சங்கைப் பிடிக்கும் சோபா (SOPA)

முதலில் அமரிக்க அரசாங்க சட்டம் இயற்றும் முறை பற்றிய ஒரு சிறு குறிப்பு. காங்கிரஸில் இயங்கும் ஒரு குழுவான செனட்டர்களோ அல்லது ஹவுஸில் இருக்கும் காங்கிரஸ் குழுக்களோ அல்லது தனிநபரோ ஒரு வரைவுத் திட்டத்தைக் கொண்டு வருவார். அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றால் காங்கிரஸிலிருந்து பொது மக்களின் பார்வைக்கு வைத்து அதனால் பாதிகப்படப் போகும் இருதரப்பில் உள்ள முக்கியமானவர்களையும் அழைத்து கேள்வி பதில்களைக் கேட்கும். குறைநிறைகளையும் பல்வேறு தரப்பினிரடம் இருந்தும் கேட்டறியும். சட்ட முன்வரைவைத் திருத்தி பின் பொதுவில் வைக்கும். பின்பு காங்கிரஸின் இருஅவைகளிலும் கொண்டு வந்து விவாதித்து, திருத்தங்களைச் சேர்த்து, ஓட்டெடுப்புக்கு அனுப்பி சட்ட அமலாக்கத்திற்கு ஜனாதிபதி முன் செல்லும்.
இப்போது சோபா காங்கிரஸில் சமர்ப்பித்து இரு அவைகளின் விவாதக் கட்டத்தில் இருக்கிறது. பொதுவாக இந்த முறை மிகவும் நேர்மையாகவே நடக்கும். ஆனால் லாபிக்களின் பங்கு இங்கு இந்தச் சட்டங்களை தங்கள் ஸ்பான்ஸர்களுக்கு(இதனால் லாபம் பெறும் கம்பனிகள் பொதுவாக) ஏற்ற வகையில் வளைப்பது ஊரறிந்த சங்கதி. அதைப் பொதுமக்களிடம் கொண்டு சென்று விவாதப் பொருளாக்கி அரசியலாக்குவதும் உண்டு.
இந்தக்கட்டத்தில் சாதரணமாக பொதுமக்கள் தங்கள் தொகுதி செனட்டரிடம் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும், தொலையச்சிலும் தங்கள் எதிர்ப்பையோ ஆதரவையோ தெரிவிப்பதுண்டு. இதை மிக முக்கிய வேலையாக்கி விளம்பரங்களும் வருவதுண்டு.
சரி இதிதச-வுக்கு வருவோம். இந்தச் சட்டம் என்ன சொல்கிறது? இணையத் திருட்டில் ஈடுபடுவதாக, தன்னுடைய காப்புரிமைகளை, தன்னுடைய பாதுகாக்கப்பட்ட மின்கோப்புகளையோ, அல்லது போலியான பொருட்களையோ வேறு ஒரு இணையதளம் வெளியிட்டதாகவோ, போலியாக்கியதாகவோ ஒரு நிறுவனம் கருதினால் அந்நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி, தடையும், ஆணையும் பெற்று போலி இணையதளத்தை முடக்க இணைய வழங்கிகளையும், சர்வர் கம்பனிகளுக்கும ஆணையிட அனுமதி அளிக்கிறது இச்சட்டம்.
கூகிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் போன்ற பல பெருந்தலக்கார நிறுவனங்கள் இச்சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. ஏன்? நேர்மையான சட்டம் தானே.பின் ஏன் எதிர்க்க வேண்டும். மேலும் பல நிறுவனங்கள், உங்கள செனட்டருக்கு, இலவச எதிர்ப்பு மெயில் இலவச போன்கால் என்று வாரி வழங்கி எதிர்ப்புத் தெரிவிக்க வைக்கிறார்கள்.
இச்சட்டத்தில் உள்ள சில பகுதிகள், அந்த ஐ.பி முகவரியைத் தடைசெய்யவும், DNSலிருந்து எடுத்துவிடவும் இச்சட்டம் வழி செய்கிறது. அத்தனை சுலபமில்லை நடைமுறைப்படுத்துவது. மேலும் மிகச் சரியான ஒரு முறைமையை, தொழில்நுட்ப அடிப்படையில் இச்சட்டம் பேசவில்லை. பொத்தம் பொதுவாக தடை செய் என்று மட்டும் ஆணை வரும். இது ஒரு வகையில் தொழில்நுட்பம் தெரியாதவர்கள் முடிவெடுக்கும் அதிகாரம் வைத்திருப்பதின் அபத்தம்.
DNS சர்வர்கள் 'நேர்மையாக' வேலை செய்யவேண்டியவை. எளிமையாக்கிச் சொன்னால் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குபவை. வரும் கேள்விகளுக்கு (கூகிள்.காம் என்றால்) ஒரு ஐபி முகவரியைத் தரவேண்டியவை. அவை இடையிட்டு எந்தெந்த முகவரிக்குத் தரலாம் கூடாது என்று பார்ப்பது தவறான ஒரு இணைய முறை. இது திறந்த இணையத்திற்கு கேடானது. மேலும் சில திருட்டு DNS சர்வர்கள் வளர இது வழிவகுக்கும். மேலும் மக்கள் வேறு வழிகளில் இந்த திருட்டுத்தளங்களை பார்க்க ஒரு பாரலல் இணையம் உருவாக வழி வகுக்கும் என்று எதிர்ப்பாளர்கள் பயப்படுகின்றனர். இதுவெல்லாம் திட்டமிட்டு செய்ய முடியாதவை. காலப்போக்கில் தொழில்நுட்பம், பொருளாதாரம், மக்களின் விருப்பம் என்று மாறக்கூடியவை. அதனால் ஒரு இணை இணையம் உருவாக்குவது நல்லதில்லை என்று ஒரு எதிப்புக் கருத்து.
மேலும் டீப் பாக்கெட் அனாலிஸ் செய்யவேண்டி இருக்கும். நீங்கள் ஒரு பக்கத்துக்குச் செல்கிறார்களா இல்லையா என்பதை கண்காணித்து அதற்கு தடை போடுவது உங்கள் உரிமையில் தலையிடுவதாகக் கருதப்படும்.
அடுத்த பிரச்சனை. இணைய விடுதலை சம்பந்தப்பட்டது. சைனா பலதளங்களுக்கு தடுப்பணை போடுவது போல அமரிக்காவும் தடுப்பணை போடக்கூடிய அளவுக்கு வளர்ந்துவிடும். எதைப்பார்க்கலாம் பார்க்ககூடாது என்று தடை செய்ய ஆரம்பித்து கடைசியில் ஒரு கட்டுப்பாடு செய்யப்பட்ட இணையம் உருவாக இச்சட்டம் வழிவகை செய்யும். மேலும் இது போன்ற இணைய விடுதைலையைத் தராத சீனா போன்ற நாடுகளை அமரிக்கா எச்சரிக்கவோ, அரசியல் ரீதியாக நேர்மையாகச் சந்திக்கவோ தார்மீகத் தடையை இது உருவாக்கும்.
கடுமையான பிரச்சனைகளை சந்திக்கும் போது பல 'விசில் பிளோயர்களும்' இயக்கங்களும் இது போன்ற திருட்டு இணையதளங்களை உருவாக்கி தகவல்களைவெளியிடுவது (அமரிக்காவில் மட்டும்) தடை செய்யப்படும். அல்லது அமரிக்காவில் மட்டும் இத்தளங்கள் பார்வைக்கு கிடைக்காது. உதாரணமாக விக்கலீக்ஸ் போன்ற தளங்கள் உருவாவதை அரசாங்கங்கள் சட்டரீதியாகத் தடுக்கும். அமரிக்கா செய்வதைக் காப்பி அடிக்கும் பல்வேறு நாடுகளும் இதையும் காப்பியடிக்கும். இதனால் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட, விடுதைலையின் கழுத்தை நெரிக்கும் அரசுகளின் முன்மாதிரி ஆகிவிடும் என்று இணைய விடுதலையை விரும்பும் நிறுவனங்கள் அஞ்சுகின்றன. உதாரணமாக எகிப்துப் போராட்டங்களின் போது பேஸ்புக் பக்கங்களின் மூலம் உலகளாவிய தொடர்பு இருந்தது. எங்கெல்லாம் இவ்வாறான சட்டங்கள் இருக்கிறதோ அந்நாடுகளில், இதைச் சுலபமாக ஒரு கேஸ் போட்டு மடக்கிவிடமுடியும்.
அடுத்து விசில் பிளோயர்கள் போன்ற ஊழலைத்தடுக்கும் மக்கள் முன்வரவே முடியாது. காப்புரிமை கொண்ட ஒரு பக்கத்தையோ, ஒரு சிறு பகுதியையோ, பதிவேற்றினால் அந்த சப்டொமைனோ டொமைனையோ டிஎன்ஸ்லிருந்து எடுத்துவிட முடியும். இதன் மூலம் ஊழல்கள் வெளியே வராது. ஊழல் செய்பவர்கள் சட்டத்தின் மூலமே காக்கப்படுவார்கள்.
இன்னொரு பிரச்சனை, இணையத்தில் Stackoverflow போல தொழில்நுட்பம் சார் நிறைய விவாதங்கள் நடைபெறும். போதுமான அளவு காப்புக்களை வைத்து நடைபெறும் விவாதம மிகுந்த பலனுள்ளது.இச்சட்டத்தின் மூலம் தங்களுடைய தொழில்நுட்பம் குறித்த ஒரு சிறு பகுதி நிரலோ, டிசைனோ வந்ததாக ஒரு நிறுவனம் இது போன்ற நல்ல தளங்களை முடக்கி விட முடியும்.
இதை எல்லாவற்றையும் விட நிறைய இணையதளங்கள் விளம்பர வருவாயைப் பெருக்கவும், விளம்பரங்களைக் கொடுக்கவுமாக ஏகப்பட்ட தளங்கள் படங்களை, ஒளிபடங்களை,இசையை வழங்கிக் கொண்டு இருக்கின்றன. இதைப்போன்றவற்றை தேடித்தேடி தடைசெய்ய வழங்கி நிறுவனங்களுக்கு சட்டம் போட்டுத்தடுக்கச்சொல்ல முடியும். இசைநிறுவனங்களும், புத்தக மற்றும் ஒளிபட நிறுவனங்களும் இதைக் கட்டாயம் செய்யும். இதனால் பல்வேறு பிரச்சனைகள். சிறு இணைய வழங்கி நிறுவனங்கள் எல்லாவற்றையும் தோண்டி துருப்பிடித்து இதையெல்லாம் செய்யவே முடியாது. பேசாமல் மூடிவிட்டுப் போய்விடுவார்கள். அதே போல் இதன்மூலம் வருவாய் பெறும் நிறுவனங்களும் மூடவேண்டியதுதான்.ஒரு எக்ஸ்ட்ரீம் கண்டிஷனில் ;-)). தமிழ்த் திருட்டுப் படங்கள் எல்லாம் அமரிக்காவில் பாக்கமுடியாமல் போகலாம்.
அடுத்து எல்லா புத்தக காப்பிக்களும் பக்கங்களையும் தேடி டீப் பாக்கெட் அனாலிஸ் செய்து திருப்பி அனுப்பவோ தடைசெய்யவோ பெரிய நிறுவன வழங்கிகளால் மட்டுமே செய்ய முடியும். குட்டி வழங்கி நிறுவனங்களுக்கு இன்னொரு தடை இது.
ஆதரவாளர்களின் கருத்து என்ன? அவர்கள் சொல்வது, நிறைய திருட்டு மருந்து நிறுவனங்கள் போலி மருந்துகளை விற்கின்றன. மக்கள் இது போல அதிகாரமற்ற நிறுவனங்கள் விற்கும் நல்ல மற்றும் திருட்டு மருந்துகளை வாங்கி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ராணுவத்தின் ஒரு பிரிவே இம்மாதிரி ஒரு மிகப்பெரிய கொள்முதலைக் கடைசி நேரத்தில் கண்டுபிடித்து தடுத்தது. உண்மையில் மலிவான மருந்துகளை கனடாவிலிருந்து மற்ற நாடுகளிலிருந்தும் நிறைய நிறுவனங்கள் விற்கின்றன. அந்தப் பணம் போகிறதே என்ற கவலையே இந்த மருந்துக் கம்பனிகளுக்கு. மருந்து மற்றும் மருத்துவத்துறையில் காப்பீட்டுத்திட்ட அமரிக்க அநியாயாத்தின் தொடர்ச்சியே இது. பாரலல் இணையமெல்லாம் தேவை இல்லையில்லாத பயம் என்கிறார்கள்.
அடுத்து இதை ஆதரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் திரைப்பட, பாடல் விநியோகிக்கும் நிறுவனங்களே. MPAA என்னும் மகாப் பெரிய அமரிக்க ஆசைபட சங்கம் காசைக்கொட்டி விளம்பரம் செய்கிறது இதை ஆதரித்து.
சுதந்திரம் என்பது கொள்ளையடிப்பதை வழிவகை செய்யவல்ல என்பது ஆதரவாளர்களின் வாதம். மேலும் இணையம் எல்லாம் உடைந்து ஓடிவிடாது திருட்டு, டிஎன்ஸ் வந்தால் அதனுடன் வரும் மற்ற எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். குறைந்தது எது அசல் எது போலி என்று மக்களுக்கு புரியவரும்
என்கின்றன.
இப்போதைக்கு முதல் போணி GoDaddy. GoDaddy ஒரு டொமைன்(தளப்பெயர்) வழங்கி. போன ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 70 ஆயிரம் தளங்கள் GoDaddyயிலிருந்து விலகிவேறு வழங்கி நிறுவனங்களுக்கு ஓடிவிட்டன.
முன்வைத்த காலை GoDaddy பின்வைத்தாலும் யாரும் கேட்பதாயில்லை. 'அவனா நீ' என்று வெறியோடு தளங்களை மாற்றிங்கொண்டு ஓடுகிறார்கள். இதுதான் சாக்கு என்று போட்டியாளர்கள் தனியாக ஒரு கூபன் கொடுத்து ஆள் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். Namecheap இதில் முதன்மை.
சோபா சட்டத்துக்கு ஆதரவு தருகிறோம் என்று ஒக்கே ஒக்க Statement விட்டு இந்த அளவுக்கு எதிர்வினையை அவதானித்திருக்க மாட்டார்கள். இரண்டொரு நாளில் அப்படியெல்லாம் இல்லை மாற்றிக்கொள்கிறோம் என்று கட்சி மாறினார்கள்( அதாவது நடுநிலை வகிக்கிறோம் என்றார்கள்).
நீ ஒரு முறை சொன்னதே போதும் ஆளை விடு என்ற ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் டொமைனர்கள்.
Sopaக்கு தேவை Safe-ஆன கருத்துகள். 2012ல் ஆட்டம் களைகட்டும்.