது. ஆட்சி, அதிகாரம், ஆள்பலம், ஆடம்பரம், பதவி, புகழ், பணபலம், சொத்து என்று படாடோபமாக சுற்றி கொண்டிருந்த இந்த மக்கள் பிரதிநிதிகள், இப்போது , வழக்கு, விசாரணை, காவல், கோர்ட்டு, ஜெயில், ஜாமீன் என்று பரிதாபமாக அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், திஹாரில் திபாவளி கொண்டாடியவர்கள், பொங்கலுக்கு பொங்க வைக்க வெளியே வருவதை பார்க்கும் போது, தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், மேலும் தர்மத்தையே கொல்லும் என்றுதான் நமக்கு தோன்றுகிறது.
 
சரி.. பாராளுமன்றத்தின் அங்கமான, மாநில அரசான சட்டமன்றத்தை பற்றிப் பார்ப்போம். தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாரடி பாயும் என்பது போல், கடந்த 6 மாத கால தமிழக அரசின் ஆட்சியில் எடுக்கப்பட்ட சில முடிவுகள்(சட்டங்கள்) நீதிமன்றத்தினால் தடுக்கப்பட்டதிற்கு அல்லது மாற்றப்பட்டதிற்கு, மக்கள் விரோத போக்கே காரணம் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை. தனி நபர் துதி, குடும்ப ஆட்சிகள், கட்சிகாரர்களின் ஆதிக்கம், மாநிலங்களிடையே நிலவும் சண்டைகள், பிடிவாதங்கள் போன்றவைகளால் முழி பிதுங்கி நொந்து நூடுல்ஸாய் போன மக்களளுக்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுப்போல், மேலும் மேலும் வரிச்சுமை, அத்தியாவசிய பொருட்களின் விலையெற்றம், வேலை நீக்கங்கள், இட மாற்றங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நிர்வாக சீர்கேட்டிற்கு, கடந்த ஆட்சியில் மேல் பழி போட்டு தப்பித்துக் கொள்வதை ஒரு யுக்தியாக கையாண்டு கொண்டிருக்கிறார்கள், இந்த ஆட்சியாளர்கள். , எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், இதற்கு விதி விலக்கல்ல என்பதை ஆணித்தரமாக கூற முடியும். இதையெல்லாம், நாம் அனுபவிக்கே வேண்டும் என்று நம் தலை"விதி" என்று நொந்து கொள்வதை காட்டிலும், ஆட்சியாளர்களின் "சதி" என்பதில் யாருக்கும் ஐயமில்லை என்பதே உண்மை. 
 
ஜனநாயகத்தில், சட்டம் இயற்றும் ஆட்சியாளர்கள் இப்படியென்றால், அடுத்த தூணான, அதை செயல்படுத்தும் மந்திரிகளும் அதிகாரிகளும், எதோ தாங்கள் எல்லாம் வானத்திலிருந்து குதித்த தேவ தூதர்கள் போல் செயல்படுவதைப் பார்க்கும் போது, இங்கே நடப்பது, மக்களாட்சியா அல்லது மந்திரிகளின் ஆட்சியா என்பது சந்தேகமாக உள்ளது. "அரை காசு உத்யோகமாக இருந்தாலும், அரசாங்க உத்யோகமாக இருக்கணும்" என்று தங்கள் பெண்களுக்கு அரசாங்க வேலையில் இருந்தவர்களுக்கு மணம் முடித்த காலமுண்டு. வாரத்தில் இரு நாள் விடுமுறை, சம்பளத்துடன் கூடிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, மாதம் முடிவதற்க்கு முன்னரே சம்பளம், பேறு கால விடுப்பு (பெண்களுக்கு), காப்பீட்டு திட்டம், சேம நலத்திட்டம், பயண சலுகைகள், வருடா வருடம் சம்பள உயர்வு, அடிக்கடி உயரும் பஞ்சப்படி-அஞ்சப்படி, பணியிலிருந்து ஓய்வு பெறும் போது பணிக் கொடை, ஓய்வு பெற்ற பின்னரும் ஓய்வுதியம் ( அதாங்க சாகிற வரைக்கும் கஞ்சி) இதெல்லாம் என்ன தெரியுமா? மக்களுக்கு சேவை புரிவதற்காக, அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளாகும். மந்திரிகளுக்கும், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இதை விட அதிகப்படியான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இத்தனை சலுகைகளை பெற்றுக் கொண்டு இவர்கள் மக்களுக்கு வேலை செய்கிறார்களா என்றால் இல்லை என்று உறுதியாக கூற முடியும். 
 
அரசாங்க ஊழியர்கள், வேலை நேரத்தில், கேண்டீன் களிலும், ஹோட்டல்களிலும் பொழுதை கழிக்கிறார்கள் என்று பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. காலையில் நேரத்தோடு வேலை வராமல், (லேட்டாக வருவது), மாலையில் நேரத்தோடு(சீக்கிரமாக) வீட்டுக்கு செல்வதுதான், இவர்களுக்கு வாடிக்கை. ஒரு தனியார் நிறுவன ஊழியர், அந்த நிறுவனத்தில் தனக்கு கொடுக்கபட்ட இலக்கை நிறைவேற்ற முடியாமல் போனால், ஒன்று, அவர் வேலையை விட்டு நீக்கப்படுவார், அல்லது பதவி உயர்வு /சம்பள உயர்வு இருக்காது. ஆனால், அரசாங்க ஊழியர்களுக்கு எந்த விதமான இலக்குமில்லை, நீக்கம் என்ற பேச்சிற்கே இடமில்லை(போராட்டம் வெடிக்கும்) சம்பள உயர்வுக்கு குறைவில்லை.. வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் வரும், வேலை செய்தால் சம்பளத்தோடு கிம்பளமும்(லஞ்சம்) வரும். "இந்தியன்" படத்தில் ," எந்த நாட்டிலும், லஞ்சம் இல்லாமில்லை. ஆனால், மற்ற நாட்டிலில் எல்லாம் வேலை செய்யாமல் இருப்பதற்கு தான் லஞ்சம் வாங்குவார்கள், நமது நாட்டில் மட்டும் தான் வேலை செய்வதற்கே லஞ்சம் வாங்கப்படுகிறது" என்ற வசனம் வரும். ஆனால், அதையெல்லாம் பார்த்து நாம் கைதட்ட முடிந்ததே தவிர, களைய முடிந்ததா என்றால், இல்லை என்று ஆணித்தரமாக கூற முடியாமல் போனதற்கு நாமும் ஒரு காரணம் என்று வெட்கி தலை குனியவேண்டியுள்ளது. கொடுத்ததால் தான் வாங்குகிறோம்.. இல்லை இல்லை, கேட்பதால் தான் கொடுக்கிறோம் .. என்று மாறி மாறி குற்றம் சாட்ட முடிந்ததே தவிர, தீர்க்க முடியவில்லை.
 
மக்களின் வரி பணம்தான், அரசாங்கம் செயல்படுவதற்கான மூலதனம். அதை சரியாக திட்டமிட்டு, வருமானத்தை பெருக்கி, அநாவசிய நிர்வாக செலவுகளை குறைத்து, நிர்வாக சீர்கேடுகளை களைந்து, தேவையற்ற இலவசங்களை நிறுத்தினாலே, மக்களின் மேல் திணிக்கப்படும் வரிச்சுமைகள் குறைக்கலாம். அதை விட்டு விட்டு, இந்த மக்கள் ரொம்ப நல்லவர்கள், எவ்வளவு வாட்டி கேட்டாலும், கொடுப்பார்கள், கொடுத்துக்கொண்டே இருப்பார்கள், என்று வரி மேல் வரியாக சுமத்துவதைப் பார்க்கும் போது, பொன் முட்டையிடும் வாத்தை(மக்களை தான்), ஒரேடியாக வெட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது கண்கூடாக தெரிகிறது. இந்த வரிச்சுமையினால், மேல்-தட்டு மக்களுக்கு, எந்த பாதிப்பும் இல்லை, ஏனென்றால், இவர்கள் எண்ணி எண்ணி செலவு செய்யும் ரகத்தில்லை. அரசு ஊழியர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை, ஏனென்றால், விலைவாசி உயர உயர, இவர்களது, சம்பளம், பஞ்சப்படி, அஞ்சப்படி, என்று ஏறிக் கொண்டேயிருக்கும். பெரிதும் பாதிக்கபடப்போவது யாரென்றால், நடுத்தர வர்கம்தான். அதிலும் தனியாரிடத்தில் வேலைச் செய்யும் ஊழியர்கள் குடும்பம் பாடு திண்டாட்டம் தான். ஏனென்றால், விலைவாசி உயர்வது போல், இவர்களது சம்பளம் உயர போவதில்லை. அவர்களது வாழ்க்கைதரமும் உயர போவதில்லை என்பது உண்மை. நமது நாட்டில், அரசு ஊழியர்கள் எத்தனை சதவிகிதம்? தனியார் ஊழியர்கள் எத்தனை சதவிகிதம்? மேல்-தட்டு மக்கள்,நடுத்தர மக்கள் மற்றும் கீழ்-தட்டு மக்கள் எவ்வளவு சதவிகிதம்? என்று தெரிந்தால், இந்த விலையேற்றத்தினால் பாதிக்கப்படப்போகும் மக்கள் எவ்வளவு சதவிகிதம் என்பது தெரிந்து விடும். ராமன் ஆண்டாலும் – ராவணன் ஆண்டாலும், மக்களுக்காக அரசாங்கம் இல்லை. அரசாங்கத்திற்காக தான் மக்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது. யானை தன் தலையில் தானே மண்ணை போட்டு கொண்டதை போல், வேலியே பயிரை மேய்ந்த கதை போல், நாமே நமக்கு வைத்துக் கொண்ட ஆப்புதான் இந்த மக்களாட்சி… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி… மந்திரிகளின் ஆட்சி.இந்த அரசாங்கம் நன்றாக செயல்பட, மக்களாகிய நமக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று மட்டும் புரிகிறது.
 
ஜனநாயகத்தின் மற்ற தூண்களான நீதிமன்றங்கள், செய்தித்துறைப் பற்றிய எனது விழிப்புணர்வு கட்டுரை, வரும் வாரங்களில்…

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 9, 2011 @ 4:19 pm