கிறுஸ்துமஸ் கச்சேரி

இன்னிக்குக் கிறுத்துமஸ். எழுந்து வந்ததும் குழந்தைகளுக்கு சாண்டா வாங்கிய பரிசுப் பொருட்களை திறந்து, அசெம்பிள் செய்து, அந்த முதல் சந்தோஷ தருணங்களைப் பகிர்ந்து கொண்டாகிவிட்டது. நாம வாங்கின பரிசுன்னு கூட சொல்ல முடியலை என்ன சாண்டாவோ என்ன பாரம்பரியமோ.

பையன் பாக்கெட் மணியை செலவழித்து அப்பா, அம்மா, தங்கைக்கு என சிறு சிறு பரிசுகள் வாங்கித் தந்தது அருமை. அதிலும் ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும் என யோசித்து வாங்கி அசத்திவிட்டான். எனக்கு பிடித்த நியூயார்க் ஜெயண்ட்ஸ் அணியின் படம் போட்ட சிறு நோட்டுப் புத்தகம் ஒன்று வாய்த்தது.

மூன்று நாள் லீவ். என்ன செய்வது என்று முடிவேதும் பண்ணவில்லை. வந்திருக்கும் மாமனார் மாமியாரையாவது கூட்டிக் கொண்டு எங்கேயாவது சென்று வர வேண்டும்.

கிருஷ்ணா கச்சேரியை இன்னும் ஒரு முறை பார்த்தாச்சு. என்ன ட்ரெஸு இது? கொஞ்சம் பைவ் ஸ்டார் ஹோட்டல் செப் மாதிரி இருக்கு. சகிக்கலைன்னு சொன்னா அடுத்து வாங்கற எல்லா சட்டையும் இதே ரேஞ்சில்தான் இருக்கும். அகாடமில போட்டுண்டு இருந்த வெள்ளை ட்ரெஸ் எவ்வளவு அழகா இருந்தது.

பாடும் போது அவ்வளவு அதி தார ஸ்தாயி எல்லாம் போக முடியும்ன்னு காட்டணுமா? அதுல பாவம் எம்பார் கண்ணன், இப்படி வாசி அப்படி வாசின்னு க்ளாஸ் வேற. சமீப காலமா கச்சேரிக்கு நடுவில் இவ்வளவு பேசற ஆள் வேற யாரும் இல்லை. எம்டியாருக்குப் பின்னாடி நேர இவர்தான் போல.

தனில எழுந்து போறது மங்களம் பாடும் போது எழுந்து போறது இதெல்லாம் பண்ணாதேன்னு சொல்லறது சரிதான். அதைச் சொன்னா என்ன தப்பு? இந்த விஷயத்தில் நான் இவருக்குத்தான் சப்போர்ட்டு.

ஆனா என்ன இருந்தா என்ன அந்த முகாரி, அந்த சாவேரி கேட்ட அப்புறம் வேற என்னவா இருந்தா என்ன, நம்ம வோட்டு இந்த ஆளுக்குத்தான். என்ன டேலண்ட்.. இன்னிக்கும் கேட்டுண்டே இருக்கலாம். அப்படி ஒரு சங்கீதம்.

இப்படி எல்லாம் நினைக்கும் போது காலையில் இவரே போன் பண்ணறார். வெப்காஸ்ட் எல்லாம் சரியா வந்துதா, ஒண்ணும் பிரச்சனை இல்லையேன்னு விசாரிப்பு. எல்லாம் நல்லபடியா வந்ததுன்னு சொன்ன உடனே குஷியாகிட்டார். பேஸ்புக்குல கொஞ்ச பேர் சரியா வரலைன்னு சொல்லி இருக்காங்க. எப்படி வந்ததுன்னு அங்க சொல்ல முடியுமான்னு கேட்டார். நானும் ஒரு சின்ன விமர்சனமாவே எழுதிப் போட்டுட்டேன். ரொம்ப சந்தோஷப்பட்டு மெயில் போட்டார்.

பேசும் போது அகாடமி கச்சேரியில் பண்ணின கலாட்டாவைப் பத்தியும் கேட்டேன். அவர் பங்குக்கு டிபெண்ட் பண்ணிட்டார். ராகம் ஆலாபனை பண்ணிட்டு பாட்டு பாடலை. அதை என்னமோ கொலைக் குத்தம் மாதிரி பேசறாங்க. இவரும் இதை எல்லாம் பண்ணி சும்மா மெல்லற வாய்களுக்கு அவலைப் போடறார்.

அதுல இந்த rasikas.org forum இருக்கே, அதுல அவரை பாய்க்காட் பண்ணனும், கவாஸ்கர் பண்ணனும்ன்னு சில பேர் பண்ணற அட்டகாசம் தாங்கலை. படிக்கச் சிரிப்புதான் வருது. இந்த மாதிரி ஆட்களுக்காக கிருஷ்ணா இதை எல்லாம் பண்ணினாலே தப்பில்லைன்னுதான் தோணுது.  நம்ம  ட்விட்டரில் நடக்கும் தமிழுணர்வு போராட்டங்களே அங்க தோத்துடும் போல!

ஒருத்தர் அழகா எழுதி இருந்தார். அந்த அகாடமி கச்சேரிக்கு அடுத்த நாள் அங்க TRS மாமா கச்சேரி பத்ததின்னே ஒரு லெக்டெம் தந்தாராம். அதுல பத்ததி ஒரு பார்முலாதான். சில பாட்டுகளை அனுபல்லவியில் ஆரம்பிக்கறது இல்லையா, கீதம் வாசிச்சு கச்சேரிகளை மாலி ஆரம்பிக்கலையான்னு பேசினாராம். அவரே ஒரு கச்சேரியை ஜாவளி பாடி ஆரம்பிச்சாராம்.

நல்ல வேளை அந்த காலத்திலேயும் சரி, இன்னிக்கும் சரி, அவரை இப்படி சுத்தி சுத்தி அடிக்கலை! அந்த காலத்திலேயே ரசிகாஸ்.ஆர்க் போரம் எல்லாம் இருந்திருந்தா ஐயங்கார் இந்த பத்ததி கொண்டு வரும் போது அவரை என்ன எல்லாம் பேசி இருப்பாங்கன்னு ஒரு கற்பனை பண்ணினா ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும்.

இன்னும் ரெண்டு கச்சேரி வெப்காஸ்டில் வரும். மிஸ் பண்ணாம பார்ப்பேன். அவ்வளவுதான் நம்ம ஸ்டாண்ட்!

ooOoo

சன்  விஜய் டிவில கோடீஸ்வரன் நிகழ்ச்சி வருதாம். சூர்யா நடத்தறாராம். முதல் நிகழ்ச்சியின் முதல் கேள்வி தமிழ்த்தாய் வாழ்த்தின் முதல் வார்த்தை என்ன? என்பதாம். இப்படி ஒரு கேள்வி வேணுமான்னு சொக்கன் முதற்கொண்டு சிலர் ட்விட்ட, எளிமையான கேள்வியைக் கேட்கிறார்கள் என்ன தப்பு என்று சிலர் பதிலினார்கள். சினிமா கேள்வி கேட்காம இது மாதிரி ஒரு தமிழ்க் கேள்வி கேட்டாங்கன்னு சந்தோஷப்படணும்ன்னு ஒரு கருத்து. அதுக்கு மாத்தா இது போல ஒரு தமிழ் சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேட்டு லிப் சர்வீஸ் பண்ணிட்டு, இது ஒரு அக்மார்க் தமிழ் ப்ரோக்ராம் அப்படின்னு ஒரு ப்ராண்ட் பண்ணிக்கறாங்க அப்படின்னு ஒருத்தர் எழுதறார்.

இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடற மாதிரி கான்வெண்டில் படிச்ச பசங்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்துன்னா என்னன்னே தெரியாது. இப்படி முதல் வார்த்தையை சொல்லிக் குடுத்து தமிழ் வளர்க்குது இந்தப் ப்ரோக்ராம்ன்னு வந்ததே பாரு ஒரு ட்விட்டு. அசந்து போயிட்டேன். சரின்னு நம்ம பங்குக்கு

அகர – இதுதான்யா முதல் குறளோட முதல் வார்த்தை. இதை எல்லாரும் ரீட்வீட் பண்ணுங்க. தமிழ் வளரும், அவலம் குறையும்.

ஜன என்பது நம் நாட்டின் தேசிய கீதத்தின் முதல்வார்த்தை. இதை டுமீலர்கள் ரீட்வீட் செய்ய வேண்டாம். நன்றி!

இப்படி ரெண்டு ட்வீட்டுகளைப் போட்டு தமிழ் வளர்ப்பு பணிகளில் நம்மாலானதைப் பண்ணினேன். ஆனாலும் இப்படி எல்லாம் ஒரு தமிழ் உணர்வு பீறிட்டுப் பொங்குதே. இதைப் பயன்படுத்திதான் நம்ம அரசியல்வியாதிங்க எல்லாம் நல்ல அறுவடை பண்ணறாங்க. சில லூசுங்க இந்த உணர்வு தலைக்கேறி தீயை வெச்சுக்கிட்டு சாவுதுங்க. அதை தியாகம் அது இதுன்னு ஏத்திவிட்டு அடுத்த பிரச்சினையிலும் சாவு விழ வழி பண்ணுது இந்த கூட்டம்.

நடுவில சொக்கன் தமிழ் பேசும் போது ஒழுங்கான உச்சரிப்பும், எழுதும் போது எழுத்துப்பிழை இல்லாம எழுதணும்ன்னு முயற்சி பண்ணனும். அதுதான் உண்மையா தமிழுக்கு நல்லது செய்யறதுன்னு சொல்ல,  அது எப்படி சொல்லலாம்ன்னு ரெண்டு பேர் கிளம்பினாங்க. என்னய்யா இதுன்னு சொக்கன் வந்து சேட்ல கேட்க, அவங்களுக்கு எல்லாம் ழ வராது, நீர் போய் பொதுவுல இப்படி எல்லாம் சொன்னா அவங்களுக்கு வேற என்ன வழி இருக்கு? அப்படின்னேன்.

கொஞ்சம் சீரியசா யோசிச்சா, பள்ளிக்கூடங்களில் தமிழ் சொல்லித் தர ஆரம்பிக்கும் போதே சரியான உச்சரிப்போட சொல்லித் தந்தா, உச்சரிப்பு பிரச்சினைகள் பெரும் அளவில் வராது. இந்த உச்சரிப்புப் பிழைகளால்தான் எழுத்துப் பிழைகளைகளும் அதிக அளவில் வருது என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கை. சரியான உச்சரிப்பை சொல்லித் தர ஆரம்பிச்சா, இந்த எழுத்துப் பிழைகளும் கூட வராம இருக்கும். ஆனா இன்னிக்கு தமிழ் ஆசிரியர்களுக்கே உச்சரிப்பு ததிகிணத்தோம். அப்புறம் எங்க இருந்து அவங்க சரியாச் சொல்லித் தர!

oooOooo

இன்றைக்கு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சீரிஸ் ஆரம்பித்திருக்கிறது.  இந்த கட்டுரை எழுதும் நேரத்தில் ஆஸ்திரேலியா டாஸில் ஜெயித்து பேட்டிங் செய்ய முடிவு செய்து, இருபத்தி நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து அறுபத்தி எட்டு ரன்கள் எடுத்திருக்கிறது. மழையினால் மதிய உணவுக்கான இடைவேளை சீக்கிரமே எடுத்துவிட்டார்கள். அவர்களின் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்த முடிவு எனக்கு நல்லதாகத் தோன்றவில்லை. முதல் டெஸ்டுகளில் இந்திய பேட்டிங் தடுமாறும் எனத் தெரிந்தும் இம்முடிவு எடுத்தது ஆஸ்திரேலியாவிற்கு பின்னடைவே. இந்நிலையில் இரு அணிகளின் சாதக பாதகங்களைப் பார்க்கலாம்.

இந்தியா பேட்டிங் நல்ல அனுபவஸ்தர்களும் திறமைமிக்க புதியவர்களுமாய் மிளிர்கிறது. எனக்கு இவர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். சச்சின், இந்த டாபிக் ஓய்ந்து  போவதற்காகவாவது சீக்கிரம் ஒரு நூறு அடிச்சுத் தொலைக்கலாம். இல்லை அதையே பேசிக் கொண்டு இருப்பார்கள். கோஹ்லிக்கு, ஷர்மாவை விட கொஞ்சமே கொஞ்சம் அதிகம் திறமை இருப்பதால் அவரே அணியில் இருப்பார் என்று தோன்றுகிறது. தன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நன்றாக ஆட வேண்டிய கட்டாயம் இவருக்கு. செய்தால் அவருக்கும் நல்லது அணிக்கும் நல்லது.

பேட்டிங் மீது இருக்கும் நம்பிக்கை பந்துவீச்சில் இல்லை. ஸாகீரும், இஷாந்தும் நன்றாக பந்து வீசுபவர்கள்தான். ஆனால் அவர்கள் உடல்நிலைதான் பிரச்சினை. பயிற்சி ஆட்டத்தில் ஐந்து ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்தார் இஷாந்த். இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ஸாகீரும் ரொம்ப ஒன்றும் மெனக்கடவில்லை. இவர்கள் இருவரும் அடிபட்டு விலகாமல் தொடர்ந்து விளையாடினால் பரவாயில்லை. ஆனால் இவர்களை விட்டால் மீதி அனைவரும் புதியவர்கள். திறமை மிக்கவர்கள்தான் என்றாலும் வழிகாட்டுதல் இல்லை என்றால் என்ன ஆகும் என்பதை இங்கிலாந்தில் பார்த்துவிட்டோம். யாதவ் நல்ல வேகமாக பந்து வீசுகிறார். ஸாகீர் வழிகாட்டுதல் இருந்தால் இவர் நல்ல மிளிரலாம். அஷ்வின் நன்றாக ஆட வேண்டும் என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகனான என் ஆசை!

ஆஸ்திரேலியா எனக்குத் தெரிந்து மிகவும் பலம் குன்றிய அணியை நம்பி இருப்பது இப்பொழுதுதான். தென்னாப்பிரிக்காவுடனும் சரி, நியூசிலாந்துடனும் சரி, அவர்கள் தோற்ற விதம் இந்த அணியின் ரசிகர்களைக் கவலை கொள்ளச் செய்வதாகவே இருக்கும். துவக்கநிலை ஆட்டக்காரர்கள் புதியவர்கள், பின் வரும் பாண்டிங் ஹஸ்ஸி போன்றவர்களோ நன்றாக ஆடி பல நாட்கள் ஆகி, அவர்கள் ஏன் இன்னும் அணியில் இருக்கிறார்கள் என்ற பேச்சு எழுத் தொடங்கி விட்டது. இந்த அணியின் மிகப்பெரிய பலகீனம் இவர்களது பேட்டிங்தான். பயிற்சி ஆட்டத்தில் வேறு யாரும் சோபிக்காத நேரத்தில் சதமடித்து தனக்கான இடத்தை கைப்பற்றிக் கொண்டார் கோவான். வார்னர், மார்ஷ் எல்லாம் நன்றாக விளையாடக் கூடியவர்கள். பரிச்சியமான இடங்களில் ஆடுவது இவர்களுக்கு சாதகம்தான்.

ஆஸ்திரேலிய பௌலிங் பட்டின்சன், சிடில், ஹில்பன்ஹாஸ் போன்றவர்கள் கையில் இருக்கிறது. ஓரளவு நன்றாக பந்துவீசக் கூடியவர்கள். ஆனால் லயானையும் சேர்த்து மொத்தமாய் ஐம்பது மேட்ச் அனுபவம் கூட கிடையாது. செவாக், சச்சின், திராவிட், லக்ஷ்மண் போன்ற ஜாம்பவானுக்கு எதிராக இவர்கள் எவ்வளவு தூரம் நிலைத்து நிற்பார்கள் என்பது பெரும் கேள்விக் குறியே. ஆனால் நம் ஆட்கள் வெளிநாடுகளில் அவ்வளவு சிறப்பாக ஆடுவதில்லை, குறைந்த பட்சம் தொடரின் ஆரம்பங்களில் ஆடுவதில்லை, என்பதால் இவர்கள் முனைந்து பந்து வீசுவார்கள். ஆடுகளங்களும் இவர்களுக்குச் சாதகமாக இருக்கும்.

இரண்டு அணிகளுக்கும் சாதக பாதகங்கள் இருக்கும் நிலையில், விட்டுக் கொடுக்காமல் விளையாடுவார்கள். தோனியின் தலைமை இந்திய அணிக்கு ஒரு சிறிய அனுகூலம் என்பது என் எண்ணம். நான்கு டெஸ்ட் போட்டிகளுமே சுவாரசியமாக இருக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையப் போகிற தொடர் என்பது நிச்சயம்.

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “கிறுஸ்துமஸ் கச்சேரி

  • January 4, 2012 at 12:15 am
    Permalink

    700 வார்த்தை பதிவு நல்லாத்தான் இருக்கு! ஆனா அது 700 வார்த்தை தளத்தாலதானா?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 26, 2011 @ 10:24 pm