அறுசீர்

முன்குறிப்பு: இது இலக்கணத்தைப் பிழையின்றி சொல்லித்தரும் கட்டுரை அல்ல, மேலோட்டமானது, நுனிப்புல் மேய்வது, அடிப்படைகளைச் சொல்லித்தருவதற்காக நிறைய dilute செய்யப்பட்டது. சுத்தமும் ஆழமும் விரும்புகிறவர்கள் இந்தக் கட்டுரையை மொத்தமாகப் புறக்கணித்துவிட்டுப் போய்விடுவது நல்லது
 
வெய்யிற் கேற்ற நிழலுண்டு
 
….வீசும் தென்றல் காற்றுண்டு
 
கையில் கம்பன் கவியுண்டு,
 
….கலசம் நிறைய மதுவுண்டு,
 
தெய்வ கீதம் பலவுண்டு,
 
….தெரிந்து பாட நீயுண்டு,
 
வையம் தருமிவ் வளமன்றி,
 
….வாழும் சொர்க்கம் வேறுண்டோ?
 
 
உமர்கயாமின் பாடல் ஒன்றைத் தழுவிக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய வரிகள் இவை. ’அறுசீர் விருத்தம்’ என்ற பாடல் வகை.
 
‘விருத்தம்’ என்றால் என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்ல நேரம் ஆகும். அதை இன்னொரு நாள் பார்க்கலாம். இப்’போதை’க்கு, மேலே கண்ட பாடலை இன்னொருமுறை வாய் விட்டுச் சொல்லிப் பாருங்கள், அழகு கொஞ்சவில்லை?
 
நிச்சயமாகக் கொஞ்சும், அதுதான் அறுசீர் விருத்தத்தின் அழகு, அதற்கென்று உள்ள இலக்கண நுட்பங்களைப் பின்பற்றினால் போதும், அதைச் சொல்லும்போதே பாட்டுப் பாடுவதுபோன்ற ஓர் உற்சாகம் தானாக வரும். அதைத்தான் இப்போது செய்யப்போகிறோம்.
 
’என்னது? இலக்கணமா? மீ த எஸ்கேப்’ என்று ஓடிவிடவேண்டாம், முந்தைய பேராவில் ’இலக்கணம்’ என்ற வார்த்தையை எச்சில் தொட்டு அழித்துவிடுங்கள், அங்கே ‘ட்யூன்’ என்ற வார்த்தையைப் ஒட்டிக்கொள்ளுங்கள், இப்போது ஓகேதானே?
 
அடிப்படையில் அறுசீர் விருத்தம் என்பது, ட்யூனுக்கு வார்த்தைகளை ஒட்டவைப்பதுமாதிரி வேலைதான். சிரமமே இல்லை.
 
’அறுசீர்’ என்றால், கல்யாணத்துக்கு வந்த சீரை ஆக்ஸா ப்ளேட் வைத்து அறுப்பது அல்ல. ஆறு + சீர், இந்தச் சீருக்கு விளக்கம் தேடாமல் ‘ஒவ்வொரு வரியிலும் ஆறு வார்த்தைகள்’ என்று நாம் எளிமையாக நினைத்துக்கொள்ளலாம்.
 
மேலே பார்த்த பாடலைக் கவனித்தால், ஒவ்வொரு வரியிலும் ஆறு வார்த்தைகள்மட்டுமே பிரித்துத் தரப்பட்டிருக்கும். உதாரணமாக, ’வெய்யிற் கேற்ற நிழலுண்டு, வீசும் தென்றல் காற்றுண்டு.’
 
கொஞ்சம் பொறுங்கள். என்னவோ இடிக்கிறது.
 
‘வெய்யிலுக்கேற்ற’ என்பது ஒரே வார்த்தை, அதை ஏன் ‘வெய்யிற் கேற்ற’ என்று பிரித்திருக்கிறார்கள்?
 
’காற்று உண்டு’ என்பது இரண்டு வார்த்தைகள், அவற்றை ஏன் ‘காற்றுண்டு’ என்று சேர்த்து எழுதியிருக்கிறார்கள்?
 
ஆக, ‘வெய்யிலுக்கு ஏற்ற நிழல் உண்டு, வீசும் தென்றல் காற்று உண்டு’ என்பதில் மொத்தம் 8 வார்த்தைகள் உள்ளன. ஆனாலும் அவற்றைக் கொஞ்சம் பிரித்துச் சேர்த்து எழுதி ஆறு வார்த்தைகளாக மாற்றி ‘அறுசீர்’ என்கிறார்கள். இதென்ன போங்காட்டம்?
 
டென்ஷனாகாதீர்கள். மரபுக்கவிதையில் இதெல்லாம் சகஜம். நாம் உரைநடையில் பிரித்துச் சேர்த்து எழுதுவதைப்போல் அங்கே எழுதமுடியாது, ட்யூனில் உட்காரவைப்பதற்காக இப்படிப் பிரிப்பது அவசியம். கட்டாயம்.
 
உதாரணமாக, ‘ஒரு நாளும் உனை மறவாத, இனிதான வரம் வேண்டும்’ என்று ஒரு சினிமாப் பாட்டு. அதைப் பாடகர்கள் எப்படிப் பாடுகிறார்கள்? ‘ஒரு நாளும் உனைமற… வாத… இனி… தான வரம்வேண்டும்’ என்றுதானே? ஏன்?
 
காரணம், அந்தப் பாட்டுக்கு இசையமைத்தவர் ‘தன நான தனநன நான, தன நான தனநானா’ என்று மெட்டுப் போட்டிருக்கிறார். அதற்கு ஏற்ப வரிகளைப் பிரித்து ஒட்டவைக்கவேண்டியதாகிவிட்டது.
 
அதனால் என்ன? பாடும்போது நமக்குப் புரிகிறது, நோ ப்ராப்ளம்.
 
அறுசீரிலும் அதே லாஜிக்தான். வார்த்தைகளைப் பிரித்தாலும் சேர்த்தாலும் கடைசியில் ட்யூனில் கச்சிதமாக உட்காரவைத்துவிட்டால் போதும், வாசிப்பவர்கள் புரிந்து படித்துக்கொள்வார்கள்.
 
அது சரி, சினிமாப் பாட்டுக்கு ட்யூன் போட இசையமைப்பாளர் இருக்கிறார். அறுசீர் விருத்தத்துக்கு யார் ட்யூன் போடுவார்கள்?
 
பல ட்யூன்கள் ஏற்கெனவே உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நாம் இன்றைக்குப் பார்க்கப்போவது:
 
தன்னன் நான தனநானா, தனநன் நன்னா தனநானா
 
சும்மா ஒரு சாம்பிளுக்காக இந்த மெட்டை எடுத்துக்கொண்டிருக்கிறோம், அறுசீர் விருத்தத்தின் இலக்கணம் இன்னும் கொஞ்சம் ஆழமானது, அதை அப்புறம் நிதானமாகப் படித்துக்கொள்ளலாம், அவசரமில்லை, இப்போதைக்கு இதை ஒரு Dummies Courseபோல எண்ணிக்கொள்ளுங்கள்.
 
ஆக, இந்த மெட்டில் 6 வார்த்தைகள் வேண்டும்:
 
1. தன்னன்
 
2. நான
 
3. தனநானா
 
4. தனநன்
 
5. நன்னா
 
6. தனநானா
 
இந்த ஆறில் 1, 4வது வார்த்தைகள் ஒரேமாதிரி எழுத்தில் தொடங்கவேண்டும். இதை ‘மோனை’ என்பார்கள். உதாரணமாக, மேலே பார்த்த பாட்டில் வெய்யில், வீசும் மோனை, அப்புறம் கையில், கலசம் மோனை,.. இப்படி.
 
இதேபோல், 3, 6வது வார்த்தைகள் ஒரேமாதிரி ஒலியில் முடியவேண்டும். இதை ‘இயைபு’ என்பார்கள். உதாரணமாக, காற்றுண்டு, மதுவுண்டு.
 
அவ்ளோதான் ரூல்ஸ், சாம்பிளுக்கு ஒரு வரி எழுதிவிடுவோமா? கவித்துவமெல்லாம் எதிர்பார்க்காமல் சிம்பிளாகக் குழந்தைப் பாடல்மாதிரி ஒன்று எழுதுவோம்.
 
அங்கே பாரு ஒருமாடு, அதுதான் எங்கள் பசுமாடு 
 
ஒருமுறை சரிபார்த்துவிடுவோம், 6 வார்த்தைகள், மெட்டுக்குப் பொருந்துகிறது, 1 (அங்கே), 4 (அதுதான்) மோனை, 3 (ஒருமாடு), 6 (பசுமாடு) இயைபு, பர்ஃபெக்ட்.
 
இப்போது அடுத்த வரிக்குப் போகலாம். அதற்கு முன்னால், இன்னொரு விதிமுறை, ஒவ்வொரு வரியிலும் முதல் வார்த்தைகளுக்கிடையே எதுகை வேண்டும்.
 
எதுகை? அதென்ன?
 
ரொம்ப சிம்பிள், இரண்டாவது எழுத்து ஒரேமாதிரி இருக்கவேண்டும். அவ்வளவுதான்.
 
உதாரணமாக, ‘சின்ன’, ‘என்ன’ ஆகியவை எதுகை, ‘பாரு’, ‘ஜோரு’ எதுகை, ‘நான்தான்’, ‘ஏன்தான்’ எதுகை, ’மீனம்மா’, ‘தேனம்மா’ எதுகை. மேலே பார்த்த கவிமணி பாடலில் வெய்யில், கையில், தெய்வ, வையம் என்று ஒரேமாதிரி இரண்டாம் எழுத்து கொண்ட சொற்கள் வந்திருப்பதைக் கவனியுங்கள்.
 
குழப்புகிறதா? ‘கண்மணி அன்போடு  காதலன் நான் எழுதும் கடிதமே’ சினிமாப் பாடலை நினைத்துக்கொள்ளுங்கள். அதில் கமலஹாசன் சொல்வார் ‘மொதல்ல கண்மணி சொன்னேன்ல? இங்கே (ரெண்டாவது வரியில்) பொன்மணி போட்டுக்கலாம்’…. அதான்ய்யா எதுகை!
 
நம்முடைய பாட்டில் முதல் வரி முதல் வார்த்தை ‘அங்கே’, ஆகவே அடுத்த வரியின் முதல் வார்த்தை ‘இங்கே’ என்று வைத்துக்கொள்வோம். எதுகை சரியாக இருக்கும்.
 
இப்போது, இரண்டாவது வரியை எழுதலாம், முதல் வார்த்தை ‘இங்கே’, மற்ற வார்த்தைகள் அதே ட்யூன், விதிமுறையின்படி:
 
இங்கே பூத்த மலரெல்லாம், இனிக்கும் தேனின் சுகவெள்ளம் 
 
என்ன நெளிகிறீர்கள்? கவிதை கேனத்தனமாக இருக்கிறதா? அட, ஆரம்பத்தில் அப்படிதான் சார் வரும், இப்போதைக்கு ரூல்ஸ் சரியாக இருக்கிறதா என்றுமட்டும் பாருங்கள். கொஞ்சம் பழகியபிறகு உயர்கவித்துவமாகப் பூந்து விளையாடலாம்.
 
உதாரணமாக, பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு பெரிய கவிஞர் எழுதிய அறுசீர் விருத்தம் இது:
 
முன்னம் செய்த தவமென்பேன்,
    மூத்தோர் தந்த வரமென்பேன்,
கன்னி நீயென் கைசேர்ந்த
    கணமே எனக்குப் பிறப்பென்பேன்,
சின்னச் சின்ன மொழிகளினால்
    சிறப்பாய் உலகை ஆக்கிடுவாய், 
மின்ன(ல்) அன்ன பூஞ்சிரிப்பில்
    மீளா தென்னைச் சிறையடைப்பாய்,
கன்னச் செம்மை நிறம்காட்டி,
    கனிவு எனுமோர் குணம்காட்டி,
கன்னம் வைத்தே என்மனதைக்
    காணா(து) எங்கோ கடத்திடுவாய்.
அன்னை, அப்பன் பொறைகொள்ள
    அருமைப் பரிவில் எனைநனைப்பாய்,
'என்றோ, ஏதோ தவம்செய்தேன்
    எனக்காய் உனைநான் பெற்றிடவே',
என்றே என்னை ஏங்கவைப்பாய், 
    ஏழேழ் பிறவி வேண்டவைப்பாய்,
இன்னும் ஏது செய்வாயோ,
    இறைவன் அவனே அறிவானே,
இன்றும் என்றும் அவனிடத்தில்
    ஈயக் கேட்பேன் ஒன்றுமட்டும்,
என்றன் செல்ல மகளுனக்கு
    என்றும் வாழும் வரம்கேட்பேன்!
 
யார் அந்தப் பெரிய கவிஞர் என்கிறீர்களா? ஹிஹி, நான்தான் 😉
 
ooOoo
 
பின்குறிப்புகள்:
 
1. இந்தக் கட்டுரையில் மேலோட்டமான அறிமுகத்துக்காக மிக எளிய ஒரு ட்யூனை உதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். இதைவிடச் சிக்கலான பல கட்டமைப்புகள் உண்டு. அவற்றுக்கு ஏற்ப இலக்கண விதிகளும் கடினமாகும்.
 
2. அறுசீர்தவிர, எழுசீர், எண்சீர், பன்னிருசீர், பதினாறு சீர் விருத்தங்கள்கூட உண்டு. இந்த வலைப்பக்கத்தில் அவற்றுக்கான தெளிவான விதிமுறைகளை வாசித்து அறியலாம்: http://s-pasupathy.blogspot.com/2010/10/3.html
 
3. அதற்குமுன்னால், மேலே பார்த்த ட்யூனில் ஏழெட்டுப் பாட்டு எழுதிப் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள், அப்புறம் சரியான இலக்கணத்துக்குத் தாவுவது சுலபம். ஆல் தி பெஸ்ட்!

5 thoughts on “அறுசீர்

 • October 24, 2017 at 9:59 pm
  Permalink

  மிக அருமை. எளிய முறையில் அறுசீர் விருத்தத்தை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி.

  Reply
 • February 21, 2017 at 8:39 am
  Permalink

  எளிமையான, விளங்கக்கூடிய உரை. தமிழ் ஆர்வலர்களுக்கு பயனுள்ள உரை
  எழுத்தாளர் சுஜாதாவின் பாணியில் நகைச்சுவையாக விளங்கவைக்கிறுர்கள்
  நன்றி

  Reply
 • April 26, 2013 at 2:34 am
  Permalink

  Very nice intro to aruseer viruttham. Nandri.

  Reply
 • May 5, 2012 at 6:39 am
  Permalink

  tamilaikkatru kollakidaitha amuthasurapi
  tamilaikattruvakkil kandukonden surapeeyal.
  ……. ….

  Reply

Leave a Reply to vijayalakshmi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 1, 2012 @ 11:11 pm